சிறுகதைகள்
Trending

பிரியம் எனும் பித்து

இந்திரா த/பெ ராஜமாணிக்கம்

“அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. ஒருத்தரும் உள்ள நுழையக்கூடாது”

நடுவீட்டில் நின்று  கத்திக்கொண்டிருந்தவரைப் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து கொண்டேன்.

பேசாம இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கலாம்.

யார்மீதென்றே புரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் வசைபாடிக் கொண்டிருப்பது மனிதர்களுக்கேயுரிய தனிக்குணம் போல.

”மோட்டாரை ஆஃப் பண்ணிட்டியா?”

”ம்”

“உங்கிட்ட தான் கேக்குறேன்”

”பண்ணியாச்சு”

”அவளுக்கு ஒன்னும் ஆகாது, நம்ம சாமி இருக்கு”

”சாப்பிடுறீங்களா?”

”இல்ல நேரமாகட்டும். மோட்டார் ஆஃப் பண்ணிட்டேல?”

ஓ’வென்று கத்தவேண்டும் போல் இருந்தது. எச்சில் விழுங்கிக்கொண்டேன்.

ஹாட்பாக்ஸில் தோசைகளை பத்திரப்படுத்திவிட்டு, ஹாலில் அமர்ந்திருந்தவரை எட்டிப்பார்த்தேன். எந்தச் சலனமுமின்றி வெறித்துக்கொண்டிருந்தவரின் முகம், தன் வறட்சியை இரு வாரங்களுக்கான தாடிக்குள் ஒளித்திருந்தது.

“இப்ப என்னாச்சுனு இப்டி உக்காந்துருக்கீங்க?” கேட்டுவிடலாம் தான். அதன் பிறகான புலம்பல்களுக்கு ஒத்துவராத மனநிலையை வைத்துக்கொண்டு என்ன செய்ய!

”டாக்டர் என்ன சொன்னார் மாமா?”

”புருஷன் பிள்ளைனு ஓடுனதெல்லாம் போதும், இனி கம்ப்ளீட் ரெஸ்ட் எடுனு”

“ம்”

“எல்லாரும் சேர்ந்து அவளை ஒக்குட்டுட்டீங்க”

”அதான் ஒன்னும் ஆகலேல”

”ஆகியிருந்தா தெரிஞ்சிருக்கும்”

‘டொக்’

அக்கறைகளைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட மனிதர்களின்  அலைபேசிகூட இப்படித்தான் முகம் சுளித்துக்கொண்டே இருக்கும்போல. திரும்பியதும் அதே கேள்வியுடன் தயாராய் நின்றிருந்தார்.

”பேசினாளா?”

”வந்துடுவாங்க”

”அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், ஒருத்தரும்…”

“ப்ச்”

டிவியை ஆன் செய்து வரிசையாக சேனலை ஓடவிட்டேன். இசை நல்ல மாற்று என்று சொன்னவனை நினைத்துச் சிரிப்பு வந்தது. எந்தவொரு இளையராஜாவாலும் எஸ்பிபியாலும் சமன் செய்யமுடியாத பேரிரைச்சல் இது.

ரிமோட்டை பழையபடி டேபிளிலேயே வைத்துவிட்டு, வாசல் திண்ணையைத் தாண்டி இடது பக்கம் செங்குத்தாய் அமைக்கப்பட்டிருந்த படிகள் வழியே மேலேறினேன்.

1..

2..

3..

மொத்தம் அறுபத்தி மூன்று படிகள்.

”கடைசியாய் எப்போது எண்ணினோம்?!”

மாடியின் சமதளம் கடந்து திட்டின் அருகே நின்றபடி காற்றிற்கு வாகாய் நிமிர்ந்தேன். எப்போது வருவேனெனக் காத்திருந்ததுபோல் தூரத்தில் ஒரு நட்சத்திரம் நகர்ந்து கொண்டிருந்தது.

