இந்தப் பதிவு தோனியை பாராட்டி எழுதப்பட்ட பல வார்த்தைகளைக் கொண்ட பதிவு. அதுக்காக உடனே ஏகப்பட்ட நம்பர்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், கிராஃப், டோனி கிபி 1981-ல் ராஞ்சியில் பிறந்த டைப்ல இருக்கும்னு நினைக்காதீங்க. அதுக்கு விக்கிபீடியா போங்க. அப்படிதான் பலர் போயி அதை பாத்து எழுதி முட்டு கொடுத்துஃபையிங்.. நீங்க இந்தப் பக்கம் வாங்க.நாம வேற ஒன்னு பேசலாம்.
ஜார்கண்ட் மாநிலம் பத்தி உங்கள்ல பலருக்கும் தெரிஞ்சிருக்கலாம். பீஹாரோட ஒரு பகுதியா இருந்த பல இடங்களை குறிப்பா டாடா, ராஞ்சி, தன்பாத், ஹசாரிபாக், ராம்கட் மாதிரியான நகரங்களை பிரிச்சி உருவாக்கப்பட்ட ஒரு மாநிலம். பூமிக்குக் கீழ நிலக்கரி கொட்டிக் கிடக்குற ஊரு. ஒரு விதமான வெப்பம் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும். அதை அங்க வாழ்ந்தாலே உணர முடியும். பாலகுமாரன் தன்னோட ஒரு நாவல்ல நெய்வேலி பத்தி எழுதியிருப்பாரு. அதுல அந்த கந்தக பூமி எப்படி மனிதர்களோட இயல்பையே மாத்துதுன்னும், அந்த மண்ணுல வாழுற மக்களோட குணாதிசயங்கள்ல குறிப்பா அவங்களோட கோபத்துல ஒரு பங்கா இருக்குதுன்னும் பேசியிருப்பாரு. நெய்வேலி ஒரு ஊர். ஜார்கண்ட் ஒரு மாநிலம்.
இரும்பு ரொம்ப முக்கியமான ஒரு வாழ்க்கை ஆதாரமா ராஞ்சி மக்களுக்கு அப்போ இருந்தது. இருந்துக்கிட்டு வருது. இரும்புல எப்பவும் வேஸ்டேஜ் கிடையாது. ஸ்க்ராப் முதக்கொண்டு காசு தான். அதனாலேயே ஜார்கண்ட்-ல மாஃபியாக்கள் அதிகம். அவங்கள்லாம் காலப்போக்குல வியாபார காந்தங்கள் ஆயிட்டாங்க. அவங்களை எதிர்த்து சண்டை போட நக்சல்வாதிகள் உருவானாங்க. ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயத்துக்கு மக்களை ஆளாக்குன வரலாறு அங்க உண்டு. நம்ம ஊர்ல ஆளுங்கட்சி ஸ்ட்ரைக் பண்ணப்போறதா அறிவிச்சாலே ஆயிரத்துக்கு அம்பது பேர் கூட கடையை மூடமாட்டான். ஆனா ஜார்கண்ட்-ல அப்படி இல்ல. நக்சல் பந்த் அறிவிச்சா அங்க ஒரு ஈ,காக்கா கூட வெளிய வராது. அதுலயும் மாசத்துக்கு ரெண்டு மூணு ஸ்ட்ரைக் கன்பார்ம். ஆனாலும் மக்கள் அங்க நக்ஸல்களுக்குத் தான் ஆதரவு.
ராஞ்சி ஒரு டீசண்டான சிட்டி. பீஹார் தலைநகரம் பாட்னாவை விட பலமடங்கு நல்ல ஊர். ஓரளவு டிராஃபிக்கை மதிக்கிற, நல்ல சாலைகளைக் கொண்ட ஒரு ஊர். அந்த ஊர்ல இருந்து ஒருத்தன் கிரிக்கெட் விளையாடக் கிளம்புனா கதையை நீங்க ஏற்கனவே படமாவே பார்த்துட்டீங்க. ஆனா உளவியல் ரீதியா அந்த ஊர்ல இருந்து இப்படி ஒருத்தன் எப்படி வந்தான்னு புரியாம நான் முழிக்கிறேன்.
