
வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான
மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டியுள்ள தனது சிறிய படிப்பறையில் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்துகொண்டிருந்தபோதுதான் சினுங்கிக்கொண்டேயிருந்த அந்த தொலைபேசியை எடுத்து வந்து தந்தார் அமிர்தம் அம்மாள்.
“யாரு போன்ல?” என்றவாறே போனைக் கையில் வாங்கினார் திருமால்.
“ஊர்ல, பெரிய வீட்டிலிருந்து” என்றார் அமிர்தம்.
“அப்படியா” என்றவாறு சாய்வு நாற்காலியிலிருந்த அவர் எழுந்த வேகமும் அவர் குரலில் இருந்த பதற்றமும் அமிர்தம் அம்மாளுக்குத் திகைப்பு எதையும் ஏற்படுத்தவில்லைதான். ஏனென்றால் இது போன்ற காட்சிகளைப் பார்த்து அவருக்கு அலுத்துப் போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டதுதான் காரணம். இயல்பாகவே திருமால் குணத்தில் பணிவு உடையவராகவும் பிறரை மதிக்கும் பாங்கினையும் கொண்டவராகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டவர். தன்னை விட வயதிலும் அந்தஸ்திலும் செல்வத்திலும் புகழிலும் உயர்ந்து காணப்படுபவரிடம் திருமாலின் பணிவு என்பது அரசாங்க காரியாலயத்தில் பணிபுரியும் ஒரு கடை நிலை ஊழியரிடத்துக் காணப்படும் பணிவை விட மேலானது என்றே சொல்லலாம்.
“ஐயா!”
……………….
“நல்லாருக்கங்க”
……………….
“சரிங்க ஐயா”
…………………
“ஆகட்டுங்க ஐயா”
…………………
“நல்லதுங்க ஐயா!” இவ்வளவுதான் திருமால் பேசியது.
பெரிய வீட்டிலிருந்து அழைப்பு வந்ததிலிருந்து கைகால் ஓடவில்லை திருமாலுக்கு. அறுபது ஆண்டுகளுக்கு முன் தன் திருமணத்திற்குத் தாலி எடுத்துக்கொடுத்த பெரிய குடும்பத்தாரின் வாரிசுகளில் மூத்தவரான மணிவேல், திருமாலின் மகன் அடைந்துவிட்ட பெரும்பதவியை எண்ணி மகிழ்வுற்றதும், அச்செயலுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக பெரிய கம்பத்தம் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருப்பதாகவும் வந்த அலைபேசி அழைப்பு பெரியதொரு மகிழ்வைத் தந்தது திருமாலுக்கு என்பதில் வியப்பேதுமிருக்க முடியாதுதான். தானும் அரசாங்கத்தில் வருவாய்த்துறையில் சுமார் நாற்பதாண்டுகளாகப் பணியாற்றித் துணை ஆட்சியர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுத் தனக்கே உரிய பணிவான குணத்தாலும் பொறுமையாலும் நல்ல முறையில் ஓய்வு பெற்று விட்ட மகிழ்ச்சியைத் தன் மகன் சமீபத்தில் அடைந்திருந்த அதே துணை ஆட்சியர் பதவியில் அவனைப் பார்த்து கொண்டிருக்கும் வகையில் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயத்தைத் தன் மனைவி அமிர்தத்திடம் பகிர்ந்துகொள்வதற்கு முன் தான் சார்ந்திருக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க உறுப்பினர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்து கொண்டார். அவ்வளவு பெருமிதம் திருமாலுக்கு.
பயிற்சியில் இருக்கக்கூடிய தன் மகனுக்கு இந்தத் தகவலை தொலைபேசி வழியே தெரிவித்தபோது அவனும் மகிழ்ச்சியே அடைந்தான். வறுமையான சூழலில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் கல்வியின் மூலமாக மட்டுமே சமூகப் படி நிலைகளைக் கடந்து மேன்மையை அடைந்துவிடமுடியும் என்ற சிந்தனையைத் தீர்க்கமாகக் கொண்டிருந்தவர் அவர். அதற்காகப் பிறந்த மண்ணை விட்டு வெளியேறிய பின் பல்வேறு இடங்ளில் தான் பெருமளவில் மதிக்கப்பட்டிருந்தாலும் கௌரவப்படுத்தப்பட்டிருந்தாலும் சொந்த மண்ணில், பிறந்த மண்ணில் தன் மகன் கௌரவிக்கப்படுவான் என்பதும் அதன் மூலமாகத் தானும் கௌரவிக்கப்படுவோம் என்றும் அவர் கருதினார். இந்த எண்ணமும் சிந்தனையும் அவருக்கு இன்பம் தருவதாக இருந்ததில் வியப்பேதுமில்லைதான். அவரைப் பொருத்தவரையில் இது பெரிய விஷயம்தான்.
