இணைய இதழ் 109கவிதைகள்

ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மகிழம்

தினமும் தன் வீட்டின் பின்புறமுள்ள
கல்லறைக்கு மலர்கள் கொய்து வந்து
தூவுகிறாள்மூதாட்டி
அவளுக்கென மலரும் மலர்களுடன்
மலர்மொழியில் பேசியபடியே மலர்களைக் கொய்வது
அவள் வழக்கம்
மரித்த கிழவன் மீது கிழவிக்கு எவ்வளவு காதல்
எனப் பேசிச் சிரிப்பார்கள் உள்ளூர்வாசிகள்
மனிதர்களிடம் பேசுவதை அவள்
நிறுத்தி வருடங்கள் பல கடந்துவிட்டன
அவளும் மலர்களும் மட்டுமே வசித்த
அந்த வீட்டில்
அந்தியொன்றில் மரித்துக் கிடந்தாள் மூதாட்டி
வீட்டின் பின்புறக் கல்லறை அருகே அடக்கம் செய்ய
எடுத்துச் சென்றபோதுதான்
கல்லறை வாசகத்தைக் கண்டார்கள்
ஊர் மக்கள்
அதில் அவள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது
நேற்று அவள் தூவிய மலர்கள்
வாடிய பின்னும் வாசம் வீசிக்கொண்டிருந்தன.

***

உயிரி

தன்னைத் தானே புசித்துக்கொள்ளும்
உயிரியை யாருக்கும் தெரியாமல்
வளர்த்து வருகிறாள்
அது
அவளது படுக்கையறைக்குள் மட்டுமே
வசிக்கிறது
அதன் பிசுபிசுத்த உடலை அவ்வப்போது
வருடிக்கொண்டே உறங்கிப் போவாள்
சில நேரங்களில் அவளது
மார்பின் கதகதப்பில் அதுவும்
உறங்கிக்கொள்ளும்
கோடைகள் பல கடந்தும் அவளை விட்டுப் பிரியாத
உயிரி
ஓர் மழைநாளின் இரவில்
மறைந்து போனது
அன்று
அவள் அதிகமாய்ப் புன்னகைத்தாள்.

***

நதி

உன் நதியை நீ
தொலைக்கும்போதுதான்
கூழாங்கற்கள் உனக்குக் கிடைக்கும்
என்றாள்
யாரோ தொலைத்த நதியின்
கூழாங்கற்கள் நாம் என்றேன்
கரம் பற்றிக்கொண்டு அருகருகே
அமர்ந்திருக்கிறோம் நிச்சலனமாய்.

svprajesh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button