இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

பிறர்மனை – கா. ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

அதிகாலை அலைபேசி அழைப்புகள் கொண்டு வரும் செய்திகள் நிச்சயம் நல்லவற்றுக்கு நெருக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த அழைப்பும் அப்படித்தான் இருந்தது. நான் மனைவியின் ஊருக்கு வந்திருந்தேன். இது என் ஊரிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். அழைத்தது அப்பா. எப்போதும் பேசிக்கொள்ளாத எங்களை ஒரு மரணம் பேச வைத்தது.

“பக்கத்து வீட்டுச் சீனா கிழவி செத்துப் போச்சு. மதியம் தூக்குறதா பேச்சு, முடிஞ்சா வா. இல்லேன்னா வர வேணாம்!” என்று பேசிக் கொண்டிருந்த அப்பாவின் போனைப் பறித்துக் கொண்டு அம்மா பேசினாள். “வரணும்ன்னு அவசியம் இல்ல. தகவல் சொல்லலேன்னு நீ சத்தம் போடுவன்னுதான் அப்பாவை விட்டுச் சொல்லச் சொன்னேன். உன்னோட தோதை பாத்துக்க!” என்ற அம்மாவின் பேச்சு ஒரு கடமையினை முடித்த திருப்தியில் முடிந்தது.

மனைவி கேட்டாள். விபரத்தைச் சொன்னேன். அவள் அப்படியா என்று கேட்டாள். பின் சீனா கிழவி தொடர்பான இரண்டு செய்திகளைச் சொன்னாள். பின் ஒரு நினைவு கூறல். அம்மாவைப் போலக் கேட்டாள். “நீங்க போறதா இருந்தா போங்க. நா அம்மாவைக் கூட்டிட்டு ரெண்டு நாள்ல வர்றேன்!” எப்போதும் முரண்டு பிடித்து முரண்பட்டு நிற்கும் அவளிடம் அந்த அதிகாலையில் ஒரு மாற்றம். திரும்பிப் படுத்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

அப்படியே எழுந்து வெளியே வந்தேன். தூரத்தில் ஒரு ரயில் கடந்து போகும் சப்தம். இரவெல்லாம் குரைத்துக் களைத்துப் போன நாய் ஒன்று என்னைப் பார்த்து தவற்றை உணர்ந்து கொண்டாற் போலத் தலையைக் கீழே போட்டது. கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஒன்றுமில்லை. என்றாலும் அடியுணர்வு உந்தி தள்ளியது.

சீனா கிழவி எங்கள் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஒரு மூதாட்டி. கணவன் இறந்து அரை நூற்றாண்டு இருக்கும் என்பார்கள். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததாகச் சொல்வார்கள். ஒரே மகன். அடித்ததால் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடியதாகச் சொன்னார்கள். தொலைந்த மகனைத் தேடி இந்தியா முழுக்க பயணம் செய்ததாக ஒரு கதை உண்டு. மூன்று மாதப் பயணத்தில் வெறும் கையோடு வந்த சீனா கிழவி அன்று முதல் தனியாகத்தான் வாழ்ந்து வந்தாள். இப்போது இருக்கும் எங்கள் வீடு,சீனா கிழவியிடம் இருந்து கிரயம் செய்ததுதான். இன்னும் சொல்லப்போனால் தெருவில் பாதி சீனா கிழவி இடம்தான். எல்லாவற்றையும் விற்று இப்போது அரை சென்ட் ஓட்டு வீட்டில் இருக்கிறாள். அவளிடம் வீடு வாங்கிய ஆட்கள் அவளுக்குத் தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்து ஒரு சந்து மட்டுமே அவள் வந்து செல்ல இருந்தது.

வீடு விற்ற பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தாள். மாதம் ஒருமுறை அதை எடுக்கச் செல்வாள். சீனா கிழவி வெளியே வருவது இரண்டு விஷயங்களுக்கு. ஒன்று வங்கி, மற்றொன்று ரேஷன் கடை. பகுதி நேரமாகக் குழந்தைகளுக்குக் குர்ஆன் சொல்லிக் கொடுத்தாள்.

சீனா கிழவியைத் தேடி யாரும் வந்ததில்லை. அவளும் சென்றதில்லை. அம்மா எவ்வளவு முறை அழைத்தும் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே வந்ததில்லை. தான் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தவள் எனச் சொல்லிச் சிரிப்பாள்.

ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானேன். குளித்துக் கொண்டிருக்கும் போதே மொபைல் ஒலிக்கும் சப்தம் நிசப்தமாய் கேட்டது. அது தொடர்ந்து ஒலித்தது. மனைவி எடுத்துப் பேசியதும் அமைதியானது. அது யாராக இருக்கும் என்ற யோசனையில் வேகமாகக் குளித்து முடித்தேன். அழைத்தது அம்மா என்றவள் எதிலும் அக்கறை இல்லாதது போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அம்மாவை அழைத்தேன்.

“கிளம்பிட்டியா?”

“கிளம்பிட்டேன்! என்ன விஷயம்மா?”

அம்மா சற்றுத் தயங்கினாள். பின் சொன்னாள், “சீனா கிழவி மகன் உன்னோட மாமியார் ஊர் பக்கம்தான் இருக்கானாம்!” என அம்மா பேசிக்கொண்டிருக்கும் போதே அப்பா பேசினார். “அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். கூட்டிட்டு வர்றியா? முடியுமா?” என்ற கேள்வியில் ஒரு கிண்டல் தொனி. இவன் எங்க செய்யப்போகிறான் எனும் நம்பிக்கையின்மையும் கூடியிருந்தது. இதற்காகவே போகவேண்டும் போல இருந்தது.