வார நாட்கள் முழுவதும் துணை ஆட்சியர் பயிற்சியில் தொடர இருப்பதால் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு இவற்றில் ஏதாவதொரு நாளில் பெரிய குடும்பத்தாரைச் சந்திக்க வருவதாகச் சொல்லி வைத்தான் கார்த்திகேயன். அப்படிச் சொல்லி வைத்தாலும், ஒருவனைத் தொடர்பு கொள்வதற்கான அநேக வழிகள் மலிந்துவிட்ட இக்காலத்தில் பெரிய குடும்பத்தாரின் வாரிசு தன்னிடமே நேரிடையாகத் தொலைபேசிலேயே கூட அழைத்துத் தம் வாழ்த்தைக் கூறியிருக்கலாம் என்றும் யோசித்தான். இருப்பினும் பெரியோரை நேரில் காண்பது நல்லது என்ற எண்ணத்துடன் தனது குடும்பத்தில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு செல்லலாமென்றும் நினைத்துக் கொண்டான்.
அன்று மாலை பள்ளிவிட்டு வந்த மனைவி மக்களிடம் கார்த்திகேயன் இது பற்றிக் கூறியபோது அவர்களும் மகிழ்ந்தனா்.
“நீங்க பிறந்த ஊரிலேயே உங்களுக்கு மரியாதைக் கிடைக்குதுனா அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்” என்றாள் மனைவி.
மகளும் மகனும் கிராமத்துக்குப் போவதற்கான மனநிலையுடன் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்கள்.
கடந்த மாதம் வாங்கிய காரில் அவனும் அவனது குடும்பத்தினரும் அப்பாவும் அம்மாவும் அவர்களது சொந்த ஊர் நோக்கிப் பயணமானார்கள். தென்பெண்ணை ஆற்றங்கரையின் புராதன பின் புலம் கொண்ட திருக்கோவிலூர் என்கிற நகரத்திலிருந்து கிழக்கு திசையில் சுமார் எட்டு மைல் தூரம் இருந்தது அவனும் அவனது தந்தையும் பிறந்த ஊா். திருவண்ணாமலைத் திருக்கார்த்திகை தீபத்து நாளின் மாலை ஏழு மணிக்கு மாட்டுத் தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு தண்ணீா் காட்ட நிறைசூலியாக நுழைந்த அமிர்தம் அம்மாள் திடீரென அங்கேயே கார்த்திகை தீப பெளா்ணமியில் ரோகினி நட்சத்திரத்தில் அவனைப் பெற்றெடுத்தாள். கார்த்திகை தீபத்தன்று பிறந்ததாலேயே கார்த்திகேயன் எனப் பெயரிட்டப்பட்டு வளர்ந்தான். அவன் பிறந்த ஆண்டில்தான் அவனது தந்தை அரசு வேலையில் இளநிலை எழுத்தராகப் பணியில் சேர்ந்திருந்ததாக அவனது அம்மா சொல்லியதாக ஞாபகம். விபரம் தெரிந்த நாள் வரை மெய்யூரின் சிறுசிறு தெருக்கள், சந்துகள் பலவற்றில் ஒடியாடித் திரிந்து கொண்டிருந்தவனின் வாயில் வெறும் கெட்ட வார்த்தைகளாகக் கொட்டிக் கொண்டிருந்த வேளைகளைக் கவனித்த அவனது அப்பா, இது சரி வராது என்று மெய்யூருக்கு அருகிலிருக்கும் திருக்கோவிலூர் நகரத்திற்கு வந்து குடியேறி வாழத்தொடங்கலாயினர். நகரத்திற்கு வந்த பிறகு அவனது சகவாசமும் சேர்க்கையும் முன்னைவிட அதிக கெட்ட வார்த்தைகளை அவனது சொற்களஞ்சியத்தில் சேர்த்திருந்தது என்பது வேறு விஷயம்.
