![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/Jeyan-Michal.jpg)
விமானம் மேகங்களை விட்டுக் கீழிறங்கும் வரை, இப்படி ஒரு உலகத்தில்தான் சில நாட்கள் வேலை செய்யப் போகிறேன் என துளி கூட நினைக்கவில்லை.
சில மைல்கள் தூரம் கடலின் மேல் பறப்பது போன்றிருந்தது. கடலைக் கடந்ததும் சில அடிகள் கீழிறங்கியது விமானம். அப்பொழுது பச்சை நிறமும், நீல நிலமும் கலந்த ஆறு ஒன்று தெரிந்தது.
“நம் நாடுபோல்தான் இங்கேயும் இருக்கும் போல” என்று எண்ணிக் கொண்டேன்.
அந்த நாட்டிற்கு வேலைக்குச் செல்லலாமென்று முடிவு செய்த அடுத்த நொடி பல எதிர்ப்புகளும் பல அறிவுரைகளும் என் காதுகளை எட்ட ஆரம்பித்தது.
“அந்த நாட்டில் எல்லாருமே தீவிரவாதிகளாம். அங்கங்கே குண்டு வெடிக்குமாம். போக வேண்டாம். கிடைப்பது ஐந்து ரூபாயாக இருந்தாலும் அதை நிம்மதியாகச் செலவு செய்தால் போதும்”
“எதாவது ஆச்சுனா உன் குடும்பத்தின் கதி ?”
“என்ன நடந்தாலும் தனியா வெளியே போகாதே. கடத்தி கொன்றுவிடுவார்களாம்”
இப்படியாக ஆயிரம் கேள்விகள் ஆயிரம் அறிவுரைகள். ஆனால் என்னிடம் சொல்ல இருந்தது ஒரே பதில் “பொறியியல் படித்துவிட்டேன், நீங்கள் சொன்ன ஐந்து ரூபாய்க்குக் கூட என் நாட்டில் வழியில்லை. பிறகு என்ன செய்வது? நான் அங்கே என் உயிரைப் பணயம் வைத்தால்தான் இங்கே என் குடும்பம் சோறு உண்ண முடியும்”
விமானம் இன்னும் கீழிறங்க ஆரம்பித்தது. ஆற்றைக் கடந்தால் வயல்வெளி, புல்வெளி என பச்சையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் நான் கண்ட காட்சி என் கண்களில் மண்ணை அள்ளி வீசிப்போனது.
கண்ணுக்கெட்டும் தூரம் மணல் வெளிப் படர்ந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. குடிகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு வீடு கூட கண்ணில் படவில்லை.
“என்ன கொடுமை இது. இந்த ஊரில்தானா நான் வேலைப் பார்க்கப் போகிறேன்?”
விமானம் தன் சக்கரங்களைத் தரையில் உராய்ந்து கொண்டு ஓட ஆரம்பித்தது.
சாதாரணமாக ஒரு விமானநிலையம் எவ்வளவு அழகாக இருக்கும். கண்ணுக்குகெட்டும் தூரம் வரை கண்ணாடிகள் பதித்துப் பல நாட்டவர்கள் அங்குமிங்குமாக அலைந்தபடி, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால், எனக்கு அந்த விமான நிலையத்தைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது. பழமையான ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையம் கூட இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றியது.
“பாஸ்றா விமான நிலையம் அன்புடன் என்னை வரவேற்றது” பாஸ்றா ஈராக்கில் எண்ணைக் கிணறுகளுக்கு இடையில் இருக்கும் ஒரு விமான நிலையம்.
விமானத்தில் வந்த ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் வழியைப் பார்த்துச் சென்றார்கள். மீதி இருந்தவர்கள் வெள்ளையர்கள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத காரணத்தால் நான் வெள்ளையர்களை பின் தொடர ஆரம்பித்தேன்.
மக்கள் அலையலையாக திரிவார்கள் என்று நினைத்த விமான நிலையத்தில் ஆங்காங்கே வேலைச் செய்ய மட்டும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
வெள்ளையர்கள் ஒரு அதிகாரியிடம் சென்று விண்ணப்பத்தாளைப் பெற்றுக் கொண்டார்கள். நானும் அவர்களைப் போலவே கண்ணாடியில் ஓரமாக இருந்த துளை வழியே கையை நீட்டி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டேன்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பாஸ்போட்டுடன் இணைத்து இன்னொரு அதிகாரியிடம் கொடுத்து விட்டு அறையில் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
வெள்ளையர்கள் முன்னால் இருந்த பத்து வரிசைகளை நிறைத்தார்கள். அவர்கள் பின் வரிசையில் சில வரிசைகள் காலியாக இருந்தது.
“ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… ஐந்து…” எண்ணி மொத்தம் பதினோரு வரிசைகள் என்று கணக்கிட்டேன். அந்த இருக்கைகளுக்கு முன்னால் மூன்று கண்ணாடி வைத்த அறைகள் இருந்தது.
நிற பாஸ்போட்டுகள் ஒரு அறையிருந்து இன்னொரு அறைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
என் கணக்கு எப்பொழுது வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு குரல் என் கவனத்தைத் திருப்பியது.
“நம்மை எல்லாம் இப்பொழுது கூப்பிடமாட்டார்கள்” கூறியவன் இந்தியில் பேசினான் என்பதால் அவன் கூறிய வார்த்தைகளின் முழு அர்த்தம் புரியவில்லை. அவனை உற்றுப் பார்த்தேன்.
நம் நாட்டை சேர்ந்தவன் போல் இருந்தான். ஆனால் தாடியும் தலைக்கு மேல் இருந்த தொப்பியும் அவனை நம்மிலிருந்து சற்று பிரித்துக் காட்டியது. அவன் பேசியது எனக்குப் புரியவில்லை என்று அறிந்து கொண்டவன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.
“பெயர் மட்டும் இந்தியா. ஆனால் இந்தி தெரியாது” இந்தியாவிற்கு விளக்கம் சொல்லும் நிலையில்லை என்பதால் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“என் பெயர் ஜாபர்” என்று கையை நீட்டினான். கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.
“நண்பா, நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்” என்றான். இதே வார்த்தையை நேற்று அவன் கூறியிருந்தால், “தீவிரவாதியே, கொடியவனே, காஷ்மீர் வேண்டுமா…” என்றெல்லாம் கண்டபடி பேசி அவனை என் எதிரியாகவே கருதியிருப்பேன்.
இன்று நான் இருந்த நிலைமைக்கு அவன் என் நண்பனாகவே தெரிந்தான்.
“நான் ஒரு வருடமா இங்கேதான் வேலை செய்கிறேன்” அவனின் அந்த வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
“நீ நினைப்பது போல எல்லாம் உடனே அழைக்க மாட்டார்கள். நன்றாக உற்றுப் பார். முதலில் இருப்பவன் பாஸ்போட்டுகளை நிறம் வாரியாக பிரிக்கிறான். பிறகு அதில் சிலவற்றை எடுத்து அடுத்த அறைக்கு அனுப்புவான். கடைசியாக நீல நிறமான உன் பாஸ்போட்டும், பச்சை நிறமான என் பாஸ்போட்டும் மிஞ்சும்”
ஜாபர் கூறியது போலவே நடந்து கொண்டிருந்தது.
“கடைசியாக என்ன செய்கிறான் என்று மட்டும் கவனி” அறைக்குள் இருந்த அதிகாரி ஒருவன் செய்த செயல் என்னை அவமானப்படுத்திக் குறுகச் செய்தது.
எங்கள் இருவர் பாஸ்போட்டை எடுத்து அறையில் ஓரமாக இருந்த ஒரு மேசையில் வீசினான்.
“எல்லா வேலைகளையும் முடித்து பிறகு நம் பாஸ்போட்டை எடுப்பார்கள்” எல்லா வேலைகளையும் என்றால் என்ன என்று கேட்க வேண்டும் போல இருந்தது.
“பயப்படாதே, மாலைக்குள் முடித்து விடுவார்கள்” கையில் கடிகாரத்தைப் பார்த்தேன். அப்பொழுது நேரம் காலை எட்டு மணி.
“வேறு வழியில்லை, தண்ணீர் கூட கிடைக்காது. அவர்கள் பாஸ்போட்டில் விசா அச்சிட்டுத் தரும் வரை காத்திருந்தே ஆக வேண்டும்”
வெள்ளையர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
“இங்கே அட்டையைப் போல எண்ணெய்யை உறிஞ்சும் வெள்ளையனுக்குத்தான் மரியாதை. நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் அவர்கள்தான் சோறு போடுவதாக நம்புகிறார்கள்” எனக்கு நம் ஊர்க் கதைகள் சில நினைவிற்கு வந்தது.
“கவலைப்படாதே உன்னை அழைத்துச் செல்ல வேண்டியவன் உனக்காகக் காத்திருப்பான்.” கையிருந்த தாள்களைப் புரட்டி கடைசியாக இருந்த புகைப்படங்கள் பதிக்கப்பட்ட தாளைக் கையில் எடுத்தேன்.