காரணம் தோனின்னா “கூல் கேப்டன்”. எந்தவொரு சூழ்நிலையிலயும் பதட்டப்படாத, எந்தவொரு கோபத்தையும், வருத்தத்தையும் எளிதா வெளிக்காட்டாத ஒரு மனிதராத்தான் அவரை கொண்டாடுறாங்க. ஜார்கண்ட் மாதிரியான ஒரு சூழ்நிலையில பொறந்து வளர்ந்த ஒருத்தன் முதல்ல தன்னைத் தானே ஜெயிக்கனும். புறக்காரணிகள், சமூக சூழ்நிலைகள் மனிதனை என்ன மாதிரியான தவறுகளை எல்லாம் செய்ய வைக்கும்னு எத்தனையோ புத்தகங்கள்ல படிச்சிருக்கோம். நேர்லயே கூட பார்த்திருப்போம். இந்த இடத்துல இருந்து இப்படி ஒருத்தன் வந்து இதெல்லாம் பண்ணிருக்காண்டா அப்படின்னு வரலாறுல எழுத வேண்டிய விஷயமா தோனி மாறி நிக்கிறதை நம்மள்ல பலரும் கவனிக்கிறதே இல்ல.
எந்தவொரு விளையாட்டும் வெறும் வெற்றி தோல்வியால மட்டும் தீர்மானிக்கப்படுறதில்ல. ஒரு பயங்கர விறுவிறுப்பான போட்டி ஒன்னு நடக்குதுன்னு வைங்க. அதுல கடைசி நேரத்துல நடந்த ஒரு சின்ன தவறால ஒரு அணி தோத்து போயிருது. தோத்த அணி ஆதரவாளர்களுக்கு வருத்தம் தான். ஆனாலும் அது பெருமைப்படக் கூடிய ஒரு வருத்தமா அமையும். ஜெயிச்ச அணி ரசிகர்களே கூட,”எங்கள் அணி போட்டியில் ஜெயித்தது.. உங்கள் அணியோ எங்கள் இதயங்களை ஜெயித்தது..” அப்படின்னு பெருந்தன்மையான சொல்ற மாதிரி விளையாடுற சந்தர்ப்பங்கள் அமையும். அதை சொல்லும்போதே அந்த அணி எவ்ளோ நல்லா ரன் அடிச்சது.. அதுல ஒரு பேட்ஸ்மேன் நிறைய சிக்ஸர் அடிச்சான்.. ஒரு பவுலர் நிறைய விக்கட் எடுத்தான் மாதிரியான எல்லா புள்ளி விவரங்களும் தன்னால அடிபட்டு போயிரும். அங்க நிக்கிறது அந்த நேர உணர்வு மட்டுந்தான். தோனி அந்த உணர்வை எத்தனையோ தடவ அள்ளி அள்ளி தந்திருக்காரு.
சச்சினுக்குப் பிறகான இந்திய கிரிக்கெட் முகம் முழுக்க மாறாம இருந்ததுக்கும், அதே லெஜண்டரி பயணம் தொடர்ந்து ஒரே முகமா இருந்ததுக்கும் முக்கிய காரணமா தோனியை நான் சொல்வேன். ஏன்னா சச்சின் கடவுள். இந்திய கிரிக்கெட் மதத்தின் வழிகாட்டி. 2011-ல கப் ஜெயிச்சதுமே அவர் இனி எப்போ ரிட்டையர் ஆனாலும் பரவாயில்லைங்கிற மைண்ட் செட்டுக்கு பக்தர்கள் நாங்கள் எல்லாம் எப்பவோ வந்துட்டோம். ஆனாலும் அந்த நூறாவது சதம் கொஞ்சம் அசைச்சி பார்த்தது உண்மை தான். அப்போ தான் அங்க தோனி இருந்தாரு. “ஒன்னும் பிரச்சினை இல்ல தம்பிகளா.. சாமி மெதுவா ஆடி, முழு திருப்தி வந்ததுக்கு அப்புறம் ரிட்டையர் ஆகட்டும்… இதனால நம்ம டீம் பெர்பார்மன்சுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.. அதுக்கு நான் கேரண்டி”ன்னு நின்னுட்டிருந்தாரு. உண்மையில சச்சின் ரிட்டயர் ஆன அன்னைக்கு எனக்கு சந்தோசம் தான் அதிகமா இருந்தது. ஏன்னா அணியை ரொம்ப பாதுகாப்பான கைகள்ல விட்டுட்டு அவர் போறதுனால. சச்சின் அந்த வகையிலயும் ஜெயிச்சிட்டுத் தான் போனாரு.
