இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

சமந்தா – பாலு

சிறுகதை | வாசகசாலை

“நீயெல்லாம் உங்கப்பனோட படுக்கத்தாண்டீ லாயக்கு. என்னை முதல் தடவை பார்த்தப்போவே வீட்டுக்குக் கூப்பிட்டல்ல. அப்பவே உன் தேவுடியாத்தனத்தை நான் சுதாரிச்சிருக்கணும்” என சமந்தாவைக் கொச்சையாக வசைபாடியிருக்கிறான் ஷரத்.

இதற்கெல்லாம் குறுகும் பெண் அல்ல அவள். தன் மீது கல்லடி பட்டால் பதிலுக்கு பெரும்பாறையைத் தூக்கி எறியும் தைரியசாலி. வழக்கறிஞராக இருப்பதால் உண்டான குணமில்லை இது. தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏதாவது ஒன்றென்றால் உண்டில்லையெனச் செய்துவிடும் தன் தகப்பனிடமிருந்து ஒட்டிக்கொண்ட பழக்கம். அப்படிப்பட்ட அவளால் ஒருபோதும் ஷரத்தின் வசைகளை எதிர்த்துப் பேச முடிந்ததே இல்லை. ஓங்கி வரும் அலையை நடுக்கடலிலிருக்கும் கருங்கல் வாங்கிக்கொள்வது போல ஷரத்தின் அழிச்சாட்டியங்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். காதலின் பைசாசம் பிடித்துக்கொண்டால் பைத்தியக்காரத்தனத்துக்கு எல்லையில்லை.

ஷரத்துடன் முதன்முதலில் பேசத் தொடங்கியபோது அவளுக்கு வயது பதினேழு இருக்கலாம்; அவனுக்கு பத்தொன்பது. ஃபேஸ்புக் பயன்பாட்டின் ஆரம்பநிலை அது. முன் பின் அறியாத ஆணை நட்புப் பட்டியலில் வைத்துக்கொள்வதே பாவச்செயலெனப் பெண்கள் அஞ்சிய காலம். முதன்முதலில் ஷரத்தின் முகப்பைப் பரிந்துரையில் கண்டபோது அவனின் வெள்ளைத் தோல் அழகை ரசித்துவிட்டுக் கடந்து சென்றாள். ஒவ்வொரு முறை ஃபேஸ்புக் செல்லும்போதும் ஷரத்தின் பரிந்துரை அவளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது. ஆண் காதல் விழி வழியில்; பெண் காதல் செவி வழியில். சமந்தாவிடம் பெண்மையின் பேரழகும் நளினமும் இருந்தாலும் அவளிடம் சில ஆணின் இயல்புகள் இருந்தன. விழி வழியே காதலில் விழுவதும் அதில் ஒன்று. ஷரத்தின் அழகு அவளுக்கு அடையும் வேட்கையைத் தூண்டியது.

சமூக வலைதளத்தின் குறுஞ்செய்திப் பெட்டியிலிருந்து தன் வாழ்க்கைத் துணையையே கண்டடைய முடியுமென்பதை அவளால் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. பேசப் பேச அவளுக்கு ஷரத்தை நேரில் சந்திக்க ஆசையாய் இருந்தது. புதிதாகக் கட்டப்பட்டிருந்த தங்களது வீட்டின் கிரகப் பிரவேசத்துக்கு ஷரத்தை அழைத்திருந்தாள்.

கிரகப் பிரவேச நிகழ்வுகள் முடிந்ததும் வீட்டில் ஷரத்தைத் தேடிச் சென்றாள். அவன் ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்டான். வெயில் பட்டு எல்லா எறும்புகளும் சட்டென அகன்றுவிட்டது போல அவளே எதிர்பாராத விதமாய் வீட்டிலிருந்து ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி இருவரும் தனித்துவிடப்பட்டனர். ஷரத்தை முத்தமிட வேண்டுமென நினைத்த கணத்தில் அவன் அதை நிகழ்த்தியே இருந்தானாம். அந்த தைரியம் சமந்தாவை வசீகரித்திருந்தது.

சட்டப்படிப்பை முடித்ததுமே சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய வழக்கறிஞர் ஒருவரிடம் அப்பாவின் தயவால் உதவியாளராகச் சேர்ந்தாள் சமந்தா. வெகு சீக்கிரத்தில் அவளே வழக்குகளைக் கையாளவும் கற்றுக்கொண்டாள். ‘என்னைப் போல் நீயும் வழக்கறிஞராகிவிடாதே மகளே’ எனத் தந்தை எவ்வளவோ கண்டித்தும் அவள் கேட்கவில்லை. இந்தத் தொழிலிலிருக்கும் அடாவடித்தனம் அவளை வெகுவாக ஈர்த்தது.

சொந்தக் கால்களில் நிற்க ஆரம்பித்ததுமே பெற்றோரிடம் ஷரத்தைக் காதலிக்கும் விஷயத்தைப் போட்டுடைத்தாள். சமந்தா ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே செல்ல மகள் என்பதால் அவளின் விருப்பமும் முடிவுமே இறுதியானது. சமந்தாவின் தந்தை ஷரத்தை நேரில் சந்திக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், கடல்சார் உயிரியல் படிப்பை முடித்திருந்த ஷரத், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகே அவரைச் சந்திப்பதாகத் தீர்மானமாக இருந்தான். அது அவனுடைய தாழ்வுணர்ச்சிதானே அன்றி சமந்தாவுக்கும் அவளின் பெற்றோருக்கும் அதுவொரு பொருட்டே அல்ல. கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்தும்கூட ஷரத் மீது பிடித்திருந்த பித்து அவளுக்குக் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால், அவனுடைய தாழ்வுணர்ச்சி ஒருவகையில் நியாயமானதே. ஐந்தாண்டுகளுக்கும் மேல் வேலையின்றி இருக்கும்போது ஆண் தன்னை தாழ்வாக நினைப்பதைத் தவிர்க்கவியலாது!