மீண்டும் அம்மா, “பாவம் கிழவிக்கு ஆள் இல்ல. தூரத்துச் சொந்தங்களுக்குச் சொல்லியும் யாரும் வர்ற மாதிரி தெரியல. அவங்க தூரத்து மாமாவுக்குத் தகவல் சொல்லும் போதுதான் இந்தத் தகவலை சொன்னாரு. உயிரோட இருக்கும் போது சொல்லியிருந்தா கிழவிக்கு ரூஹ் கொஞ்ச நிம்மதியா போயிருக்கும். சைத்தானுக்கு பிறந்தவங்க, இப்ப சொல்றான்!” என்ற அம்மாவின் குரலில் ஆதங்கம்.

முகவரி அனுப்பி வைத்தார்கள். இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர். இதுவரை செல்லாத ஊர். இன்னும் முழுமையாக விடியவில்லை. அறியாத ஊருக்கு இருட்டில் போவது நல்லதல்ல என்றாலும் இதற்காக ஒரு பிரேதம் காத்திருப்பது சரியாக இருக்காது எனக் கிளம்பினேன். சுத்தமான இருட்டில் பேருந்து நிலையம் போய் நின்றேன். அந்த ஊருக்குப் பிரத்தியேகப் பேருந்துகள் இல்லை. பெரம்பலூருக்கு முன்னால் ஒரு பத்துக் கிலோமீட்டரில் அந்தக் கிராமம். நடத்துநர் கூட்டமில்லாத அந்தப் பேருந்தில் வேண்டா வெறுப்பாக அனுமதித்தார். ஓட்டுநர் பீடியின் இறுதி இழுப்பு பேருந்தின் கடைசிக்கு முன்னால் அமர்ந்திருந்த என் நாசியை அடைந்தது. வெறும் வயிற்றுப் பயணம் எத்தகைய சிரமம் என்பது புரிந்தது. பேருந்து பிடிக்கும் அவசரத்தில் ஒரு டீ கூட குடிக்கவில்லை. சொற்ப ஆட்களே இருந்தோம். என்றாலும் பேருந்து கிளம்பியது. அரசின் நட்டக்கணக்குகளில் இதுவும் ஒன்று.

அதிகாலை பயணம், வெற்று சாலை என்பதால் பேருந்து விரைவாகவே சென்றது. டிக்கெட் எடுக்கும்போதே நடத்துநரிடம் ஊர் வந்ததும் சொல்லுமாறு ஒரு கோரிக்கை வைத்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை சொன்னபோது, “உம்” என்றார். அரசாங்கத்தின் உச்சபட்சப் பதில்.

நீண்ட கடற்கரையில் அவன் அமர்ந்திருந்தான். அவனை எழுப்பி அழைத்துப் போனேன். எந்தக் கேள்வியும் இல்லாமல் பின்னால் வந்தான். அழுது கொண்டே இருந்தான். அவன் என் தோளைப் பிடித்து உலுக்கினான். எழுந்து பார்த்தேன் அது நடத்துநர். “ஊர் வரப்போகுது!” என்ற அவரின் முகத்தில் முன்பிருந்த கடுமை குறைந்து நட்புத்துவம் கூடியிருந்தது. என்னுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு போக உடைமை ஏதும் இல்லை. அலைபேசி எடுத்துப் பார்த்தேன். எப்போதோ ஒலி குறைத்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு தவறிய அழைப்புகள். அப்பாதான் இரண்டு முறை அழைத்திருந்தார். திரும்ப அழைத்தேன். சீனா கிழவி எழுந்து உட்கார்ந்து விட்டாளோ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டேன். “என்னடா ஊருக்கு போய்ட்டியா?” என்றவர் என் பதிலை எதிர்பார்க்காமல் சொன்னார், “இந்தா பாரு, கிழவி மகனை நமக்கு முன்னபின்ன தெரியாது. ஆள் எப்படின்னு தெரியல. அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்னும் தெரியாது. அந்தப் பய கொஞ்சம் கோளாறு பிடிச்சமாதிரி தெரிஞ்சா அப்படியே விட்டுட்டு வந்துரு. உதவி செய்யப்போய் வேற எதுவும் ஆயிடாம!” அவரின் குரலில் என் மீதான அக்கறை இருந்தாலும் என்னால் முடியாது என்ற அவரது மனப்பான்மையை உடைத்துப் போட்டே ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டேன். இதை ஒரு வறட்டு சவாலாகக் கருதிக் கொண்டேன். ஊர் வந்தது. இருட்டு அகலத் தொடங்கி மங்கலான ஒளி பரவத்தொடங்கியது. ஊர்ப் பெயர் எந்தத் திரைப்படத்திலும், நாளேட்டிலும் கேள்விப்படாத பெயராக இருந்தது, சங்கு சத்திரம்!

இறங்குதே பள்ளிவாசலின் பாங்கு சப்தம் கேட்டது. அரிதாக நிகழ்த்தும் தொழுகையை இந்தப் பள்ளியில் நிகழ்த்திவிட முடிவு செய்தேன். இதில் இன்னொரு சகாயமும் இருக்கிறது. அதிகாலை தொழுகைக்கு வரும் ஆட்களிடம் விசாரிக்கலாம். யாருக்கும் தெரியாவிட்டாலும் அவன் இருக்கும் இடத்தைப் பற்றி விசாரிக்கலாம். அப்பா அனுப்பி வைத்த விபரங்களைப் படித்துப் பார்த்தேன். அவன் பெயர் “தேங்காய் நார் அலாவுதீன்” என எழுதியிருந்தது. 