நட்சத்திரம் விழுவதைப் பார்த்தால் ஞாபகமறதி ஏற்படுமென அம்மா அடிக்கடி கடிந்துகொள்வது வேடிக்கையாய் இருக்கும்.

//மறப்பதற்கு ஒரு மாத்திரை வேண்டும். விழுங்கின உடனே தூக்கம் தாக்கி உறங்கிட வேண்டும். உடனே.. உடனுடனே..! குறைந்தது முன்னூறு நாட்களாவது. எல்லாமே பொல்லாத சொப்பணம் என்று வேறொரு உலகத்தில் விழித்தெழ வேண்டும்.//

சுஜாதா ஒரு ஜீனியஸ்.

‘நீ இப்ப பாக்குறது அந்த நட்சத்திரத்தோட கடந்தகாலம், ஒளி ஆண்டு கணக்குப்படி நமக்கு தாமதமா காட்சிக்குக் கிடைக்குது. நகர்ந்திருக்குற அல்லது மறைஞ்சிருக்குற ஒன்னைத்தான் இருக்குனு நம்பி நிகழ்காலத்துல வேடிக்கை பாத்துகிட்டு இருக்கோம்’

மனிதர்களும் நட்சத்திரங்கள் போலத்தான். உடன் இருப்பதாய் நம்பவைக்கும் தோற்றப்போலிகள்.

கண்களை ஒருமுறை இறுக மூடித்திறந்தேன். உடலின் மொத்த எடையும் தலைக்குள் ஏறிக்கொண்டது போல் ‘விண்’ என்றது. திடப்படுத்திக்கொண்டு திட்டில் கை வைத்து வெளிப்பக்கம் எட்டிப்பார்த்தேன்.

“சில விஷயங்களை அளவுக்கு அதிகமா கொண்டாடிட்டா ஒருகட்டத்துல முற்றுப்புள்ளி வைக்கத் தோணும். காதலும் அப்படித்தான். முடிச்சுக்குவோம் கௌசி”

கடைசி துண்டிப்பிற்கு முந்தைய மதிவாணனின் குரல் மீண்டுமொருமுறை மூளைக்குள் எழுந்து அடங்கியது.

குதிப்பதற்குத் தயாரானேன்.

காலத்திற்கென ரீவைன்ட் அல்லது ஃபார்வர்ட் பட்டன் இருந்தால் நன்றாக இருக்கும்.

“அதே காலத்துக்குத் திரும்பப்போய் என்ன செய்யப்போற? அல்லது சட்டுனு ஸ்கிப் பண்ணி தப்பிச்சு ஓடணும்னு ஏன் நினைக்குற? மெதுவா நிதானமா ஒவ்வொன்னா கடந்து பழகு. தன்னால அது நம்மை நகர்த்தும்”

மஹிமாவுடனான உரையாடல்கள் பெரும்பாலும் இந்த வார்த்தையில் தான் முடித்துவைக்கப்படும். “புல்ஷிட்”.

“அம்மா எப்டி இருக்காங்க?”

“மைல்ட் அட்டாக் தான். இப்ப பரவாயில்ல”

“அப்பா?”

“அம்மா இல்லாம.”

மஹிமாவிற்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.

“காபி போடவா? உன் பேவரிட் ச்செஸ்போர்ட் கப்புல?”

உரையாடலை யதேச்சைபோல மடைமாற்றுவதென்பது தனி கலை. அது எப்போதும் மஹிமாவிற்கு வருவதில்லை. பதிலை யூகிக்க முடியாதபடி மத்திமமாய் புன்னகைத்தேன். எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

நான்காவது முறையாக இல்லாத கடிகாரத்திற்கென மணிக்கட்டைத் திருப்பி, ஏமாந்துகொண்டேன். பிரியமான தருணங்களைப் பிரியமற்ற பொழுதுகளில் நினைத்துப் பார்ப்பதுகூட ஒருவகையில் அப்படியான ஒன்றுதான்.

