“ஏங்க… ஹலோ… உங்க வண்டியிலிருந்து ஏதோ விழுந்துருச்சு…”
அத்வைத் லஞ்ச் பேக்கினுள் ஸ்பூன் போட்டோமா? பாலைக் காய்ச்சி ஆற வைத்தோம்…கரண்டி தயிர் விட்டு கலக்கி மூடினோமா? மூளை எழுப்பிய கேள்விகளுக்கு விடை தேட கால இயந்திரத்திலேறி ஒவ்வொரு காட்சியாகத் துளாவிக் கொண்டிருந்தவளைப் பாதியில் திரும்ப வைத்தது அந்தக் குரல்.
“பை விழுந்துச்சு. அங்கயே கூப்பிட்டேன். நீங்க கவனிக்கல!” பைக் ஆளும், பின்னாடியிருந்த பையனும் ஒருசேரச் சொல்லினர்.
உடனே பயந்து போய்ப் பார்த்தேன். கைப்பையும், உணவுப் பையும் மாட்டிய இடத்தில் பத்திரமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. மேல் ஜிப் இரண்டும் முக்கால்வாசி மூடியிருந்தது. குழப்பமாக நிமிர்ந்தபோது, “கொஞ்ச தூரம் முன்னாடிதாங்க்கா… உங்க ஸ்கூட்டியிலேர்ந்துதான் விழுந்துச்சு” – சிறுவன் பின்புறம் கையை நீட்டிக் காண்பித்தான். சிக்னல் விழுந்து வாகனங்கலெல்லாம் நகர, “பொறுமையாத் தேடிப் பாருங்க… இப்பவே பார்த்துட்டீங்கன்னா கிடைச்சிடும்.” கடைசி நம்பிக்கை போலச் சொல்லிவிட்டு அவர் மெதுவாக முன்னேறிப் போனார்.
ஓரமாய் ஒற்றைக் காலில் நங்கூரமிட்டு நின்று படபடப்பாய் பைக்குள் கை விட்டேன். வயிறு உப்பிய பர்ஸ் முதலில் அகப்பட்டது. ஹேர் க்ளிப், லிப்-பாம், கைக்குட்டை, நாப்கின் தவிர அலைபேசியைக் காணவில்லை. அடுத்த அறையின் அடியில் கருப்பு செங்கல் போல சூடாகக் கவிழ்ந்து கிடந்தது. கனமாக, ‘ப’ வடிவிலிருந்த லஞ்ச் பேக்கில் வழக்கம்போல ‘ட’ வரை வந்து ஜிப் நின்று போய்விட்டிருந்தது.
பணமும் செல்லும் இருக்கு, பார்த்துக்கலாம். சற்று நிதானம் வந்தது. வேறு என்ன விழுந்திருக்கும்? இரண்டு பைதானே கொண்டுவந்தோம்? திரும்பிப் பார்த்தேன். இண்டு இடுக்கைக் கூட விடாமல் பைக்கும் ஸ்கூட்டியும் நிரப்பியபடி வந்து கொண்டிருந்தன. இது ஒன்வே, திரும்ப வரவேண்டுமென்றால் சிக்னலில் ‘யு’ போட்டு ஒன்றரை கிலோமீட்டர் தாண்டி மேம்பாலத்தினடியில் ஒடித்து நுழைந்தால்தான் மீண்டும் இந்தச் சாலையைப் பிடிக்க முடியும்.
எந்த முடிவும் எடுக்காமல் வண்டியைக் கிளப்பினேன். பைகளை அடைகாப்பது போல கால்களை இறுக்கிக் கொண்டேன். பச்சை அம்புக்குறி மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தது. சிகப்பாக மாறுவதற்குள் விருட்டென எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்டேன். அடுத்து சின்னப் பாம்பு பச்சையப்பாஸ், சாரைப் பாம்பு ஸப்வே தாண்டி அந்தாக்ஷன் ஹேரிங்க்டனையும் கடந்து விட்டால், பத்து பத்துக்குள் மேனேஜர் வருவதற்குள் அட்டெண்டென்ஸில் கொக்கி போட்டு விடலாம். ஏற்கனவே ஐந்து நிமிடங்கள் நின்றதில் வீணாகிவிட்டது.