ஊர் சுற்றுவதற்குக் காதலியைச் செலவிட வைப்பதை எண்ணி ஷரத் குற்றவுணர்வால் செத்துப் போனான். ஆனால், அவள் இதுபோன்ற அற்ப அகங்காரங்களுக்கு இடங்கொடுப்பதே இல்லை. என்றுமே மாறாத காதலுடன் அவனைக் கட்டியணைத்திருந்தாள். தினமும் தன் கையால் சமைத்த உணவுகளைக் கட்டிக் கொடுத்தாள். அவனுக்குப் பணி தேடுவதில் தன்னால் முடிந்த உதவிகளையும் தொடர்புகளையும் தேடித் தந்தாள். அப்படி அவள் தந்த ஒரு தொடர்பின் வாயிலாக ஷரத்துக்கு கடல்சார் துறையிலேயே வேலை கிடைத்தது. கப்பல் நிர்வாகியின் உதவியாளராக ஆரம்ப ஊதியமே மாதம் ஒரு லட்சம் என அதிர்ஷ்டம் சமந்தா வழியாக அவன் கதவைத் தட்டியது.

எல்லாம் கைகூடி வரும்போது கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஷரத்தின் பணிநிமித்தமான வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவனுக்கு அந்த வேலையின் உத்தரவாதம் இருந்தது.

கொரோனாவால் நீதிமன்றங்கள் இயங்காததால் சமந்தாவுமே வேலையின்றி இருந்தாள். என்னதான் அவளின் தந்தை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து சேகரித்து வைத்திருந்தாலும் எதையுமே செய்யாமல் எப்படி நாட்களைக் கடத்துவது? நீதிமன்றத்தில் பம்பரமாய்ச் சுற்றிப் பழகிவிட்ட அவளால் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்க முடியவில்லை.

ஆதலால் தமிழ்நாட்டின் முக்கியமான தொலைக்காட்சி ஊடகமொன்றில் அட்மினாக வேலைக்குச் சேர்ந்தாள். அங்குதான் நான் அவளை முதன்முதலில் சந்தித்தேன். மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடையே ஓரத்தில் அழகான சிறு மச்சம், இயற்கையான இளஞ்சிவப்பு உதடு, சிரிக்கும்போது முகவாய்க் கட்டையில் தெரியும் குழி, வெண்மை நிறக் கண்கள், கச்சிதமான எடுப்பான மார்பகங்கள், பெண்ணுக்குப் போதுமான உயரம், இழுத்துப் பின்னிப் போட்ட கொண்டை என விமானப் பணிப்பெண்ணுக்கு நிகரான அழகு அவளுடையது. நடிகைக்கு நிகரென்றாலும் மிகையில்லை.

ஊடகத்துக்கு நேர்காணல் அளிக்க வரும் இயக்குநர்கள் சிலர் சமந்தாவை அணுகி, அவளுக்கு நடிக்க விருப்பமிருக்கிறதா என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள். ஓர் அழகினை இவ்வளவு பேர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்போது அதே ஊடகத்தில் ஆரம்ப நிலை செய்தியாளராகப் பணியாற்றும் நானெல்லாம் யார்? எனக்கும் அவளை உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற மோகம் இல்லாமலில்லை. அதேநேரம் அவள் மீது விருப்பம் கொள்பவர்களில் நான் பத்தோடு பதினொன்றுகூட இல்லை, நூறோடு நூற்று ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். அவள் கண்களுக்கு நானெல்லாம் தெரியக்கூட மாட்டேன் என்பது புரிந்தபோதும் அவளை அடைவதற்கான வேட்கையைக் கைவிட முடியவில்லை. சமந்தாவுக்கு சினிமாவில் நடிக்க இஷ்டம் இருந்தாலும் ஷரத் அதை விரும்பாததால் இயக்குநர்கள் தந்த வாய்ப்புகளை அவள் மறுத்தபோது ஒன்று புரிந்தது. காதலனுக்கு இவ்வளவு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் பெண்ணை அடைய முற்பட்டு நான் எதை சாதிக்கப் போகிறேன்? அன்றிலிருந்து சமந்தாவின் நினைப்பைக் கைவிட்டேன்.

வழக்கறிஞராக லட்சக்கணக்கில் சம்பாதித்த அவளுக்கு அங்கு மாதம் நாற்பதாயிரம் வீதத்தில் சம்பளம் கிடைத்தது. இருந்தாலும் பணம் அவளுக்கொரு பொருட்டே அல்ல. சோர்வுறாமல் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதே அவளின் நோக்கம். நிறுவனத்தின் தலைமை அதிகாரியே இன்னோவா காரில் வரும்போது அட்மினாக பணியாற்றும் சமந்தா பென்ஸ் காரில் வருவதைக் கண்டு எல்லோரும் வாயடைத்துப் போயினர். பிறகு அவளின் பின்னணி அறிந்ததும் அவள் மீதான மரியாதை எல்லோரது மத்தியிலும் உயர்ந்தது. பணமும் பேரழகும் ஈட்டித் தரும் மரியாதை அது!

நாடு இயல்புநிலைக்குத் திரும்பி ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதுமே ஷரத்துக்கு விசா உறுதியாகிவிட்டிருந்தது. ஒருபுறம் ஷரத்துக்கு வேலை கிடைத்துவிட்ட பூரண மகிழ்ச்சி இருந்தாலும் அவனில்லாத துயரை எண்ணி வேதனையடைந்தாள் சமந்தா. கிளம்புவதற்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் இருவரும் நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருக்கிறார்கள். அவர்களின் தேகங்கள் முழுமையாக ஒன்றிணைந்தது அப்போதுதானென பின்னொரு முறை சமந்தா என்னிடம் கூறினாள். ஒவ்வொரு புணர்ச்சிக்குப் பிறகும் ஷரத்தின் இன்மையை முன்கூட்டியே கற்பனை செய்து கண்கலங்கிப் போயிருக்கிறாள். நீண்ட பிரிவுக்கு ஈடுகட்டும் விதமாய் இறுக்கி அணைத்துக்கொள்வதைத் தவிர வேறென்ன செய்வதென ஷரத்துக்குத் தெரியவில்லை.