பிறந்த ஊரைப் பிரிந்து வந்த சோகமும் நகரவாழ்வு தரும் அச்சமும் ஊடாட தனது மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்து வளர்த்து வந்த போதில்தான் ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள் அமிர்தம். ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோதும் ஐவரில் நடுபிறந்தோன் அர்ச்சுணன் என அடிக்கடி கார்த்திகேயனைப்பற்றி அமிர்தம் அம்மாளிடம் அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வார் திருமால். பயணத்தின் போது இந்த சிந்தனைகளை அசை போட்டுக்கொண்டு வந்ததை, தேவையின்றி எழுகிற இந்த நினைவுகளைப் புறக்கணிக்கச் செய்யுமாறு தன் மகனின் “இன்னும் எவ்வளவு நேரம்பா?” என்ற கேள்வி எழுந்தபோது கார் ஊர் வந்தடைந்திருந்தது. அப்பா தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்திருந்த தற்போது யாருமில்லாமல் பூட்டிக்கிடக்கும் வீட்டைப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு பிறகு பெரியவரைச் சந்திக்கலாம் என்றார்.
வெகு காலமாக மண் சுவர் மீது வைக்கோல் கூரை வைத்த வீடு. வீட்டின் முகட்டின் இரு புறமும் மண்ணால் செய்யப்பட்டு சாணி மெழுகிடப்பட்ட திண்ணையில் அமர்ந்தார்கள். அருகிலிருக்கும் வீட்டிலிருந்து ராமசாமி வந்தார். ராமசாமி திருமாலின் மூன்று தம்பிகளில் ஒருவர். மற்ற இருவரைக் காலன் கொண்டு போயிருந்தான்.
“ராமசாமி, பெரியவர் வீட்டுக்குத் தம்பியைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்திருக்கேன், எத்தனை மணிக்கு வரலாம்னு கேட்டுசொல்லு”
சரிங்கண்ணா என்று சொல்லிவிட்டு ராமசாமி நகர்ந்தார்.
.
பெரியவரின் பிரம்மாண்டமான வீட்டையும் அவர்கள் வசிப்பிடத்தையும் திருமாலின் குடியிருப்புப் பகுதியையும் இடரீதியாக நிலத்தில் பிரித்து வைத்திருப்பது ஒரு ஏக்கர் பரப்பிலான சுமார் ஐம்பது மரங்களைக் கொண்டிருந்த தென்னந்தோப்பு ஒன்று தான். அந்தத் தோப்புக்கு அருகில் உள்ள கோவிந்தவேல் கடையில்தான் சிறு வயது கார்த்திகேயன் தின்பண்டங்களை வாங்கி உண்பான். கோவிந்தவேல் மக்கள் தரும் காசினைக் கையால் வாங்கவே மாட்டார்.மாறாகக் கடையின் முன்புறத்தில் இருக்கும் ஒரு மரத்தட்டில் வைக்கச்சொல்லி எடுப்பார். சில்லரையைக் கொடுக்கும்போதும் அதே தட்டில் தான் போடுவார். கடைக்கு இடப்பக்கமாக இருபத்தி நான்கு மணி நேரமும் இறைந்து கொண்டிருக்கும் மின் மோட்டாரில்தான் ஊரில் சின்ன வாய்க்கால் பெரிய வாய்க்கால்களில் நீர் வரத்து குறையும்போது நீராடுவது வழக்கம்.
தனது வீட்டிலிருந்து ஊர்ப்பெரியவரின் வீட்டுக்குக் காரில் செல்ல தயங்கினார் திருமால். கொஞ்சம் தூரம் தானே நடந்தே செல்லலாம் என்றார் திருமால். ஆனால் கார்த்திகேயன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே காரிலேயே சென்றார்கள். ஆனால் பெரியவர் வீட்டுக்கு முன்பாகத் தானும் தன் குடும்பத்தாரும் காரிலிருந்து இறங்கும் காட்சியைத் திருமால் தவிர்க்கவே விரும்பினார். எனவே பெரியவர் வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் முன்னதாவகவே காரை நிறுத்தி விடச் சொன்னார். புதியதாக வந்திருக்கும் கார் யாருடையது புது மனிதர்கள் யார் என்று பார்க்குமளவுக்கு மாலை நேரம் கொஞ்சம் இருளைத் தவிர்த்திருந்து. நூறு மீட்டர் துாரம் எல்லோரும் நடந்து ஊர்ப்பெரியவரின் வீட்டுக்கு சென்றனர்.
