நம்மிடமிருந்தே விலகி..
தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக
சொன்னார்கள்
அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை
பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு
பலி உண்டு
வழிகிற துளி வலியின் நுனி உறைய
நிரடும்
ஞாபக ரேகையின் வளைவில்
புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற
நட்சத்திர வரி
பிரபஞ்சக் கோட்டின் பிழை வாயில்
தொடர்ந்து கேட்டபடி
ஏதோவொன்று இருந்ததாகச் சொன்னார்கள்
நியாண்டர்தால்
வழித் தடம் அழிந்த வனப் பாதையில்
வால் அறுந்து நடந்த பிராணியின் கதையை
குறை கூவுகிறது
வால் நீண்ட கருங்குருவி
சாத்தானின் நாப்பசியில் நஞ்செனப் பரவும் இருளை
குளம்பொலி அதிரப் பெயர்த்தும்
காலப் புரவி
கடவுளின் முதுகெலும்பில் மூச்சிரைக்கப் பாய்ந்து
அசைக்கிறது மூலத்தை
ஆதியில்
சொல் இருந்தது
அது
தொடர்ந்து சொல்லும்படியாக இல்லை
என்றும் சொன்னார்கள்.
***
பிறப்போடல்லாமல்…
இறைஞ்சுதலின் விதி
கொஞ்சமாகவேனும் யோசிப்பதற்கு
கேட்கிற அவகாசம்
அதிகாரத்தின் உச்சந்தலை நரம்பைப் பிடித்துக்கொண்டு
உள்வழியாகக் கீழிறங்கி
புருவ மத்தியில் பொத்துக்கொண்டு
வெளியேறுகிறது
வால் நீண்ட அக்னியாகி.
***
உங்களினால் உங்களிலிருந்து…
சற்றுமுன் வரை திறக்கப்படவில்லை அச்சொல்
அதன் ரகசியத்தை
நூல் பிரிக்கிறது பொறுமையிழந்த மௌனம்
நையும் இழைக்குப் பின்னே
தட்டுப்படும் முகத்தில்
தையல் பிரிந்த
பழைய புன்னகை
சந்தைக்கும் அப்பால் நீள்கிற கூட்டத்தினூடே
இழுத்து வர மனமில்லா
மிருகத்தின் கூர்மையில்
எதுவாகிறது சொல்
என்கிறாய்
அது
புழுதி அடங்கியதும்
துலங்கும் காட்சி மீது படிகிறது
இழை
பிரிந்த உறுமலின் மூச்சாகி.
***
சர்ரியலிஸ சதுரங்களின் காட்சியென…
கை குலுக்கி யமர்ந்த வேளை
பேசுபொருள் மிதக்கும் கண்ணாடிக் கோப்பையின்
விளிம்பில்
இசை ஒளிரத் தொடங்கியது
மென் அதிர்வை அனுமதித்தபடி
விரல் நுனி பேணிய அமைதியில்
திக்குகள் புலப்படவில்லை
இரண்டு புகார்களுக்கு மத்தியில்
நீண்டு கிடக்கிற நிழலைக் கடக்கும் துணிச்சலில்
வார்த்தைகளின் போதாமை திரள்வதை
உற்று நோக்கி
மாயும் அர்த்தப் போக்கில்
மேஜை விரிப்பின் ஒழுங்கு
ரிதம்
தப்பியிருந்தது.
***