ஒருவேளை நிறுத்தி செயின் பறிக்கவோ, பிக்பாக்கெட் அடிக்கவோ முயன்றிருக்கிறார்களோ? உடனே கழுத்தில் மாங்கல்யமிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஹெல்மெட்டுக்குக் கீழிருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியில் கைவிட்டு அல்லது கத்திவிட்டு இழுப்பது கஷ்டம்.
எங்கேயாவது அவர்கள் தென்படுகிறார்களா எனத் தேடிக்கொண்டே வந்தேன். அலுவலகத்துக்குச் செல்பவர் போலில்லை. அரைக்கை சட்டை போட்டிருந்தார். பையனும் யூனிஃபார்ம் அணியவில்லை. வண்டி கூட கருப்பும் சாம்பலும் கலந்த காமன் வண்ணம். கூட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம்.
அலுவலகத்தில் முதல் வேளையாக கைப்பையைக் கொட்டிக் கவிழ்த்தேன். பின்பக்கத்தில் திறந்தேயிருந்த சிற்றரையில் வைத்திருந்த அழுக்கு பத்து ரூபாய் கூட அப்படியே இருந்தது. வாங்க மறந்து போன டிரை க்ளீன் பில்லும், தொலைந்து போயிருந்த ஸ்டிக்கர் பொட்டு அட்டையும் கண்டெடுக்கப்பட்டன.
ஸ்கூட்டியில் வரும் பெண்டிர் மூன்று பேரிடமும் கேட்டேன். இப்படி ஒரு அனுபவமே யாருக்கும் நிகழ்ந்ததில்லையாம். அருணா மேடம் மட்டும் ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார், “போன வருஷம் கேலண்டர் கொண்டு போன பை காதருந்து விழுந்திருச்சு, ஸைடுல மாட்டியிருந்ததுனால எனக்குத் தெரியவே இல்லை. அரைகிலோமீட்டர் மேல தொரத்திகிட்டே வந்து ஒரு பையன் தந்தான். நான் உடனே கிருஸ்மஸுக்காக வாங்கியிருந்த ப்ளம் கேக்கை அவங்கிட்ட கொடுத்தேன்!”
பக்கத்து கேபின் கிருத்திகா கேட்டாள், “ஏய்.. நீ புக் கொண்டு வருவியே ஒரு பை, அது விழுந்திருக்குமோ?”
அய்யோ அதை எப்படி மறந்தேன்?
“நேத்து கூட கொண்டு வந்தியே?” கிருத்திகா கேட்டவுடன்தான் பொங்கிய பாலில் நீர் பட்டது போல் பதட்டம் அமுங்கியது.
“ஆமாம் கீர்த்தி, நேத்துதான் லைப்ரரி போய் மாத்திகிட்டு வந்தேன். இனி அடுத்த வாரம்தான்.”
“ஓ..அப்ப உன் அட்டென்ஷனை டைவர்ட் பண்றதுதான் அவங்க மோட்டிவ்வா இருந்திருக்கனும், உங்கிட்ட ஏதாவது ட்ரை பண்ணினாங்களா?”
“ச்ச… ரொம்ப சாதாரணமா இருந்தாங்க. நல்ல அக்கறையோட சொன்ன மாதிரிதான் இருந்தது.” – பதில் சொல்லிவிட்டேனே தவிர உள்ளுக்குள் ஒரு அசௌகர்யம் ஓடியது.
அவர்களை நல்லவர்களாக எது காட்டியது? பைக் நெருங்கி வரவில்லை. ஒரு ஸ்கூட்டி இடைவெளி இருந்தது. அந்தச் சின்னப் பையனுக்கு அத்வைத்தைவிட இரண்டு மூன்று வயது கூட இருக்கலாம். அவனும் சேர்ந்து சாட்சியம் சொன்னானே! ஆன்ட்டி என்றழைக்காமல் அக்கா என விளித்தான்.
‘ஃப்ராடு பசங்களெல்லாம் பார்க்க சாதாரணமாத்தான் தெரிவாங்க… ஜாக்கிரதை!’ – என்ன ஜாக்கிரதை வேண்டிகிடக்கு? அதான் எதுவும் போகவில்லையே? என் பயத்தை பதட்டத்தை சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமா? ஒருவேளை நாளையும் வருவார்களோ? நான் தினமும் அந்த ரோட்டில் கூடக்குறைய அதே நேரத்தில்தான் பயணிக்கிறேன்.
