லூசி
மாயவித்தைக்காரன்
தன் தொப்பியில்
பார்வையாளர்களின் கண்களின்
இருளை வைத்து
ஒளியை எடுக்கிறான்
அது ஒரு முயலெனப் பரிணமித்து
யுகங்கள் கடந்து ஓடி
ஆதிப் புல்வெளியில் திரிந்த
லூசியின் கால்களில் சேர்ந்து
அவள் பார்த்தவுடன்
மறைந்து போன கணத்தில்
நிகழ்ந்தது
உண்மையின் மாயாஜாலம்.
***
ஒரு தையற்காரனின் நாட்குறிப்பு
இது உன் சொற்களின் சட்டை
நீயே அளவெடுத்து
நீயே தைத்துக் கொள்கிறாய்
உனக்குக் கச்சிதமாகப் பொருந்தும்
அந்தச் சட்டையை நீதான் அணிய வேண்டும்
ஆனால் என்னை அணியச் சொல்கிறாய்
எனது விருப்பம் உனக்கு முக்கியமில்லை
வலுக்கட்டாயமாக எனக்கு அணிவிக்கிறாய்
பொருந்தவில்லை எனக்கு
கிழித்தெறிகிறேன் சட்டையை
சபை நாகரிகம் தெரியவில்லை என்கிறாய்
எனக்கான சட்டைக்கு அளவெடுக்கிறேன்
அப்போது உன் காதுகளை
நீயே தைத்துக்கொண்டிருக்கிறாய்
சட்டை எனக்கு எவ்வளவு கச்சிதம் என்றும்
நீ பார்க்கவில்லை
சபைகளின் கொடிகளில் காய்கிறது
என் சட்டை.
*****
நான் ஒரு இண்டியானா ஜோன்ஸ்
புதையல்
எல்லோருக்கும் கிடைப்பதில்லை
இருந்தும் என்
சாகசப் பயணங்களை நிறுத்துவதில்லை
அத்தனைப் பலிகளுக்குப் பிறகும்
என் வாழ்நாளைக் கேட்கிறது அது
அத்தனைப் பொறுமையில்லை எனக்கு
நாளையே புதையல் கிடைத்தால்
நன்றாக இருக்கும்
என்னிடம் எப்போதும்
புதையல் அடையும்
வரைபடம் இருக்கிறது
வழி இல்லை.
***
இரவல் புத்தகம்
உன் அன்பையே தந்து
புத்தகம் மட்டும்
இரவல் வாங்கிப் போகிறாய்
ஞாபகார்த்தமாக
என்னிடம் இருப்பது
புத்தக அலமாரியில்
ஒரு வெற்றிடம்.
*****
ஒரு பெசிமிஸ்டின் கதை
என்னிடம்
எப்போதுமுள்ளது
ஒரு பாதி காலியான
கண்ணாடி கிளாஸ்
எவ்வளவு ஊற்றினாலும்
ததும்பி வழிகிறதென
நினைத்து உங்களுக்கு
அருந்தத் தந்துவிடுகிறேன்
உங்கள் கைக்குப் போன பிறகே
விரிகிறது
நிரம்பாத வெளியின் பிரபஞ்சம்.
அந்த வெளியை
இட்டு நிரப்ப
வானை உலுக்கி
பொல பொலவென விழும்
நட்சத்திரங்கள் வேண்டும்.
இருக்கட்டும் இருக்கட்டும்.
முதலில்
அந்தப் பாதி நீரை வைத்து
கண்ணாடி கிளாசை
ஒருமுறை
கழுவிக் கொள்கிறேன்.
*******