என்றாலும் வாழ்தல் இனிது! – பிறைநுதல்

அவனுக்கு யார்மேல் கோபம் கொள்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் ஆத்திரத்தில் தனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டேயிருந்தான். தான் கோபம் கொண்டு திட்டிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் இதற்கு காரணமானவன்(ள்) ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாகவோ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாகவோ எண்ணிக்கொண்டிருந்திருப்பான்(ள்) என்கின்ற பொழுது அவனுக்கு மென்மேலும் ஆத்திரமாக வந்தது.
அன்றைக்கு அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியபொழுது வானம் தெளிவாகவே இருந்தது. பகிர் தானியங்கியில் ஏறி அமர்ந்து, ஐவர் சேரும்வரை காத்திருந்து, பின்பு வாகன நெரிசலில் மெதுவாக ஊர்ந்து இராயதுர்கம் வந்துசேர்ந்த பொழுது தென்மேற்கு மூலையில் கருமேகங்கள் ஆக்ரோஷமாக திரண்டு வந்து, பெருமழை பொழியப் போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அவன் அவசர அவசரமாக மெட்ரோ நிலையத்தில் நுழைந்தான். நடைமேடை வந்தபொழுது மழை மெதுவாக ஆரம்பித்திருந்தது. வண்டி வந்தவுடன் வழக்கமாக நிற்கும் திறக்கப்படாத கதவின் மூலையில் ஒதுங்கி நின்று வெளியே பார்த்தபொழுது, மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. சிறிதுநேரத்திலேயே வெளிக்காட்சிகளைத் தந்து கொண்டிருந்த கண்ணாடியின்மேல் புகைமூட்டம் போல் மழையின் குளிர்ச்சி படிய,மழையின் சீற்றத்தை மட்டுமே உணரமுடிந்தது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறியவர்களின் உடைகளில் மழையின் ஆக்ரோஷம் நன்றாகத் தெரிந்தது. செகந்திராபாத் கடந்த பிறகும் மழை குறைந்தபாடில்லை. உப்பலில் ‘இறங்கியபின் பகிர் தானியங்கி கிடைக்குமா?’ என்ற கவலை அப்பொழுதே மேலோங்க ஆரம்பித்தது. தனது மதிய உணவுப் பையையும் மடிக்கணினிப் பையையும் பார்த்தான். மடிக்கணிணிப் பையின் இடது ஓரப்பொந்தில் குடை சொருகப்பட்டிருந்தது. கடந்த நான்கு வருடங்களாக இதே வழக்கம்தான். தெலுங்கானாவில் தென்கிழக்குப் பருவமழை ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்குமாதலால், ஜூன் ஒன்றாம் தேதி பைகளில் இடம்பிடிக்கும் குடையானது, தீபாவளி முடியும்வரை கீழே இறங்காது. வடகிழக்குப் பருவமழை தெலுங்கானாவில் அந்தளவிற்கு தீவிரமடைவதில்லை. தீபாவளி சமயத்தில் மட்டும் கொஞ்சம்போல் பூந்தூறலை விசிறிச் செல்லும்.
உப்பலில் அவன் இறங்கிய பொழுது மெட்ரோநிலையமெங்கும் மழையின் ஆனந்த நடனம் களிப்புடன் நடந்து கொண்டிருந்தது. அவன் படிகளில் மக்கள் நெரிசலின் ஊடாக இறங்கி ஒருங்கிணைவு தளம் வந்தபொழுது தளம் முழுக்கவும் மக்களும், மழை நீரும், நெல் வயலென காட்சி தந்து கொண்டிருந்தார்கள். அவன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவனாதலால் கூட்ட நெரிசலினூடாக நகர்ந்து கழிவறை நோக்கிச் சென்றான். அடுத்த வினாடியே உலகம் அழிந்து விடுவதைப் போல் வண்டியிலிருந்து இறங்கி அவரவர் இல்லம் நோக்கி ஓடும் அவசர மனிதர்களை ஒரே இடத்தில் பாரபட்சமின்றி கட்டிப்போட்டு வைத்திருந்த மழையின் திறனை அப்பொழுது அவன் வியக்கவும் தவறவில்லை.
கழிவறையிலிருந்து வந்து, வழக்கமாக வெளியேறும் இடத்தில், முதுகில் மாட்டியிருந்த மடிக்கணிணிப் பையிலிருந்த குடை களவாடப்பட்டிருப்பதை உணர்ந்தான். யாரோ எடுத்திருக்கிறார்கள். யார் என்பதுதான் தெரியவில்லை. இந்தக்கூட்டத்தில் யாரோ ஒருவனுக்கு மற்றவரின் உழைப்பைத் தனதாக்கிக் கொண்டு, அவர்களைத் தெருவில் விடும் மேட்டுக்குடி மற்றும் வியாபார முதலைகளின் குணம் வாய்த்திருக்கிறது போலும்! அவன் எடுத்தவர்களைத் திட்டினாலும், வண்டியைவிட்டு இறங்கும்பொழுதே குடையைக் கையில் எடுக்காமல் போனதற்காக தன்னையும் நொந்து கொண்டான். உண்மையில் மெட்ரோவில் வருபவர்கள் ஓரளவிற்குப் படித்தவர்களே. அதிலும் அந்த நேரத்தில் வருபவர்களில் பெரும்பான்மையினர் மென்பொருள் நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றுபவர்கள். ஆனால், அப்படிப்பட்ட கூட்டத்திலும் வெறும் முன்னூறு ரூபாய் மதிப்புள்ள குடையைத் திருடுபவர்கள் இருக்கிறார்கள். திருடுதல் கூடாது என்பது அரிச்சுவடியிலேயே சொல்லித் தரப்பட்டாலும் நவீன கல்வி மற்றும் வியாபார உலகம் திருடுவதையே திறமையாக மாற்றி விட்டது.