இருபுறமும் திண்ணை வைத்துத் தின்ணைகளில் தேக்குமரத் தூண்கள் கம்பீரமாக நின்றிருந்தன. சித்தப்பா ராமசாமிதான் அவர்களது வருகையை முன் கூட்டியே பெரியவரின் உதவியாளர்களிடம் தெரிவித்து இருந்தாரே. அவர்களது வருகையை வீ்ட்டுக்கு வெளியே நின்றிருந்தவனிடம் தெரிவித்தார் ராமசாமி. பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மகனும் மகளும் இனம்புரியாததொரு உணர்வில் அமைதியாக இருந்தனர்.
வராண்டா தாண்டி உள்புறமிருந்த நிலைக்கதவு அழகிய மரவேலைப்பாடுகளுடன் இருந்தது. மனைவி அக்கதவினைத் தன் இடது கையால் தழுவியபடியே உள் சென்றாள். உள்ளே முற்றத்தின் முன்பாக ஒரு நீண்ட மர நாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். நன்றாகத் துவைத்து வெள்ளாவிக் காட்டிக் கஞ்சி போட்ட நீண்ட வெள்ளை ஜிப்பாவும் வேட்டியுமாக சிவந்த முகத்துடனும் முறுக்கிய நீண்ட அடர்த்தியான விரைப்பான நரை மீசையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார் பெரியவர். பார்க்கும் யாருமே உடனேயே கையெடுத்துக் கும்பிடும் தோரணையில் இருந்தார் பெரியவர். கம்பீரமென்றால் முற்றத்துத் தூண்களிலும் திண்ணையிலிருந்த தூண்களிலும் இருந்த கம்பீரம் எனலாம். அந்தக் கம்பீரத்தின் பின்புலமாக அவரது பல நூறு ஏக்கர் நிலங்களும் அதில் விளைந்த முப்போகப் பயிர்களும் தானியங்களும் அவற்றால் எழுந்த செல்வச் செழிப்பும் வாழ்வு வளமும் அந்த வீட்டின் மூலம் அங்கே இருந்த அனைவருக்கும் காட்சிப்படுத்தப்படுவதாக இருந்தது. மர நாற்காலிக்கு அருகில் ஒரு சிறு மர மேஜையும் இருந்தது அதன் மேல் வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியும் சிறு சொம்பும் இருந்தன. திருமாலுக்குத் தன் பழைய ஞாபகங்கள் கிளர்ந்தன. எண்பதுகளில் தான் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிய நேர்ந்த சித்தலிங்கமடம் பிர்க்காவிலுள்ள குரூப் கிராமங்களில் மெய்யூரும் ஒன்று. அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன் பகுதி நேர கிராம ஊழியர்கள் ஒழிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பதவியைக் கொணர்ந்ததன் வாயிலாகத் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் நிலவிவந்த கர்ணம், மணியக்காரர், கிராம முன்சீபு, கம்பத்தம் போன்ற பதவிகள் பேப்பர் அளவில் ஒழிக்கப்பட்டாலும் அதிகாரம் என்னவோ அவர்கள் கையிலேதான் இருந்து வந்தது. அப்படிப்பட்ட ஊர்களில் மெய்யூரும் ஒன்று. என்னதான் பெரியவரை விட பதவியில் தான் வளர்ந்து நின்றாலும் திருமால் தன்னைப் பெரியவரை விட உயர்ந்தவராக ஒருபோதும் காட்டிகொண்டதேயில்லை. திருமாலின் இந்த சுபாவம் பெரியவருக்குப் பிடித்திருந்ததில் வியப்பேதுமில்லைதான். ஊரில் இருப்பவர்களுக்குக்கும் திருமாலை அவ்வளவு பிடித்திருந்தது. வெற்றிலைப்பெட்டியிலிருந்து கண்ணை விடுவித்துகொண்டபோது
மணிவேல் பிள்ளையின் கரகரத்த கம்பீர குரல் “வா திருமால், எல்லோரும் வாங்க” -என்றது.
பெரியவரைப்பார்த்து அனைவரும் கைகூப்பி வணக்கம் சொன்னார்கள். பதிலுக்கு அவரும் கைகளை உயர்த்தினார். அறையில் சற்று நேரம் மௌனம். அதை மீண்டும் கலைக்க “எல்லோரும் உட்காருங்க” என்றார் பெரியவர்.
