
என் காதல்
ஆயிரத்தொரு இடர்களுக்கு மத்தியில்
அவனை அவளை எந்த சமரசமும் இல்லாமல்
பற்றிக்கொள்வதையும் உடன்போக்கு
நிகழ்வதையும் காதல் என்று விவரிப்பதை விட
பொருத்தமான சொல் உலகில் எந்த அகராதியிலும்
இல்லை, போர்க்களத்தின் மத்தியிலும்
வறுமையின் உச்சத்திலும்
தனிமையின் தவிப்பிலும்
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர்
பற்றிக்கொள்வதையும் அவர்களின் புணர்ச்சி
வேட்கையையுமே காதல் எனக் கூற வேண்டும்.
***
கைம்பெண்
இனிமேல்
யாருடைய கரம் பற்றிக்கொள்வது
யாருடைய மார்பில் சாய்ந்துகொள்வது
இனிமேல் யார் என் வியர்வை நுகர்வது
யார் என் முத்தம்பெறுவது
யார் என் முலைக்குள் அடங்குவது
நீ விட்டுச் சென்ற மீதி இளைமையை
நான் எங்கு சென்று எரிப்பது
பொழுது விடியப்போகிறது
நீ திரும்புவாய் என்பதை மூளையும்
நீ திரும்பமாட்டாய் என்பதை இதயமும்
மறுதலிக்கின்றன அனுதினமும்.
***
காத்திருப்பு
மழை பொழியக் காத்திருக்கும்
வானம் போல
பண் பாடக் காத்திருக்கும்
பாணன் போல
முறை செய்யக் காத்திருக்கும்
மன்னன் போல
தாய்மொழி பேசக் காத்திருக்கும்
குழந்தை போல
காதல் சொல்லக் காத்திருக்கிறேன்
நம் கல்லூரி வளாகத்தின்
போதி மரத்தடியில்
நான் புத்தனாகுவதற்குள் வந்துவிடு.
***
வாழ்க்கை
ஒரு பறவை வந்து
கூடு கட்டித் தங்கும் அளவுக்கு
கிளைகள் போல மனம்
இருந்தால் போதுமானது
காற்று வீசுவதையும்
மழை பெய்வதையும்
சிறகசைத்து
கொண்டாடித் தீர்க்கலாம்
காதலோடு இந்த
வாழ்க்கையை.
***
பேருந்து பயணம்
இறங்குமிடம் வந்த பின்பும்
பயணத்தைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறேன்
இளையராஜாவின்
இசையை லயித்தவாறே
சன்னல் வழியே
இயற்கையோடு ஒன்றிப்போன
மனிதர்கள் வயல்களில்
கொஞ்சும் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
எத்தனை சோடி காதல்
பூத்ததோ தெரியவில்லை
பேருந்து முழுக்க பெயரின் முதல் எழுத்துகள்
ரம்பையும் ஊர்வசியுமாய்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
ஏறி இறங்குகிறார்கள்
கண்ணால் பேசும் சிலர்
சில்லறை வேண்டி
தவமிருக்கும் சிலர்
வேண்டிய ஒருவரின்
காத்திருப்பில் சிலர்
வேண்டாத நபர்களை
பார்த்துவிட்டோமென்ற
எரிச்சலோடு சிலர்
பயணச்சீட்டு வாங்காமல் சிலர்
புத்தகம் படித்தவாறு சிலர்
கைபேசியில் தங்களை
மறந்த சிலர்
இப்படியாக ஊர்ந்து கொண்டிருக்கிறது
கல்லூரி மாணவர்களின்
பின்பாட்டுடனும்
தாளத்துடனும்
எப்படி இறங்க முடியும்?
அடுத்த நிறுத்தம் வரட்டும்.