இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

பெயர் – பாலு

சிறுகதை | வாசகசாலை

மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு வெளியே நடுக்கத்தை மறைக்கும்பொருட்டு கால்களை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தபடி அவன் மிகப் பதட்டத்துடன் காத்திருந்தான்.

‘ஆண், ஆண், ஆண்! கடவுளே, எப்படியாவது Y க்ரோமோசோமை வெற்றி பெறச் செய்துவிடு. X க்ரோமோசோமால் ஏகப்பட்ட பிரச்சினை. குடும்பத்துக்காக பாரத்தைச் சுமந்து ஓடும் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கான திராணி என்னிடமில்லை. Y க்ரோமோசோம் அவனாகவே வளர்ந்து கொள்வான். நான் முதுமையை எட்டியதும் எனக்குப் பணிவிடை செய்ய மகனும் மருமகளுமிருக்கும் பாக்கியத்தை எனக்கு அளி’ என மனதுக்குள் வேண்டினான். அக்கணத்திலேயே மனதளவில் முதுமையடைந்திருந்தான். தீபிகாவின் உடல்நலனைவிட எதிர்காலச் சிந்தனைகளே அவனை அலைக்கழித்தன.

வெளியே வந்த செவிலியர் அவனை மெத்தனமாக அழைத்து வார்டுக்குள் கூட்டிச் சென்றாள். ஆறு மணி நேரக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இக்கணமே கண்டுவிட வேண்டுமென்கிற அவசரத்துடன் குழந்தையை நோக்கிச் சென்றான். தீபிகா அரை மயக்கத்தில் படுத்திருந்தாள். கண்களிலிருந்த அழுக்குகளைத் துடைத்து, பெருமூச்சுடன் கலங்கிக்கொண்டே குழந்தையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். என்ன வலி! என்ன சுகம்! அவனோ தீபிகாவைச் சற்றும் பொருட்படுத்தாதவனாய் குழந்தையை அறிவதில் மட்டுமே ஆர்வமாய் இருந்தான். பாப்பாவின் இடுப்பைச் சுற்றி வெள்ளைத் துணி போடப்பட்டிருந்ததை கவனித்தான். அதற்குள் கைவிட்டுத் தொட்டுப் பார்த்து குஞ்சுமணியை உணர்ந்ததும் சந்தோஷம் பொங்கியது. வேண்டுதல் நிறைவேறியது!

தீபிகாவை அவன் முதலில் சந்தித்தது மேட்ரிமோனியில்தான். துணை தேடும் ஆர்வத்தை என்றுமே கொண்டிராத அவனுக்காக அம்மாதான் பெண் பார்த்தாள். தீபிகாவைப் பார்த்ததுமே அம்மாவுக்குப் பிடித்துவிட்டதால் உடனடியாக ப்ரொஃபைலில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, “நான்தான்ம்மா உன் மாமியார் பேசுறேன்” என்று ஒரே போடாகப்போட்டாள்.

எண்ணெய் வடியும் யதார்த்த எழில் கொண்ட தீபிகாவை முதன்முதலில் புகைப்படத்தில் பார்த்தபோது தன் வசீகரத் தரநிலைக்கு ஏற்றவளாய் இருப்பதாக உணர்ந்தான். திருமணத்துக்குப் பின் அவளை உடல் வழி அறியத் தொடங்கிய பிறகே அவனுக்கு அவள் மீதான காதல் மலர்ந்தது. கணவனுக்கு எவ்விதத்திலும் பட்டினி போட்டுப் பழகாதவளாய் இருந்த தீபிகா மீது நாளடைவில் நெருங்கிய பந்தத்தை உணர்ந்தான். குடும்பமே கண்ணென இருந்த அவள், எதன் மீதும் புகாரில்லாத தூய ஆன்மாவாய் ஜொலித்தாள். ஒரேயொரு குறை! தீபிகாவுக்கு அவன் மீது காதல் இருப்பதாக எந்த அறிகுறியுமில்லை.

திருமணமான ஒன்றரை ஆண்டில் ஓரிடத்தில்கூட அவளின் பிரியம் வெளிப்படவில்லை. மனைவிக்கு உண்டான கடைமைகளைச் சரியாகச் செய்கிறாளே அன்றி, அவளிடமிருந்து தனக்கெனப் பிரத்யேகமாக எதுவும் கிடைக்காததை எண்ணி வருந்தினான். பின் தன்னுடைய இடத்தில் வேறு எவர் இருந்தாலுமே அவள் இப்படித்தான் நடந்திருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டான்.