மத்த உலகப்புகழ் பெற்ற, நிறைய சாதனைகள் செஞ்ச பேட்ஸ்மேன்கள் மாதிரி தோனிக்கு விளையாடத் தெரியாது. உதாரணமா அக்தர் மாதிரியான ஒரு பவுலர் 150 கிமீ ஸ்பீட்-ல பந்து வீசும் போது, டிராவிட், லக்ஷ்மன் மாதிரியான நம்ம பேட்ஸ்மேன், அப்படியே ஃப்ரண்ட் ஃபுட்ல காலை சரியா நகர்த்தி, பேட்டை கரெக்ட்டான ஆங்கிள்ல முன்னாடி வச்சி டிஃபன்ட் பண்ணுவாங்க.அவ்ளோ வேகமா வந்த பந்து அடிச்ச இடத்துல அப்படியே செத்த பாம்பு மாதிரி கெடக்கும். அதைப் பார்க்கவே ஒரு ஓவியம் மாதிரி இருக்கும். தோனிக்கு அப்படியெல்லாம் விளையாடத் தெரியாது. அவர் கட்டை போட பேட்டை முன்னாடி கொண்டு வந்தாரா இல்ல ஓங்கி அடிக்க முயற்சி செஞ்சாரான்னே பல சமயங்கள்ல புரியாது. இது ஒரு சாதாரண ரசிகனை எந்தளவுக்கு உளவியல் ரீதியா பூஸ்ட் பண்ணும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?
ஏன்னா ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுற பசங்களுக்கு இந்த கவர் ட்ரைவ், ஸ்வீப் எல்லாம் என்னன்னே தெரியாது. அது தெரியாமலேயே அவன் அந்த ஷாட்டை ஆடுவான். கோச்சிங் சென்டர் போன ஒருத்தன் கூட விளையாடும் போது, அவன் பேட்டை இப்படி பிடிக்கணும்.. கால் இப்படி திரும்பனும்ன்னு சொல்றதெல்லாம் அவனுக்கு பயங்கர அந்நியமா இருக்கும். அதையும் மீறி அவன் அப்படி விளையாடலாம்னு ஆசைப்பட்டா அடுத்த பால்ல அவுட் ஆயிருவான். அவனோட கம்போர்ட் ஜோன் அது இல்ல. “இந்த மாதிரி விளையாண்டாத் தான் நீ பெரிய கிரிக்கெட்டர் ஆகமுடியும்”ங்கிறதே ஒரு மாயை தான். அதை அவன் தோனி பேட்டிங் பிடிக்கிற ஸ்டைல் மூலமா அவனாவே புரிஞ்சிக்கிட்டிருப்பான்.
கார்ட்டூன்ல ஆரம்பிச்சி, வீடியோ கேம், சினிமான்னு எல்லாமே வன்முறையையும், கோபத்தையும் பெருசு பண்ணி காட்டிட்டு இருக்குற ஒரு காலகட்டம் இது. மேட்ச் பார்க்குற நமக்கே ஹார்ட் அட்டாக் வர்ற சிச்சுவேஷன்லயும் கூட நிதானமா அதை ஹேண்டில் பண்ற தோனிகிட்ட இருந்து, அவரை ஹீரோவா நினைக்கிறவன் கண்டிப்பா பல நல்ல விஷயங்களை கத்துப்பான். அதுவும் அவன் கத்துக்க வேண்டிய அந்த சரியான வயசுல. தோனி மேல விமர்சனங்கள் வர்றப்போ எல்லாம் அவரோட ரசிகர்களும் தோனி மாதிரி இருக்கு பழகுறதையும் இப்போ பரவலா பார்க்கமுடியுது.
விளையாட்டுங்கிறது வாழ்க்கையோட அங்கம். ஒரு பருவத்துல நண்பர்களோட ஜாலியா பொழுதுபோக்க விளையாடுறோம். இன்னொரு பருவத்துல உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்கணும்னு விளையாடுறோம். எப்படியும் எந்த வகையிலாவது விளையாடிக்கிட்டேதான் இருக்கோம். ஒவ்வொரு பருவத்துலயும் அந்த விளையாட்டு நமக்கு ஏதாவது கத்துக் கொடுத்துக்கிட்டே இருக்கும். விளையாடுற வீரனோட உடல்மொழியோ அல்லது அவனது செயல்பாடோ நமக்கு புதுசா ஏதாவது செய்திகளை சொல்லும். நம்மளோட அன்றைய மனநிலையை மாத்தும். பல சமயங்கள்ல நம்ம எதிர்காலத்தையே கூட அந்த செயல்கள் வேறு ஒரு தளத்துக்கு எடுத்துட்டு போகும்.
தோனி கிட்ட அப்படி கத்துக்கிட்ட பலர் இருக்காங்க. அவங்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தல ❤
எந்தவொரு சூழ்நிலையிலயும் பதட்டப்படாத, எந்தவொரு கோபத்தையும், வருத்தத்தையும் எளிதா வெளிக்காட்டாத ஒரு மனிதராத்தான் அவரை கொண்டாடுறாங்க..நிஜம் .
அருமை ❤
மிக்க நன்றி ?
ரொம்ப நல்லா இருந்தது கட்டுரை.
மிக்க நன்றி.