கடைசி வாழ்வு
அவர் இறந்துவிட்டாரென்ற செய்தியை அந்தக் குழந்தைதான்
முதலில் சொன்னது
அவரது இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால்
அவர் இறக்கவில்லையென்றுதானே அர்த்தம்
என இரண்டு நாட்களாக எல்லாரும் அவரவர் வேலையில்
மும்மரம் காட்டியவாறிருந்தனர்
அவர் இறந்து கிடக்கிறார் பாருங்கள் என்று எல்லாரையும்
அழைத்துக் காட்டியது குழந்தை
ச்சூ சும்மாயிரு பாப்பா என அவளை அதட்டி சத்தம் போட்டனர்
நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை
நீங்கள் கவனிக்கவில்லையென நினைக்கிறேன்
அவர் இறந்துவிட்டார் வந்து பாருங்கள்
அதில் ஒருவரது சட்டையைப் பிடித்து இழுத்து வந்து காட்டியது
அவர் இறக்கவில்லையென நினைத்து
மிகவும் கஷ்டமான ஒரு வாழ்வை
மிகவும் கஷ்டப்பட்டு ஒன்று போல எல்லோரும் வாழ்ந்து வந்தனர்
குழந்தை விடவில்லை
இது சாதாரண ஒரு வாழ்வுதான் எனப் புரிய வைத்து
விளையாடச் சென்றுவிட்டது
இறந்தவருக்கு எல்லாரும் அழுதுகொண்டே காரியம் செய்தனர்
எல்லாருக்கும் இறந்தவர் அளித்த கடைசி மகிழ்ச்சி போலவும்
கடைசி துயரம் போலவும் இருந்தது அது.
***
பழைய உலகம்
எல்லாம் பழையதாகிவிட்டது
என்னுடைய புளித்த ஏப்பம் என் கவர் ட்ரைவ் ஷாட்
காலருக்கும் கழுத்துக்கும் இடையில் மினுங்கின செயின்
செஸ் விளையாட்டில் ஜெயித்த மண்டக்கனம்
தலையைத் தூக்கத் தெரிகிற வானம்
சிம்ரன் மச்சம் ஞாயிற்றுக்கிழமைகள் பிறந்தநாள் வாழ்த்துகள்
அதிகாலை உறுதி கருவேல முள் ஓணான் தோழமைகள் வீடு
கவிதைகள் சிரிப்புகள் பால்ய ஞாபகங்கள்
எல்லாம் படு பழையதாகிவிட்டது
ஏற்கனவே இந்த உலகம் பழையது
அது இன்னும் பழையதாகிக் கொண்டு வருவது என்னவோ போலிருந்தது
பழைய சட்டை பழைய பேண்ட் பழைய ஹேர்ஸ்டைல்
அதே பழைய வீட்டின் அதே பழைய படிவளைவுகளில்
அதே மாதிரி இறங்கிவர
எதுவோவொன்று இன்றைக்கு புதிதாகத் தெரிகிறது
எனப் போகிற போக்கில் சொன்னார் அம்மா
இதுவுமே பழையதாகிவிட்டது
பழையதாகிவிட்டதென இப்படி நினைத்துக் கொள்கின்றவொன்றுமே
பழையதானதுதான்
ஒரு பழைய நாளில் இன்னும் பழையது போலக் கிளம்பி வெளியேறினேன்.
***
படு ரகசியம்
உங்கள் பயணத்திடையே ஒரு மலை தென்பட்டால்
மலையின் பயணத்தில் நீங்கள் தென்பட்டிருக்கிறீர்கள்
அப்படித்தான் சொல்கிறது மலை
மலையின் பயணம் படு ரகசியமானது
உங்கள் பக்கத்தில் நின்றுகொண்டு உங்களை மலை ஏற இறங்கப்
பார்க்கிற அளவிற்கு அது ரகசியம்
ஒருவேளை உங்கள் பயணத்தில் ஒரு மலை வராமல் போகலாம்
அதற்குள் உங்களுடைய பயணம் முடிந்துவிட்டதென பேசுகிறார்கள்
திரும்பத் திரும்ப மலை இதைத்தான் சொல்கிறது
அது உண்மை கிடையாது
உங்களை மேற்கொண்டு கிளம்பிய பயணத்தை
உங்களைப் பார்க்காமலேயே முடித்துக் கொண்டது மலை
அப்படித்தான் சொல்லி அது வருத்தப்படுகிறது
இப்படி நிறைய பேர்களை பார்க்காமலே
தன் பயணத்தை முடித்துக் கொள்கிற குற்ற உணர்ச்சியில்
எப்படியாவது உலகின் கடைசி மனிதர் வரைக்கும்
தன்னைக் காட்டிவிடவேண்டுமென்ற மனவெழுச்சியோடு
தன்னைத் தானே தூக்கிக் கொண்டு
படு ரகசியமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது மலை
அதுதான் இந்த உலகம் இப்படி நீள்கிறது.