மறுநாள் மிகுந்த கவனத்தோடு வண்டி ஓட்டினேன். பக்கத்திலுள்ள பைக் ஓட்டிகளை ஊடுருவிப் பார்த்தேன்.
கிருத்திகா ஏதாவது கேட்பாளென நினைத்தேன். பின்னர் நானாகவே போய் சொன்னேன், “இன்னிக்கு யாரும் என்னை ஃபாலோ பண்ணி வரல…”
அவள் புரியாமல் விழித்து பிறகு நினைவுகூர்ந்து, “கூல்” என்றாள்.
சாலையில் எவ்வளவோ பேர் இருக்க ஏன் என்னை மட்டும் தேர்ந்தெர்ந்தெடுக்க வேண்டும்? எளிதாக ஏமாற்றி விடலாமென்பது ஹெல்மெட்டுக்குள் அடங்கிய முகத்தில் தெரியுமா என்ன? ஒருவேளை நான் யாரையாவது துணைக்கு அழைத்து வருகிறேனா என பரிசோதித்திருக்கலாம். நாளைக்கு மறுபடியும் வரலாம்! என்னைக் கொண்டுபோய் ஏதாவது கொலைப்பழியில் சிக்க வைத்து, கடத்தி வைத்து மிரட்டிப் பணம் கேட்டு, மயக்க மருந்து கொடுத்து ஒழுங்காய் வேலை செய்துகொண்டிருக்கும் கிட்னியில் ஒன்றை எடுத்து, இல்லையென்றால் ஏதோ ஒரு நூதன காரணம். நான் பார்த்த, படித்த க்ரைம் த்ரில்லர்களிலெல்லாம் நானே கதாபாத்திரமாகிப் போனேன்.
அடுத்த நாள் நிச்சயம் யாராவது வருவார்களென நம்பினேன். ஒருபுறம் வெகு உற்சாகமாக இருந்தது. அத்தனை கூர்மையாக நான் சாலையைக் கவனித்ததே இல்லை.அண்ணா ஆர்ச்சுக்குப் போகாமல் ஷெனாய் நகருக்குள் புகுந்து, புதுப்புது கிளைச் சந்துகளில் திரும்பி மெயின் ரோட்டைப் பிடித்தேன். வரும்போது ஸ்டெர்லிங்க் ரோடு வழியாக வரலாம். ஒருமுறை கூகுள் மேப்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வானத்தில் வசிக்கும் ஸூப்பர் நோவாக்கள் பூமியில் இறங்குவார்கள். தேர்ந்தெடுத்த சில மனிதர்களின் மூளைக்குள் எண்ண அலைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தி தெரிந்த வார்த்தையையும் அதன் சித்தாந்தத்தையும் மறக்கடிப்பர். கதை நாயகன் துரைக்கு ‘கல்யாணம்’ என்ற வார்த்தையே மறந்து போயிருக்கும். சுஜாதா எழுதிய சிறுகதையினை மதிய உணவின்போது மறுபடி மொபைலில் படித்தேன்.
எனக்கென பிரத்யேக மந்திர சக்தி உண்டு. அதை மோப்பம் பிடித்த அற்பர்கள் என்னைத் தீய சக்திகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். தர்மம், நீதி, நியாயத்தையெல்லாம் எடுத்துக்கூறி சாதுர்யமாய் தப்பிக்க வேண்டும். மாலை திரும்பிக் கொண்டிருக்கும்போது மாய உலகத்தின் அங்கமாய் மாறியிருந்தேன்.
மறுநாள் அத்வைத்துக்கு ஜுரம். “எனக்கு இம்பார்ட்டண்ட் மீட்டிங்க் இருக்கு, அர்ஜெண்ட் கால் வந்திருக்கு, நான் போலன்னா நாளைக்குத் தலையைத் தின்னுடுவானுங்க…” என முதலிலெல்லாம் கார்த்திக் காரணம் சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அதுவுமில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் விடுப்பு எடுப்பது எனது குடும்பப் பொறுப்புகளில் ஒன்றாகிப் போனது.