பள்ளிவாசலில் தொழுகையை முடித்திருந்தேன். தொழுகை முடிந்த கையோடு பள்ளி வாயிலில் நின்று கொண்டு வருவோர் முகங்களைப் பார்த்தேன். தோழமையோடு இருந்த ஒருவரின் கைகளைப் பற்றி ஸலாம் சொன்னேன். இன்முகத்தோடு ஸலாம் சொன்னவர் என்னைப் பற்றி விசாரித்தார். விஷயத்தைச் சொன்னதும் என் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். அங்குப் பள்ளிவாசல் தலைவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்து விஷயத்தைச் சொன்னதும் தலைவர் யோசித்துக் கொண்டே இருந்தார். “எந்த அலாவுதீன சொல்றீங்க? இங்க நாலு அலாவுதீன் இருக்காங்க!” என்றவர் முகத்தில் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற தீவிரம் தெரிந்தது.

“தேங்காய் நார் அலாவுதீன்” என்றதும் அவர் முகம் மலர்ந்தது. “சரியாப்போச்சு, அந்தப் பயலா?” என்ற அவர் முகத்தில் முன்பிருந்த தீவிரம் குறைந்து எள்ளல் இருந்தது. என்னைக் கூட்டி வந்தவரிடம், “ஏ பாய், அவனுக்கு யாருமே இல்லேன்னுதானே சொன்னான்!” என்றவர் என்னை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

வழிநெடுகிலும் பேசிக்கொண்டு வந்தார். குடும்பம், வேலை, வருமானம் முதலியவற்றை அறிந்து அதைத் தன்னுடன் ஒப்பிட்டுக்கொண்டு பேசிவந்தார். என் மனதிற்குள் தேங்காய் நார் அலாவுதீன் பல வடிவங்களில் காட்சி தந்தான். அவனைப் பார்ப்பதற்குள் என்னென்ன கற்பனையை ஓட வைக்க முடியுமோ அத்தனையும் செய்து பார்த்தேன். தேங்காய் நார் நல்ல வருமானம் வரும் தொழில் என எங்கோ படித்த ஞாபகம். கூட்டிச்சென்றவர் தேங்காய் நார் அலாவுதீன் பற்றி எதுவும் பேசவில்லை. அதுவே பெரிய உறுத்தலாக இருந்தது. அவனது அம்மாவின் இறப்புக்கு இலேசான இரங்கல் செய்தியைத் தவிரப் பெரிதான உணர்வுகளை அவர் காட்டிக்கொள்ளவில்லை. நான் உதவ வந்தவன், அவர் எனக்கு உதவ வந்தவர். இருவரும் தேங்காய் நார் அலாவுதீனுக்கு தள்ளி நின்று உதவி செய்யும் மூன்றாவது நபர்கள் என்பது போல அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

சங்கு சத்திரம் என்ற இந்தக் கிராமத்தில் இப்போதுதான் வயற்காடுகள் பிளாட் போட்டு ஓர் அப்துல் கலாம் நகராக உருமாற்றம் ஆகிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே கடைகள் இருந்தன என்றாலும் அதிகமில்லை. கூட்டி வந்தவரின் மருமகன் என் அப்பாவின் ஊர் என்பதால் நாங்கள் ஒருவேளை அவருடைய உறவினர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் கொண்டார். அதன்விளைவாக நிறுத்தி ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். மீண்டும் பயணம். இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்பதை விட அந்தத் தேங்காய் நார் அலாவுதீனை திரும்ப இவ்வளவு தூரம் அழைத்து வர எந்தப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது எனக் குழப்பமாக இருந்தது.

“தம்பி வந்துட்டோம்” என்றார். அதே நேரத்தில் அவரது அலைபேசியும் ஒலித்தது. அதில் பேசியவர் ஓர் அவசரச் செய்தியைப் பெற்றுக்கொண்டவர் போலப் பதற்றமானர். பேசிமுடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னார், “கூட இன்னொரு ஆளை கூட்டிட்டு வந்துருக்கலாம்!”

“ஏன்?” என்றேன்.

“இல்ல தம்பி, இவன் ஓர் அரைவெட்டு தாயொலி. திடீர்னு என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது. அசந்தா ஓடியே போயிருவான். அதான் சொன்னேன்” என அவர் விரல் நீட்டிய இடத்தைப் பார்த்தேன். கட்டி முடிக்காத கட்டிடத்தின் வாசலில் ஒரு போர்வை பொட்டலம் கிடந்தது. அது தேங்காய் நார் அலாவுதீனாக இருக்கக்கூடாது என்ற என் பிரார்த்தனை பொய்த்துப்போனது.

“டேய் அலாவுதீ!” வந்தவர் எழுப்பலாக அல்லாமல் ஓர் உத்தரவாகக் கத்தினார். அந்தப் போர்வை திரை விலகவேயில்லை. “நாயி, தண்ணிய போட்டுட்டு தூங்குது போல. இப்பெல்லாம் துளுக்க 

பயலுகளும் கணிசமா சாராயம் குடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. அஸ்தவ்பிருல்லாஹ்!அல்லா வச்சு 

காப்பாத்தணும்!” என அதிருப்தியாகப் பேசிக்கொண்டே அருகில் ஒரு மூக்கை அடைத்து இன்னொரு மூக்கில் காற்றைச் செலுத்தினார். எழுந்த வினோத சப்தத்தில் அருகில் இருந்த குட்டி நாய் எழுந்து ஓடியது.

