கட்டுரைகள்

பல்சாக் – இன் ‘தந்தை கோரியோ’ நாவல் வாசிப்பனுபவம் – முஜ்ஜம்மில்

கட்டுரைகள் | வாசகசாலை

 

பல்சாக் எழுதிய ‘தந்தை கோரியோ’ என்ற மிக முக்கியமான நாவல் 19ம் நூற்றாண்டு பிரஞ்சு வாழ்வின் சிறு சித்திரத்தைத் தருகிறது. குறிப்பாக பிரெஞ்சு மத்தியதர வர்க்க மக்களின் வாழ்வை சித்தரித்தாலும், அதில் கலந்தோடும் மனிதாபிமானம் இந்நாவலை செவ்வியல் தன்மையுள்ளதாய்  ஆக்குகிறது. கதை 19ம் நூற்றாண்டின் பாரிசில்  ‘புர்ழுவா விடுதி’ என்ற விடுதியில் நடக்கிறது. புர்ழுவா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ’Burgoise’ என்று சொல்லப்படும். நடுத்தர வர்க்க மக்களைக் குறிக்கும் சொல். பிழைப்பிற்காக பெருநகரங்களுக்கு மக்கள் செல்வதைபோல் இந்த விடுதியில் தங்குகிறவர்களும் பிழைப்பிற்காக பாரிஸ் நகரத்திற்கு வந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 2000  கதாபாத்திரங்களை உருவாக்கியவர் என்று புகழப்படும் பல்சாக், பலதரப்பட்ட குணாம்சங்கள் கொண்ட மனிதர்களை நாவலில் விவரிக்கிறார். விடுதியை நடத்தக்கூடிய நடுத்தர வயது வோக்கேர் என்ற பெண்மணி, ரகசியமாக தங்கியிருக்கும் குற்றவாளியான வோத்ரின், பணக்காரத் தந்தையால் கைவிடப்பட்ட விக்டோரின் என்ற அப்பாவிப் பெண். தொலைவில் உள்ள ஊரிலிரிந்து சட்டம் படிக்க வந்த ராஸ்தினாக் என்ற இளைஞன். எல்லோருக்கும் புதிராக இருக்கும் வயதான சேமியா வணிகரான கோரியா, மற்றும் அவரை அவ்வப்போது வந்து சந்தித்துவிட்டு செல்லும் இரண்டு பெண்கள் என்று நாவல் முழுவதும் பல்வேறு கதாபாத்திரங்கள் நிரம்பி இருக்கின்றன.

வயதான கோரியோவைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகள் புதிரானதாக இருக்கின்றன. அதனால் விடுதியில் ஏளனத்தோடு நடத்தப்படுகிறார். அத்தோடு அவரை சந்திக்க வரும் பெண்களோடு அவருக்குள்ள தொடர்பை பற்றின சில அவதூறுகளும் சந்தேகங்களும் எழுகின்றன. ஆனால் அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல் எப்போதும் ஒரு மென்சோகம்  கவிழ்ந்த முகத்தோடு இருக்கிறார். கதையின் மையபாத்திரம் தந்தை கோரியோதான். ஒரு காலத்தில் மிக பெரும் வணிகராக இருந்த அவர் இப்போது தன் நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக்கொண்டிருக்கிறார். எளிமையான அறையில் வசிக்கும் அவர் மிக குறைந்த பணத்திற்கு கிடைக்கும் உணவை சாப்பிடுகிறார். அவரைப் பார்க்க அவ்வப்போது வந்துபோகும் உயர்குடிப் பெண்கள், அவருடைய சொந்த மகள்கள்தான்.  இதைத்தெரியாமல் தான், விடுதியில் அவரைப்பற்றிதவறாக  பேசுகிறார்கள். ரகசியமாக தங்கியிருக்கும் குற்றவாளியான வோத்ரின், விடுதி அம்மாள் மேல் மிகுந்த பாசத்தைக் காட்டுகிறான். அதனால் அந்த அம்மாளும் ஒரு தாயைப்போல் அன்போடு  அவனை கவனிக்கிறாள்.

