யவ்வனம்
செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப்
புறக்கணித்திருந்தன
ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு
மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின்
வால்
இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து
தம்மை விடுவித்துக் கொண்டது
கிர்ர்ர்ரடித்து
படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன
காளான் தொப்பிகள் பூண்ட
கரிய இயலாமைகள்
புறக்கணிக்கப்பட்ட நஞ்சின் அளவை சோதித்த
விரல் நுனி
ருசியை எழுதிட முனையும்போது
மாண்டுவிட்டிருந்தது.
***
உலா
அன்பனின் கிரீடம் தரித்திருந்த வெக்கை
நகரெங்கும் ஊனமாய் அலைந்து
திரிகிறது
புலனுக்கு சிக்கிடாமல்
காவல் எல்லைகளை மீறி
இறைஞ்சி நிற்கும் கருணையின் கைகளில்
விழுகின்றன பிரம்படிகள்
சில
காயங்கள் புண்ணாகி பொருக்குத் தட்டி உதிர்ந்த பின்பு
நகலெடுக்க லாயக்கற்ற வலியை
தூக்கித் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறான்
சாதாரணன்
குரல்கள் ஓங்கும்போதே
அதிகாரவரிசைகள் துரிதமாகின்றன
உத்தரவிடப்படுகிற பிறப்பிடத்திலிருந்து
மாசற்ற வெக்கை
தந்திரத்தைப் புசித்து அகாலத்தைச் செரித்து
பின் நிதானமாக
அவிழ்த்துவிடப் பணிக்கிறது
பச்சைக் காயங்களை
மேலும்
மேலும் புடைக்கின்றன
முகம் தொலைத்த எல்லைதோறும்
லாயக்கற்ற
வலிகள்.
***
நீ நான் மற்றும் Fossil
இந்த உடலின் இரத்த வாடையை கவுச்சி என்கிறாய்
நாம் தானே குத்திக் கிழித்துக் கொண்டோம்
விருப்பமற்று என்றில்லை
அதொரு தன்னிச்சை
நீங்க மறுக்கும் டி.என்.ஏ வின் நசிவு
படிநிலைகளை
முன்னெடுத்து எங்கோ அலையும் கால்கள்
இட்டுச் செல்ல முனைகின்றன
புதிர்களின் அவிழா தோற்றுவாயை குறுக்கே வெட்டி
உகுக்கும்
மெய்மை கனவுகளை சொல்லிக் கொடுப்போம்
அல்லது
பாறைகளில் குடைந்து முடிப்போம்
யாரோ
எவரோ எங்கோ காணக்கூடும்
கண்டம் சிதைந்து மண்டை உடைந்த மூளையின்
படிமத்தை
அகழ்ந்தோ இல்லாமலோ
***
வளை
முடிவுற்ற இடம்
எங்கோ ஆழத்தில் உள்ளது
மீண்டும் தொடங்க
உள்ளிறங்க வேண்டும்
கயிறோ மேலிருந்து போடப்படுகிறது
அது
வேறெங்கோ இருந்து.
***
சரிவா
ரேகைகள் சுழித்து சுழித்து இழுத்துப் போம்
முகட்டில்
கால்பாவா நழுவலில்
சரிந்திறங்குமோ
அடர் வனம்
பற
பப்பர பற
உன் அலகில் கவ்விய இரை
அம்மொழி
***
அஃதொரு நயமென…
எப்போதோவிருந்த முகத்தின் நிழல்
நாளையை வந்து தட்டும்
நொடியில்
இப்போதிருக்கும் இன்முகத்துடன்
ஒரு கப் காஃபி குடிக்கலாம்
அக்கசப்பை ருசித்திட
இத்தருணம் சேமிக்கும் அனுபவங்களை
பதப்படுத்தி வைக்கவோ
ஒரே ஒரு மௌனம்
போதுமானதாக இல்லை.
***
அவன் முனை -இவன் முனை
இன்னும் கூட தீரவில்லை
ஓய்ந்த பின்னும்
கரடு தட்டவில்லை
கங்குகள் காத்திருக்கின்றன
ஞானியின் உருவெழுதி சாம்பல் போர்த்தி
பாசாங்கற்று
உதிர்ந்து காய்ந்து உரசி நொறுங்கவிருக்கும்
ஏதோ ஒரு சொல் மோத
காத்திருக்கின்றன
மந்திரங்களை முணுமுணுத்தபடி
உதட்டு ரேகைகள்
நலுங்காமல்
மடியில் பிச்சை ஏந்திக் கிடக்கும் திருவோட்டின்
முதுகுப் புடைப்பு
கேடயமாகத் திரும்பி நிமிர தோதான
ஒற்றைத் தருணம்
வரும்வரை
யுத்த களமறிந்த ஞானிகள்
காத்திருப்பர்
கங்கென.
***