“டேய் அலாவுதீனு, அம்மா மௌத்தாம்டா, சைத்தானுக்கு பொறந்தவனே.. எந்துருச்சு உக்காருடா!” எந்தச் சலனமும் இல்லை. நேரம் கூடக் கூட அவன் முகத்தைப் பார்க்க ஆவல் கூடியது.

பொறுமை இழந்து அவன் சுருண்டு கிடந்த போர்வையை விலக்க முயன்றார். அவன் உள்ளுக்குள் ஏதோ முணங்கிக் கொண்டிருந்தான்.

“இப்ப எந்திரிச்சு வர்றியா என்னடா?” போர்வை கொஞ்சம் இளக ஆரம்பித்தது. அதற்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவனுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு பல்லி இறங்கி ஓடியது.

தேங்காய் நார் அலாவுதீன் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொண்டான். “தாயொலி மவனே, உள்ள எதும் போடாம மொட்டக்கட்டையா கெடந்தியாக்கும்!” முகத்தில் ஒட்டுமொத்த அருவருப்பும் கூட்டிச் சொன்னார். அருகில் மடித்து வைக்கப்பட்ட கைலியை எடுத்து அணிந்து கொண்டான். புற உலகில் நடக்கும் எதையும் அவன் உள்வாங்கிக் கொள்ளாதவன் போல இருந்தான். நீண்ட தாடியை இழுத்து நீவிக்கொண்டான். அதிலிருந்து நூலாம்படை அவன் கையில் வந்தது. தலையில் கிப்பி போன்ற முடி அவன் தோள்பட்டையில் தொங்கிக்கொண்டிருந்தது. தலையில் ஆங்காங்கே தென்பட்ட நரை தாடியில் சுத்தமாக இல்லை. எழுந்து கைலியைக் கட்டிக்கொண்டான். எழுந்து நின்றான், என்னைவிட உயரம். அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். எதிர்காலத்தில் கூட கவலைப்பட வாய்ப்பில்லை போல அலட்சியமாக இருந்தான். தோற்றம் இஸ்லாமிய ஏசுநாதர் போல இருந்தது.

“டேய் அம்மா மௌத்தாம்டா,உன்ன கூட்டிட்டு போக இவரு வந்துருக்காரு. ஒழுங்கா கிளம்பி இவரோட போய்ட்டு வா!” அவர் முகத்தை உற்றுப் பார்த்தவன் வெடுக்கென்று சிரித்த போது எனக்குக் குலையே நடுங்கியது. பின் சட்டென்று சிரிப்பை நிறுத்தி எதையோ யோசித்துவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டான், “எனக்கு ஆறு அம்மா இருக்கு? செத்தது எந்தம்மா?” என்றான். வெறும் வயிறு கலக்கியது. முழுப் பைத்தியத்தை விட அரைமதி கொண்டவனைக் கையாளுவது கடினம். இப்படியே சென்றுவிடலாமா எனக்கூட யோசித்தேன். வந்தவர் என்னைத் தனியே அழைத்துச் சென்று சொன்னார், “கொஞ்சம் மாதிரியான ஆளுதான். ஆனா, நல்லபய, நல்லா சம்பாதிச்சு பேங்க்ல பணம் போட்டு வச்சிருக்கிற அளவுக்கு விவரம்தான். திடீர்ன்னு இப்படி வித்தியாசமா பேசுவான். எல்லா வெறுத்து போய்தான் இப்படி பேசுறான். நா சொல்லிவிடுறேன். நீங்க கூட்டிட்டு போங்க எந்தத் தொந்தரவும் இருக்காது!” என்றார். அவனும் அருகில் வந்து “ஆமா” என்றான். அதற்கு என்னால்தான் சிரிக்க முடியவில்லை.

“டேய் அலாவுதீனு, இவரை வீட்டுக்கு கூட்டிட்டு போய் குளிச்சிட்டு வெரசா கிளம்பு!” என்றார். வீட்டை வைத்துக் கொண்டு வெளியே ஓரிடத்தில் தூங்குபவனை நினைத்து இன்னும் அசூசையாக இருந்தது.

‘சொல்லிவிட்டு அவர் கிளம்பிப் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உதவ வருபவன் முழுதாய் முடித்துக் கொடுப்பதுதானே முறை? இப்படிப் பாதியில் அதுவும் கூர் இல்லாத மனிதனாக இருக்கும் ஒருவனுடன் விட்டுப் போக எப்படி மனம் வருகிறது?’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். நான் அவனைத் தொடர்ந்து சென்றேன். அப்பாவிடம் அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.

“முடியலேன்னா விட்ருடா, அரைகிறுக்கனா இருக்குறவனை என்ன 

செய்யிறது? எப்படிப்பட்ட மெண்டல் பயலும் அம்மா செத்ததுக்குக் கூட அழாமலா இருப்பான்?” அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் இரைச்சல் கேட்டது. அப்பா சீனா கிழவி வீட்டில்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இப்போது கிளம்பினால் கூட மதியம் ஊருக்குச் சென்றுவிடலாம். இவன் மையத்தைப் பார்த்த பத்தாவது நிமிடத்தில் இடுகாட்டு நிகழ்வுக்குத் தயாராகிவிடலாம். அதை வைத்துத்தான் மாலை தொழுகைக்கு முன்னர் நல்லடக்கம் செய்யும் திட்டத்தை அப்பா தெரிவித்தார். அனைத்தும் மனதில் போட்டு ஓட்டிக்கொண்டிருக்கும் போதுதான் தேங்காய் நார் அலாவுதீன் கிடுகு கொட்டகை கொண்ட வீட்டைத் திறந்தான். வீட்டுக்குப் பூட்டு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு குச்சியை நெட்டுக்குத்தலாகச் சொருகி வைத்திருந்தான். உள்ளே சென்றதும் என்னை உள்ளே வருமாறு பாவனை செய்தான். அதனோடு ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தான்.