அவனில்லாத முதல் சில நாட்களைக் கடத்துவதற்கே ரொம்ப சிரமப்பட்டாள். பழக்க தோஷத்தில் அழைக்க முற்பட்ட பிறகு அவன் உண்மையிலேயே தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதை எண்ணி வேதனையுற்றாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஃபேஸ்புக்கின் காணொளி அழைப்பின் மூலம் பேசிக்கொண்டார்கள். ஒட்டுமொத்த உணர்ச்சியும் ஒருவனைச் சார்ந்தே கட்டமைந்துவிட்ட அவலத்தை நினைத்து, பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற எத்தனித்தாள்.

யாருமே எதிர்பாராத விதமாய் என் அலுவலகத்தில் ஒளிப்பதிவாளனாய் பணியாற்றும் பிரபாகரனுக்கும் சமந்தாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டானது. திண்ணையில் கிடந்தவனுக்குத் திடுக்கென வந்தது யோகம் என்கிற மாதிரி அலுவலகத்தில் ஒட்டுமொத்த பேரும் அவர்களின் நட்பை எண்ணி வியப்பிலாழ்ந்தனர். நானிருந்திருக்க வேண்டிய இடமது என்றெல்லாம் தோன்றியது. ஷரத் ஊரில் இல்லாததால் வெளியில் செல்லும்போது அவள் பிரபாவைத் துணைக்கு அழைத்துக்கொள்வாள்.

யாரிடமும் அதிகம் பேசாத தனியன் பிரபா. அதீதம் பேசும் சமந்தாவின் நேரெதிர் அவன். அப்படியானவர்கள் மீது சமந்தாவுக்கு நட்பீர்ப்பு உண்டாகுமென்பதைப் பிற்காலத்தில் அறிந்துகொண்டேன். பிரபாவுடன் அணுக்கமான நட்பை மட்டுமே அவள் பேணிய போதும், அவனுடைய புத்தி காதலை நோக்கிச் சென்றது. ஆனால், சமந்தாவுக்குப் பிரபா மீது உண்டான முதற்கட்ட அபிப்பிராயம் அனுதாபம். அவனுக்குத் தாய் தந்தை இல்லையென்கிற பரிவு. அனுதாபம் ஒருபோதும் காதலாய் ஊற்றெடுக்காது.

பிரபாவைப் பற்றிப் பிரத்யேகமாய் சொல்ல ஒன்றுமே இல்லை. சராசரிகளைப் போல மாத ஊதியத்தை முதல் இருபது நாட்களில் செலவிட்டுத் தீர்த்து நண்பர்களிடம் கடன் வாங்குபவன். அவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் சமந்தா பண உதவி செய்து வந்தாள். அதைத் திரும்பக் கேட்கும் பழக்கம் என்றுமே அவளிடம் இருந்ததில்லை. அதற்குமே ஒருவகையில் அனுதாபம் காரணமாய் இருந்தது.

சமந்தா மீண்டும் வழக்கறிஞர் வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்ததால் எங்கள் ஊடகத்திலிருந்து அவள் பணிநீங்கினாள். அவளுக்குப் பிரியாவிடை அளிக்கப்பட்ட நாளில் பிரபா ஒரு குழந்தை போல் அழுததைக் கண்டு மொத்த அலுவலகமுமே உறைந்துபோய்விட்டது. ‘இதற்கெல்லாமா அழுவார்கள்?’ எனத் தாய் போல் அவனை ஆறுதல் படுத்தினாள்.

அதன்பிறகு ஒன்றிரண்டு மாதங்களுக்கு சமந்தாவைப் பற்றிய நினைப்பு துளியும் இல்லாமல் இருந்தேன். ஒருநாள் என் வீட்டுத் தெருவின் மளிகைக் கடையில் வெல்லம் வாங்கச் சென்றபோது வழக்கறிஞர் கோட் சூட் உடையில் பளபளத்துக்கொண்டிருந்தாள் சமந்தா! என்னைப் பார்த்த கணத்தில் தவறவிட்ட பொருளைக் கண்டடைந்துவிட்டது போல் துள்ளிக் குதித்தாள். அவளாக முன் வந்து ஆர்வத்துடன் நலம் விசாரித்தாள். என்னால் பெண்களிடம் இதைப் புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை. நட்பு பாராட்டாத அறிந்தவனை நாட்கள் கழித்துக் காணும்போது அவனை எப்படி நெருங்கிய ஒருவனைப் போலவே பாவிக்க முடிகிறது அவர்களால்? அதேபோல் பழகிய ஒருவனையும் காலம் கழிந்து யாருமற்றவனாகவும் பாவிக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்கள். பிரபாவுடனான நட்பை சமந்தா முறித்துக்கொண்டது அப்படித்தான்!

”என்ன சாம் இங்கே? ஏதாவது கேஸ் விஷயமா வந்தியா?” என்றேன்.

“நாங்க இங்கே ஒரு வீடு வாங்கியிருக்கோம். அப்பாவும் அம்மாவும் பாட்டியோட சிட்டில இருக்காங்க. நானும் தங்கச்சியும் மட்டும் இங்கே வந்திருக்கோம்” என்றாள் படபடவென.

“இங்கேயா? எங்கே?” எனச் சுற்றி முற்றிப் பார்த்துக் கேட்டேன்.

“அடுத்த தெரு. உன் வீடு எது?”

என் வீட்டைக் காண்பித்தேன். இருவர் வீட்டு ஜன்னலிலிருந்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் தொலைவுதான். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு இணையான அவளது பிரம்மாண்டமான வீட்டில் வெறும் இரண்டே பேர்தான் வாழ்கிறார்கள் என்பதைக் கேட்கவே திகைப்பாக இருந்தது. வசதி எதையெல்லாம் பெற்றுத் தருகிறதென வியந்தேன். அவள் வீட்டை ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்குதான் என் வீடு. அதிலும் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, ஒரே அறையில் ஏழு பேர் படுத்துறங்குவோம்.