குளிர்கால இரவுப்பொழுதில் தங்களின் மிகச்சிறந்த புணர்ச்சியை நிகழ்த்தி முடித்திருந்தபோது இருவரின் உடல் ரோமங்களும் இன்பத்தில் சிலிர்த்திருந்தன. பெருமூச்சு சப்தம் பெருமழைச் சத்தத்துடன் கலந்திருந்தபோது அவள் சன்னமாகக் கேட்டாள், “உனக்கு எக்ஸ் லவ்வர் யாராவது இருந்திருக்காங்களா?” என. தன்னை அறிய முன்வந்தவளின் ஆர்வத்தை வியந்து தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவள் பெயர் மகாலட்சுமி. வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருவரும் தினசரி மெட்ரோ நிலையத்தில் காதல் பார்வைகளைப் பரிமாறினர். அவ்வப்போது சில நலம் விசாரிப்புகள் அவர்களுக்குள் நிகழும். அப்படித்தான் ஒருமுறை ஓர் அற்ப காரணத்தைச் சொல்லி அவளுடைய தொலைபேசி எண்ணை வாங்கினான். கோயம்பேட்டில் தொடங்கி திருமங்கலத்தில் முடிந்துவிடும் மிகச்சிறிய காதல் கதை. ஐந்தாண்டுகளில் அவனுக்குச் சம்பளம் எழுபதாயிரத்தை எட்டியிருந்தது. சென்னை போன்ற பெருநகரத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவன் என்கிற பொறுப்பை ஏற்க தனக்கு எல்லாத் தகுதியும் இருப்பதாக உணர்ந்த அவன், பெற்றோரிடம் சொல்லி மகாலட்சுமியைப் பெண் கேட்கச் சொன்னான். குடும்பமே மகாலட்சுமியைத் தேடிப் போனது.

“இந்த வீடாடா? கீழேயா மாடிலேயா?” என்றார் அப்பா.

“ரெண்டாவது மாடி” என்றான்.

“இந்தப் படிக்கட்டு ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு? தலை இடிக்குது. மனுஷாள்லாம் நான்கடி ஜீவன்னு நினைச்சுட்டாங்களா?” என்று புலம்பிக்கொண்டே வந்தாள் அம்மா. அவளுக்குக் கழுத்து வலி வேறு! லேசாக நிமிர்ந்தபோது சுவரில் இடித்துக்கொண்டாள்.

“பார்த்து குனிஞ்சு வாடீ” என்றபடி அப்பா அவளது தலையைத் தேய்த்துவிட்டார்.

முதல் தளத்திற்குச் சென்றதும் ஓர் ஐம்பது வயது ஆள் வந்து, “யாருங்க?” என்றார்.

“மகாலட்சுமி…” என்றான் அவன்.

“மேல குடித்தனம் இருக்காங்க” என்றதும் தாய் மகனைக் கண்டு முறைத்தாள்.

“சொந்த வீடு இல்லையா இது?” எனக் கேட்டாள்.

அவன் பதிலெதுவும் சொல்லாத நிலையில் அப்போதே அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர். அவனும் மகாவை மறந்துவிட்டான். அடுத்த ஊதிய உயர்வில் கார் வாங்கிவிட்டிருந்ததால் அதன்பிறகு அவன் மெட்ரோ பக்கமே செல்லவில்லை. மகாவின் எல்லா நினைவுகளையும் அழிக்க முடிந்தவனால் அவளின் தொலைபேசி எண்ணை மட்டும் அழிக்க மனமில்லை. ஒருநாளும் தொடர்புகொண்டு பேசியதில்லை எனும்போதும் அந்த எண் அவள் நினைவின் அடையாளமாய் இருந்தது. தொடர்புப் பட்டியலில் அவளது எண் இருக்கும் விஷயத்தைத் தவிர மற்ற அனைத்தையும் புணர்ச்சிக்குப் பிந்தைய உரையாடலின்போது தீபிகாவிடம் சொன்னான்.

தீபிகாவுக்குச் சிரிப்புதான் வந்தது. “இது ஒரு கதை, ஹ்ம்ம்! பொண்ணுதானே வந்து வாழப்போறா. மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருந்தா போதாதா?” என்றாள்.