அவனுடன் எப்படி ஓர் உரையாடலை அமைத்துக் கொள்வது என மனதிற்குள் யோசித்துப் பார்த்தேன். “அம்மாவுக்கு எத்தனை வயசு?” எனக் கேட்ட குரலை நோக்கிப் பார்த்தேன். என்ன ஓர் அபத்தமான கேள்வி இது? என்றாலும் அவனிடம், “ஒரு எம்பத்தஞ்சு இருக்கும்!” என்றதும் “சாகுற வயசுதான்!” என்றபடி சிதறிக்கிடந்த தேங்காய் நார்களை ஒரு பெரிய சாக்குப் பையில் திணித்தான். முடித்த பீடியை கையில் நசுக்கி எறிந்தான்.

“பாத்ரூம் போறீங்களா?” எனக் கேட்டு ஒரு புறம் கை நீட்டினான். சக மனிதனின் இயற்கை உபாதையைப் புரிந்து கொண்ட அந்த இடத்தில் தேங்காய் நார் அலாவுதீனை வாழ்த்தினேன். அவன் காட்டிய திசையில் கதவு இல்லை. மறைப்பு சணல் சாக்கு இருந்தது. அதைப் பார்த்து நான் பின்வாங்குவதை அவன் அறிந்து கொண்டு சிரித்தான். “யாரும் வர மாட்டாங்க!” என்றான். அடக்க முடியாத விஷயங்கள் சிலநேரங்களில் சகிக்க முடியாத இடத்தில் வந்து நிற்கும். உள்ளே கழிவறை வித்தியாசமாக இருந்தது. ஓர் ஏழை கொத்தனார் கைவண்ணத்தில் மலம் கழிக்கும் கோப்பை இருந்தது. அதைப் பார்த்தும் அடிவயிறு பொங்கி தொண்டை வழியாகக் குமட்டியது. எல்லாம் வாய் வழி வந்தால் கூட காலைக் கடனை முடித்த கணக்கில் வருமா என யோசித்துப் பார்த்தேன். பச்சைப் பாசி படிந்திருந்த தொட்டியில் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வெளியே வந்தேன். தேங்காய் நார் அலாவுதீன் தயாராக இருந்தான்.

இருவரும் வீட்டை விட்டு வெளியே வரும் போது நான் சற்றும் எதிர்பாராத போது ஒரு நீளச் சங்கிலியை நான்காக மடித்து அதை தாழ்ப்பாளில் பொருத்திப் பூட்டினான். “வர்றதுக்கு எத்தனை நாள் ஆகுமோன்னு தெரியல. அதான் பூட்டிட்டேன்!” என்றான். நான் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பூட்டை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பா மீண்டும் அழைத்தார், “பஸ் ஏறிட்டு போன் பண்ணு. மாரியப்பன்ட்ட சொல்லி காருக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன். அதுல நானும் வந்துறேன்!” என்றார். பெரிய ஏற்பாடுதான் இது என மனதிற்குள் திட்டினேன். அப்பா என்ன செய்வார் எனத் தெரியும். மிகவும் சிரமப்பட்டு இவனைப் பிடித்துக் கொண்டு வருவது போல இவனை அழைத்து வருவார். அதைவிட இவனோடு பயணப்படும் அந்த மூன்று மணி நேரத்தை நினைக்கக் கவலையாக இருந்தது.

அவன் வெள்ளை கைலி உடுத்தியிருந்தான். அது மெல்லிய செம்மண் நிறத்தில் இருந்தது. இஸ்திரியில் தேய்க்கப்படாத கருப்புச் சட்டையை அணிந்து கொண்டான். வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டான். தோளில் கிடந்த வெள்ளை துண்டை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டான். வழியில் எல்லோரும் எங்களை வேடிக்கை பார்த்தார்கள். சிலர் அவனிடம் விசாரித்தார்கள். ஒருவர் விசாரித்துத் தூக்கத்தைப் பகிர்ந்து கொண்ட கையோடு இரண்டு நாளில் நிகழக்கூடிய தேங்காய் உரிப்பு வேலையை அழுத்தமாக ஞாபகப்படுத்திப் போனார். எதிர்ப்பட்ட வயதான பெண்மணி அவனைக் கட்டிப்பிடித்து அழுதார். “உயிரோட இருக்கும்போது பாத்துட்டு போயிருக்கலாம்ல!” என அவள் சொன்னபோது தேங்காய் நார் அலாவுதீன் சிரித்தான். அவள், “ஆமா, எது கேட்டாலும் இப்படியே சிரி, அம்மா மையத்துக்கு முன்னாடி நின்னு இப்படி சிரிச்சிடாதாடா!” என அவளும் சிரித்து விட்டுச் சொன்னாள். “அம்மாகிட்ட மனசார மன்னிப்பு கேளு. அல்லாவுக்காக மனம் பொருத்து என்னை மன்னிச்சுக்கம்மான்னு மன்னிப்பு கேளு. என்ன செரியாடா?” எனக் கண்டிப்புடன் கேட்ட பெண்மணி தலையை இலேசாக அழுத்திச் சிரித்தான். “தம்பி, கொஞ்சக் கூறு இல்லாத பய. பாத்து கூட்டிட்டு போங்க” என கையில் இருந்த நூறு ரூபாயை என் கையில் திணிக்க முயன்றார். நான் வாங்க மறுத்து கையை பின்னால் கட்டிக்கொண்டேன். பணத்தை என் பையில் திணித்துவிட்டுப் போனாள். தேங்காய் நார் அலாவுதீன் சிரித்துக் கொண்டே, “ராசியான கிழவி குடுத்த காசு. பத்திரமா வச்சுக்கங்க!” என்றான்.

