கவிதைகள்
Trending

கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

கவிதைகள் | வாசகசாலை

1
ஒரு றப்பான் இசை
ஓராயிரம் இரவுகளுக்கு முன்
அவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்
அந்த றப்பான் இசையொலியை.
ஓராயிரம் இரவுகளுக்குப் பின்
நீயும் ரசித்திருந்தாய்.
இன்று ஒரு முன்னிரவில்
நானும் ரசிக்க விரும்பி நின்றேன்
எல்லாக் காதுகளாலும்
நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
இசை விழுந்து கொண்டிருக்கிறது
பின்னிரவு வரை.
மௌனமாய்…
மிக மௌனமாய்
நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
யாருடைய விரல்கள் அதனை
தீண்டிக் கொண்டிக்கிறது
என்று தெரியாமலே.
இப்போது
இரவை விடியச் செய்கிறோம்.
சுருட்டி வீசப்பட்ட கடுதாசி ஒன்றில்
பரவிக் கிடக்கிறது
ஒரு கவிதையாக
றப்பான்.
.
2
களவாடப் பட்ட கொங்கையாடை
அது முதல் சந்திப்பைப் போன்றல்ல
வெட்கக் கூச்சம் சர்வம் கலையும்
ஆடை போல மெது மெதுவாக
கழற்றி விடும் நெருக்கத்தில்
நீ இட்ட இரகசிய சமிக்ஞை
சாத்தியத்திற்கு உட்பட்ட
ஒரு சம்பிரதாய முத்தத்தை
தந்துவிடச் சொல்லியே.
நம் பருவத்திலிருந்து ஒரு ஆதி இசை
அவ்வப்போது
பச்சை நரம்புகள் வழியே
வந்து வந்து செல்கிறது.
ஆண் உடல் கடும் பாறை
பெண்ணுடலின் மென் சூடு படும் போது
பனியை உண்ணும் சூரியனைப் போல
உறிஞ்சும் நிகழ்வில்
பெண் வெளி முழுதும்
ஈரத் துணியை உலர்த்துவது
வெப்ப மண்டலத்து வலிகள்.
ஒரு செம்பறி ஆட்டின் புல் மேய்தல்
பின் இரவின் நெருக்கத்தின் அர்த்தங்கள்
அள்ளி விசுறும் முன்னே நாம் கேட்ட
ஆதி இசையென
உன் மேனி தழுவி
அதன் நுனியில் இட்ட முத்தம்
முதலானவையல்லயென
நீ நகக் குறி பதிக்கிறாய்
என் நெஞ்சின் மேல்.
பால்கனியை பிழிந்து வெப்பம் பிசுற
சூரியனை அழைத்து
கொங்கையாடைகளைப் பிழிந்து
காயப் போட்டு முடித்து
உறங்கி எழும்புகிறேன்.
காணாமல் போயிருந்தது அது.
காமம் களவாடிச் சென்றுக்குமோயென்று
அந்த வெப்ப மண்டலத்து நிகழ்வை
முடித்து வைக்க பணிக்கப்பட்டிருக்கிறேன்
நான்.
.
3
மழைத் தேநீர்
இந்த மழையின் குளிரில்
உறையும் உடல்.
ஒரு டன் வெயிலைக் கேட்கிறது.
பிசிறிப் பாயும் கூதலை விரட்ட
நீ தேநீரோடு வருகிறாய்.
நான் அருந்துவதற்கு
தயாரில்லையென்ற போது
தனியாக சூட்டைப் பிரித்துத் தருகிறாய்
நான் பூசிக் கொள்கிறேன் உடல் முழுதும்.
கூல்  தேநீர் அருந்துவது
உனக்கான விருப்பம் என்கிறேன்
முணு முணுக்கிறாய்
நெருங்குகிறேன் சமிக்ஞையறிந்து.
மழை இப்படியே பெய்யட்டும்
திறந்து விடு ஜன்னலையென்கிறேன்.
சிரிக்கிறாய்
மின்னல் வெட்டி மறைகிறது.
இப்போது காற்று ஜன்னலை அசைக்கிறது
நீ மூடி விட்டு நகர்கிறாய்
இன்னொரு தேநீர் வேண்டுமென்கிறேன்.
4
நீ பிரதி செய்யப்பட்டவன் 
நீ எப்போது கண்ணாடி
பார்ப்பதை நிறுத்திக் கொண்டாயோ
அப்போதிலிருந்தே
உனது பிரதி
உன்னை அங்காங்கே எழுதிச் செல்வதும்
உனக்குத் தெரியாமலே போய் விட்டது.
நீ
இன்றிலிருந்து கண்ணாடி பார்ப்பதை
பழக்கமாக்கிக் கொள்.
உன்னைத் திருத்திக் கொள்ள
அதைவிட சிறந்த வழியேதுமில்லையென
எனக்குத் தோன்றுகிறது என்பதை
நான் சொல்லி வைத்தால்
நீ
குறையென்பாய்.
*********
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button