
‘ஆ’சிரியர்களை நினைவிருக்கிறதா?
உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை எந்த வகுப்பிலிருந்து உங்களால் நினைவுகூர முடியும்..? நான்கு, ஐந்து..? என்னால் இரண்டாம் வகுப்பிலிருந்தே நினைவுகூர முடியும். சில அனுபவங்களுடன் பின்னோக்கிப் போகலாமா..?
அந்த வயதில் எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அப்பா அடிக்கடி கூட்டிக் கொண்டு போவார். இரண்டாம் வகுப்பில் தேர்வு ஒன்று வைத்தார்கள். எழுதிவிட்டு வீட்டுக்கு வந்ததும் அப்பா கேட்டார், “என்னடா, எப்டி எழுதிருக்க..?”
நான் : எழுத ஆரம்பிச்சனா..? அப்ப பக்கத்துல எங்கயோ ஸ்பீக்கர்ல நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாட்டை வெச்சாங்கப்பா. பாட்டைக் கேட்டுட்டு அப்டியே தூங்கிட்டேன். ஒண்ணுமே எழுதலை.
அப்பாவென்றால் முதுகில் நாலு வைத்து, திட்டியிருக்க வேண்டாமோ..? என் அப்பா வாய்விட்டுச் சிரித்து, நாலு சாத்து வைக்க வந்த அம்மாவையும், “என்ன ஐஏஎஸ் எக்ஸாமா பாழைபோறது? விடும்மா..” என்று தடுத்தென்னை ஆட்கொண்டார்.
இப்படியாப்பட்ட சிறப்பான மாணவனை இரண்டாம் வகுப்பில் மேய்க்க வேண்டிய பொறுப்பு சாதுவான ஓர் ஆசிரியைக்கு அமைந்தது. தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசிரியர்களைப் பார்த்திருப்பீர்கள். பழத்தைத் தின்ன வைத்துக் காசு போட வைத்த ஆசிரியரைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்கு இரண்டாம் வகுப்பில் ஆசிரியையாக வந்த மங்கையர்க்கரசி டீச்சர்தான் அவர்கள்.
மேலேசொன்ன சம்பவத்திலேயே நான் ஒரு அப்பா செல்லம் என்பதை அறிந்திருப்பீர்கள். இரண்டாம் வகுப்புப் படிக்கிற பையனின் கண்களில் யாராவது பணம் காசைக் காட்டுவார்களா? என் அப்பா காட்டினார். இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று அவ்வப்போது பாக்கெட் மணி தருவார்- மிட்டாய் வாங்கிச் சாப்பிட. இந்தக் காசில் என்ன வாங்கித் தின்ன முடியும்? என்றொரு எண்ணம் உங்கள் மனதில் ஓடினால் மறவுங்கள். அந்தக் காலம் காசுகளுக்கும் நல்ல மதிப்பிருந்த காலம். பத்துக் காசுக்கு ஒரு முழு மாம்பழமே வாங்கித் தின்றுவிட முடியும்.
