கட்டுரைகள்
Trending

இனவெறிப் படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!– ப.தனஞ்செயன்

பல நூற்றாண்டுகளாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் கேட்டது. “என்னால் சுவாசிக்க முடியவில்லை. ப்ளீஸ் காலை எடுங்கள்.என்று தன் நெஞ்சுப் பகுதியில் சிக்கியிருந்த போலீஸ் ஒருவரின் காலை எடுக்கச் சொல்லி நடந்த  போராட்டத்தில் அடங்கிப் போனது அந்தக் குரல்.

அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் எனும் 46 வயது மதிக்கத்தக்க ஆணின் குரல்தான் அது. அந்த கருப்பின மனிதரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தது அமெரிக்க போலீஸ். சரி அவர் அப்படி என்னதான் தவறு செய்தார்? தான் வழக்கமாக செல்லும் கடை ஒன்றில் சிகரெட் வாங்கியதற்கு கொடுத்த பணம் கள்ள நோட்டு என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முறையாக நீதி மன்றத்தில் ஆஜார் செய்யப்படாமல், அமெரிக்க போலீஸ் ஒருவரின் இனவெறிக்கு பலியாகிப் போனார் ஜார்ஜ் ஃபிளாய்ட்.

ஜார்ஜ் ஃபிளாய்ட்

ஆனால் இதன் பாதிப்பு ஒட்டுமொத்த அமெரிக்க அரசையே நிலைகுலையச் செய்திருக்கிறது. ஆண்கள், பெண்கள், வெள்ளை நிறத்தவர், கருப்பு இனத்தவர் என அனைவரும் இந்த ஊரடங்கு காலத்தில் திரண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதலில் இந்தப் போராட்டங்கள் ட்ரம்புக்குச் சொந்தமான ட்ரம்ப் டவர் முன்னால் நடந்து வந்தது.

இந்த சூழல் இப்பொழுது மாறி, அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் போராட்டங்கள் பற்றி எரிகிறது. இனவெறிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஊரடங்கை மீறி ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கனடா பிரதமர் ஜன்ஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவில் பங்கேற்றது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலையில் இனவெறியர் என எழுதி எதிர்ப்பு வலுக்கிறது. இது மட்டும் இல்லாமல் 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த எட்வர்ட் கோல்ஸ்டன் என்பவரின் சிலை கீழே தள்ளப்பட்டு, ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தால் அதிகாரங்கள் ஆடிப் போய் இருக்கின்றன.

ஜார்ஜ் பிளாய்ட் மேல் வேறு எந்த வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவரைத் தாக்கிய போலீஸ் மேல் பல்வேறு துப்பாக்கி தாக்குதல் மற்றும் வழக்குகள் உள்ளது கவனிக்கத் தக்கது.வலதுசாரி சிந்தனையாளர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்போராட்டம் அடங்கவில்லையென்றால் சுடுவோம்என்று பதிவிட்டிருப்பது அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்பதையும், தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே இந்தத் தாக்குதல் வெறி என்றால் மற்ற நாடுகளின் நிலை என்ன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

பல்வேறு மக்களும் போராட்டங்களில் கலந்து கொண்டாலும், ஜார்ஜ் ஃப்ளாய்டைக் கொன்ற போலீஸ்காரனின் மனைவி இனிமேல் மனிதாபிமானமற்ற அந்தப் போலீஸ் உடன் தான் வாழப் போவதில்லை என்று கூறியிருப்பது அந்த நாட்டு ஒட்டுமொத்த பெண்களுக்குமிடையே இனபேதமற்ற நல்லுறவை வளர்க்க வழி செய்கிறது. அப்படிச் சொன்ன பெண்ணை புரட்சிப் பெண்ணாக நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஆபிரகாம் லிங்கன் 1863ல் கருப்பின மக்களின் விடுதலைக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைக் கொண்டு வந்தாலும் பின்னாளில் 1865 ஏப்ரல் 14ம் தேதி வில்கெஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று உலகமே ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன் இறந்து விட்டான் எனக் கண்ணீர் வடித்ததும், அவர் கருப்பின மக்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

“இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்” என்று கூறிய மார்ட்டின் லூதர் கிங், நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் நிலஉரிமை மற்றும் வாக்குரிமை பெற்றுத் தர அவர் போராடியதும், “எனக்கொரு கனவுஎன்ற அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவும் அமெரிக்க வரலாற்றின் திருப்பு முனையாக இருந்தது. அவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து இன்று வரை கருப்பின மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன், இனச் சமத்துவத்தை நிலை நாட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து இருப்பது, வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்கா கருப்பின மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதயே காட்டுகிறது.


மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு இன்னும் நிறைவேறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஜார்ஜ் பிளாய்டின்,மூச்சுவிட முடியவில்லை” என்கிற கடைசிக் குரலில் ஒட்டுமொத்த கருப்பின மக்களும் இனியாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும். நாமும் இனம், மதம் தாண்டி மனித நேயத்துடன் துணை நிற்போம் அவர்களுக்கு.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்க்கு எனது வரிகள்

“வெட்டப்பட்ட உன் சுவாசத்தில்தான்
கருப்பின மக்களின்
வாழ்கை துளிர்த்து தழைக்கப் போகிறது
நூற்றாண்டுகள் கடந்த
இனவெறிக்கு முற்றுப்புள்ளிதான்
உன் பெயர்
நீ சுவாசித்த காற்றுக்கு இன்னுமும்
நிறம் ஏற்றிப் பார்க்க முயலுகிறது
அதிகாரம்
பூமியெங்கும் ஒரே காற்று
பூமியெங்கும் ஒரே இரத்தம்.
வேறுபாடின்றி திரண்ட
உலக மக்களின் குரல் இனிமேல்
இப்படித்தான் கேட்கப் போகிறது.”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button