அவளுக்கு இந்த ஊரில் என்னைத் தவிர யாரையுமே தெரியாதென்பதால் என்னிடம் நிறைய உதவிகள் கேட்டு அழைத்தாள். ஒருமுறை அடிபட்ட நாய்க்குக் காயமாற்றும் மருந்து எங்குக் கிடைக்குமெனக் கேட்டுப் பதறி ஓடி வந்தாள். இன்னொரு நாள் வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு பூட்டை உடைப்பதற்காகச் சுத்தியைக் கொண்டு வந்து என் உதவியை நாடினாள். ஆணுக்கொரு இயல்புண்டு. ஒத்தாசை நாடி வரும் பெண்ணின் தேவையைத் தீர்க்கும் வரை மனமடங்காது. அதேபோல் பெண்ணுக்கொரு இயல்புண்டு. ஒத்தாசைகளைப் பூர்த்தி செய்பவன் மீது ஈர்ப்பு கொள்ளாமல் உறக்கம் வராது. அவளுடனிருக்கும்போது நான் முதன்மை ஆண்மகனாக உணர்ந்தேன்.

“லாயர் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு குணம் இருக்குடா. கோர்ட்டு கேஸுன்னு எந்நேரமும் ஒரு இறுக்கம் இருந்துட்டே இருக்கும் எங்களுக்கு. தெனந்தெனம் ஊரொலகத்துல நாலஞ்சு பஞ்சாயத்து பார்க்கிறதால கிட்டத்தட்ட ஆம்பளைங்களோட பிஹேவியர் எங்களுக்கும் ஒட்டிக்கும். கோர்ட்லலாம் நான் எந்நேரமும் முறைச்சிக்கிட்டே இருப்பேன். அங்கேலாம் நீ என் குரலை கேட்கணுமே. ஜெயலலிதா மாதிரி கணீர்னு இருக்கும். ஆனா, உங்கிட்ட பேசும்போது ஏனோ அப்படி வர மாட்டேங்குது” என ஒருமுறை உருகிக்கொண்டே சொன்னாள். நானும் அதை கவனித்திருக்கிறேன். என்னிடம் அவள் மிக மென்மையான பார்பி பொம்மையாக இருந்திருக்கிறாள்.

நாங்கள் அதிகம் உலாவினோம். அவள் காதல் வாழ்வில் நிகழும் எல்லாவற்றையும் என் செவிகளில் கொட்டித் தீர்த்தாள்.

ஷரத் தனது முதல் நீண்ட விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தான். விமான நிலையத்திலிருந்து நேராக சமந்தா வீட்டிற்குச் சென்றான். ஆயிரம் ஜென்மங்களின் தனிமையை உணர்ந்தவர்களாய் ஒருவரையொருவர் திக்கித்திணறிக் கட்டியணைத்து முத்திப் புணர்ந்திருக்கிறார்கள். விட்ட இடத்திலிருந்து தொடங்கிய ஆசுவாச நிறைவில் களைப்புற்றிருந்தாள் சமந்தா. பிறகு எழுந்து தன் அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்வதற்காகக் கழிவறை சென்றபோது ஷரத் மிகச்சாதாரணமாக தன் கைப்பேசியை எடுப்பதற்குப் பதிலாக சமந்தாவின் கைப்பேசியை எடுத்தான். இருவரின் ஐபோன் சாதனங்களுக்குமே ஒரே கடவுச்சொல் என்பதால் திறந்து பார்த்த பிறகே அது அவளுடையது என்பதை உணர்ந்தான். என்ன நினைத்தானோ, எல்லாச் செயலிகளையும் திறந்து பார்த்து வெளியேறியவன், UPI செயலியொன்றைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனான்.

“யாருடீ இந்த பிரபாகரன்? இவனுக்கு எதுக்கு அடிக்கடி ஐநூறு ஆயிரம்னு அனுப்பிட்டு இருக்கே?” எனக் கழிவறையிலிருந்து வெளியே வந்தவளை வழிமறித்து கடுமையாய்க் கேட்டான்.

“என் ஃப்ரெண்ட் அவன். சேனல்ல கேமராமேனா வொர்க் பண்றான்” என்றாள்.

“அதை ஏன் எங்கிட்ட முன்னவே சொல்லலை? ஃப்ரெண்டுக்குத்தான் இப்படிப் பணம் அனுப்புவாங்களா?”

“அவன் பாவம்டா. அவனுக்கு அப்பா அம்மா இல்ல. கடனா கேட்டதால கொடுத்தேன்” என்றாள் கருணையுணர்ச்சியுடன்.

“கடனுன்னா கொடுத்ததைத் திருப்பித் தரணும். இங்கே நீ மட்டும்தான் அனுப்பிட்டு இருக்கே” என்று போனை ஸ்க்ரோல் செய்து காட்டினான்.

“இந்த ஐநூறு ஆயிரம்லாம் ஒரு விஷயமா? அந்த சில்ற காசைத் திருப்பிக் கேட்டா எனக்கு அசிங்கம்”

“உண்மையைச் சொல்லுடீ. நான் இல்லாத நேரத்துல அவனை வெச்சிருந்தியா நீ? உன்னை ஓத்தானா அவன்?” எனக் கூச்சலிட்டான்.

“ஏன் ஷரத் இப்படியெல்லாம் பேசுறே?” எனப் பரிவாகக் கேட்டாள்.

“நீயெல்லாம் உங்கப்பனோட படுக்கத்தாண்டீ லாயக்கு. என்னை முதல் தடவை பார்த்தப்போவே வீட்டுக்குக் கூப்பிட்டல்ல. அப்பவே உன் தேவுடியாத்தனத்தை நான் சுதாரிச்சிருக்கணும்” எனக் கொச்சையாக வசைபாடினான்.

“தேவையில்லாம எங்க அப்பாவைப் பத்திப் பேசுற வேலை வெச்சுக்காதே ஷரத். உனக்கு அவ்ளோதான் மரியாதை” என மிரட்டும் தொனியில் பதிலளித்தாள்.