இன்று வெள்ளிக்கிழமை, நாளைக்கு உடம்பு வந்திருந்தால் ஒரு நாள் லீவு மிச்சமாகியிருக்கும். டே கேரில் இப்பொழுதெல்லாம் ஸ்ட்ரிக்ட்டாக காய்ச்சல் கண்ட பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. சமைத்து முடித்து, உணவை டப்பாக்களில் அடைக்கும்போது அவசரமாக வந்தான் கார்த்திக். “லேட்டாகிடுச்சு, பிரேக் ஃபாஸ்ட்ட ஆஃபீஸ்ல பார்த்துக்கறேன்”
ஷூவை மாட்டியபடியே, “அத்வைத் இன்னிக்கு குளிக்க வேண்டாம், ரொம்ப நேரம் டிவி பார்க்க விடாத அவன…” என்றான்.
“பை பை ப்பா” – ஓடிவந்த பிள்ளையின் நெற்றியில் முத்தமிட்டு, “டேக் குட் ரெஸ்ட் கண்ணா. நாளைக்கு சரியாயிடும் பாரு.” என்றுவிட்டுக் கிளம்பினான். இந்த அப்பாக்கள்தான் எவ்வளவு நல்லவர்கள்?
சூடாக ரசம் சாதம் சாப்பிட்டு, பாரசிட்டமால் சிரப் அருந்தியவுடன் தெம்பானான் பையன். மொபைல் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரம் தூங்குடா. கண்ணு வலிக்கும்.”
“தூக்கம் வரலயேம்மா…”
“சரி, கொஞ்ச நேரம் கண்ணை மூடிப் படு, ஃபோனைக் குடு.”
“அப்ப நீ ஒரு ஸ்டோரி சொல்லனும்.”
எனக்கும் வேலை ஒன்றுமில்லை. வேலைக்காரம்மா வந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு பியூட்டி பார்லர் போய்வரலாமென்றிருந்தேன்.
“கதையா… நான் எது சொன்னாலும் போரிங்கும்பியே…”
“இல்ல, சொல்ல மாட்டேன். அனிமல்ஸ் கதை சொல்லு.”
“ம்… ஒரு காட்டுல மான் ஒன்னு இருந்ததாம். அதுக்கு நிறையா ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்களாம். அவங்களோட ஜாலியா விளையாடும், ஃபாரஸ்ட்ட ஹேப்பியா சுத்தி வரும், விதவிதமா செடி, கொடிகளையெல்லாம் சாப்பிடும்.”
“அதோட பேரு?”
“பேரா… லைலான்னு வச்சுப்போமா?”
“கேர்ள் டீரா…”
“ஏண்டா அப்படி இழுக்கற? அந்த கேர்ள் டீர் ரொம்ப சமர்த்தா இருக்கும். அவங்க அம்மாப்பா சொன்ன பேச்சைக் கேக்கும். கார்த்தால சீக்கிரம் எழுந்திருக்கும், டெய்லி குளிக்கும்.”
“ஃபீவர் வந்தாக் கூடவா?”
“ப்ச்… அதுங்களுக்கெல்லாம் வராதுடா. கதையைக் கேளு நீ. பக்கத்துலயே இன்னுமொரு அடர்ந்த காடு இருந்துச்சு. அதுக்குள்ள புலி, சிங்கம், சிறுத்தைன்னு பெரிய பெரிய மிருகங்களெல்லாம் வாழ்ந்துச்சு. லைலாவோட அம்மாப்பா அந்த காட்டுப்பக்கம் போகவே கூடாதுன்னு லைலாகிட்ட சொல்லி வைச்சிருக்காங்க. அங்க போனவங்க யாரும் திரும்பி வந்ததே கிடையாது.”
“ஏன்? எதுனால?”
“ஏன்னா போறவங்களையெல்லாம் அங்க இருக்கற புலி, சிங்கம் புடிச்சு சாப்டுடும். லைலா அந்தப் பக்கம் போறதைப் பத்தி நினைச்சுக்கூட பார்த்ததில்லை. ஆனால், ஒரு நாள் அவ வழக்கமா மேயற இடத்துக்குப் போயிட்டிருந்தப்ப கொஞ்ச தூரத்துல மஞ்சளா பெருசா ஒரு அனிமல் க்ராஸ் பண்றதைப் பார்த்தா. உடம்புல ப்ளாக் ஸ்ட்ரைப்ஸ் கூட தெரிஞ்சுது. பயத்துல ஓடி வந்துட்டா. நண்பர்களுக்கிட்டெல்லாம் போய் சொன்னா. அவங்க யாரும் நம்பவே இல்ல.”