‘ஒரே நாளில்’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக். மைக்ரோ செக்கெண்ட் வித்தியாசத்தில் தான் எல்லாமே மாறிப்போகிறது. அம்மாவின் காபி டம்ளர் கீழே விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பியது போல. தற்கொலைக்கு முந்தைய அப்பாவின் ‘பசிக்குது தோசை ஊத்துறியா?’ என்கிற அழைப்பு போல.

ஐசியூ கண்ணாடி வழியாகத் தெரிந்த, ‘அவரெங்க?’ எனும் பரிதவிப்பின் வழி எதையோ கடத்திக்கொண்டிருந்த அம்மாவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. உடலைச் சிலிர்ப்பியபடி மின்விசிறியின் வேகத்தை இரண்டு சுற்றுக்கு அதிகப்படுத்திக்கொண்டு மீண்டும் இருக்கையில் சௌகர்யமானேன். மழை வந்தால் தேவலாம் போல் இருந்தது.

“உன்னோட சேர்ந்து ஒரு மழைலயாவது நனையணும் மதி”

“ஷவர் இருக்கே, வாயேன்”

“கொன்றுவேன்”

“இதுவரைக்கும் நீ சொன்ன கொன்றுவேனை கணக்குப் பண்ணினா நான் நூத்தி அம்பத்தி ஏழாவது ஜென்மத்தைத் தாண்டி ட்ராவல் பண்ணிகிட்டு இருக்கணும்”

ஜஸ்ட் கெட் தி ஹெல் அவுட் ஆஃப் மை மைண்ட்!

“என்னாச்சுடீ?”

காபியை நீட்டப்போனவள் அதிர்ந்து பின்வாங்கி, பிறகு சுதாரித்தாள்.

“ஹும்?? நத்திங். ரிவைஸ்டு எஸ்டிமேசன் ரிப்போர்ட் பெண்டிங்னு சொன்னியே, முடிஞ்சதா?”

கண்களைப் பார்க்காமல் காபியை வாங்கிக்கொண்டேன். ஸ்கிப் செய்வது புரிந்தவளாய், சில நொடி தாமதத்தில் இடவலமாய் தலையாட்டினாள். கல்லூரி தொடங்கி அலுவலகம் வரையிலான ஏழு வருட நட்பு, சம்பிரதாயக் கேள்விகள் பற்றிய எந்த கோபித்தல்களுமின்றி பதிலளித்தது.

“மெட்டீரியல் லிஸ்ட் இன்னும் வரல, வந்ததும் அப்ரூவல்க்கு சப்மிட் பண்ணனும். நீ எப்ப வருவ?”

“வரணும்”

உரையாடலுக்கான வேகத்தடை என்பது பதில்களின் லாவகங்களைப் பொருத்தே வாய்க்கிறது. கோப்பையின் செஸ்போர்ட் கட்டங்களை ஆள்காட்டி விரலால் அளவெடுத்துக்கொண்டிருந்தேன். மனநிலையைவிட, மெளனத்தை சமன்படுத்தத்தான் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

“எப்பவாவது தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கியா மஹிமா?”

காபிச் சுவையில் மூழ்கியிருந்தவள் சட்டென நிமிர்ந்தாள். சிரித்தேன்.

”அறைஞ்சேனா பாரு, லூசாடீ நீ? அப்படியென்ன குடிமுழுகிப்போ….” என்றபடி கை ஓங்கியவளைப் பாதியிலேயே நிறுத்தினேன்.

”அம்மா தாயே, விளையாட்டுக்குத்தான் கேட்டேன். ஆரம்பிச்சுடாத”

முகவாட்டத்தை வைத்தே என்ன மாதிரியாக உழன்று கொண்டிருக்கிறோம் என்று வெகுசிலரால் மட்டுமே கணிக்க முடிகிறது. மஹிமா அதில் தேர்ந்தவள். அதோடு, “உனக்கா இப்படி!” என்கிற உச்சுக்கொட்டுதல்கள் ஏதுமின்றி, ”வீட்டுக்கு வந்துதொலையேன்” என அதிகாரமாய் கோபித்துக்கொண்டது ஏனோ பிடித்திருந்தது. ஓங்கியதோடு நின்றிடாமல் அடித்திருக்கலாம் என்கிற ஏமாற்றத்தைத் தேற்றிக்கொண்டேன்.