அடுத்த நாள் நான் சமந்தாவைச் சந்தித்தபோது அவள் மூக்கில் ரத்தக்காயத்தைக் கண்டதிர்ந்து விசாரித்தேன். குரலுயர்த்திப் பேசியதற்காக ஷரத் அவளை அடித்திருக்கிறான் என்பதைவிட, காதலனால் வன்முறைக்குள்ளாகப்பட்டதைக் கர்வத்துடனும் பெருமையுடனும் விளக்கிக்கொண்டிருந்த அவளின் மனோபாவம்தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஷரத் தன்னை எப்படியெல்லாம் அடித்தானெனச் சொல்லும்போது அவள் கண்களில் மெய்யாகவே மிளிர்வைக் கண்டேன்.

விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நாளும் சமந்தாவுடனே வசித்தான் ஷரத். ஒருமுறை புணர்ச்சிக்குப் பின் அவனுடைய நெஞ்சிலுள்ள மருவை வருடிக்கொண்டே ”ஷரத், இப்போலாம் எல்லாரும் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றாங்கல்ல. நானும் இன்ஸ்டால ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணிக்கவா?” என இறைஞ்சியபடி அனுமதி கேட்டிருக்கிறாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ரிலேஷன்ஷிப்ல இருந்துக்கிட்டே யாராவது டேட்டிங் ஆப் யூஸ் பண்ணுவாங்களா? இன்ஸ்டாவும் டேட்டிங் ஆப்தான்” என்றான் கண்ணுறங்கிக்கொண்டே.

“அப்போ நீ மட்டும் யூஸ் பண்றே!?” எனத் தயங்கிக்கொண்டே கேட்டுவிட்டாள்.

“சந்தேகப்படுறீயா? உனக்குத்தான் பாஸ்வேர்ட் தெரியும்ல? வேணும்னா என் அக்கௌன்ட்டை யூஸ் பண்ணிக்கோ” என்றான்.

”உன்னோடதை ஏற்கெனவே திறந்து பார்த்தேன். ஃபுல்லா எயிட்டீன் ப்ளஸ்ஸா இருக்கு. அதான் எனக்குன்னு ஒன்னு ஓபன் பண்ணிக்கவான்னு கேட்கிறேன்”

“அப்போ என்னை ஏற்கெனவே சந்தேகப்பட்டிருக்கல்ல?” எனத் திடுக்கிட்டு விழித்துக் கேட்டான். என்ன சொல்வதென்றே அறியாதவள், “அப்படியெல்லாம் இல்ல. ரீல்ஸ் பார்க்கத்தான் எடுத்தேன். எனக்கு இன்ஸ்டாவே வேண்டாம்” எனச் சொல்லித் தூங்கிவிட்டாள்.

அன்று மாலை ஷரத்தும் சமந்தாவும் அண்ணா நகரிலுள்ள ஓர் உயர்தர காஃபி ஷாப்புக்கு சென்றிருக்கின்றனர். ஞாயிறு மாலைக்கு உண்டான கேளிக்கைகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காகத் திருமங்கலம் மெட்ரோ அருகே நிறுத்தப்பட்டிருந்த தங்களது காரை நோக்கிச் சென்றனர். அப்போது சமந்தாவுக்கு பிரபா செல்போனில் அழைப்பு விடுத்திருந்ததை ஷரத் பார்த்துவிட்டான்.

“இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான். இவன்கூட பேச்சுவார்த்தையை நிப்பாட்டிட்டேன்னுதானே சொன்னே! இன்னும் உங்க கள்ளக்காதல் கன்டினியூ ஆகுதா?” என அத்தனை பேர் முன்பும் சத்தம் போட்டுக் கேட்டிருக்கிறான்.

இந்தச் சம்பவம் பற்றி அவள் என்னிடம் சொல்லும்போது அழுதேவிட்டாள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அன்னைக்கு அவன் என்ன பண்ணான் தெரியுமாடா? அத்தனை பேர் முன்னாடியும் என் ப்ரைவேட் பார்ட்ல எட்டி உதைச்சான். நான் தடுமாறி கீழே விழுந்துட்டேன். அப்புறம் நானா எழுந்து போய் கார்ல ஏறினேன். யாராவது லவ் பண்ற பொண்ணை இப்படியா ட்ரீட் பண்ணுவாங்க?” எனச் சொல்லும்போது மேலும் கலங்கிப்போனாள். அப்போது அவளின் கைகளைப் பற்றிக்கொண்டேன். சட்டென என் தோள் மீது சாய்ந்து ஓவென்று அழுதாள்.

“ஒருநாள் ஷரத் எனக்கு கால் பண்ணும்போது என் லைன் பிஸின்னு வந்திருக்கு போல. யார்கூடப் பேசிட்டு இருந்தேன்னு சந்தேகமா கேட்டான். நான் யாரோடையும் பேசிட்டு இல்லை. ஸ்பாம் கால் ஒன்னைத் தெரியாம அட்டெண்ட் பண்ணிட்டேன். அந்த நேரத்துல இவனும் கால் பண்ணியிருக்கான். இதைச் சொன்னா என்னை நம்பவே இல்லை அவன். நேரா ஜியோ ஷோரூம் கூட்டிட்டுப் போய் என் கால் ஹிஸ்டரியை செக் பண்ணிருக்கான். அதுமட்டுமில்ல, வாட்ஸ்அப்ல நான் அவன்கூட மட்டும்தான் டெக்ஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறான். அதையும் மீறி வாட்ஸ்அப் ஓபன் பண்ணிப் பார்த்தா லாஸ்ட் சீன் பார்த்துட்டு எவன்கூட வழிஞ்சிட்டுக் கெடந்தேனு சந்தேகப்பட்டு செக் பண்ண வீட்டுக்கு வந்துட்றான். அவன் பர்த்டே அன்னைக்கு சரியா பன்னண்டு மணிக்கு விஷ் பண்ணனும்னுதான் நினைச்சேன். டயர்ட்ல கொஞ்சம் கண்ணசந்துட்டதால மூனு நிமிஷம் லேட் ஆகிடுச்சு. அதுக்குலாம் எவன்கூட படுத்துட்டு இருக்கேன்னு கேட்டு சந்தேகப்படுறான். இந்தளவுக்குக்கூட நம்பிக்கை இல்லாதவன்கூட நான் ஏன் இன்னும் இருக்கேன்னு எனக்கே புரியலைடா!” எனப் புலம்பித் தீர்த்தாள்.

