கவிதைகள்

மகிழினி காயத்ரி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஆண்டாண்டுகளாய்
தழைக்கும்
உனக்கும் எனக்குமான
உறவொன்றில்
குருத்திலையொன்றின் வாசம் அப்பிக்கிடக்கிறது
அடிவேரின் ஆழத்தில்
சேர்த்துவைத்த
அன்பின் கிழங்குகளில்
மண்மூடிய நேசத்தின் நரம்புகள்
விரவிக்கிடக்கின்றன
யாரும் பார்க்க இயலாதபடி !
இலைகள் சேகரித்த
உணர்வுகளின் தளும்பல்கள்
அடி முதல் நுனி வரை
பச்சை நரம்புகளில்
பாய்ந்தோடுகின்றன
சூரியன் சுட்டெரிக்காத
மழை வந்து முத்தமிடாத
 நாட்களில்
 நாமே வெயிலாகின்றோம்
நாமே மழையாகின்றோம்
தத்தளிக்கும் தவிக்கும்
உறவின் ஏங்குதலுடனான
பெருநேசம் ஒன்று
சிறு குழந்தையாகி
எட்டிப்பார்க்கிறது
மீண்டும் ஒரு துளிர்த்தலில் !
துளித்தலினால் ஆனதுதானே
அன்பின் செடிகள்
ஒரு காதலின்
ஒரு உறவின்
கருவை
சுமந்து நிற்கின்றன
சுயம் தொலைத்த
நம் அன்பின் செடிகள்
வானம் வசப்படட்டும்!
***
கோலத்தில் இருந்த
மீனுக்கு
கடலை காட்டுகிறாள்
தண்ணீர் வார்த்து
சிறுமி ஒருத்தி !
மாமியாரிடமிருந்து
மருமகளுக்கு
கைமாறுகிறது
பொறுப்பு
கோலம் போடுவதற்கு!
சிக்கலின்
இருமுனைகள்
சந்ததிப்பதில்
இருக்கிறது
கோ(கா )லத்தின் வெற்றி!
பூம்பூம் மாட்டுக்காரரின்
மாடு கண்ணடித்து
அழைக்கிறது
தையல் வரைந்த
கோலத்தின் பசுவை !
வாழ்வில் மகிழ்ச்சி
வேண்டும்போதெல்லாம்
மார்கழிப் பனிக்குள்
ஒளிந்துகொள்கிறது
நினைவின் உடல் !
***
பற்றி எரியும்
காடொன்றில்
யாருமின்றி கைவிடப்பெற்ற
ஒரு சவலைகுட்டியின்
சப்தம் மட்டும்
கவனிக்கப்படாமல்
போவது போல்
பலநேரங்களில்
எனது குரல்கள்
உன்செவியடைவதற்கு
முன்பே
உனது வேலைகள்
பற்றிக்கொள்கின்றன
உன்னை
ஆனால் மழை நிற்கும்
 நாளொன்றில்
வந்து நின்று
உன் பாடல் வேண்டும்
என்று கேட்க மாட்டாய்தானே
ஏனெனில்
அப்பொழுது
என்னிடம்
காற்று நுழைந்தேகும்
குரல் வலை
பெரும் குளிரில்
கிட்டித்துப்
போயிருக்கலாம்
வானில் கரைந்த
மழையோசையாய்
என் மன ஓசை
அப்போதும் உனக்கு
கேட்காமல் போகட்டும்
குயில்கள் பாடுவதை நிறுத்தி
நிரம்ப நாள்களாகிவிட்ட
வனத்தில்
செவிகள் அலைகின்றன
எனும்போழுது
எனக்கான பாடல்
ஒன்றை நீ கேட்கக்கூடும்.
***
நயவஞ்சகமாய்
அன்பைப் பொழிந்து
இருகூறிட்டுக் குத்திக்
கிழித்து ரணமாக்கியதால்
விளைந்த நம்பிக்கையொன்றின்
கண்ணீர்க்குருதிகள்
வழிந்தோட
நடு யாமத்து நரிகளென
கெக்களிக்கும் கயவர்களால்
எரிக்கப்பட்ட
அரக்குமாளிகைகளாலான
துரோகங்களைக்
கட்டறுத்தக்
கடவுளர்
நிரம்பிய
நிலங்களின் தேசத்தில்
மக்களின்
தூர்ந்து போன
அன்பைக் கண்டடையா
வெறுப்புமிழும் மாச்சர்யங்கள்
துலங்கும் பக்தியினை
வேண்டாமென ஒதுக்கி விட்டு
மரவுரி தரித்து வனவாசம் ஏகி
நிற்கின்றன
எல்லைகளேதுமற்று
விரிந்த பிரபஞ்சத்தின்
கருணையால்
இரக்கத்தால்
உண்மையால்
உருவான
ஞானங்கள்
அன்பின் ஜோதி
இருளின் கரையில்
எல்லோராலும்
கைவிடப்பட்டு
மரணிக்கக்
காத்திருக்கிறது.
கடவுளர் என்னவோ
ஆகமச்சிறையில் !
***
மேடிட்டுக்கிடக்கும்
அவள் அடிவயிற்றின்
கருப்பைக்குள்
அனுதினமும்
சேமித்துக்கொள்கிறாள்
அன்பூறும் ஆதிசக்தியின்
முகமலர்தலாலான காருண்யங்களை!
ஓராயிரம் பாடல்களால் அல்லாமல்
பரிசுத்தமெனும்
ஒற்றை வார்த்தை கொண்டு நிறுவுகிறாள் ஜகத்தினை..
கருணை நிறைந்த
இலட்சம் புன்னகைகளைக்கோர்த்து
ஒரு நதி செய்து மிதக்கவிடுகிறாள்
எல்லாமும் நிறைந்திருக்கும் இப்பெருநிலத்தின் வாழ்வெனும் பயணக்கப்பலை
யாரும் அறியவியலாத
நொடிகளில்
மண்பானையின் துகள்களுக்கிடையில்
 நுழைந்து ஒளிந்துகொண்டு  குளிர்விக்கும் காற்று  போல்
ஆதித்துளியின் பரிசுத்த
அன்பொன்று நுழைந்து
ஒளிர்கிறது கர்ப்பக்கிரகத்தில் !
***
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button