சரி, உங்கப்பா தந்தார், நீ வாங்கித் தின்றாய், அதற்கென்ன என்று கேட்பீர்களேயானால்… அன்றைய பொடிப்பயலுக்கொரு கெட்ட பழக்கம் இருந்தது. ஏதோ பபிள்கம் மெல்வது போன்று சில்லறைக் காசை வாயில் அதக்கிக் கொண்டு வகுப்பைக் கவனிப்பது. அப்படிப் பாடத்தைக் கவனித்த ஒரு தினத்தில், மங்கை டீச்சர் ஏதோ நகைச்சுவையாகச் செய்துவிட, க்ளாஸே சிரித்தது. நானும் என்னை மறந்து சிரித்ததில் கன்னக்கதுப்பில் அதக்கியிருந்த பத்துப் பைசாவானது அங்கிருந்து நாக்கு என்கிற சறுக்குப் பாதையில் வேகமாகப் பயணிக்கத் துவங்கி, தொண்டையை அடைந்து, அங்கே டோல்கேட் ஏதுமில்லையாதலால் சிறிதும் வேகம் குறைக்காமல் உணவுக் குழாயில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
ஆனாலும், தொண்டைக் குழியைக் கடந்து இறங்குகையில் ஒரு சிறு வலியை உற்பத்தி செய்துவிட்டுப் போனது. எனக்கு நடந்தது இன்னதென்று புரிந்து விட்டது. அட் எ டைம் ஆறேழு ஆடுகளைத் திருடிய கள்ளன் போல் விழிக்க ஆரம்பித்தேன். கூடவே விக்கல் வேறு. மங்கை டீச்சர் கவனித்து விட்டார். “டேய், என்னடா ஆச்சு உனக்கு..? ஏன் என்னவோ போல முழிக்கற?” என்று பதட்டத்துடன் கேட்டபடி அருகில் வந்தார். “அது வந்து… ஹிக்… பத்துக்காசு… ஹிக்… முழுங்கிட்டேன்… டீச்சர்… ஹிக்..” என்று ‘குலேபகாவலி’ படத்தில் ராஜசுலோசனா விக்கிக் கொண்டே பாடுவதைப் போல விக்கியபடியே சொன்னேன்.
டீச்சர் பயந்து போனார். பக்கத்து க்ளாஸ் டீச்சரைக் கூப்பிட்டு, கொஞ்சநேரம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓடிச் சென்று பள்ளிக்கு எதிர்க்கடையில் வாழைப்பழங்களை வாங்கி வந்தார். அதில் இரண்டை உரித்து என்னை விழுங்கச் செய்து, சொம்பு நிறையத் தண்ணீரைத் தந்து குடிக்கச் செய்தார். ஒரு வழியாக விக்கல் நின்றது. டீச்சர் உடனே ப்யூரை அழைத்து, (வயசுல பெரியவர், மரியாதையில்லாம பியூன்-னு சொல்லலாங்களா?) விஷயத்தைச் சொல்லி என்னை வீட்டில் ஒப்படைக்குமாறு அனுப்பி வைத்தார்.
அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிவந்த நேரம் சுமாராக மூன்றரை மணி. அம்மா மட்டுமே வீட்டில். பியூர் சொன்னதைக் கேட்டுப் பதறிவிட்டார்கள் அம்மா. இன்ஸ்டன்ட்டாக வந்த கோபத்தில் முதுகில் நாலு சாத்து சாத்தினாலும், “வயித்தை வலிக்குதாடா?”, “தலைசுத்துதாடா?” என்றெல்லாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் பதற்றமாக. நமக்கு எந்த எஃபெக்ட்டாவது இருந்தால்தானே… எல்லாவற்றுக்கும் இல்லை என்றே தலையாட்டிக் கொண்டிருந்தேன். அன்றைக்கென்னவோ சித்தப்பா ஆபீஸிலிருந்து அதிசயமாக ஐந்து மணிக்கே திரும்பிவிட, நடந்ததை அம்மா சொல்லி, உடனே என்னை ஆஸ்பத்திரிக்கு அவருடன் துரத்தி விட்டார். அங்கே டாக்டரானவர் வயிற்றை எல்லாப் பக்கமும் அழுத்திப் பார்த்தார். எந்தத் திசையிலும் வலியில்லை என்றே நான் சொன்னதில் அவரே குழம்பிப் போய், ‘புரியாக்கதிர்’ எடுத்து வரும்படி அனுப்பினார்.