அவன்தான் முன்னால் நடந்தான். நேரமாக நேரமாக அவனது நடையின் வேகம் அதிகரித்தது. உண்மையில் அவன்தான் என்னை அழைத்துக் கொண்டு சென்றான். என்னைக் கூட்டிவந்து இவனிடம் விட்டவர் வழியில் எங்களைப் பார்த்தார். “ஒரு ஆட்டோ எடுத்திருக்கலாம்ல! நடந்து போய் என்னைக்கு பஸ் பிடிக்கிறது? மைய்யத்தை காக்க வைக்கிறது மகாபாவம்!” என்றவர் அவர் வண்டியில் எங்களை ஏறச் சொன்னார். அவரது அக்கறை நியாயமானது என்றாலும் பயணம் சௌகரியப்படுமா? எனக் கேள்வியாக இருந்தது. தேங்காய் நார் அலாவுதீன் முன்னால் நடுவில் அமர்ந்து கொண்டான். ஓர் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லும் போதுதான் வேகத்தடையின் அனாவசியம் புரிந்தது. விழுந்துவிடாமல் இருக்க இரண்டு முறை தேங்காய் நார் அலாவுதீனின் தோளை இறுக்கப் பற்றிக்கொள்ளும் படியாகிவிட்டது.

நிறுத்தத்தில் இறங்கி விட்டவருக்கு நான் நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. எங்களைச் சட்டைசெய்யாமல் வெறும் கைகளை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றார். தேங்காய் நார் அலாவுதீன் முகத்தில் தாயை இழந்த கவலை புள்ளியாகக் கூட தெரியவில்லை. வேலைக்குச் செல்லும் தொழிலாளி, பள்ளிக்குச் செல்லும் குழந்தை, நேர்த்திக்கடன் செலுத்தக் கோவிலுக்கு செல்லும் பக்தன், வெறும் செய்முறைக்குச் செல்லும் குடும்பஸ்தன் போல வெகு சாதாரணமாக போயிலையை மென்று கொண்டிருந்தான்.

தூரத்தில் எந்த வாகனமும் வருவது தெரியவில்லை. “மாமா” என ஒரு சிறுவன் ஓடிவந்து தேங்காய் நார் அலாவுதீனை கட்டிப்பிடித்துக் கொண்டான். தொடைக்கு ஏறிய கால் சட்டை, டிசம்பர் பூ போட்ட சட்டை, அவசரமாக அடிக்கப்பட்டு திட்டுத்திட்டாக இருக்கும் பவுடர் என இருந்தான். தேங்காய் நார் அலாவுதீன் , “நீ என்னடா இங்க?” எனக் கேட்டான். “நீ மௌத்துக்கு போறேன்னு அம்மா சொன்னிச்சு. அதான் நானும் வந்தேன்!” என்றான். “அம்மாட்ட சொல்லிட்டு வந்தியா?” எனக் கேட்கச் சிறுவன் வேகமாகத் தலையாட்டினான். “சரி வா, சேந்து போய் மௌத்துக்கு போய்ட்டு வருவோம்!” என்னால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தேங்காய் நார் அலாவுதீன் என் முகத்தில் ஓடிக்கொண்டிருந்த அதிருப்தி ரேகையைப் புரிந்து கொண்டாற் போலச் சொன்னான், “எல்லாருக்கும் நான் டிக்கெட் எடுக்குறேன்!”

திருச்சி பெயர் போட்ட பேருந்து வந்தது. “பக்கத்துவீட்டு பையன், பேரு மதார்!” என்று சிறுவனை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தான். மூன்று பேர் அமரும் சீட்டில் அமர்ந்திருந்தோம். ஜன்னல் ஓரம் மதார் வேடிக்கை பார்த்துக்கொண்டும் தேங்காய் நார் அலாவுதீனிடம் ஏதாவது பேசுவதுமாய் இருந்தான். நான் சீட்டிலிருந்து ஒருகாலை வெளியே வைத்தபடி அமர்ந்திருந்தேன். வேறு இடம் காலியாகாமலிருந்ததால் இங்கு உட்காரவேண்டிய சூழல் சகிக்கும்படியாக இல்லை. தேங்காய் நார் அலாவுதீன் மீது அழுகிய தேங்காய் வாடை வீசியது. முற்றிய தேங்காய்களைக் காய வைத்து எண்ணெய் செக்கிற்குக் கொடுக்கும் தொழிலும் செய்கிறான் என்பது அவன் வீட்டுக்குச் செல்லும் போதே தெரிந்தது.