”கௌசி, கோபப்படாம பதில் சொல்லு”

நிச்சயம் கோபமூட்டக்கூடிய கேள்வியென்று தெரிந்த ஒன்றைத்தான் இப்படியான அடைமொழியோடு ஆரம்பிப்பார்கள்.

”அதுக்கப்புறம் மதிவாணன் பேசினாப்லயா?”

மெல்லிய சூடொன்று தலைக்கேறியது. இதைத்தான் கேட்கப்போகிறாள் என்று தெரிந்திருந்தும், வேகமாய் புருவம் சுருக்கி எரிச்சலை வெளிப்படுத்தினேன்

“மஹிமா ப்ளீஸ்”

பேசினானா என்பதையும் பேசினாரா என்பதையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியவளின் ஆதங்கம் புரிந்தது.

”நீ இப்டி உடைஞ்சு உக்காந்துருக்குறதைப் பார்க்குறதுக்கு சத்தியமா முடியல கௌசி, இன்னொரு முறை பேசிப்பாரேன்”

”பிரியத்தை பிச்சையா வாங்க முடியாது மஹிமா”

எதுவும் சொல்லாமல் காலிக் கோப்பைகளை எடுத்துச் சென்றவளைப் பரிதாபமாகப் பார்த்தேன். தேற்றப் போராடும் ஒரு நட்பின் இயலாமை அதிகபட்சம் அழுது முடிக்கட்டுமெனவாவது எழுந்து செல்லும்.

பறவைகள் கூடுகளுக்குத்  திரும்பிக்கொண்டிருந்தன. ‘கூடடைதல்’ என்பதை நினைக்கும்போதே ஏன் இத்தனை சலிப்பாய் இருக்கிறதென யோசித்தபடியே, ”லேட்டாகுது, கிளம்புறேன் மஹிமா” என்றவாறு கைப்பையை எடுத்தேன்.

”எல்லாம் சரியாகிடும், மனசைப் போட்டுக் குழப்பிக்காத”

தோள் தொட்டவளை நிமிர்ந்து பார்க்காமலே ”எதுவுமே சரியாகாதுங்குற தெளிவு மட்டும் மிச்சமிருக்கு” என்றேன்.

கேட்பதற்கோ சொல்வதற்கோ ஏதுமற்ற உரையாடல்களை நகர்த்துவது கொஞ்சம் சிரத்தையாகத்தான் இருந்தது. ‘கடந்து வா’ என்பதுபோல் அத்தனை சுலபமாயிருப்பதில்லை கடந்து வருவது.

பேருந்து நிறுத்தம்வரை கையைப்பற்றிக்கொண்டு ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தாள். வாழ்க்கைக்கான தத்துவச் சுரங்கங்களை யாராவது வெடிகுண்டு வைத்துத் தகர்த்தால் நன்றாக இருக்கும்.

டிக்கெட்டையும் மீதிச் சில்லறைகளையும் பத்திரப்படுத்தியபடி ஜன்னல்பக்கம் பார்வையைச் செலுத்தினேன். இதே போன்ற ஒரு பயணம், இதே போன்ற ஒரு நாள், இதே போன்ற ஒரு பாடல் என்று எல்லா ‘இதே போன்றும்’ ஏதாவதொன்றை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் அன்றாடத்தின் பெருஞ்சாபம்.

”ஒரு போன் பண்ணி சாப்டீங்களானு கேட்டியா? இதுவே உங்கம்மாவா இருந்திருந்தா இப்படி விட்ருப்பாளா?”