அந்தப் படத்தைப் பார்த்ததில் வயிற்றில் வட்டமாய்க் காசு தெரிந்தது. சற்று நேரம் யோசித்தவர், “இப்ப வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. ஏதாவது வலியெடுத்துச்சுன்னா வாங்க, இல்லாட்டி நாளைக்கு காலைல மறுபடி வாங்க” என்று பிரசவ வலிவந்த பெண்ணுக்குச் சொல்வது போல மீடியமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அப்பா சொந்தமாக மாவுமில் வைத்திருந்தவர் என்பதால் இரவுதான் கடையடைத்து வருவார். வந்ததுமே என் ‘திருவிளையாடல்’ அவரிடம் ஒப்பிக்கப்பட்டது. ஏற்கனவே பயத்திலும் பதட்டத்திலும் இருந்த அடியேன் அப்பா அருகில் வந்ததுமே விஸ்கி விஸ்கி, ச்சே, விக்கி விக்கி அழவாரம்பித்தேன். அப்பா தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
மறுநாள் காலை மருத்துவமனை போனதுமே அந்த மருத்துவர் இன்னொரு புரியாக்கதிர் எடுத்துவரச் சொன்னார். அந்தப் படத்தை வெளிச்சத்தில் பார்த்துவிட்டு, தன் தீர்ப்பைச் சொன்னார். “நேத்து காயின் தெரிஞ்சது. இப்ப இல்லை. வாழைப்பழம் சாப்ட்டதால காலைல வேற வழியா வெளிய போயிருக்கணும். அதுனால இனிமே பயப்பட ஒண்ணுமில்ல. பையனக் கூட்டிட்டுப் போங்க..”
இந்த இடத்தில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது ஒன்றிருக்கிறது. அன்றைய பத்துப் பைசாக்கள் இப்போதைய நாணயங்கள் போல் வட்டமாகவே, சதுரமாகவோ இராது. வளைவுகள் நிரம்பியதாக மெட்டலில் செய்யப்பட்டிருக்கும். எனவேதான் தொண்டைக் குழியில் திரும்பி அடைத்துக் கொள்ளாமல் சமர்த்தாக என் உடலினுள்ளே ஒரு சுற்றுலா நடத்தி வெளியேறியிருக்கிறது. இன்றைய டைப் காசுகள் என்றால் அன்றைக்கே நான் ஸ்வாஹா தான்.
அப்புறமென்ன… மருத்துவமனையிலிருந்து வரவே மதியமானதால் அன்றைக்கு ஸ்கூலுக்கு கட். நான் விளையாடப் போய்விட்டேன். என் வீட்டினர் பள்ளிக்குச் சென்று மங்கை டீச்சரைச் சந்தித்து நன்றி சொல்லிப் பாராட்டிவிட்டு வந்தார்கள். ஆனால் சங்கடத்தைச் சந்தித்து இன்பியலாக முடிந்த இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் ஒரு துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது. என் அப்பா அதற்குப் பின் பாக்கெட் மணி கொடுப்பதை நிறுத்திவிட்டார். என்னவொரு சோகம்!
அதன்பின் நினைவிற்கு வருபவர் நான்காம் வகுப்பு ராமமூர்த்தி சார். இப்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தேன். ராமமூர்த்தி சார் பாடம் நடத்திய விதத்திற்காக நினைவில் வரவில்லை எனக்கு. கொடுமைப்படுத்திய ஆசாமி என்ற வகையில் நினைவுக்கு வருகிறார். நன்றாக நறுக்கென்று கட்டெறும்பு கடித்தது போல் கிள்ளுவார்- அவர் பேச்சைக் கேட்காவிட்டால். அந்தச் சமயத்தில் இந்திராகாந்தி ‘18 அம்சத் திட்டம்’ என்று ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். நம்ம ரா.மூ. வாத்தியாருக்கோ அரசியலில் பெரும் ஈடுபாடு. என்ன செய்தார்..?
பள்ளியின் ஆண்டுவிழா வந்ததால், ஒரு சிறு ஓரங்க நாடகம் நடத்துகிறேன் பேர்வழி என்று இந்த 18 அம்சத் திட்டத்தை ப்ரமோட் செய்கிற விதமாக ஒன்றை எழுதினார். 18 பூதங்கள் மேடையில் உட்கார்ந்திருக்கும். முதலாவது குதித்து முன்னால் வந்து, “நான் தீண்டாமைப் பூதம். இந்தத் திட்டம் என்னை ஒழிப்பதற்கென்றே வந்துள்ளது.” என்பது போல் எதையோ பேசிவிட்டு அமர, அடுத்த பூதம் குதித்து முன்வர வேண்டும். இப்படி 18 பூதங்களில் முதலாவது பூதமாக என்னைத் தேர்ந்தெடுத்தார். ஒரு பூத முகமூடியைக் கொடுத்து, அதை மாட்டிக் கொண்டு வசனம் பேச வேண்டும் என்றார்.