“நானும் இதையேதான் அம்மாகிட்ட கேட்டேன். நாளப்பின்ன விருந்துக்குப் போறமாதிரி இருந்தா அடிக்கடி தலைய முட்டிக்க வேண்டி இருக்குமேன்னு மறுத்துட்டாங்க” – இருவருமே சிரித்தனர்.

பின் கனமழை சட்டென ஓய்ந்ததும் உண்டாகும் வெறுமையை உணர்ந்தனர். தீபிகா கேட்ட அதே கேள்வியை அவனுக்கும் கேட்கத் தோன்றியது. அவளிடமிருந்த இயல்புத்தன்மை அவனிடம் இல்லாவிடினும் தயங்கியபடி, “உனக்கு யாரோடவாவது இதுக்கு முன்னாடி…” என்று இழுத்தான்.

யோசனையில் ஆழ்ந்துபோன அவளது கண்களில் தெரிவதென்ன? கண்ணீரா? இருளில் சரியாகத் தெரியவில்லை. அதுவரையில் அவளின் குரலிலிருந்த துள்ளல் அடங்கியது.

“நமக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு ஆறு மாதம் முன்னதான் நாங்க பிரிஞ்சோம். சரியான குடிகாரன். ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போ எனக்காக அதையெல்லாம் குறைச்சுக்கிட்டான். கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா விட்டுட்றதா சத்தியம் பண்ணான். ஆனா, ஒருமுறை சண்டை வந்ததும் ஃபுல்லா குடிச்சுட்டு என்னைக் கண்டபடி திட்டினான். தேவுடியா அது இதுன்னு ஏதேதோ சொன்னான். அப்போவே முடிவு பண்ணிட்டேன், என்னால அவனோட வாழ முடியாது. மத்தபடி நல்லவன், குடிச்சுட்டா மட்டும்தான்…” என்றாள். அதற்கு மேல் அவள் பேசவில்லை.

நின்ற மழை மீண்டும் பெய்வதற்கான அறிகுறி வானில் தென்பட்டது. பலத்த இடியால் நடுங்கினாலும் அவளறியாவண்ணம் மறைக்கத் தெரிந்திருக்கிறது அவனுக்கு. குளிர் தாங்க முடியாமல் இழுத்துப் போர்த்தி உறங்கினான்.

*

புதிதாய் பிறந்த முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. ‘ல’ வரிசையில் பெயர் வைத்தால் பிள்ளை சாதனையாளனாகத் திகழ்வானென ஐயர் சொல்லிவிட்டார்.

“ல வரிசைலதான் பேரு வெச்சாகணுமா?” எனக் கேட்டான்.

“ஏன் அதுக்கு என்னவாம்? அவர்தான் சொல்றாரே” என்றாள் தீபிகா.

“அதுக்கில்லடீ. ல வரிசைல ஆம்பளை குழந்தைக்குத் தமிழ் பேரே இருக்காதே”

“கொஞ்சம் சும்மா இரு. தமிழ் பேராம். பையனுக்கு ஸ்டைலா பேர் வைக்க வேணாமா? நான் ஏற்கெனவே டிசைட் பண்ணிட்டேன்” என்றவள், குடும்பத்தினருக்குக் கேட்கும்படி “லோகேஷ்?” என்று சத்தமாகச் சொன்னாள். மொத்த குடும்பமும் ஏற்றுக்கொண்டதால் இனி அவன் சொல்வதற்கு என்ன இருக்கிறது? தீபிகா பிள்ளையின் கைப்பிடித்து அரிசியில் லோகேஷ் என்று எழுதினாள். அவள் லோகி என்று செல்லமாக அழைத்து வந்ததால் எல்லோரும் அப்படியே கூப்பிட்டனர்.

ஒரு விடுமுறை நாள் மாலை தீபிகா, பிள்ளையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியே புறப்படத் தயாரானாள்.

“சூப்பர் மார்க்கெட் வரை போய்ட்டு வந்துட்றேன். குழந்தை பக்கத்துல உக்காரு. எழுந்தான்னா மறுபடி தட்டி தூங்கவை” எனக் கணவனுக்கு உத்தரவு போட்டாள்.

கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த லோகி அருகில் அமர்ந்தபடி இன்ஸ்டாகிராமை துழாவினான் அவன். ‘அந்தியின் மதுரம்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகியிருப்பதாக தீபிகா உட்பட அவனுடைய நண்பர்கள் சிலர் பகிர்ந்திருந்தனர். அத்தொகுப்பை எழுதிய கவிஞர் தினகரனின் பக்கத்தைச் சென்று நோட்டமிட்டான். எளிய மொழியில் புரியும்படியான கவிதைகளாக இருந்தன. தினகரனின் மொத்த பதிவுகளையும் வாசித்து நேரத்தைக் கழித்தான். ஈராண்டுகளுக்கு முன் தினகரன் எழுதிய ஒரு கவிதைப் பதிவில் தீபிகா, ‘@lokesh_kumart’ என்று பின்னூட்டமிட்டிருந்தாள். தினகரன் பதிவிட்டிருந்த காதல் கவிதையில் #TagyourLove எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பதற்றமடைந்து உடனடியாக அந்த ஐடியை க்ளிக் செய்தான்.

லோகேஷ் குமார் எனும் பெயரைப் பார்த்ததும் இதயத்துடிப்பு பலமடங்கு அதிகரித்திருந்தது. நீண்ட முடி, அலங்கோலமான தாடி என ஆள் பார்க்க முரடனாய்த் தெரிந்தான். அவனும் தீபிகாவும் சேர்த்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இருந்தது. தீபிகாவின் பிறந்தநாளின்போது ‘ஹேப்பி பர்த்டே லவ்’ என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் செய்வதறியாமல் உதட்டின் தோலைப் பிய்த்தான். உதட்டோரத்தில் சில சொட்டு ரத்தத்தைக் கண்டதும் அவனுக்குப் பதற்றம் சற்று தணிந்தது.

தீபிகா வீடு திரும்பியதும், “என் செல்ல லோகி, என் பட்டு லோகி. நல்லா தூங்குனீங்களா…” என்று கொஞ்சிக்கொண்டே லோகேஷை முத்தமிட்டாள். அதைக் கண்ட அவனுக்குக் குமட்டலாக வந்தது. ஒருவிதமான நடுக்கத்தையும் ஒவ்வாமையையும் ஒருசேர உணர்ந்தான். வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனதுக்குள் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டான். அதை எண்ணிக் குற்றவுணர்வும் கொண்டான். அவனுடைய உணர்ச்சிக்கொந்தளிப்பு யாரிடமும் வெளிப்படவில்லையெனினும் தன்னைப் பற்றிய பிம்பம் தன்னிடம் சிதைவதை எண்ணிக் கோபமடைந்தான்.

“ஏன் இப்படிப் பண்ண தீபிகா?” என இரவுணவு வேளையில் கேட்டான்.

“ஒரு ஞாபகமா” என்றாள்.

“ஞாபகமாவா? நமக்கு ஒரு பொண்ணு பிறந்து அவளுக்கு நான் மகாலட்சுமின்னு பேர் வெச்சிருந்தா சும்மா இருந்திருப்பியா?”

“நீ ஏன் இதை பெரிசுப்படுத்துற? ஒரு பேர்ல என்ன இருக்கு?”

“பேர்ல என்ன இருக்கா? நமக்கு அடுத்தது ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும்டீ. உன்னைப் பழி வாங்கவே அவளுக்கு மகாலட்சுமின்னு பேர் வெக்கறேனான்னா இல்லையான்னு பார்”

“அதுக்கு முதல்ல நான் உனக்குக் குழந்தை கொடுக்கணும். தனியா எல்லாம் செஞ்சிடுவியா நீ?” என்று ஏளனமாகச் சிரித்துக்கொண்டே கேட்டாள். முதன்முறையாக அவளுடைய சிரிப்பு அவனுக்கு அருவருப்பைத் தந்தது. எச்சிலைத் திரட்டி காரி உமிழத் தோன்றியது. ஆனால், அவன் உமிழ்ந்தது எச்சிலை அல்ல.

“குழந்தை கொடுக்க மாட்டியா? என்ன சவால் விடுறீயா? நீ எப்படிக் கொடுக்காம இருக்கேன்னு நானும் பாக்குறேன்” என்று சொல்லி அவளை வலுக்கட்டாயமாகப் புணர்ந்தான். செக்ஸ் முடிந்த பிறகு மனைவியை வன்புணர்வு செய்துவிட்ட குற்றவுணர்வு இல்லாமலில்லை. ஆனால், தீபிகா வேறு விதமாக உணர்ந்தாள். குளிர்கால இரவுப்பொழுது கூடலின் பேரின்பத்தை இது மிஞ்சிவிட்டதாக அவள் உள்ளூர நினைத்துச் சிலிர்த்தாள். தன்னை வென்றுவிட்டதாக எண்ணி கர்வத்தின் முகமூடியை அணிந்துகொண்ட அவனுடைய திமிரை அடக்க நினைத்த தீபிகா, “சாதாரண ஒரு பேருக்கு ஏன் நீ இவ்வளவு கொந்தளிக்கிற? ஒருவேளை இது அவனுடைய குழந்தையா இருக்குமோன்னு நினைச்சுட்டியோ!” என்று கேட்டாள்.