செருப்பை அவிழ்ப்பதற்கும் உதறுவதற்கும் நடுவிலான நூலிழை வித்தியாசம் தான் மனநிலைக்கான அச்சு அசல் பிரதி. மூச்சிரைக்கப் பேசிவிட்டு உள்ளே சென்றவரிடம் “கேட்டேன்ல” என்கிற பதில் எவ்வித சமாதானத்தையும் தந்திருக்காது.

மனிதர்கள் ஏன் இவ்வளவு சுயநலமாய் யோசிக்கிறார்கள்? மனிதர்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள்? ஒருவரை இழப்பதற்கும் பிரிவதற்குமான வலிகளை ஏன் ஒரே மாதிரியாக வெளிப்படுத்துகிறார்கள்? நிச்சயம் திரும்பக்கிடைக்கும் எனத் தெரிந்த ஒன்றிற்கென எதற்காகக் காத்திருக்கிறார்கள்? திரும்பவே முடியாத ஒன்றிற்காகவும்.

புடவையை மாற்றிக்கொண்டு பாலை அடுப்பில் வைத்தேன். இதே அடுப்படியில் தான் இருபது நாட்களுக்கு முன், நீலம் பாய்ந்த உதடுகளுடன் கண்கள் சொருக அம்மா விழுந்துகிடந்தாள்.

”இந்த விக்ஸை உள்ளங்கால்ல தேய்ச்சுவிடுங்க, நான் வண்டியை கூட்டிகிட்டு வரேன்”

”ஜெயா.. ஜெயா…”

”சாவகாசமா அழுதுக்கலாம், சொன்னதைச் செய்ங்க”

அரக்கத்தனமாய் இருப்பதென்பது மனிதர்களுக்குக் கைவந்த கலை, அதிலும் அடுத்தவர்கள் அழுவதைத் தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பதென்பது…

”அழுது முடிச்சிட்டீங்களா? இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க, டாக்டர் கேக்குறாங்க”

நடுங்கும் விரல்களால் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தவளின் கைகளைப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தவரைப் பார்க்க பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

”ஒரு வாரம் கூட்டிகிட்டு போறேன். எப்படியோ சமாளிங்க”

”ஒரு மாசம்கூட இருந்துட்டு வரட்டும் மாமா, நல்லானா சரி”

எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடக்கூடிய அழுகையொன்றைச் சுமந்துகொண்டிருப்பவர்கள், வீடு வந்து சேரும்வரைகூட காத்திருப்பதில்லை. “என்னவோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி அழுதுகிட்டு கிடக்காரு” ரயில் நிலையத்தில் அத்தை தலையிலடித்துக்கொண்டாள்.

எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கசிந்துகொண்டிருக்கும் அன்பிற்கு, அழுவதைத் தவிர வேறேதும் தெரிவதில்லை. ஒரு செயல், பழக்கமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் நூற்றி இருபது நாட்கள் தேவைப்படுமாம். பிரியமானவர்களைப் பிரிந்து பித்துப்பிடிக்க இரண்டே நாட்கள் போதுமாயிருக்கிறது.

பாதியாகச் சாற்றப்பட்ட கதவின்வழி, கட்டிலில் படுத்திருந்தவரின் கண்களை அந்த அடர் இருட்டு மினுக்கியடி காட்டிக்கொடுத்தது. நிச்சயம் உறங்கியிருக்க மாட்டார்தான், பரிதவிப்புகள் ஒருபோதும் கண்ணயர்வதில்லை.

முகம் கழுவிக்கொண்டு அயர்ச்சியாய் சோபாவில் சாய்ந்து கண்கள் மூடினேன். மின்விசிறி கன்னத்து ஈரத்தைக் காயவைத்துக் கொண்டிருந்தது.

“உன் ஸ்மெல் எனக்குப் பிடிச்சிருக்கு மதி”

சட்டைக் காலரை நுகர்ந்தபடி கூறியதும் சிரித்துக்கொண்டான்.