எல்லோரும் அமர்ந்த பிறகு அனைவருக்கும் எவர்சில்வர் டம்ளர்களில் தேநீரும் கொஞ்சம் அகலமான எவர்சில்வர் தட்டில் எல்லோருக்குமாக கொஞ்சம் மிக்சரும் வந்தது. கார்த்திகேயன் தன் பிள்ளைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னான். அவர்கள் மௌனமாக இருந்தனர். திருமால் சாவகாசமாக மிக்சரை மென்றுகொண்டிருந்தார். அமிர்தம் அம்மாளும் கார்த்திகேயனின் மனைவியும் தலை குனிந்தவாறு மௌனமாக பவ்யமாக அமர்ந்திருந்தனர். மௌனத்தின் எடை மேலும் கூடிக்கொண்டே போக “எல்லோரும் டீ சாப்பிடுங்க” என்றார் பெரியவர்.
கார்த்திகேயன் டீ டம்ளரைப் பார்த்தான். அது சரியாகக் கழுவப்படாமல் விளிம்புகளில் கருப்பழுக்குப் படிந்து சற்று ஒடுங்கியும் காணப்பட்டது. அவன் தன் மனைவி மக்களைப் பார்த்தான். அவர்கள் ஏன்தான் இங்கு வந்தோமோ என்கிற தொனியில் அவனைப் பார்த்தார்கள். கொஞ்ச நேரம் சாசுவதமான உரையாடல்கள். பெரியவருக்கே உரித்தான பாணியில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார் திருமால்.
பெரியவர் கார்த்திகேயனிடம் “அரசு எந்திரத்தின் மூளைப்பாகத்தில் உயர்ந்த பொறுப்பில் உனக்கு வேலை கிடைத்திருப்பது, பல பிறவிகளில் உனது முன்னோர் செய்த புண்ணியம் தம்பி. அப்பா லோயர் டிவிஷன் கிளர்க்கு பதவியில் இருந்து டெபுடி கலெக்டர் பதவி வரைக்கும் வந்தாருன்னா அவரோட பணிவும் பயமும்தான் காரணம் அதுக்கும் மேல எங்கள மாதிரியான பெரியவங்களோட ஆசீர்வாதமும்தான் காரணம். நீயும் அப்பாவைப் போலவே உன்னோட பணியைத் தொடர்ந்து செய். மக்களுக்கான இந்த பணியில் உன்னை அர்ப்பணித்துக்கொள். எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் தராமல் எந்த வகையான பிரச்சினைகளுக்குள்ளேயும் மாட்டிக்காம அப்பா மாதிரி ரிட்டையர்டு ஆகனும் தம்பி. கவனமா இருந்துகோங்க. நல்லா படிச்சிருக்கீங்க இதுக்கு மேல உங்களுக்குச் சொல்ல வேண்டியது எதுவுமில்ல. வாழ்த்துகள் தம்பி”
பெரியவர் சொல்லச் சொல்ல திருமால் தலையைத் தலையை ஆட்டிகொண்டேயிருந்தார். கார்த்திகேயனும் சரிங்க ஐயா நன்றி ஐயா எனத் தலையை ஆட்டினான்.
பெரியவருடனான அந்தச் சந்திப்பை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அந்த மகத்தானச் சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் கார் இருக்கும் தூரம் வரை நடந்தே வந்து காரில் ஏறினார்கள். காரை கார்த்திகேயன் ஸ்ட்டார்ட் செய்து தென்னந்தோப்பைக் கடந்த போது இருளைச் சுமந்து வந்த காற்று காருக்குள் அலைந்தது. காரில் இருந்த அனைவரும் மௌனமாயிருக்க மகன் கேட்டான்,
“அப்பா, நீயும் தாத்தாவும் டெபுட்டி கலெக்டா் தானே? அப்புறம் ஏம்பா நீங்க ரெண்டு பேரும் கீழே தரையில உக்காந்தீங்க? அந்தத் தாத்தா உங்களைவிட பெரியவராப்பா?”
.
கார்த்திகேயன் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகப் புன்னகைத்துக் கொண்டே காரின் கண்ணாடிகளை மேலும் இறக்கிவிட்டான்.அந்த இரவின் வெம்மையான காற்று அம்மௌனத்தை மேலும் இறுக்கமாக்கியது.
*******