அந்தச் சிறுவனுக்கும் இவனுக்கும் அதிக வயது வித்தியாசம் போலத் தெரியவில்லை. அவனிடம் தேங்காய் நார் அலாவுதீன் சரிக்குச்சமமாய் பேசிக்கொண்டு வந்தான். யார் இவன்? என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். சீனா கிழவியின் அடையாளத்தின் பண்பில் ஒன்று கூட இல்லாதவன் எப்படி அவளுக்கு மகனாக இருந்திருக்க வேண்டும்? ஏன் அறியாத ஊரில் ஒரு விசித்திரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறான்? இதற்கு மேல் இவனுக்கு வாழ என்ன ஆதாரம் இருக்கிறது? அரை புத்தி கொண்ட இவனை ஒரு கிராமமே சகித்துக்கொண்டு அனுமதிப்பது எப்படி? என்ற கேள்விகள் ஒன்றை ஒன்று தொக்கி நின்றது. கேள்விகள் சோர்வடையச் செய்து காலையில் தூங்காத தூக்கத்தை மிச்சம் கேட்டது. அரைத் தூக்கத்தில் இருந்த போது நடத்துநர் அருகில் வந்து நிற்பதும் அலாவுதீன் எல்லோருக்கும் சேர்ந்து டிக்கெட் எடுப்பதும் கனவின் ஒரு பகுதி போல இருந்தது. அலாவுதீன் டிக்கெட் எடுப்பதை தடுக்க நினைத்தாலும் தூக்கம் என்னைத் தடுத்தது. அந்தச் சிறுவன் வந்த பிறகு அவனிடம் ஓர் ஒழுக்கம் வந்திருப்பதைக் கவனித்தேன். எது எப்படியோ இந்த ஒழுக்கம் இவனை ஊரில் சேர்க்கும் வரை இருந்தால் போதும் என இருந்தது. மேலும் இனி அலாவுதீன் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என நினைத்தேன். இறங்கிய மாத்திரத்தில் ஊர் பேருந்து நின்றது. அதில் ஏறுவதற்கு முன்பாக ஒரு டீ கடையில் பலகாரம் சாப்பிட்டோம். எனக்கு டிக்கெட் எடுத்ததற்குப் பகரமாய் இருவருக்கும் காலைச் சிற்றுண்டி வாங்கித் தர விரும்பினேன். ஆனால், அவன் அதைக் கடுமையாக மறுத்தான். பலகாரம் மட்டும் போதும் ஆனால், அதற்கும் நான்தான் பணம் கொடுப்பேன் என்றான்.

ஊர்ப் பெயர் போட்ட பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவர் பேச்சில் திருப்தி தெரிந்தது. நான் சொன்ன செய்தியை அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் போல அவரை சூழ்ந்த ஆட்களிடம் கூறியது என் காதில் விழுந்தது. இணைப்பைத் துண்டிப்பதற்குள் அவ்வளவு அவசரம் அப்பாவுக்கு.

பேருந்து கிளம்புவதற்குள் நடந்த அத்தனை வியாபாரத்திலும் தேங்காய் நார் அலாவுதீனின் பங்கு இருந்தது. வெள்ளரிக்காய், பலாப்பழம், சோளம், கடலை, கொய்யா என விற்பனை செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அவர்கள் வாங்கிச் சாப்பிட்டார்கள். மறுக்க முடியாததால் அவன் கொடுத்த வெள்ளரிக்காய் மட்டும் சாப்பிடாமல் வைத்திருந்தேன். இறுதியாக இஞ்சி மரப்பாவுடன் பேருந்து கிளம்பியது.

இடையில் மனைவி அழைத்தாள். நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இவளிடம் சொல்லலாமா என யோசித்தேன். காரணம், நான் நொம்பலப்பட்டக் கதைகளை அவள் விரும்பிக் கேட்பாள். கூடவே அவள் யோசனையும் சொல்வாள். நடந்து முடிந்து மாற்ற முடியாத விசயங்களுக்கு யோசனை தேவையில்லை என மறுக்க முடியாது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். எல்லாம் சாதாரணமாக முடிந்து விட்டது போல ஓரிரு வார்த்தையில் பேசி முடித்தேன்.

சிறுவன் மதார் தேங்காய் நார் அலாவுதீனின் மடியில் சாய்ந்து கொண்டு தூங்கினான். அலாவுதீன் முகத்தில் இந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநரின் கடுமை தெரிந்தது. இடையிடையே ஜன்னல் வழியாகப் பார்ப்பதும் யோசிப்பதுமாய் இருந்தான். அவன் யோசிக்கிறான் என்பதை எதை வைத்துச் சொல்கிறேன் என்றால், கைகளைத் தாடையில் வைத்து மேலே பார்த்தான். அவன் யோசிப்பதை வம்படியாகவும் பகிரங்கமாகவும் பிரகடனம் செய்வது போல இருந்தது. பேருந்து நிற்கும் இடங்களில் எல்லாம் கவனமாக இருந்து கொண்டேன். நான் கூட அவ்வப்போது அசந்திருப்பேன் அவன் வீம்பாக முழித்திருப்பது போல இருந்தது.

ஊர் எல்லையைப் பேருந்து அடைந்தது. இன்னும் இரண்டு நிறுத்தங்கள் வந்தால் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். எந்தத் தொந்தரவும் இல்லாமல் நடந்து கொண்ட தேங்காய் நார் அலாவுதீனிடம் சற்று பரிவாகப் பேசினேன், “நீங்க ஏன் தூங்கல?” எனக் கேட்டேன். “பஸ்ஸில் போய் ரொம்ப நாளாச்சு!” என்றான். அவனது பதில் பாதி புரிந்தது. அதன்பின் அவனிடம் பேசவில்லை.