“பொதுவா அப்பாவோட வாசனை பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். மனசுக்கு நெருக்கமா உணரும்போது, அந்த ஆணை சட்டுனு பிடிச்சுப்போகும். எங்கிட்ட உன் அப்பா வாசனையின் சாயல் இருக்கோ என்னவோ!”

“அய்யோடா.. அவ்ளோ பலகீனம் கிடையாது நான்”

“ஒரு உண்மை சொல்லவா?”

‘என்ன’ என்பதாய் அண்ணார்ந்தேன்.

“தன்னை தைரியசாலி மாதிரி வெளிப்படுத்திக்குற பெண்கள், உள்ளுக்குள்ள ஒரு அடைபடுதலுக்காக ஏங்குவாங்க. அதிகபட்சம் ஒரு தலைவருடல் கிடைச்சா போதும், கோழிக்குஞ்சு மாதிரி சுருண்டு போய்டுவாங்க. அடிப்படைல இவங்க நிறைய இழப்புகளை சந்திச்சிருக்கணும், அல்லது எதுவுமே கிடைக்காம இருந்துருக்கணும். அழுதுடுவோமோங்குற பயம் தான் ஒரு திமிருக்கான காரணம்”.

“ஹும், சரி என்னை எந்த கேட்டகிரில சேர்ப்ப?”

“ஒரே வார்த்தைல சொல்லிடலாம்”

“சொல்லேன் பாப்போம்”

“ஒரு ஆணோட கக்கத்துச் சூட்டுக்குள்ள புதைஞ்சுக்கணும்னு ஏங்கிச்சாகுறவ நீ”

அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்டது. நினைவுகளின் பாரம் ஆக்ஸிஜன் மீது படர்ந்து திணறடிக்க, சோபாவிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஜீரோவாட்ஸ் தன் மஞ்சள் நிறத்தை சுவர்களில் நிரப்பிக்கொண்டிருந்தது.

”கௌசல்யா?”

‘கௌசி’ என்பதிலிருந்து, ஏதாவது முக்கியமாகப் பேசவேண்டுமானால் மட்டுமே அப்பாவிடமிருந்து முழுப்பெயருக்கான அழைப்பு வரும். ஒரு கனத்த உரையாடலுக்குத் தயாராகியபடி அறையை வெளிச்சமாக்கினேன். கடிகாரம், இருள் நீங்காத அதிகாலையெனக் காட்டிக்கொண்டிருந்தது.

”நெஞ்சடைக்கிறாப்ல இருக்கு, கொஞ்சநேரம் வெளில உக்காருவோமா?”

தண்ணீர் வேண்டுமாவென்றதை மறுத்துவிட்டு கதவு திறந்து வாசலுக்குச் சென்றவரின் நடையில் எதுவோ குறைந்திருந்தது. பிரியமானவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போது உள்ளுக்குள்ளிருந்து எதையோ பெயர்த்தெடுத்துச் சென்றுவிடுகிறார்கள். திண்ணையில் அமர்ந்து சுவற்றிற்கு முதுகைச் சாய்த்தவர் முகத்தில் எந்தப் பிரஞ்கையுமில்லை.

”வளர்பிறை போலருக்கு, நல்ல வெளிச்சம்” என்றபடி உட்காரச்சொல்லி செய்கை காட்டினார். ஒருபோதும் நிகழ்த்திடக்கூடாதென்கிற விசும்பல்களைக் கையில் வைத்துக்கொண்டு அருகில் அமர்ந்தேன். ‘அருகே’ என்கிற அந்தப் புள்ளி, தனக்கான இடைவெளியில் இரண்டு ஆட்களை நிரப்பிக்கொண்டது. ஆறுதலுக்கு அவசியப்படாத அழுகையொன்றை இருவரிடத்திலும் பத்திரமாய் வைத்திருந்தோம்.