“முகமூடி மாட்டிக்க எனக்குப் பிடிக்கலை சார்..” என்றதற்கு, “முகமூடி போடாமயே நீ பூதம் மாதிரித்தான்டா இருக்க. பேசாம சொல்றதச் செய், இல்லன்னா உன் சித்திகிட்ட சொல்லிடுவேன்..” என்று மிரட்டினார். அதே ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்த சித்தி என் சிறுவயது சிம்ம சொப்பனம். தவிர, ரா.மூ. மூடு மாறினால் கிள்ளித் தொலைவாரே என்கிற பயம் வேறு. எனவே வாழ்க்கையில் முதல் முறையாக பூதம் வேடமிட்டு நடித்தேன்.
அதற்குப் பின் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பள்ளி என்பதாக என் வாழ்க்கை அமைந்தது. அண்ணனின் தயவில் படித்து வந்ததால், ஊர் ஊராக அவருக்கு வேலை மாற்றல் அமையும்போது என் பள்ளியும் ஊருக்கு ஊர் மாறிவிடும். ஆறாம் வகுப்புப் படிக்கையில் ரிடையர்மெண்ட்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போலத் தன் பருத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்த டி.ஆர்.ஜி. (டி.ஆர்.கோவிந்தராஜன்) சார். தன் அகன்ற உடம்பால் கோல் போஸ்ட்டின் முக்கால் பாகத்தை மறைத்துக் கொண்டு எங்களுடன் பந்து விளையாடிய ஏழாங்கிளாஸ் சுந்தரம் சார். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த அதே தினத்தில் பிறந்ததால் சுதந்திரம் என்று பெயர் வைக்கப்பட்டு, அந்தப் பெயராலேயே நினைவில் தங்கியிருக்கும் சுதந்திரம் டீச்சர்.
பத்தாம் கிளாஸை அடைந்தும் தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து, ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்த பின்னரும் எனக்காகப் பிரத்யேக இலக்கண வகுப்பு நடத்திய, ‘புதிய வார்ப்புகள்’ பாக்யராஜ் சாயலில் இருந்த காளிதாஸ் சார். ப்ளஸ் ஒன் படிக்கையில் சற்றே மேம்பட்டிருந்த என் தமிழை ரசித்து ஊக்கப்படுத்தி வளர்த்த தாசரதி ஐயா. கல்லூரி வந்ததும், வழுக்கைத் தலையுடன், தோல் பிரச்சனை இருந்ததால் வெயிலிலும் மழையிலும் விரித்த குடையின் கீழேயே நடந்து வந்ததால் ‘குடை சார்’ என்று எங்களால் பட்டப் பெயர் வைக்கப்பட்ட பேராசிரியர் ராஜமாணிக்கம். உலகத்தின் மிகச் சிறந்த ஜோக்கைச் சொன்னால்கூட இவருக்குச் சிரிப்பே வராது என்று எங்களால் கேலி செய்யப்பட்ட, மீசையில்லாத முகத்துடன் எப்போதும் சீரியஸாகவே வலம்வந்த ப்ரொபசர் கல்யாணம்.
இவர்கள் அத்தனை பேரும், தவிரவும் இங்கு சொல்லப்படாத ஆசிரியர்கள் பலரும் இன்றும் என் நினைவுகளில் இருக்கிறார்கள். புண்பட்டதையும், பண்பட்டதையும் மேலும் விரிவாக அலசலாம் என்றால்.. இந்தக் கட்டுரையை முடிக்கிற நேரம் நெருங்கி விட்டதே. எனவே, தாசரதி ஐயாவில் தொடங்கி, அடுத்த பகுதியில் தொடர்வோம்.
இன்னும் வருவேன்…