இணைய இதழ்இணைய இதழ் 91சிறுகதைகள்

பவியக்காவும் நானும் – வாசு

சிறுகதை | வாசகசாலை

து ஒரு கார்த்திகை மாத வெள்ளிகிழமை. அன்று நான் சூரியனுக்கு முன்பாகவே எழுந்து விட்டுருந்தேன். சமீபமாகவே நான் முன்னெழும் பழக்கத்திற்கு வந்திருந்தேன். பெரிய விஞ்ஞான விசயம் இல்லை. விடலைப்பருவ கோளாறுதான். 

நான் இருக்கும் வீட்டிலிருந்து சரியாக எதிர்ப்புறம் மூன்றாவது வீடு அது. வெளிர்நீல நிறத்தில் வெள்ளையடித்து முன்காலைப் பொழுதின் வானம் போல காட்சி தரும் வீடு அது. வீட்டின் வலதுபுறத்தில் வளைந்து செல்லும் மாடிப்படிக்கட்டுகள். அந்த வீட்டில்தான் நான் நிதமும் எதிர்நோக்கும் என் பவியக்கா வெளிவருவாள். 

பவியக்கா – என்ன இது. நான் விரும்பும் ஒரு பெண்ணை அக்கா என்று விளித்தால் தகுமோ? தகும். நான் இதுவரை அவள் பெயரை அவ்வாறே கேட்டு பழக்கப்பட்டுவிட்டேன்.அப்படியே இருந்துவிட்டு போகட்டும். ஏன்? நல்லதம்பி யாரோ ஒருத்திக்கு கணவனாகவோ, காதலனாகவோ இருக்கும்போது, பவியக்கா என் அன்புக்கு உரியவளாக இருப்பதில் தவறில்லை.

காலை மணி ஆறேகால் ஆகிவிட்டது. எப்போதும் ஆறு மணிக்கு வெளிக்கதவை திறந்து வாசல் தெளித்து கோலமிடும் அவளை காணவில்லை இன்று. அவள் கோலமிடும் அழகை, இல்லை அபிநயங்களை விவரிக்க ஆரம்பித்தால் எண்ணஓட்டம் எங்கெங்கோ சென்று விடும். நான் இப்போது சுய நினைவில் இருந்து அவளை ரசிக்க வேண்டும். 

அதோ! கதவு திறந்து விட்டது. எனக்கான தரிசனம் இனி தொடங்கி விடும். நல்ல அரக்கு நிறத்தில் சுடிதார் அணிந்து துப்பட்டா இடாமல் ஈரத்தலையை கீழ்கொண்டை இட்டு கையில் கோலப்பொடியோடு வந்துவிட்டாள். என்ன இது – அவள் இதழோரம் மெல்லிய வீக்கம். இந்த கார்ப்பரேசன்காரனிடம் கூட பத்து ரூபாயேனும் குடுத்து அவள் வீட்டின் பின்புறம் கொசுமருந்து அடிக்கச் சொல்ல வேண்டும். கொசு கடித்து பாழ்படும் முகமா அது? நீள்வட்டமான முகவெட்டு, கூர்செதுக்கிய மூக்கு, ஒன்றை ஒன்று கவ்வத் துடிக்கும் கண்கள். அதற்கு மேலே வவ்வால் இறக்கை புருவங்கள். எப்போதும் குருபுறுவல் பூக்கும் இதழ் நுனிகள். இவை அனைத்திற்க்கும் சிகரம் வைத்தாற்போல் இடது நெற்றி ஒரம் மிளகளவு மச்சம். 

நான் வர்ணித்துமுடிக்கும் நேரமும், அவள் கோலமிட்டு முடித்து உள்செல்லும் நேரமும் ஒன்றாகிப் போனது தற்செயலே. மறுபடியும் என் சிறுதவம் தொடர்ந்தது அவள் முகம் காண.

அவள் வீட்டில் அவளைத் தவிர இன்னும் இரண்டு பெண்கள் உண்டு. உலகமயமாக்கத்தின் வரம். மனிதர்களை இடப்பெயர்வுக்கு உள்ளாக்கி ஒவ்வொருவரின் சிறந்த திறனை சந்தையில் விற்று தங்கள் வாழ்வை நடத்தவோ/உயர்த்தவோ மிகச்சிறந்த காரணி. இவளும் எங்கிருந்தோ வந்து என்போல் சிறு உள்ளங்களை ஆர்ப்பரிக்கிறாள். மறுசமயம் இந்த வரத்தைப் பற்றி விரிவாக விவாதிப்போம். இப்போது இதோ என்னவள் தெரு உலாவிற்குத் தயாராகி விட்டிருந்தாள்.