விடுதிக்குப் புதிதாக வரும் ரஸ்தினாக்கிற்க்கும்  எல்லோரையும் போலவே தந்தை கோரியோ புதிராகத் தோன்றுகிறார். ஒரு இரவில் அவர் அறையில் ஏதோ சப்தம் கேட்கிறது .ஜன்னல் வழியாக பார்க்கும்போது அவர் தான் வைத்திருந்த தங்க முலாம் போட்ட வெள்ளிப் பாத்திரங்களை  வளைத்து மடக்கிக் கொண்டிருந்தார். எதற்க்காக இதைச் செய்கிறார்? அவரைப் பார்க்க வந்து செல்லும் பெண்கள் யார் என்ற கேள்விகளுக்கு விடை அவனுடைய அத்தை தே போசயன் வீட்டிற்குச் செல்லும்போது கிடைக்கிறது. அவன் அத்தை உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி. அவர்கள் வழியாக உயர் சமூகத்தில் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும், அதில் உள்ள ஒரு பெண்ணுடைய காதலைப் பெற்றுவிடவேண்டும் என்ற லட்சியக் கனவோடு  அலைந்து கொண்டிருக்கும் ரஸ்தினாக், அதற்காக தன் படிப்பை அலட்சியமாக ஒதுக்கி வைத்துவிடுகிறான். பரிட்சைகளை மொத்தமாகக் கடைசியில் சேர்த்து எழுதிவிடலாம் என்று தள்ளி வைக்கிறான். அத்தை வீட்டில் தந்தை கோரியோ வந்துவிட்டு செல்வதை ஆச்சரியத்தோடும், அதே சமயம் சற்றே மரியாதைக் குறைவோடும் தன் அத்தையிடம் விசாரிக்கும்போது, அதற்கு அவர் கோபப்படுவதோடு, தந்தை கோரியோ  பற்றிய உண்மை நிலையையும் சொல்கிறார். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர், செல்வந்தராக  பெரும் வணிகராக இருந்த அவர், தன் மனைவி இறந்த பிறகு தன் மகள்களை மிக பாசத்தோடு வளர்த்து, பிறகு படிப்படியாக அவர்களுக்காக தன் மொத்த செல்வத்தையும், வாழ்வையும் சிறிது சிறிதாக இழந்து இன்று வறிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்  என்று விளக்கும்போது ராஸ்தினாக் தன் தவறை உணர்ந்து வருந்துகிறான். தந்தை கோரியாமேல் அளப்பரிய மரியாதை கொள்கிறான். அத்தோடு அவர்களுடைய மகள்களையும் சந்திக்கிறான்.

உயர்குடி, ஆடம்பர வாழ்கையில் திளைத்திருக்கும் அவருடைய மகள்கள் அனஸ்தேசி, மற்றும் தெல்பின் இருவரும் திருமணமான பின் தங்கள் கணவர்களோடு சென்று விடுகிறார்கள். தன் செல்வத்தையெல்லாம் கரைத்து தன் மகள்களை  வாழவைக்கும் தந்தை கோரியோவை மருமகன்கள் வெறுக்கிறார்கள். அவர்களோடு சேர்த்துகொள்ளாமல் விலகிக்கொள்கிறார்கள். தந்தையின் பணத்தில் வளர்ந்த பெண்கள் வெறும் பணத்திற்காக மட்டும் தந்தையைத் தேடுவதும் மற்றபடி, அவர் மேல் எந்தப் பாசமும் கொள்ளாமல்  இருப்பதற்கு அவருடைய வறுமை நிலையே காரணமாக இருப்பதும்  முரண்நகை. தந்தை கோரியோவின் தியாகத்தைக் கண்டு, அவருக்கு ஆதரவாக நிற்கும் ராஸ்தினாக் அவரை ஏளனம் செய்யும் விடுதியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவருடைய உண்மையான நிலையை எடுத்துக் கூறுகிறான். தந்தை கோரியோ மேல் அன்பு காட்டும் ராஸ்தினாக் உயிர்குடியில் நுழைந்துவிடுவதில் முனைப்போடு இருக்கிறான். அதற்காக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்கிறான். உயர் சமூகத்தில்  படோடபமாக வாழ்வதற்கும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும்,தங்கள் தந்தையின் பணத்தைக் கரைக்கும் மகள்களைப் போலவே, ராஸ்தினாக்கும்  தன்  தாயிடம் பணம் கேட்டுக் கடிதம் எழுதுகிறான். அவர்கள் நிலை ஏற்கனவே நெருக்கடியில் இருப்பதைத் தெரிந்தும் தன் சுயநலத்திற்காக, தன் உயர் சமூக கனவுகளுக்காகப் பணம் கேட்கும் அவன், அதை அழுத்தம் தரும் வகையில் இந்தப் பணம் மிக அவசரமாக தனக்கு தேவைப்படுவதாகவும், கிடைக்கவில்லையானால் தான் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலை கூட ஏற்படலாம் என்று எழுதுமளவிற்கு அவனிடத்தே பொருள் மோகமும், போலி கவுரவ மோகமும் நிறைந்திருக்கிறது. அவன் கடிதத்தைப் படிக்கும் தாய் பதற்றத்தோடு உடனே பணத்தை அனுப்பி வைக்கிறாள். தந்தை கோரியோ மேல் அன்பும் பற்றும் வைத்திருக்கும் ராஸ்தினாக் அவருடைய மகள்கள் அவரிடமிருந்து பணத்தைப் பறிப்பது போலவே அவனும் தன் குடும்பத்திடமிருந்து பணத்தைப் பறிப்பது முரண் நகையான  விஷயம். இவனுடைய நோக்கமும், அந்த இரு மகள்களுடைய நோக்கமும், உயர் சமூகமாகவே இருக்கிறது.