துவும் பேசிக்கொள்ளாத குமைதலை எத்தனை நேரத்திற்குத் தாக்குப்பிடிப்பதென்கிற கணக்கீடுகளில் தோற்றவளாய், அலைபேசியை எடுத்து சென்ற முறை கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்த வீடியோவை ஓடவிட்டு, இடதுபக்க வாகிற்கு ஏற்றாற்போல தொடுதிரையைத் திருப்பினேன்.

கூட்டத்தில் பேசிக்கொண்டே கவனியாது தனித்தனி படகில் ஏறியவளை, அந்த முக்கால் மணி நேரமும் ”ஜெயா.. இந்தப் பக்கம் திருப்பச்சொல்லு, பயப்புடாம் உக்காரு, இந்தா பின்னாடியே வந்துகிட்டு இருக்கேன். அந்தப் பக்கம் மரம் இருக்கு பாரு, வலது பக்கம் திருப்பச்சொல்லு, மெதுவா போகச்சொல்லு” என்றபடியே பயணித்தவரை, ஒலி ஒளியாய் காட்டிக்கொண்டிருந்தது திரை.

”ஏன் கழுத விட்டுட்டு ஏறிட்ட?” என்று தாவிக்குதித்து கைகளைப் பற்றிய அந்த கடைசி நூற்றிப்பதினேழு வினாடி காணொளியை, அழுகிறாரா என்கிற கண்காணிப்பிற்கும் அழுவார் என்கிற எதிர்பார்ப்பிற்கும் நடுவிலான வெற்றுவெளியில், எந்தச் சலனமுமின்றி பார்த்துக்கொண்டிருந்தார்.

”பாவம் ரொம்ப பயந்துட்டா, அடுத்தமுறை ஒரே படகுல ஏறணும்”

“ம்”

”போன் பண்ணிக் குடுக்குறியா???”

“….”

“இல்லனா வேணாம் விடு, தூங்கிகிட்டு இருப்பா, ரெஸ்ட் எடுக்கட்டும்”

“….”

“பேசணும்போல இருக்கு”

திரையிலிருந்து நகர்த்தாமல் கெஞ்சிய கண்களை, கொஞ்சமும் பிசகாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். ஏனோ மதிவாணனின் பழைய குறுஞ்செய்திகளைப் படிக்கவேண்டும் போல் இருந்தது. ஞாபகங்களுக்குத்தான் எத்தனை முகங்கள்!

”கொஞ்ச நேரம் படுக்குறீங்களா?” என்றவாறு அலைபேசியை இருளாக்கினேன்.

”இது ரெண்டாவது தடவை”

எழுவதற்கு ஆயத்தமானவள் குரலின் திசைக்குத் திரும்பி, ”என்னது” என்றேன்.

”இதுக்கு முன்னாடினா உனக்கு மூணு வயசிருக்கும்போது போனா, அதுக்கப்புறம் இப்பத்தான் போயிருக்கா”

அடர் மௌனத்திற்குப் பிறகான உடைதல் என்பது அத்தனைக்கும் தயாராயிருக்கும் இறுக்கத்தின் தளர்வு. எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

”என்ன நடந்துச்சுனெல்லாம் அப்ப யோசிக்க முடியல. அவ இல்லங்குறது மட்டும்தான் நின்னுச்சு. மன்னிக்கிறதுக்கோ மன்னிச்சுக்கோனு சொல்றதுக்கோ ரெண்டுபேருக்குமே மனசில்ல. தனியா இருக்க பயந்துகிட்டு தேடிப்போறது வேற. தனியா இருந்து என்னத்த சாதிக்கப்போறோம்னு தேடிப்போறது வேற. எல்லாமே முடிஞ்சுபோச்சுனு நடுவீட்ல நின்னு கத்தும்போது அவளோ நானோ மறுத்துப்பேசல”

மங்கலாய் ஞாபகத்தில் இருந்தாலும், எக்காரணத்தைக் கொண்டும் பேச்சு தடைபட்டுவிடக்கூடாதென்கிற எச்சரிக்கையுடன் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன்.