“அதுவா, அது நம்ம கூட வர காவலாளிகளோட புகைப்படம். உங்க ஊரு ஆதார் அட்டை மாதிரிதான். அடையாள அட்டையில இருக்கும் புகைப்படமும் நேரில் இருக்கும் முகவும் சுத்தமாக ஒத்துப் போகாது. அவர்களே உன்னைக் கண்டுபிடித்து வருவார்கள். விமான நிலையத்திற்கு வெளியே செல்ல அரசு வண்டிகள் இருக்கும். அதன் பிறகு காவலாளிகள் உன்னை அழைத்துக் கொண்டு தங்கும் இடத்திற்குச் செல்வார்கள் பயந்து விடாதே இருவரும் பெரிய துப்பாக்கி வைத்திருப்பார்கள்” அவனை இன்னும் சந்தேகமாகப் பார்த்தேன்.
“வெளியே கண்ணாடி வழியாப் பாரு. ஐந்து ஆறு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் உனக்கு வழி காட்டுவான். எனக்கும் ஒருவன் வந்திருப்பான்.” அவன் கூறியது போலவே வெளியே சிலர் நின்று கொண்டு வருவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அருகில் நம் பயணப் பெட்டிகளை எடுத்து வரும் பெல்ட் வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தது. அதன் அருகில் நின்ற அரசு அதிகாரி, பெட்டிகளை பெல்டிலிருந்து எடுத்து கீழே வீசிக் கொண்டிருந்தான்.
“என் ஊறுகாய் புட்டி உடைந்து விடும்டா” என்று கத்த வேண்டும் போல இருந்தது.
“கவலைப்படாதே உன் பெட்டியில் இருக்கிற பொருளுக்களுக்கு எதுவும் ஆகாது. நீ எத்தனை மணிக்குச் சென்றாலும் அனாதையாக அங்கேயே கிடக்கும்” உள்ளே இருப்பது அம்மா செய்து தந்த ஊறுகாய் புட்டி என்று கூறவா முடியும். அமைதியானேன்.
“உனக்காவது வெறும் துணி மணிகள்தான். எனக்கு உள்ளே கண்ணாடி புட்டிகளில் உணவு இருக்கிறது” நான் இன்னும் அமைதியானேன்.
நடப்பவைகள், நடக்கவிருப்பவைகள் என எல்லாவற்றையும் ஜாபர் விளக்கிக் கொண்டிருந்தான்.
“விமான நிலையைத்தை விட்டு வெளியே சென்றதும் குண்டு துளைக்காத சட்டை ஒன்று கொடுப்பார்கள். நீ திரைப்படத்தில பார்த்தது போல சட்டை மாதிரி எல்லாம் கழட்ட முடியாது. பத்து கிலோவிற்கு அதிகமா எடை இருக்கும். வேலை நேரத்தையும் தங்கும் இடத்தையும் தவிர எங்கே சென்றாலும் அதை அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும்”
தலையில் சுட்டால் என்று கேட்டிருக்கலாம். அதற்கும் அவனே பதில் கூறினான்.
“இது எல்லாம் வெறும் காப்பீட்டிற்காக நம்ம கம்பெனி ஆட்கள் பண்ணுற வேலை. நாளை எதாவது ஆனால் நம் குடும்பத்திற்குப் பணம் கொடுக்க வேண்டுமல்லவா. அந்த குண்டு துளைக்காக உடையால ஒரு பயனும் இல்லை.”
“இந்தியத் திரைப்படங்களில் அந்த உடையை அணிந்திருந்தால் அணுக் குண்டு வெடித்தால் கூட அதிலிருந்து தப்பித்து விடலாமே. இதை ஜாபரிடம் கூறினால் நகைச்சுவையாக இருக்கும்” சொல்லி விடலாமா என்று யோசித்தேன். மனதின் படபடப்பு குறைய ஆரம்பித்திருந்தது.
“இங்கே தீவிரவாதிகள் தாக்குதலை விட உள்ளூர் திருடர்கள் தாக்குதல்தான் அதிகம். பணத்திற்காகக் கடத்தி செல்வார்கள். கம்பெனி பணம் கொடுக்கும். பிறகு விட்டுவிடுவார்கள்” மனம் அடங்கிய வேகத்திலேயே மீண்டும் படபடத்தது.
“மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஹெச்.ஐ.வி சோதனை செய்து பாஸ்போட்டில் பதிவு செய்வார்கள். எயிட்ஸ் மிகவும் அதிகமாகப் பரவி இருப்பதால் அதைத் தடுக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை”
“பாகிஸ்தான் நண்பா, நீ கொடுத்த விவரங்கள் அனைத்தும் தேனினும் இனியது. போதும். இனி வருவதை நானே பார்த்துக் கொள்கிறேன்” சொல்லிவிடலாம் என்று எண்ணும் பொழுது என் பெயரை அழைத்தார்கள், கண்ணாடி அறைக்கு முன் சென்று நின்றேன். அதிகாரி என் முகத்தைக் கூட பார்க்காமல் கையை நீட்டினான். அவன் கையில் விசா கட்டணம் என நூற்று ஒரு டாலர் பணத்தைத் திணித்தேன்.