நிறுத்தம் வந்ததும் இறங்கிக் கொண்டோம். அப்பாவைத் தூரத்திலேயே பார்த்துவிட்டேன். அவர் புதிதாக ஒரு கூட்டம் சேர்ந்திருந்தார். தவிர்த்து சீனா கிழவியில் மகனைப் பார்க்கவும் ஒரு கூட்டம் சேர்ந்திருந்தது. ஒரு கூட்டம் மொய்க்கத் துவங்கியது. அந்தச் சிறுவன் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனான். அலாவுதீன் தோளில் அவன் ஏறிக்கொண்டான். அப்பா என் பைகளை வாங்கிக் கொண்டு கார் அருகே அழைத்துக் கொண்டு கேட்டார். “நல்லா விசாரிச்சியா? அந்த சின்னப் பய இவனோட மகனா இருக்கப்போறான்!” நான் நேரில் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட விஷயங்கள் மீது யாராவது கேள்வி எழுப்பினால் எனக்குக் கோபம் வரும். அதைப் பார்வையால் அப்பாவிற்கு உணர்த்த அவர் புரிந்து கொண்டு அமைதியானார். பின் அலாவுதீனுக்கு அப்பா ஸலாம் கொடுத்தார். அதை அவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை, “நல்லாருக்கேன்!” என்றான்.

அப்பா முன்னால் ஏறிக்கொண்டார். நாங்கள் மூவரும் பின்னால் ஏறினோம். இன்னும் ஒருவர் எங்களுடன் அமரலாம். நாகரீகம் கருதி ஒரு நான்குபேர் அதற்குப் போட்டி போடுவது தெரிந்தது. யாரை ஏற்றிக்கொள்வது என முடிவு செய்யும் இடத்தில் அப்பா இருந்தார். பின் யோசித்து சீனா கிழவி வீட்டுக்கு அருகில் குடியிருந்த வகாப்பை ஏற்றிக்கொண்டார்.

அப்பா தனக்கு இன்னும் நிறையக் கடமை இருப்பதாக நினைத்துக்கொண்டார். கண்ணாடி வழியாக அலாவுதீனை பார்த்துக் கொண்டே வந்தார். தேங்காய் நார் அலாவுதீன் குழந்தை போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பின் அந்தச் சிறுவனின் காதில் ஏதோ ரகசியமாகப் பேசினான். அதற்கு அவன் சிரிப்பதும் ஆச்சரியப்படுவதுமாய் இருந்தான்.

பெரியார் சிலை அருகே ஒருவர் காத்திருந்தார். அவர் அருகே கார் நின்றது. அவர் அப்பா அருகே நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டார். கார் ஓட்டிக்கொண்டு வந்தவர் அப்பாவை மாதிரியாகப் பார்த்தார். அப்பா அவரை பார்த்துச் சிரித்துச் சமாளிக்க முயன்றார். அப்பாவின் இருக்கையைப் பகிர்ந்து கொண்டவர்தான் தேங்காய் நார் அலாவுதீன் இருக்கும் இடம் பற்றித் துப்பு கொடுத்தவர். அவர் தேங்காய் நார் அலாவுதீனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அலாவுதீனும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வீடு வரப்போகிறது ஏன் இவரை வழியில் ஏற்றிக்கொள்ளவேண்டும் என யோசித்தேன், பசிக்கவே செய்தது. இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். அப்பா பேசும்போது அவர் ஆமோதிப்பது போலத் தலையாட்டிக் கொண்டார்.

வீடு வந்ததும் மீண்டும் பெருங்கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது. கொஞ்சம் உணவு நிறையத் தூக்கம் தவிர்த்து நான் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. அதற்கு முன் சீனா கிழவியைப் பார்த்தேன். எந்த உபாதைகளும் இல்லாமல் இன்னும் சில ஆண்டுகள் வாழும் திடத்துடன் படுத்திருந்தது போல இருந்தது. தேங்காய் நார் அலாவுதீனை அப்பாவும் துப்பு கொடுத்தவரும் தன் அரவணைப்பில் வைத்துக்கொண்டார்கள்.

எல்லாம் முடிந்தது ஊர் எல்லையில் இருக்கும் கப்ர்ஸ்தானில் சீனா கிழவி அடக்கம் செய்யப்பட்டாள். மகன் மூன்றாம் நபர் போல இருந்தது தெரு முழுக்க பேச்சாக இருந்தது. சிறுவனை அவன் மகன் என்றே சொன்னார்கள். தேங்காய் நார் அலாவுதீனுக்கும் அந்தச் சிறுவனுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு நடந்தது. மூன்றாம் நாள் கத்தம் முடித்த பின்பு அவனை அனுப்புமாறு அப்பா உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனிடையே பணிபுரியும் இடத்தில் ஒரு முக்கியமான வேலையாக வெளியூர் அனுப்பப்பட்டேன். பதினைந்து நாட்கள் விடுமுறையில்லாத பணி. தேங்காய் நார் அலாவுதீன், சீனா கிழவி யாரும் என் கருத்தில் இல்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது வீட்டில் பெரிய மாற்றங்கள் தெரிந்தது. தேங்கிக்கிடந்த பழைய பொருட்கள் இருந்த அறை சுத்தமாகக் கிடந்தது. அம்மாவிடம் விசாரித்த போதுதான் , அவையாவும் சீனா கிழவி வீட்டுக்குப் போய்விட்டது எனச் சொன்னார். சீனா கிழவி வாழ்ந்த வீடு எங்கள் பெயரில் கிரயமாகியிருந்த பத்திரத்தை அம்மா எடுத்துக் காட்டினார். மனப்பூர்வமாக எழுதிக் கொடுக்கிறேன் என்ற இடத்தில் தேங்காய்நார் அலாவுதீன் கையெழுத்து இருந்தது.

-rabeek1986@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button