சமந்தாவுக்கு உயரதிகாரத்திலுள்ள வழக்குரைஞர் ஒருமுறை அவள் வாட்ஸ்அப்பில் பதிவிட்டிருந்த புகைப்படமொன்றிற்கு ‘க்யூட்’ எனக் குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு ‘தேங்க்யூ சார்’ என பதிலளித்தாள். ஷரத்திடம் போனில் இதை விளையாட்டாய்ச் சொன்னபோது, “அவர் க்யூட்னு சொன்னதுக்கு நீ என்ன பதில் அனுப்பினே?” எனக் கேட்டான்.

“தேங்க்யூ சார்னு சொன்னேன்” என்றாள்.

“அவர் அந்த மெஸேஜை பார்த்துட்டாரா?”

“இன்னும் இல்லை. ஏன் கேட்கிறே?”

“அந்த மெஸேஜை டெலீட் பண்ணிட்டு ஓகே சார்னு அனுப்பு”

“டேய், காம்ப்ளிமென்ட்க்கு ஓகேன்னு சொல்றதெல்லாம் அவமரியாதை பண்ற மாதிரிடா”

“ஒரு மயிறு அவமரியாதையும் இல்லை. நீ ஓகே சார்னு அனுப்பு” என விடாப்பிடியாகச் சொன்னான். இவனிடம் எதற்கு வம்பென நினைத்து “ஹ்ம்ம் அனுப்பிட்டேன்” எனப் பொய் சொல்லியிருக்கிறாள். அத்தோடு விடாமல், “அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்பு” எனக் கேட்டிருக்கிறான். ‘நன்றி’ சொன்னதை நீக்கிவிட்டு ‘ஒகே’ எனச் சொல்லி ஷரத் கேட்ட ஸ்க்ரீன்ஷாட்டை அவனுக்கு அனுப்பினாள். பிறகு மீண்டும் ‘ஒகே’ சொன்ன குறுஞ்செய்தியை நீக்கிவிட்டு பழையபடி ‘தேங்க்யூ சார்’ என்றே பதிலளித்தாள். இவனிடம் என்ன பெரிய வம்பாய்ப் போய்விட்டதென அவள் நினைக்காத நாளே இல்லை. பழையபடி அவன் ஊருக்கே போய்விட்டால் தேவலாம் என்றிருந்தது சமந்தாவுக்கு.

வார இறுதியில் இருவரும் ஆழ்வார்பேட்டையிலுள்ள ‘கேட்ஸ்பி’ என்கிற உயர்தர மது விடுதிக்குச் சென்றிருந்தனர். சமந்தா தங்க நிற பார்ட்டி வியர் ஆடையில் மின்னினாள். தொடைப்பகுதி வரை உள்ள ஜொலிக்கும் உடையைவிட அவளின் வேக்ஸிங் செய்யப்பட்ட கால்கள் அரேபியக் குதிரையைப் போல வசீகரமாய் இருந்தன. மது விடுதிக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நள்ளிரவுப் பொழுதில் காரில் வீடு திரும்பும் சமயத்தில் ஷரத் இவளின் கைப்பேசியை வாங்கி வழக்குரைஞருடனான குறுஞ்செய்திப் பெட்டியைத் திறந்தான்.

“என்ன இது? தேங்க்ஸ் சார்னு இருக்கு. போதாததுக்கு ரெண்டு ஹார்ட்டின் வேற விட்டு வெச்சிருக்கே!” எனச் சொல்லி நெடுஞ்சாலைக்கு மத்தியில் அவளைக் காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறான். இரவு ஒரு மணி இருக்கும். வீடு பத்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதை நினைத்து ஏங்கினாள். அகாலக் குளிர்ப்பொழுதில் உற்றுப் பார்க்கும் நள்ளிரவு ஆண்கூட்டத்தின் மத்தியில் மாட்டிக்கொண்டதாய் உணர்ந்தாள். தொடை வரை வருகிற ஆடையை இன்னும் கீழிறக்க முனைந்தாள். அந்நேரத்தில் தான் வழக்கறிஞர் என்கிற கர்வமெல்லாம் போய்விட்டது அவளுக்கு. தப்பிப்பிழைத்தால் போதுமென்கிற ஜாக்கிரதையுணர்வோடு சிக்கிவிட்ட ஆட்டைப் போல அவளுடைய உள்மனம் நடுங்கியது. சனி இரவென்பதால் பைக் டாக்ஸி புக் செய்ய முடிந்தது.

“நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போனேண்டா. என் வீடு திறந்தே இருந்தது. உள்ளே போய்ப் பார்த்தா அவன் இருந்தான்” என இச்சம்பவத்தை என்னிடம் சொன்னாள்.

“அப்புறம் என்ன நடந்தது? உன்னை அடிச்சானா?” எனத் தீவிரமாகக் கேட்டேன்.

“அதெல்லாம் இல்லைடா. வீ மேட் லவ்”

“என்னடீ சொல்றே?”

“ஒவ்வொரு சண்டைக்கு அப்புறமும் அதுதாண்டா நடக்கும். செக்ஸ் நடந்ததும் அந்த சண்டையை நானும் மறந்திடுவேன், அவனும் மறந்திடுவான்”

“ஆனா, அதுக்கு இது சொல்யூஷன் இல்லைல்ல?”

“சொல்யூஷன்லாம் யாருக்கு வேணும்?” என்று ஏதோவொரு நினைப்புடன் அவ்வார்த்தைகளைக் கொட்டினாளே அன்றி அதையவள் பிரக்ஞையுடன் கூறவில்லை. ஆனால், அவளை எல்லோரும் மலர் போல் மென்மையாகக் கையாளும்போது ஷரத் மட்டும் அவளிடம் கற்றாழை முள்ளாய் நடந்துகொண்டது அவளுக்கு மனதின் அடியாழத்தில் ஏனோ பிடித்திருந்தது.