என் முகத்தைப் பார்க்காமல் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். திடீரென்று தலையைக் குனிந்தவாறே ஏதோ கேட்டான். அவன் என்னைத்தான் கேட்கிறான். ஆனால் என்ன என்று புரியவில்லை” மறுபடியும் கேட்கலாமா என்று யோசிப்பதற்குள் அவன் தலையை நிமிர்த்தி தன் கேள்வியை மீண்டும் கேட்டான்.
“என்ன இஞ்சினியரா?” ஆம் என்பது போலத் தலையசைத்தேன். என் தலையசைவை உறுதி செய்த அதிகாரி அருகிலிருந்த இன்னொருவனிடம் ஏதோ சொல்லிச் சிரித்தான்.
“எல்லா இஞ்சினியர்களும் புறப்பட்டு இங்கே வந்து விடுகிறார்கள்” என்று கிண்டலடிப்பது போல இருந்தது.
வேலையை முடித்து விட்டு பாஸ்போட்டை துளை வழியாக என்னை நோக்கி வீசினான். நான் அதைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டேன்.
“நேற்றுவரை ஒரு சிறு கீறல் கூட வராமல் பத்திரமாக அட்டை போட்டு பாதுகாத்த பாஸ்போட்டை தூக்கி வீசுகிறான்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
என் வேலை முடிந்தது என்று கை ரேகையைப் பதிவு செய்து விட்டு வெளியேறும் இடத்திற்கு வந்தேன். பின்னால் ஜாபரின் பெயரை அழைப்பது காதில் கேட்டது.
“இவ்வளவு நடந்த பிறகும் இந்தியாவிற்குப் பின்னால்தான் பாகிஸ்தான் என்று எண்ணத் தோன்றவில்லை”
பெல்டின் அருகில் தூக்கி வீசப்பட்ட என் பெட்டியை இழுத்தவாறு அடுத்த கட்டத்திற்கு வந்தேன். அங்கே என் பெட்டியில் குண்டுகள் போன்ற இதர ஆயுதங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தார்கள்.
அதன் பிறகு இன்னொரு பரிசோதனையும் மிச்சமிருந்தது. ஈராக் முழுவதும் மதுபானத்திற்கு தடை விதித்திருந்தார்கள். எனவே பெட்டியை திறந்து காட்டி உள்ளே மது, மற்றும் மதுவைப் போன்ற, மற்ற போதைப் பொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டால் வெளியே சென்று விடலாம்.
பெட்டியைத் திறந்த பொழுது காவலாளி கண்ணில் என் ஊறுகாய் புட்டி பட்டது. அதைக் கையில் எடுத்தான்.
“சார் ஊறுகாய்” என்றேன். புட்டியின் மூடியைச் சுழற்ற ஆரம்பித்தான்.
“அம்மா செய்தது என்றேன்” புட்டியைத் திறந்தவன் முகர்ந்து பார்த்தான். அம்மா செய்தது அல்லவா, அதன் வாசம் மூளை வரை ஏறியிருக்க வேண்டும். புட்டியை அவன் அருகில் வைத்து விட்டு போ என்றான்.
பெட்டியை மூடி விட்டு வெளியே போகலாம் என்று கதவு அருகில் சென்றேன். காவலாளி என்னை மீண்டும் நிற்கச் சொன்னான். பதட்டத்துடன் என்ன என்பது போலத் திரும்பிப் பார்த்தேன்.
“பணம் கொடுத்து விட்டு போ” என்றான். எதற்கு என்று புரியவில்லை. ஆனால் அவனை எதிர்த்துப் பேசும் துணிவும் வரவில்லை. பின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுத்தேன்.
“ஐம்பது டாலர்தான் இருக்கிறது” தயக்கத்தோடு கூறினேன்.
“டாலரா, எங்க நாட்டு பணம் இல்லையா? இந்தியன்தானே, இது எல்லாம் உங்க ஊருல வழக்கம் தானே?” அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது அவன் கேட்டது லஞ்சம்.
“இன்னும் ஐம்பது டாலர் கூட இருக்கிறது”. என்று நூறு டாலரை நீட்டினேன். வாங்கிக் கொண்டான். அப்பொழுது முன்னால் இருந்த கதவை திறந்து வெளியேறிய ஒரு முதியவரின் முனங்கல்கள் என் காதில் விழுந்தது. பேசியது அரபியில் என்றாலும் அதன் பொருள் முழுவதுமாக விளங்கியது.
“நல்லா இருந்த நாடு, அணுஆயுதம், எண்ணைக் கிணறு, தீவிரவாதிகள், போர்ன்னு எப்படி ஆக்கி வெச்சிருக்காங்க பார்த்தியா ?”
அவர் கைவிட்ட கதவை நான் பிடித்தேன்.