கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 29 – மோகன் வைத்யாக்களை அனுமதிப்பது தான் முற்போக்கா?

மித்ரா

ஒரு வாரமாக நடந்த கலகலப்பில்லாத களேபரங்களுக்குப் பின்பு இந்த வாரம் புதிதாகத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டின் 29 ஆவது நாள்.

வழக்கம் போல எவிக்சனுக்கான நாமினேசன் பட்டியலில் சரவணன், சேரன், மீரா, அபிராமியோடு இந்தமுறை சாக்ஷி மற்றும் கவினும் இடம்பிடித்துள்ளனர். சாக்ஷி மீது எந்தப் புகாரும் யாருக்கும் இல்லையெனினும் மீரா அடம்பிடித்து வாங்கிய அந்த குறும்படம் தான் அவர் நாமினேசனுக்குக் காரணமாக இருந்துள்ளது. சென்ற வாரம் சாக்ஷி இருந்த மனநிலையில் இந்த சில்லி விஷயங்களெல்லாம் அவர் நினைவில் இருந்திருக்காது. அவருக்கு தமிழைப் புரிந்து கொள்வதிலும் சிரமம் உள்ளது. அதனால் அந்த மீட்டிங் விவகாரமெல்லாம் எனக்கு பெரிய விஷயமாகப் படவில்லை. கவின் மீது அனைவரும் காண்டில் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால், அபிராமியை நாமினேட் செய்வதற்கு சாண்டி சொன்ன காரணம் கவனிக்கத்தக்கது. “அபி நாமினேசனில் இருந்தால் ஒரு மாதிரியும் இல்லாவிட்டால் வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார்.” என்றார் சாண்டி. உண்மை. அந்தப் பெண்ணிற்கு உள்ளே இருக்க வேண்டும் என அத்தனை ஆசை போல. ஞாயிற்றுக் கிழமை தான் எவிக்ட் ஆகவில்லை எனத் தெரிந்ததும் மகிழ்ச்சியில் கதறி அழுததை நாம் தான் பார்த்தோமே.

ரேஷ்மா சிறந்த கேப்டனாக இருப்பார் எனத் தோன்றுகிறது. சண்டையெல்லாம் போடாமல் அனைவரையும் உரிமையோடு அதட்ட முடிகிறது அவருக்கு. அபியும் லாஸ்லியாவும் தூங்கியதற்கு கொடுத்த தண்டனை தான் சாட்சி. அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் அதை ரேஷ்மா செய்யச் சொல்லியிருப்பார். அவர்களும் செய்திருப்பார்கள். இது தான் அவர் பலம். தலைமைப்பண்பு என்பது சாதாரண விஷயமல்ல. நம்மிடம் தலைமைப்பண்பு இருப்பதை முதலில் நாம் உணர வேண்டும். அப்போது தான் தன்னுடனேயே இருப்பவர்களுக்கு திடீரென தலைவரானால், யார் என்ன நினைப்பார்கள், யாராவது தப்பா நினைப்பார்களா என்றெல்லாம் யோசிக்காமல் செயலாற்ற முடியும். இல்லையெனில், நம்ம நண்பராச்சே இதைப் போய் எப்படி அவர்களிடம் சொல்வது என யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். ஞாயிறு அன்று ஒரு காலர் கேட்டது போல ரேஷ்மா செந்தில் மட்டும் இல்லை. வடிவேலும் தான்.

மோகன் வைத்யா விட்டுச் சென்ற பொருட்களை வைத்துக் கொண்டு, சாண்டி அவரைப் போல செய்து காட்டியது சிரிப்பாக இருந்தாலும் பெண்களுக்கு சிறிது லஜ்ஜையாகத் தான் இருந்திருக்கும். இங்கு மோகன் வைத்யாவைப் பற்றிப் பேச வேண்டிய தேவையிருக்கும் அதே அளவு… சொல்லப்போனால் அதை விட அதிகமாகவே அந்தப் பெண்களைப் பற்றிப் பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. மோகன் வைத்யா செய்தது தவறு தான். கிட்டத்தட்ட அது ஒரு அப்யூஸ். ஆனால், எத்தனை எதிர்ப்புக்குரல்கள் அவரது செய்கைக்கு வீட்டிற்குள்ளே எழும்பியது என்பது தான் முக்கியம். எனக்குத் தெரிந்து சாக்ஷி மட்டுமே அவர் பிறந்தநாள் அன்று சின்னதாகச் சலித்துக் கொண்டார், “எத்தனை பர்த்டே கிஸ் கொடுப்பீங்க போதும்” என. மற்ற யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

உண்மையில் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா? இயல்பாக எடுத்துக் கொண்டார்களா? என்றால் கண்டிப்பாகக் கிடையாது. உச்சபட்ச அசூயையை அடைந்திருப்பார்கள். ஆனால், வெளிப்படுத்தத் தயங்குவது தான் தவறு. பெண் சுதந்திரம் என்பதற்கும், முற்போக்கு என்பதற்கும் இங்கு சொல்லப்படுகின்ற கற்பிதங்கள் அதை வெளிப்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. சமூக வலைதளங்களிலேயே பார்க்கிறோமே. முன்பின் தெரியாத பெண்களையெல்லாம் செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, கமெண்டுகளில் எல்லை மீறுவது போன்ற சல்லித்தனங்களை ஆண்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்கள் அதை கேசுவலாக எடுத்துக் கொள்வது போல காட்டிக் கொள்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தால் நம்மை பட்டிக்காடு நாகரீகம் தெரியாதவள் என நினைத்துவிடுவார்களோ, நம் முற்போக்கு பிம்பம் உடைந்து விடுமோ என்ற பதட்டம் தான் காரணம். அது தான் ஆண்களின் பலம். அதே பதட்டம் தான் மோகன் வைத்யா செயலுக்கு வீட்டிலிருக்கும் பெண்கள் குறைந்தபட்சம் முகஞ்சுழிக்காமல் கூட இருந்ததற்குக் காரணம். அப்படிச் செய்தாலும், அப்பா மாதிரி தானே பண்ணேன் என ஒப்பாரி வைப்பார். உடனே மொத்த ஆண் குழாமும் சேர்ந்து அந்தப் பெண் சீன் போடுவதாகப் புரணி பேசும். இதெல்லாம் தேவையா என நினைத்திருப்பர்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பெண்களே. நம் பிம்பம் என்பது நம்மின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டுமே தவிர, சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை நாம் பிரதிபலிக்கக் கூடாது. முற்போக்கு, சுதந்திரம் என்பதெல்லாம் நாம் விரும்பும் நபர்களிடம் பழகுவது தானே தவிர, யார் எப்படிப் பேசினாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் விடுவதல்ல. யாருடன் பழக வேண்டும், எப்படிப் பழக வேண்டும், யாரை எந்த எல்லை வரை அனுமதிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்யுங்கள். பிடிக்கவில்லையெனில் முகத்திலடித்தாற்போல எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள். தயங்கிக் கொண்டே இருந்தால் மோகன் வைத்யாக்கள் கையை அகல விரித்துக் கொண்டு வந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் முகத்தைச் சுழித்துக் கொண்டு முத்தம் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button