அன்றொரு நாள் ஷரத்தின் நீண்ட விடுமுறை முடிவுக்கு வந்து, அவன் பணிநிமித்தமாக ஸ்பெயின் செல்ல வேண்டியிருந்தது. அவனுக்குப் பரிசாய் ஸாராவிலிருந்து ப்ரிண்டட் சட்டையொன்றை வாங்கித் தந்தாள். சமந்தாவைத் தீரத் தீரப் புணர்ந்தான் ஷரத். எல்லாம் ஓய்ந்ததும், “சம்மு… நம்ம இப்போ பண்ணதை ப்ரேக் அப் செக்ஸா நினைச்சுக்கோ. ஐயம் லீவிங் யூ. லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எனக்கு ஒத்து வரல. நினைச்ச நேரத்துல படுக்கிற சௌகரியம் இல்ல எனக்கு இதுல” என்றான். சமந்தாவின் நெஞ்சில் நெருஞ்சி முள் குத்தியது போல் இருந்தது. கோடையில் கொட்டித் தீர்க்கும் திடீர் மழை போலக் கண்ணீர் சட்டென அவளே நினைக்காத கணத்தில் நனைத்தது. கொஞ்சமும் யோசிக்காமல் ஷரத் முன் மண்டியிட்டு அவன் கால்களை இறுக்கப்பிடித்துக் கதறியழுதிருக்கிறாள். கையைக் கொட்டும் தேளை உதறித் தள்ளுவது போல சமந்தாவை உதறிச் சென்றான்.

பிறகுதான் அவன் கப்பலில் உடன் பணிபுரியும் ஒரு தமிழ்ப் பெண்ணுடன் புதிய உறவிலிருப்பது சமந்தாவுக்குத் தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் அவனுக்கு அதிகாரம் மிக்க பதவி உயர்வு கிட்டி மாத ஊதியம் எட்டு லட்சமாக அதிகரித்திருந்தது. நினைத்தவளைப் புணரும் வசதிகளை இந்தப் பணமும் அதிகாரமும் பெற்றுத் தந்ததால் சமந்தா அவன் கண்களுக்குத் துச்சமாகத் தெரிந்திருக்கிறாள்.

“அவன் கையில பத்துப் பைசா இல்லாதப்போகூட அவனை என் புருஷனா நினைச்சுப் பார்த்துக்கிட்டேண்டா. இன்னைக்கு எல்லா வசதியும் வந்த அப்புறம் என்னை எப்படித் தூக்கி எறிஞ்சான் பார்த்தியா? இப்போ ஏதோவொரு சிறுக்கியோட இருக்கான். அந்த முண்டையோட ஐடியை இன்ஸ்டாகிராம்ல கண்டுப்பிடிச்சிட்டேன். கண்றாவியா இருக்கா. இந்த பாஸ்டர்ட் எப்படி அவ மேலலாம் லவ்ல விழுந்தான்னு தெரியலை. இவனோட மட்டமான டேஸ்டை நினைச்சா இப்போ எனக்கே என்மேல இன்ஃபீரியரா இருக்கு. இவகிட்ட பேசி நம்பர்லாம் வாங்கி ஒருநாள் நாங்க மூனு பேரும் கான்ஃபரன்ஸ்ல பேசினோம். இவன் என்கூட எப்படியெல்லாம் செக்‌ஷுவலா இருந்தான், அவளை எப்படி மேனுபிலேட் பண்ணியிருக்கான்னு அந்த சிறுக்கி முண்டகிட்ட சொன்னேன். அப்போவும் அவன்தான் வேணும்னு அடம்பிடிக்கிறா. அவளுக்கு மூளை மண்டைலதான் இருக்கா இல்ல டிக்கில இருக்கான்னு தெரியல. நல்லா அசிங்கமா கேட்டு விட்டேன். அவளை அசிங்கமா திட்டுனதுக்கு பழிவாங்க ஷரத் என்ன பண்ணான் தெரியுமா? நான் அவனுக்கு வாங்கிக் கொடுத்த ஸாரா ஷர்ட்டை அவளுக்குப் போட்டுவிட்டு அவளை ஃபக் பண்ற வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினான். ஐயோ.. அதைப் பார்த்ததும் நான் எப்படி ஒடஞ்சிப் போயிட்டேன் தெரியுமா?” எனச் சொல்லிக்கொண்டிருந்தபோது என் மீது சாய்ந்து சிறு பிள்ளை போலத் தேம்பித் தேம்பி அழுதாள்.

புது உறவுக்குச் சென்ற பிறகும் சமந்தாவிடம் பேசுவதை நிறுத்தவில்லை ஷரத். அடிக்கடி அழைத்து சந்தேகக் கேள்விகளாகக் கேட்டுக் கொச்சைப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறான்.

ஒருநாள் என்னைத் தொடர்புகொண்டு, “எனக்கொரு உதவி பண்றியா? ஒரு சிசிடிவி கேமரா வாங்கணும். எங்க கிடைக்கும்னு பார்த்து சொல்றியா?” எனக் கேட்டாள். எதற்கெனக் கேட்டதற்கு, “என் ரூம்ல மாட்டத்தான். அவன் என்னை சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்கான். அவனுக்கு ப்ரூவ் பண்ணனும்ல, நான் யாரோடையும் படுக்காமத்தான் இருக்கேன்னு” என்றதும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. என்றும் சாதுவாக இருக்கும் நான் அப்படிக் கத்தியதும் என் கோபத்திலுள்ள நியாயத்தைப் புரிந்து, தான் யோசித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்தாள்.

“அந்த சிறுக்கி முண்ட போன் பண்ணாடா. இப்போலாம் ஷரத் அவளோட செக்‌ஷுவலாவே இருக்கிறதில்லையாம். அவனுக்கு இவ மாஸ்டர்பேட் மட்டும்தான் பண்ணி விட்டுட்டு இருக்காலாம். அந்த நேரத்துலலாம் அவன் என் பேரைச் சொல்லி ‘பிட்ச்… பிட்ச்…’னு சொல்லிட்டு இருக்கிறதா சொன்னா. கேட்டதும் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா? அவன் மனசுல இன்னும் நான்தான் இருக்கேன்” என்று அவள் சொன்னதைக் கேட்டபோது அச்சத்துடன் அவளை நோக்கினேன்.