”மனுச வாழ்க்கையே அப்படித்தான் கௌசிமா, திடீர்னு எல்லாமே வேணும்னு தோணும், திடீர்னு எதுவுமே வேணாம்னு தோணும். ஆனா போகும்போது ஒரு உலுக்கு உலுக்கிட்டுத்தான் போகும். பிடிச்சதா, தேவைப்படுறதானு வரும்போது தேவைப்படுறதுதான் முன்னாடி நிக்கும். அன்னைக்கு சூழ்நிலைக்கு எதையும் பெருசாக்கி ஒன்னுமில்லாம செஞ்சுடக்கூடாதுங்குறது மட்டும் தேவையா இருந்துச்சு”

பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஜாடியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார். மொபைல் நோட்டிபிகேசன் வெளிச்சத்தை அவசரமாய் கவிழ்த்தி வைத்தேன். மிகச்சன்னமாய் செருமிக்கொண்டார்.

”எல்லாமே அவங்கதான்னு இருந்தாலும் விட்டுட்டு இருந்தா நிம்மதியா இருப்பாங்கன்னா, நின்னுகிட்டே இருக்குறதுல என்ன பிரயோஜனம் சொல்லு? இருந்துட்டுப்போகட்டும்னு வந்துட்டேன்”

குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை வலுக்கட்டாயமாக விழுங்கிக்கொண்டார். தொண்டைக்குழி வலித்தது போலிருந்தது.

”முழுசா ஒரு வருசம், மூஞ்சியைக்கூட பாக்கல, உன்னைய பாக்க வரும்போதுகூட கண்ணு அவளைத்தான் தேடும், அகப்படமாட்டா. திடீர்னு ஒரு நாள் பெட்டியோட வாசல்ல நின்னா, விறுவிறுனு உள்ள வந்து காபி போட்டுக்குடுத்துட்டு மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்னா, கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு…. அவளுக்கு ஒன்னும் ஆகிடாது, நம்ம சாமி இருக்கு”

அதற்குமேல் கேட்பதற்கோ சொல்வதற்கோ ஏதுமில்லை என்பதுபோல பெருமூச்சு விட்டவரிடம், காரணங்கள் குறித்து எந்தக் கேள்வியையும் முன்வைக்கத் தோன்றவில்லை. ‘இதுவாகத்தான் இருக்கும்’ என்கிற கணிப்புகளோடு முடித்துக்கொள்கவதே சில சமயம் போதுமானதாய் இருக்கின்றன.

இருவரின் கவனத்தையும் சட்டென ஒருபுள்ளியில் குவித்த அலைபேசிமணிக்கு ஆயுசு நூறு. தொடுதிரையின் பச்சை நிறத்தை உயிர்ப்பித்து அவரிடம் நீட்டினேன். குழப்பமும் பதட்டமுமாய் “ஹலோ” என்றவரின் முகத்தில் கொஞ்சங்கொஞ்சமாய் உற்சாக ரேகைகள் படர ஆரம்பித்தன.

பேசி முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு ”என்ன சொன்னாங்க?” என்றேன்.

”அஞ்சு மணி ட்ரெயினுக்கு வர்றாளாம்” ஆசுவாசமாய் பின்னுக்குச் சாய்ந்தார்.

திருவிழாக் கூட்டநெரிசலில் கைகளை நழுவவிட்ட குழந்தை, தாயின் குரலுக்கு அழுதுகொண்டே ஓடிவருவது போல இருந்தது.

அதுவரையிலான அத்தனையையும் பின்னுக்குத்தள்ளி, ”காபி சாப்பிடுறீங்களா?” என்றேன், சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

”வெந்நீர் போடுறியா? ஷேவ் பண்ணிட்டு வந்துடுறேன்”.

————

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button