கவிதைகள்
Trending

ப.காளிமுத்து கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

1.

திருமண அழைப்பாக வெற்றிலை பாக்கு பூத்தட்டில் அமர்ந்திருக்கிறது
வெற்றிலையின் சிவப்பை உடலில் பாய்ச்சிப் பின் காரத்தை மணிக்கட்டில் திலகமிடுகிறேன்
காம்பைக் கிள்ளித் திண்ணும் அச்சிறுவனிடமிருந்து
உன் நெற்றிவகிடைக் காத்திட வேண்டும்
மொடாக்கிழவிக்கு நுனிகூட பார்வைக்கு கிட்டிடக்கூடாது
வீட்டிலுள்ள எல்லா பாக்குகளுக்கும் எத்தனை நாட்களுக்கு முன்னால் போகலாமென்ற யூகிப்பு
ஒரு சிறுபாக்கைத் தவிர
இதுவரை வளர்த்துக் கொண்டிருந்த செடியில் அவ்வெற்றிலையை செருகினேன்
காணும்போதெல்லாம்
மூன்றுமுறை வெற்றிலையென
கூறிக் கொண்டேன்.

2.

ஊரடங்கால் ஊரடைந்திருக்கும் இவ்விரவில்
மின்கம்பியில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் நிலவைக் கண்டவாறு அத்தெருவிலிருக்கிறாய்
இத்தெருவிலிருக்கிறேன்
பொளர்ணமிக்கு இரண்டொருநாள் முந்தைய நிலவைச்
சோறுண்ண அடம்பிடிக்கும் பையனுக்கு காண்பித்து கிண்ணத்தில் குறியாகிறாய்
அது லுடோ காய்களைக் கண்டபடி உருட்டிக் கொண்டிருக்கிறது
உனது முகம் காட்டிய நிலவிரவுகளைப் பார்க்கத் துவங்கிய அந்நிமிடம்
மீண்டும் சிணுங்குகிறது குழந்தை
வெற்று மின்கம்பிகளே ஊசலாடும் இத்தினங்களில்
எதிரெதிர்த் தெருவிலிருக்கிறோம்
மின்சாரம் வேறுகம்பிகளில்
பாய்ந்து கொண்டிருக்கிறது…

3.

மூச்சடங்க அடங்க இவ்வறை முழுதும் விரவியிருக்கிறது
உனது வருகைக் கோப்புகள்
கொசுவர்த்திப் புகையால் விரட்டுகிறேன் உறக்கத்தை
உனதூர் வரைபடங்களைச் சுவரெங்கும் பரப்பி
நிமிடமொருமுறை உனதூருக்கு பயணப்பட்டு திரும்புகிறேன்..
அல்லாடுமிந்த நினைவை
ஒரு டிராகன் வரைந்த போர்வைக்கு தின்னக்கொடுக்கிறேன்
அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கேபிள்சுருளில் ஓர் அன்றைய பாடலைத் திரையிட்டுச் சென்றது
கடந்த முறை ஒரு மழைநாளோடு இங்கிருந்தாய்
இம்மழைநாளில் வெகுதொலைவுக்கும் அப்பாலிருக்கிறாய்….
இவ்வூரை விட்டு
இவ்வறையை விட்டு
ஆயினுமென்ன
அப்போதைய விடைபெறலில்
அளிக்கவியலாத ஒரு முத்தத்தை எனக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன்
ஒருமுறை…

4.

பெரியாத்தாவுக்கு இரண்டு மகள்களுடன் ஒரு மகன்
பெரியப்பிச்சிக்குப் பிறகு
பரம்பரைத் தொழிலும் அடுப்பெரிக்காத சுள்ளிகளாயின
எல்லா ஞாயிறுகளிலும் பெரியமகள் கரிக்கஞ்சி, சில விசாரிப்புகள் இவைகளோடு ஏழாவது படிக்கும் மகியும் தம்பியும் பிறந்த வீட்டிற்கான பயணக்கற்கள்…
பிள்ளைகள் விளையாட்டைப் பிடித்துக் கொள்ள…
அம்மாவின் தனிமையின் பசிக்கு சோறிடுவாள்
முடிக்குமான தருவாயில் தனக்கு சீர்வரிசை குறைவாகவே செய்ததால் வீடுவாசல் பங்கில் சேர்த்து வழங்கவேண்டும் என்ற பாத்திரத்திலில்லாத பதார்த்தத்தையும் பரிமாறிடுவாள்…
பெரியக்காவின் வருகையறிந்த
அடுத்த வெள்ளிகளில் அம்மாவினுடன் இருப்பார் சின்ன மகள்.
நல விசாரிப்புகளைத் தொடர்ந்து குடியிருக்கும் வீட்டின் மீதிருந்த பற்றையும் உணர்த்திடுவாள்…
இதற்கிடையில் மிக நெருக்கத்திலேயே மகனின் வீடும்…
ஞாயிறுகள், வெள்ளிகள், மிக நெருக்கம் என பல ஆண்டுகளை நிறைத்திருந்தன..
தனிமை, நோய்ப்படுக்கை, தேறல், மகிழல் இவையும்….
இத்தனைக்கும்
பெரியாத்தாவுக்கு
இருப்பதென்னவோ
ஒரு பசுமை வீடும்
காச்சென்ட்டு வாசலுமே…

5.

மழைத் துளிகள் கூட்டாகி
திரண்டு கீழிறங்குகிறது
அவைகள் துளித்த போதிருந்த
தெருக்குழாய் வசைக்கதைகள்
கோணல்மானலாக மாறிக்
கூட்டாகத் துவங்கியது
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர்
அடுத்த தெருக்காரனின் பெயரென
திரட்சியில் மாட்டிக் கொண்டது
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக்
கொண்டிருந்த வெள்ளைக்கோழி
அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது
அம்மழைத் திரட்டு தரையில்
விழுந்து சிதறிய சமயம்
சிறு விசும்பல்கள் மேலெழ
அதை மறுப்பதாய்
சில தென்னம்பூக்கள்
பரவிக் கிடந்தன.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button