விடுதியில் தங்கியுள்ள வஞ்ச புத்தியுள்ள வோத்ரேன், ராஸ்தினாக் மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறான். தந்தையால் கைவிடப்பட்ட நிர்கதியான விக்தொரினை காதல்வலையில் விழச்செய்ய தூண்டுகிறான். அவளை திருமணம் செய்வதன்  மூலம் அவளுடைய தந்தையின் சொத்தை அவன் பெறுவான் என்றும் அதற்கு உதவும் தனக்கு ஒரு பங்கு கொடுத்துவிடவேண்டும் என்கிறான். இதில் ராஸ்தினாக்கிற்கு உடன்பாடில்லை என்றாலும், பணத்தாசை அவன் மனதிலிருந்து இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் விக்தொரின் தன் சொத்தை பெறுவதற்கு இடையில் நிற்கும் அவளுடைய சகோதரனை, வோத்ரேன் கொலை செய்கிறான். அதற்காக போலீசிடம் பிடிபட்டு சிறைக்கு செல்கிறான். தன்னலமற்ற தந்தை கோரியா, தன்னை தேடிவரும் மகள்களுக்காக தன் பணத்தை முழுவதுமாக கொடுத்து விடுவதோடல்லாமல், தான் வைத்திருக்கும் வெள்ளி தட்டுகள், கரண்டிகள் என்று அனைத்தையும் விற்று பணத்தைக் கொடுக்கிறார். தன் நிலைபற்றி கவலைப்படாமல், தன் மகள்கள் கண்கலங்காமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்றும் தனக்கு வேண்டியதெல்லாம் தன் மகள்களின் அன்புதான் என்றும் கூறுகிறார். ஆனால், கடைசி வரை போலியான அன்பைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறார்.

ஒருநாள் தங்கள் காதலர்கள் கடன்பட்டிருக்கிறார்கள், அதற்குப் பணம் வேண்டும் என்று மிச்சத்தையும் வாங்கிச் செல்கிறார்கள். வாழ்வின் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் தங்கள்  தந்தையை வந்து பார்க்காமல், உயர்சமூக விருந்தில், நடனத்தில் மகள்கள் இருவரும் மூழ்கியிருக்கிறார்கள்.   ராஸ்தினாக் மற்றும் மருத்துவர் மட்டும் அவரோடு இருக்கிறார்கள். மகள்களின் வாழ்க்கை பற்றி மட்டுமே கவலைப்பட்டுகொண்டிருக்கும் தந்தை கோரியோ அந்நிலையிலேயே இறந்து போகிறார். நாவலில் பெரும்பாலும் உரையாடல்களே நகர்த்திச் செல்கின்றன. முழு  நாவலும் பணமும், போலி கவுரவமும் ஆடம்பர வாழ்கையின் மோகமும்  கதாபாத்திரங்களை பிடித்தாட்டுகிறது. விடுதி நடத்தும் வோக்கேர் அம்மாளும், தன் வருமானத்தைப் பற்றியே கவலைப்படுகிறாள். அதற்காக நியாமான முறையில் வாடிக்கையாளர்களை கவனிக்கிறாள். குற்றவாளியான வோத்ரேன், வஞ்சகமான வழியில் பணத்தைப் பெறுவது பற்றி திட்டமிடுகிறான். உயர்சமூக வாழ்க்கை மேல் கொண்ட மோகமும், பணத்தாசையும் ராஸ்தினாக்கையும், கோரியாவின் மகள்களையும் ஆட்டிப் படைக்கிறது. பணத்திற்கும், போலியான கவுரவ வாழ்க்கைக்குமான சுழற்சியிலிருந்து விலகித் தனித்து நிற்பவர் தந்தை கோரியோ. 19 ம் நூற்றாண்டு பாரிஸ் வாழ்வின் ஒரு சித்திரமாக இந்நாவல் விளங்கினாலும், அதில் இழைந்தோடும் மனிதாபிமானமும், மனித மனத்தின் உளவியலும் இந்நாவலை இன்றளவிலும் வாசிக்கவைக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button