இதுதான் என் நாளின் மிகச்சிற்ந்த பொழுது. அவள் தனது பூக்குடையை ஒரு சிலுப்பு சிலுப்பி விரிக்கும்போது வரும் முகச் சுளிப்பா? இல்லை, அவள் அரைவாக்கில் குனிந்து தன் செருப்பின் வார் இடும் தோரணையா? இல்லை, என்னைக் கடந்து செல்லும்போதெல்லாம் தன் இடக்கை விரல்களால் என் தலைகோதும் போது என் உள்ளம் பொங்கும் உணர்வா?

ஆம். நான் மேலே கடைசியாக சொன்னது உண்மைதான். இட்டுக்கட்டியது அல்ல. எங்களிருவருக்கும் இடையில் முன்சென்ம பந்தம் உண்டுபோல. எப்போது நாங்கள் சந்திக்க ஆரம்பித்தோமோ அப்போதிருந்து இக்கணம் வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறாக நான் இந்த சுயஎண்ண இன்பத்தில் திளைத்திருக்கும் வேளையில் பகல்பொழுது முடிந்து இரவு போர்வை போர்த்த ஆரம்பித்து விட்டது.

********

என்ன இது. விடிந்து நேரமாகிவிட்டது போலும். அவளின் நினைப்பிலேயே உற்ங்கப்போனதின் வினை இது. என்னவளின் தரிசனம் இன்று கிடைக்கப்பெறாதோ? ஆனால், அவளின் வீட்டின் முன் என்ன சிறுகூட்டம்? அவளைத் தவிர மற்ற அனைத்து முகங்களையும் பார்க்க முடிகிறதே.

“பாவங்க! சொந்தம் எதவும் இல்லாத பொண்ணு போல! இங்க வந்து அதுவும் ஒரு வாரத்துல சாகணும்னு அதுக்கு எழுதி வச்சிருக்கு”. “நீங்க இப்படி சொல்றீங்க. ராத்திரி வேலையை விட்டு வரும்போது ஒருத்தன் குத்தியிருக்கான்னா, இந்த பொண்ணு எப்படி பழகி என்ன பண்ணிச்சோ!”, எனை கடந்து செல்லும் இருவரின் உரையாடல்.

நான் தலைசிலுப்பி மறுமுறை அந்த உரையாடலை என் சிந்தனையில் ஓட விட்டு சுயசிந்தனைக்கு வந்தேன். பவியக்கா இறந்து விட்டாளா? இருக்காது! இதோ, அவள் கோலமிட இப்போது வந்துவிடுவாள். 

“இல்லீங்க! ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது. சொசைட்டி சார்பா ஒரு மாலையை போட்டு எரிமயானத்துக்கு அனுப்பி வச்சிடலாம். நான் முன்னாடியே அங்க சுப்ரமணிகிட்ட பேசிட்டேன். ஒன்பது மணிக்கு கொண்டுபோனா காரியம் பண்ணி முடிச்சிடலாம்”, அவர்களின் பேச்சு தொடர்ந்தது.

“என்னங்க. வரும்போது அந்த ரோஜா ஒன்ன பறிச்சிட்டுவாங்க. அந்த பொண்ணுக்கு வச்சிவிட்டு அனுப்பனும். எப்பவும் பூ வச்சிதான் அந்த பொண்ண பாத்திருக்கேன். எதோ நம்மால முடிஞ்சது”.மேலே பேசிய இருவரில் ஒருவரின் மனைவி அது. 

எனைநோக்கி ஒரு கை வருகிறது. என் கால்முட்டிற்கு கீழ் போய். “ஆ….என் காலை யாரோ உடைக்கும் உணர்வு. யாரோ என்னைத் தூக்கி கொண்டு பவியக்கா வீட்டிற்குள் போகிறார்கள். பவியக்காவை வெள்ளை துணி தலைமுதல் கால்வரை அணைத்து கொண்டுவிட்டது. ஆனால், அந்த நிலவு முகம் மட்டும் அப்படியே உள்ளது, சிறிது இரத்தக் கறைகளுடன். நிலவின் முகமும் அப்படித்தானே. என்னை அவள் இடது காதின் மேல்முடிக்கிடையில் சொருகி விட்ட பொழுதில் என் பிறப்பின் உச்சம் அடைந்தேன், என் பவியக்காவை அணைத்துக்கொண்டு.

*******

vasan.p.r@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button