“ஏன் நம்பல?”
“ஏன்னா அவங்க யாரும் புலியை நேர்ல பார்த்ததே இல்ல. பட், லைலாவை ஜாக்கிரதையா இருந்துக்க சொன்னாங்க. அந்த சைடே ஒரு வாரத்துக்குப் போகாதன்னாங்க.”
“ம்ம்…”
“ஆனா, லைலாவுக்கு ஒரே ஆர்வமா இருந்தது. மறுநாளும் அந்த இடத்துக்குப் போனா.”
“புலி வந்துதா?”
“வரவே இல்ல. நிறைய நேரம் வெயிட் பண்ணினா. அது போன வழியிலெல்லாம் போய்த் தேடிப் பார்த்தா. அவ ஃப்ரெண்ட்ஸெல்லாம் ‘புலி வரலன்னு சொல்லாத, நீ பார்த்தது புலியே இல்லைன்னு சொல்லு!’ அப்படின்னு கிண்டல் பண்ணினாங்க. லைலா ரொம்ப சோகமாயிட்டா.”
“புலி வந்தாதான் புடிச்சு சாப்டுடுமே, ஏன் அது வரலைன்னு லைலா சேட் ஆகனும்?”
அதானே!. லாஜிக்காக யோசிக்கிறான். அன்றாடப் பணிகளைத் திரும்பத் திரும்பச் செய்து சலிப்புற்றிருக்கும்போது சாகசமாக ஏதாவது செய்ய மனம் ஏங்குகிறதோ? சாதரண பயமுறுத்தலாய்க் கிளம்பிய ஒரு சிறு பொறியை ஊதி ஊதிப் பெரியதாக்கி, அதிலிருந்து கிளம்பும் பொற்புகையில் மறைந்து கொள்வது ஆனந்தமாய் இருக்கிறதே!
“ஒரு த்ரில்லுக்குத்தான். புலியைப் பார்த்து, அது சேஸ் பண்ணி வரும்போது தப்பிச்சு ஓடறது அட்வென்சரஸா இருக்கும்ல. எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிக் காட்டிக்கலாம்ல. ஒரே மாதிரி இருந்திருந்து போரடிச்சுது அவளுக்கு.”
“பார்த்தியா. நீயே சொல்லிட்ட. எல்லாருக்குமே போர் அடிக்கும்மா!”
“இது வேற போர்டா எரும.”
“சரி, நீ கதையை கண்டினியூ பண்ணு.”
எப்படித் தொடருவது எனத் தெரியாமல்தான் நானும் முழித்துக் கொண்டிருந்தேன்.
“எப்படியும் புலியை பார்த்தாகறதுன்னு லைலா முடிவு பண்ணா. தைரியமா தனியாவே காட்டைத் தாண்டிப் போனா. மெல்லக் கால் வைச்சு பதுங்கிப் பதுங்கி லெஃப்டு ரைட்டுன்னு புகுந்து புகுந்து போனா. ஒரு ரிவர் பக்கத்துல புலிக்கூட்டம் தண்ணி குடிச்சிட்டிருந்தது. ஆசை தீர அதுங்களைப் பார்த்தா. சத்தம் குடுக்காம திரும்பி நடந்தா. அப்போ ‘தடால்’னு அவ மேல பாஞ்சுது ஒரு மொரட்டு கருஞ்சிறுத்தை.”
“…”
“வேர்த்து கொட்டி பயந்து நடுங்கி, ‘விட்டுடு..விட்டுடு’ன்னு கத்தி இறுக்க மூடின கண்ணைப் பிரிச்சுப் பார்த்தா… எல்லாம் கனவு!”
‘ச்சை… இதெல்லாம் ஒரு கதை’ என்பது போன்ற முகபாவத்துடன் என்னைப் பார்த்தவன், சில கணங்கள் மௌனத்திற்குப் பிறகு சொன்னான்.
“அந்த பயந்தாங்கொள்ளி லைலாவால புலியைப் பார்க்கவே முடியாது!.”
*******