***
சாகச மேடை
ஒரு மரத்தை புல்டோசர் கொண்டு சாய்க்க அது விழும்
பெரிய பெரிய கொப்புகளாக அறுத்தும் கீழே கிடத்தலாம்
இயற்கையின் அதட்டலுக்கும் உடனே அது செவி மடுக்கும்
இப்போது ஒரு மரம் தூரோடு சாய்ந்து கிடக்கிறது
அது எப்படி விழுந்ததென்று நமக்குத் தெரிய வேண்டாம்
அதற்கென தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்
மரம் ஏறுகிற ஆசையில் கிடந்து மருகுகிறவர்களெல்லாம்
பிடித்து உடனே அதில் ஏற ஆரம்பிக்கலாம்
மரம் ஏறுகையில் இருக்கும் அந்த நடுக்கம் கைகளில் வர வேண்டும்
கீழே பார்க்காமல் போகவேண்டுமெனவும் அவ்வப்பொழுது
சொல்லிக்கொள்ளலாம் அது உங்கள் பிரியம்
எப்படியாவது சிரமப்பட்டு ஏறி உச்சிக்குச் சென்று விடுங்கள்
அங்கிருந்து ஒரு காயைப் பிடுங்கிப் போட்டால் போதும்
எல்லாம் முடிந்தது
அவ்வளவுதான் எல்லாம் முடிந்ததென
நீங்கள்பாட்டுக்கு ஒரு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு
சாதாரணமாக இறங்கி வந்துவிடப் போகிறீர்
இப்பொழுது அந்த மரத்தை ஒரு புரட்டு புரட்டிவிடுகிறோம்
அடியில் கூடி எப்படி இறங்கலாமென யோசியுங்கள்
ஏனெனில் நம் பார்வையாளர்கள் யாரும்
அந்தரத்திலிருக்கும் ஒரு மரத்தில் இதுவரை தொங்கியிருக்கமாட்டார்கள்.
***
மித்
திறந்துவிட்டால் தட்டுவது எளிது என்பதால்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தட்டுகிறான்
ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார்
கதவு இருந்த இடத்தில் அவர் முகம் இருந்ததால்
முகத்தில் இப்பொழுது தட்டுகிறான்
முகத்தை எடுங்கள் நான் தட்ட வேண்டும் என்றதும்
அவர் முகத்தை எடுத்துக் கொண்டார்
கதவையே அங்கிருந்து எடுத்துவிடுங்கள்
கதவு இருந்த இடத்தில் தான்
நாம் முதலில் தட்டப் பழகியிருக்கிறோம்
அப்படியே தட்டிக் கொண்டிருக்கும் போதே வந்து
யாரோ கதவைப் பொருத்திவிட்டார்கள்
தட்டுவது என்று கூட சொல்லமுடியாது
கைகளை ஆட்ட பழகிக் கொண்டிருந்தோம்
வாள் வீச்சு முறையில் அது ஒரு பயிற்சி நுணுக்கம்
இப்பொழுது பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்
கதவு தொந்தரவு செய்கிறது
தயவுசெய்து பயிற்சி செய்ய விடுங்களேன்
கோபமாக கதவைச் சாத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்
இனி யாரும் கதவை இங்கிருந்து நகர்த்த மாட்டர்களென
புரிந்து கொண்டு பரவாயில்லையென
கதவிலேயே தன்னுடைய பயிற்சியைத் துவக்கினான்
வீட்டிற்குள்ளிருந்து ஆவேசமாகக் கிளம்பி
வந்து அவர் கதவைத் திறந்தால்
போர்க்களத்தில் எதிரெதிரே முகத்தோடு முகம் உரசுகிற அளவிற்கு
இரண்டு நாட்டு அரசர்கள்
அவர்கள் எப்படி இப்பொழுது இங்கு வந்தனர்?
*