இணைய இதழ்இணைய இதழ் 57தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 1 – கிருபாநந்தினி

தொடர் | வாசகசாலை

முனைவர் வெ.கிருபாநந்தினி சுற்றுச்சூழல் துறையில் முனைவர்பட்டம் பெற்றவர் ஆவார். பொள்ளாச்சியில் உள்ள கா. புதூர் கிராமம் இவரது சொந்த ஊராகும். பறவைகள் ஆராய்ச்சியாளரான இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு திட்டக்குழு மற்றும் சாலிம் அலி பறவைகள் & இயற்கை வரலாறு மையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். தொடர்ந்து பறவைகள் குறித்த கட்டுரைகளை எழுதியும் வருகிறார்.
முனைவர் வெ.கிருபாநந்தினி

னிதர்களாகிய நம்முடைய வாழ்விடத்திலேயே ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்திருப்போம். அதன் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்துமிருப்போம். ஆனால், காரணங்களையும் தீர்வுகளையும் தேடிக் கண்டுபிடித்தோமா என்பது சந்தேகம்தான். நம் வாழ்விடங்களே பிரச்சனைகளாக இருக்கும் நிலையில் பறவைகளின் வாழ்விடத்தைப் பற்றிப் பேச வேண்டுமா என்று கேட்பவர்களுக்கான பதிலாக இந்த அறிமுகக் கட்டுரை இருக்கும் என நம்புகிறேன். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 51-A (g), “ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான இயற்கை சூழலில் வாழ உரிமை உண்டு. அதே நேரத்தில் அவற்றைக் காப்பாற்றிக்கொள்ளும் கடமையும் உள்ளது” என்கிறது. நம்முடைய சுற்றுச்சூழலில் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை வந்து சேரும் முன் மற்ற உயிரினங்களை பாதிப்பதன் மூலம் நமக்கு எச்சரிக்கையளிக்கின்றன. அவற்றை, ‘உயிர் குறிப்பான்கள்’ எனச் சொல்கிறோம். அவற்றின் வாழ்விடங்களின் நிலை பாதிக்கப்பட்டால் நம்முடைய சூழலும் விரைவில் பாதிப்புள்ளாகும். ஆனால், அதை நாம் பொருட்படுத்துவதே இல்லை. அதன் விளைவு, மேலும் சூழல் பாதிப்பு அதிகரித்து நடுத்தர மக்களின் வாழ்வே மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றது. ஆதலால் அனைத்து தரப்பு மக்களின் சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழியே இது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அழிந்துவிட்ட டோடொ பறவை

அனைத்து உயிர்களும் தங்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடைக்கும் இடத்தில் வாழ்கின்றன. அந்த குறிப்பிட்ட இடங்களே குறிப்பிட்ட உயிரினங்களின் வாழ்விடம் என்றாகிறது. அதன்படி இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரினங்களும், அவரவர்களுக்குத் தகுந்தாற் போல் வெவ்வேறான வாழ்விடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. இந்த உயிரினங்களை நமது சுற்றுச்சூழலில் நீர் வாழ்விகள், நில வாழ்விகள், இவ்விரண்டிலும் வாழ்பவை எனப் பிரிக்கலாம். நீர் வாழ்விடங்களிலேயே பல்வேறுபட்ட அமைப்புகளான உப்பு நீர் (Salt water), காயல் (Brackish water), நன்னீர் (Drinking water), என மூன்று வகைகள் உள்ளன. அதேபோல் நிலத்திலும் பசுமை மாறாக் காடுகள், புல்வெளிகள், விவசாய நிலங்கள் போன்ற பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு இனத்திலுமுள்ள குடும்பங்களும் அவற்றுக்கான வரையரைகளை வகுத்துள்ளன. நடிகர் வடிவேலுவின் புகழ்பெற்ற வசனமான, “இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்” என்று வாழ்விடங்களுக்கான உரிமைகளை உயிரினங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளன. பொதுவாகவே நீரின் தன்மை சிறிது மாறுபட்டாலே நீர் வாழ்விகள் உயிர் வாழ்வது கடினமாகிவிடும். இதில் அதன் வாழ்விடங்கள் மொத்தமும் பாதிக்கபட்டால் அதன் இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்தானே. அதேபோல் நிலங்களில் வாழும் பறவைகளும் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளால் அழிந்து வருகின்றன.

அப்படி விரைவில் அழிந்துவரும் பறவைகள் பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு (International Union for Conservation of Nature’s Red List of Threatened Species) என்ற சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

முற்றிலுமாக அற்றுப்போன (Exticnt – Ex)
இயற்கையான சூழலில் அற்றுப்போன (Extinct in the Wild – EW)
பேரவிழிற்குள்ளான (Critically Endangered – CR)
அழிவிற்குள்ளான (Endangered – EN)
அழிவிற்குள்ளாகக் கூடிய (Vulnerable – VU)
கூடியவிரைவில் அழிவிற்குள்ளாகக் கூடிய (Near Threatened – NT)
தற்போதைக்கு நல்ல நிலையில் உள்ள (Least Concern – LC)

ஆகிய ஏழு வகைகளின் கீழ் பறவைகளைப் பட்டியலிட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொண்ட பறவைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு வலசை வரும் பறவைகளைக் குறித்து மட்டும் இத்தொடரில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். குழப்பங்களைத் தவிர்த்து, சில பறவைகளையும், அதன் வாழ்விடங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ள இத்தொடர் உதவும் என நம்புகிறேன். அடுத்தடுத்த அத்தியாயங்களில் இவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்…)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button