![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/02/varthr_u289519_13_small2-780x405.jpg)
குப்பைகளை சுமக்கிறேன்
—————————————–
புற்களை மேய்ந்து
கொண்டிருந்த சிறுவன் தோற்பை நிரம்பிய திருப்தியில்
பூங்காவை விட்டு
வெளியேறிய போது
பாட்டிலில் அடைக்கப்பட்ட
குளிர்பானத்தை உறிஞ்சித் தூக்கி
எறிகிறேன்…
வேகமாக ஓடிவந்தவன்
அதையெடுத்து
நசுக்கப்பட்ட அடிபாகத்தில்
ஆரஞ்சுச் சாற்றை
ரசித்து உறிகிறான்….
அருவறுப்பாக பார்க்கும் என்னை
புன்னகையோடு கடந்த போது
அவன் சேகரித்த
குப்பையின் எடை
என் தோளில்
கனத்தது….
***
மழை கொத்தும் பறவை
————————————–
கம்பிகளின்
இடுக்குகளைக் கிளறி
மிச்சமிருந்த தானியங்களை
கொத்திக் கொண்டிருக்கையில்
மெல்ல அசையும்
ஊஞ்சலில் காற்று
நனைத்த கவிதை
ஆடிக்கொண்டிருக்க
சன்னலிடம் தாவும்
பறவையைச் சுற்றி மழை பிடிக்கத் தொடங்கியிருந்தது…
சிறகுகளின் பேரிரைச்சலில்
சோர்ந்து போன பின்
மழை கொத்தி தின்ன
ஆரம்பித்தது கூண்டுப்பறவை…
***
புதுப் புடவை
———————
மகரந்தங்களை
உருட்டிப் பிழிந்து
முறுக்கு சுடும் அம்மாவிற்கு
இரண்டு நாட்களில்
தீபாவளி வரப்போகும்
ஆரவாரம் …
இனிப்பு திரட்டி லட்டு
செய்யும் கன்னங்களில்
புகை படிந்த கொப்புளங்கள்
எண்ணெய் தெரித்த தருணங்களில்
செம்படம் நிறைந்திருந்தது…
அப்பா தந்த புதுப் புடவையை
மஞ்சள் வைத்த
வேளையில் அத்தை மாமா
சித்தியென தீபாவளியின்
புது வரவுகள் நீள
சமையலறையில் சஞ்சரித்த
அம்மா புது புடவையை
மறந்திருந்தாள்…
அவ தீபாவளியெல்லாம்
பெருசா கொண்டாட மாட்ட
வாங்க நம்ம வெடி வைப்போமென்ற அப்பா
எல்லாரோடும்
வாசல் சென்றார்…
***