மழைக்கவிதைகள்
மழைக்கவிதை எழுத
யோசிக்கிறேன்
தாள்களும் கையுமாய்
மகள் கூப்பிட்டோடி வருகிறாள்
‘அப்பா… மழை மழை ‘ என்று ,
வாசலில் நிறைந்தோடும்
கார்மேகத்தின்
மழைமசி ஓடையில்
மகளுக்காக
என் கைப்பட
மிதக்கக்கொடுக்கிறேன்
ஒரு சில காகித நோவாக்களை
காற்றுச் செம்படவன் செலுத்த
அது ஒன்றன்பின் ஒன்றாக
சுழித்து சுழித்து
பிரபஞ்சத்தின், பிரக்ஞையின்
வரிகளை
அள்ளிப்போட்டுக்கொண்டு
கண்களுக்கு
நிகழ்த்திக்கொடுக்கிறது
வாழ்வில் இதுவரை
எழுதித்தீராத
இனியும் எழுதிவிடக்கிடைக்காத
ஆன்மாவின் மழைக்கவிதைகளை.
*** *** ***
மெல்லத் தெளிகிறது வானம்
இருபுறமும்
தன் சிறகுகளால்
காற்றை குலப்பிவிட்டு
உயரப்பறந்து
தன் முகம் காட்டுகிறது
பறவை
மெல்லத் தெளிகிறது
வானம்.
*** *** ***
நெருங்கிய விடுமுறை
வேலைக்குச்செல்லும்
குடும்பதலைவியுடன்
தன்னை ஆராதிக்கத்தெரியாத
தன் அருமைத்தெரியாத
பல ஆண்களைப்பற்றி
விசனப்பட்டுக்கொண்டும்
‘நீயாய் இருந்தால் என்னை
எப்படி ரசிப்பாய் ?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டும்
நேரம் போவதே தெரியாமல் தன்னைப்பற்றியே பேசிக்கொண்டு வர
‘இதோ உன் வீடு வந்திருச்சி
Next week பார்க்கலாம் ப்பா…’ என்று
அவள் மனதை உருவிக்கொண்டு
நழுவுகிறாள்
அவள் வீட்டுக்கு அரவே பிடிக்காத
அவளின் நெருங்கிய விடுமுறை.