அவன் உடனடியாக எழுந்து அருகிலிருந்த கண்ணாடி ஃப்லாஸ்கை தூக்கி வீசினான். ‘தேவுடியா முண்ட’ என்று திட்ட வேண்டுமென வார்த்தை வருகிறது. அவ்வாறு சொல்லிவிட்டால் தன்னை விவாகரத்து செய்துவிடுவாளோ என்று பயந்தான். குழந்தை ஆகிப்போன பிறகு விவாகரத்து வரை சென்றால் அதைவிடச் சிக்கல் வேறெதுவுமில்லை.

“சும்மா ஃபன். ஜோக் பண்ணேன். கோச்சிக்காதே. நிஜம்லாம் இல்ல” என மீண்டும் அதே ஏளனத்துடன் சிரித்தபடி சொன்னாள். உண்மையில் வென்றவர் யாரெனும் சந்தேகம் அவனுக்கு உதித்தது. தலையணையும் போர்வையும் எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றான். பின் குழந்தையைக் கலைத்துவிடுவாளோ என்று அஞ்சி தொலைபேசியில் மாமியாருக்கு அழைத்து, “தீபிகா உண்டாயிருக்கான்னு நினைக்கிறேன் அத்தே. கன்ஃபார்ம் ஆகலை. சீக்கிரமே நல்ல சேதியோட வீட்டுக்கு வர்ரோம்” என்று சொல்லிவிட்டான்.

*

மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு வெளியே நடுக்கத்தை மறைக்கும்பொருட்டு கால்களை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தபடி அவன் மிகப் பதட்டத்துடன் காத்திருந்தான்.

‘பெண், பெண், பெண்! கடவுளே, எப்படியாவது எனது X க்ரோமோசோமை வெற்றி பெறச் செய்துவிடு. மகாலட்சுமி பிறந்தே ஆக வேண்டும்’ என மனதுக்குள் வேண்டினான். தீபிகாவின் உடல்நலனைவிட இச்சிந்தனையே அவனை அலைக்கழித்தது.

வெளியே வந்த செவிலியர் அவனை மெத்தனமாக அழைத்து வார்டுக்குள் கூட்டிச் சென்றாள். இக்கணமே கண்டுவிட வேண்டுமென்கிற அவசரத்துடன் குழந்தையை நோக்கிச் சென்றான். தீபிகாவைச் சற்றும் பொருட்படுத்தாதவனாய் குழந்தையை அறிவதில் மட்டுமே ஆர்வமாய் இருந்தான். பாப்பாவின் இடுப்பைச் சுற்றி அதே வெள்ளைத் துணி. லேசாகத் தூக்கிப் பார்த்தான். குழந்தை சர்ரென்று உச்சா பெய்தது. தீபிகா அரை மயக்கச் சோர்வில் அதைக் கண்டு சிரித்தாள். சனியன்! அதே இழவெடுத்த குஞ்சு!

இளைய மகனுக்கு தீபிகா நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டினாள். அன்றிலிருந்து அவன் தன் இரு பிள்ளைகளையும் வெறுத்தான். லோகேஷை அதிகம் வெறுத்தான். வலிகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக உழைத்துக் கொட்டினான். தீபிகாவைப் பழிதீர்க்கத் துடிக்கும் வெறி அவனுக்குத் தீரவே இல்லை. பெண் பிள்ளை வேண்டுமென்பதற்காக மீண்டும் முயன்றுகொண்டிருக்க முடியாது என்கிற யதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் கோபத் தீயை எதைக் கொண்டாவது அணைக்க வேண்டுமே! ஒரேயொரு வழி இருந்தது.

கோபத்தின் வழியாக ஏற்பட்ட தைரியத்தில் மகாலட்சுமியைத் தொடர்புகொண்டு பேசினான். அன்றிலிருந்து அவனுக்கு தீபிகா மீதிருந்த காதல் முற்றிலும் வற்றிப் போயிருந்தது. தீபிகாவுக்கு அப்போதுதான் அவன் மீது காதல் ஏற்படவே தொடங்கியிருந்தது.

-krshbala99@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button