கொஞ்ச நேரம் திட்டுவதை நிறுத்திவிட்டு அமைதியாக நின்றான். ஏனென்றால் திட்டுவதால் இனியொன்றும் ஆகப்போவதில்லை என்பது அவனுக்குப் புரிந்து விட்டிருந்தது. அருகில் நின்றிருந்த மக்களையும் மழையையும் வேடிக்கை பார்த்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மனம் இலேசாவதை உணர்ந்தான். மெதுவாக மழையில் இறங்கி, வாரங்கல் சாலைக்குச் செல்லும் நடைமேடையின் கீழாக நின்று கொண்டிருந்த மக்களினூடாக நடந்து, பகிர் தானியியங்கிகள் நிற்கும் இடத்திற்கு எதிர் சாலைக்கு வந்தபொழுது, அந்த இடமெங்கும் ஒன்றரை அடிக்கும் மேலாக மழை நீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டான். மழைநீர் எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து அழுக்குகளையும் தேவையற்ற கசடுகளையும் துடைத்துச் சென்று கொண்டிருந்தது. ‘அழுக்கான தனது குழந்தையை குளிப்பாட்டும் தாயைப்போல, பூமிக்குழந்தையை வானத்தாய் குளிப்பாட்டுகிறாளோ?!’ என்றெண்ணியவனுக்கு மனமெங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. உடல் மொத்தமும் மழையில் நனைந்திருக்க, குடை காணாமல் போன கோபம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. சாலையின் நடுத்தடுப்பில் சென்று நின்றவனின் உடலோடு படிந்திருந்த அன்றைய வேலையின் தூசி, அழுக்குகள் கரைந்து காணாமல் போயின.
வாரங்கல் செல்லும் சாலையில் வாகனங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்க, அவனின் முன்பாக இருவர் (காதலர்களாகவும் இருக்கலாம்) கைகோர்த்துக் கொண்டு ஓரமாக நடந்து சென்றது, பழைய திரைப்படங்களில் கண்ட தேவலோக காட்சியைப்போல அவனுக்குத் தோன்ற, அவன் வாய்விட்டுச் சிரித்தான். மழைச் சரங்களில் பட்டுத்தெறிக்கும் ஒளிச்சிதறல்களால் அவ்வாறு தோன்றுவதை உணர்ந்தான். அந்தப் பையன் கால்சராயை முட்டிக்கால்வரை சுருட்டிவிட்டு ஒற்றைக்கையில் அவளது வலக்கையை நெஞ்சோடு சேர்த்தணைத்திருந்தான். அந்தப் பெண் ஒற்றைக்கையால் சேலையைத் சற்றே தூக்கிப் பிடித்தபடி மற்றொரு கையை அவனின் நெஞ்சுக்குத் தந்திருந்தாள். மழையின் சீற்றமோ அல்லது சுற்றியிருக்கும் வண்டி வாகனங்களோ அவர்களை எந்தத் தொந்திரவும் செய்யவில்லை. அபிக்ஷேகத்தில் நனையும் செப்புச் சிலைகளென நிதானமாக நடந்து போய்க்கொண்டுருந்தார்கள்.
அவனருகே வந்த பகிர்தானியங்கியிலிருந்து
“கட் கேஷர், கட் கேஷர்” என்னும் கூப்பாடு கேட்க, உடனடியாக வீட்டிற்குச் சென்றே ஆகவேண்டியநிலை குறித்து வருந்தியவனுக்கு, அன்றாட வாழ்வு தன்மீது சுமத்தியிருக்கும் பாரங்கள் நினைவுக்கு வர உடனடியாக ஓடிச் சென்று, “ஜோடிமெட்லா?” என்று கேட்டு ஏறிக்கொண்டான். அவனருகில் அமர்ந்திருந்த அனைவரையும் மழை ஈரத்தால் ஒருங்கிணைத்திருக்க, அன்றைக்கு அவரவர் செல்பேசியில் நிகழ்ந்த உரையாடல்களிலும் மழையே நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.
ஜோடி மெட்லாவில் இறங்கி மழையுடன் பேசிக்கொண்டே மஜர்குடா வரை நடந்து சென்று இல்லம் நுழைகையில் சொல்லிவைத்தாற் போல் மழை தனது சரம் சரமான உரையாடலை நிறுத்திக்கொண்டதை ஆச்சரியமாகப் பார்த்தவன், அன்றைய மாலைப்பொழுதை இனிமையாக்கிய குடை திருடியவன்(ள்)-ஐ மனதார வாழ்த்தியவன், அதன்பிறகு குடையை வெளியில் சொருகி வைக்கும் வழக்கத்தை மாற்றிக்கொண்டான்.