ஆனால், அடுத்த சில நாட்களில் அவனைப் பற்றிய எந்தப் பேச்சுகளும் வராதது எனக்கு ஆறுதலையளித்தது. ஒரேயொரு முறை ஷரத்தைப் பற்றி விசாரித்தேன். அவனைப் பற்றிப் பேச வேண்டாமெனச் சொல்லிக் கடுமையாக மறுத்ததை வைத்து முழுமையாக மீண்டுவிட்டாளென்ற நம்பிக்கை வந்தது.

கெபர்னி சோவின்யோ ஒயினுடன் கூடிய இரவுணவுக்காக ஓரிரவு என்னை அழைத்திருந்தாள். கச்சிதமாய்ப் பழுத்திருந்த ஆப்பிளை நறுக்கியெடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டேன். பின் சோர்வுறுமளவுக்கு நடனமாடினோம். எங்கிருந்து வந்தது அந்த தைரியமெனத் தெரியவில்லை. என் விரல்கள் அவளை ஆழமாய்த் தீண்டின. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீண்ட நேரம் வெளியே வைக்கப்பட்டிருந்த திராட்சைப்பழம் போல அவள் ஏற்கெனவே ஈரமாய் இருந்தாள். திராட்சையைச் சுவைத்துச் சாப்பிடும் குழந்தையைப் போல அவளை முழுவதுமாக ருசித்தேன். சமந்தாவை நான் இவ்வளவு நெருங்குவேனெனக் கனவிலும் நினைத்ததில்லை. அப்படியான ஓர் அற்புத இரவுக்கு நான் தயாராகவே இருந்திடவில்லை. அவள் அடிக்கடி ஒன்றைச் சொல்வாள். தான் ஷரத்துக்கு விசுவாசமாய் இருந்து பழக்கப்பட்டவளென! அன்றைய இரவில் ஒன்றைப் புரிந்துகொண்டேன். பழக்கப்பட்ட புலி என ஒன்றில்லை. புலியின் பிரத்யேக குணம் என்றேனும் வெளிப்பட்டே தீரும். மதம் பிடித்திருக்கும்போது பாகனைக் கொல்லத் துணியும் யானையின் வெறியைவிட நாம் இணைக்குச் செய்யும் துரோகத்தின் தீவிரம் சற்றே அதிகம்.

அன்றிலிருந்து சமந்தா எனக்கேயானவள் என்று பூரணமாக நம்பினேன். காதலின் முன்மொழிதலைக் கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்த்தேன். ஒருவாறு முடிவுக்கு வந்து நேராக அவள் வீட்டிற்கே சென்றேன். காதலைச் சொன்ன அடுத்த கணமே அவளுக்கு ஒரு நீண்ட முத்தம் கொடுக்கத் திட்டமிட்டிருந்தேன். அதுகுறித்த எந்த அச்சவுணர்வும் அப்போது எனக்கில்லை. அறியாத பாதையில் முதன்முறை செல்கையில் அந்நியன் வழிகாட்டுவான்; அடுத்தடுத்த முறை வழியே வழிகாட்டிவிடும் என்கிற குருட்டு நம்பிக்கையில் பிறந்த தைரியம்தான் அது!

நான் வருவதைக் கண்டதும் குதூகலத்துடன் எழுந்து, “டேய் வாடா… ஒரு சந்தோஷமான விஷயம். ஷரத்துக்கும் அந்தப் பொண்ணுக்கும் ப்ரேக் அப் ஆகிடுச்சாம். அவதான் இப்போ போன் பண்ணி சொன்னா” என்றாள்.

”சரி? நீ எதுக்காக இவ்ளோ சந்தோஷமா இருக்கே?” என சந்தேகத்துடன் கேட்டேன்.

“இன்னும் புரியலயா உனக்கு? அவன் மனசுல இன்னும் நான்தாண்டா இருக்கேன். அவனால எந்தப் பொண்ணோடையும் வாழ முடியாது. சீக்கிரம் அவனை கன்வின்ஸ் பண்ணிட்டா அடுத்தது கல்யாணம்தான். காலைலகூட வடபழனி முருகன் கோயிலுக்குப் போய் அவன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்” என்றாள்.

சமந்தாவின் தேகத்தை அடைய முடிந்த என்னால் ஒருபோதும் அவளின் பிரார்த்தனையில் இடம்பெற முடியாதென்பதை உணர்ந்தேன். பின் சற்று தயக்கத்துடன் அவளிடம் அதைக் கேட்கவே செய்தேன்.

“ஒன்னு கேட்கவா? தப்பா எடுத்துக்க மாட்டியே!?”

“கேளுடா”

“நீ என்கூட இருக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கே? ஆனா, ஷரத் இங்கே உன்னோட இருந்திருந்தா உனக்கு அந்த சந்தோஷம் கிடைச்சிருக்காது. நீ தேவதைன்னா அவன் உன்னை சிதைக்கிற சாத்தான். ஷரத்தை ஒப்பிடும்போது நான் உன்னை ரொம்பவே நல்லா ட்ரீட் பண்ணியிருக்கேன். என் மேல உனக்கு வராத காதல் ஏன் ஷரத் மேல மட்டும் தீராம இருக்கு?”

சலனமின்றி மௌனமாய் என் கண்களையே கருணையுடன் உற்றுப் பார்த்தாள். பட்டாம்பூச்சி இறக்கையின் பிசுபிசுப்புகூட ஒட்டாமல் அதனைக் கையிலேந்துவதைப் போன்ற அவள் மீதான காதலால் கசிந்துருகிப் போயிருந்த எனது ஆன்மாவைத் தீயிட்டுக் கருக்கும் விதமாய் இருந்தது என் வினாவுக்கான அவளின் பதில்.

“டேய், நீயெல்லாம் ரொம்ப மென்மையானவண்டா!”

krshbala99@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button