இசை நொறுங்கிய கதை
இசை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது
ராகதாளமென்னும் அதன்
கரங்களால் அவனைப் பற்றியபடி
தாளம் தப்ப
ராகம் தப்ப
சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது
உடைந்தது வயலின்
உடைந்தது வீணை
உடைந்தது யாழ்
உடைந்தது புல்லாங்குழல்
உடைந்தது மிருதங்கம்
உடைந்தது பியானோ
உடைந்தது சாரங்கி
உடைந்தது பறை
உடைந்தது ஜண்டை
உடைந்தது குரல்வளை
எனப் பார்த்தவர் ஒவ்வொன்றைச் சொன்னார்கள்
உடைந்தது எதுவானால் என்ன ?
நொறுங்கும் ஓசை இனிமையாக இருந்தது
அவன் பாடலை விட.
***
விடைபெறுதல்
இமையடைத்த மடிக்கணினி
மௌனித்திருக்கும் மேசைமணி
வாசம் ததும்பும்
காலிக் கோப்பை
பிசுபிசுக்கும் சிலந்திவலை
ஜன்னல்களின் மழைக்கீறல்கள்
பழுத்து உதிர்ந்த நாட்கள்
கள்ளப்புன்னகைகள்
இருளை தூசிதட்டி ஒளிக்கற்றைகள்
அட்டைப்பெட்டியிலிட்டு விடைபெற
மறந்துவிட்டதாய் கையளித்தார்கள் கடமையை.
***
‘நான்’ கள்
‘நான்’ களில் இருந்து நானே எனக்கு விலக்கு அளித்துக்கொண்டேன்.
இந்த நானின்றி என்னை எப்படி நானே அடையாளப்படுத்திக்கொள்வது.
‘நான்’ களை உரிக்கையில் என்னை சுற்றியபடி எத்தனை ‘நான்’ கள்.
‘நான்’ களை களைந்த நிர்வாணத்திலும் நானே
இருந்தேன்.
மீனின் உதட்டினின்று எழும் குமிழியென
என்னிடமிருந்து நித்தமும் வெளியேறும் ‘நான்’ களை
உடைப்பது சுவாரஸ்யமென இருந்த நீங்கள்,
நான் பற்றி அறிந்து
நானாக.
நீங்கள் நான் என
விளிப்பதும் நானே.
***
நின்றாலும் வீழ்ந்தாலும் அதில் நான் இருந்தால் பெருமிதம்!
நான் இருந்தால் தான் பெருமிதம்!!
கவிதைகளிலும் உன்னிலுமுள்ள நானென்ற உன்னை மகிழ்கிறேன்! நன்றி!!