காதலியின் திருமணப் புகைப்படத்தில்
கூரிய ஒளி வீசும் அவள் கண்கள்
வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன
மலைப் புற்களாய் புருவங்களிடையே
இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள்
ஆண்மைத்தனத்தைக் காட்டும்
அரும்பு மீசையை அறவே நீக்கி
போலித்தனமாக
பெண்மையைப் பூசியிருந்தாள்
இயல்பிலேயே சிவந்த கன்னங்களை
இருபுறமும்
வெளிர் பூச்சால் மொழுகி இருந்தாள்
மரக்கிளையாய் வளையும் வகிடு ஏனோ
நெடுஞ்சாலையாய் நீண்டிருந்தது
ஊசி குத்தினாலே வலிக்கும் என்பவள்
மூக்கு குத்தி இருந்தாள்
எப்போதும் குடைச்சலே ஆகாதென குட்டித் தோடு அணிபவளின் காதுகள் அன்று
குடைத்தோடுகளை தாங்கியிருந்தது
அடையாள அட்டையையே பாரமென்பவளின் கழுத்து
அடுக்கடுக்காய் நகைகளைத் தாங்கின
புள்ளியாய் திலகமிடுபவள்
மூன்றடுக்காய் வரிகளை ஒட்டி இருந்தாள்
எந்த நிறம் பிடிக்காதென எப்போதும் கூறுவாளோ
அந்த நிறத்திலேயேதான் புடவை அணிந்திருந்தாள்
அவளுடனே
யார் யாரோ இருந்தார்கள்
யாரோ ஒருவன் மணமகனாய் இருந்தான்
யாரோ போல் இருந்த அவள்
மணமகளாய் இருந்தாள்
எல்லோரும் புகைப்படத்தில் தவறாது
சிரித்துக்கொண்டிருந்தனர்
அந்தப் புகைப்படத்தில் நான் இல்லை
நான் நேசித்த அவளும் இல்லை.
*****
பார்க்கும் யாவற்றிலும் விலையை நோக்கும்
என் கண்கள் ஒரு காமிரா கண்காட்சியில்
ஏலத்தில் வாங்கப்பட்டவை
எதையும் வாரி எடுக்கும்
பொக்ளினுக்கு என் குவிந்த கரத்தின் சாயல்
எந்த மணமென்றாலும் உறிஞ்சும்
என் நாசி ஒரு வாக்யூம் க்ளீனர்
கல்லையும் கடிக்காமல் விடாத பற்கள்
பட்டறையில் தட்டப்பட்டவை
வருவதனைத்தையும் வாரிக்குவிக்கும்
ராட்சத பலூனால் தைக்கப்பட்டது
என் வயிற்றுச் சுவர்
நிற்கும் இடங்களை எல்லாம் தோண்டும்
என் கால்களின் விரல்கள்
ட்ரில்லர்களால் ஆனவை
பெருத்த சிரத்தையுடன்
கொஞ்சூண்டு மனது கொண்டு
கோவிலை கட்டுவேன்
வாரிச் சுருட்டிய விரல்களால்
குருதிப் பூக்களை கோர்த்து அணிவிப்பேன்
என் மாலையை சூடியபின்
நிச்சயம்அருள் புரிவார் கடவுள்
ஏ டி எம் பீடத்தில் அமர்ந்தபடி.
*****
ஒரு தலைக் காதல்தான்
எனினும்
என் தலை
இராவணன் தலை
*****
வெட்டும் அந்தக் கைகளுக்கும்
பூக்களை உதிர்த்த பின்தான்
விழுந்து சரிகிறது மரம்.
Such a wonderful lines….. More way to go?