அபூர்வ மலர்
அன்னத்தின் உடல் போர்த்தி
அணைத்திருக்கும் சிறகு மாதிரி
சுருள்சுருளாய் அடர்ந்த
அப்பாவின் நரைமுடியை
சுற்றியிருக்கும் தலப்பா மீது
எப்பவும் பொறாமை
அவரது குட்டிநாய்க்கு,
வாலை வாலை ஆட்டினாலும்
நாய்க்கு வாய்த்தது காலடிதானே?
நேற்று அப்பாவை முற்றத்தில்
நீட்டிப் படுக்க வைத்து
நாடிக்கட்டு கட்டியிருந்தது
வேறேதோ ஒரு புதுத்துண்டு
கொடியிலேயே கிடந்து
அப்பாவையே தேடி
அசைந்து அணத்துகிற
துண்டின் மொழி
நாய்க்கு மட்டுமே புரிகிறது
துண்டின் ஒவ்வோர் அசைவுக்கும்
வெள்ளை நிழலாகி
வாலசைத்து நிற்கிற குட்டி முகத்தில்
துக்கம் தாளாமல்
குதித்து வீழ்கிற துண்டுக்கு
நாயாலும் தர முடிகிறது இப்போது
வெண்மயிர் ஒத்தடம்…
பதிலுக்கு எதைத் தரும் துண்டு?
அறுபத்தெட்டு வருடம்
பூத்துக்குலுங்கிய மரத்தின்
கட்டக்கடைசி
அபூர்வ மலரின் வாசனையாய்
குட்டியின் நாசிக்கு ஏற்றுகிறது
அப்பாவின் வியர்வை வாசத்தை!
***
சொல்லெனும் கல்
எத்தனை காகங்கள்
மிதித்து மிதித்து சொல்லியனுப்பியதோ மின்சாரத்திடம்,
இந்நள்ளிரவின் மின்விசிறி
காக்கை நிறத்துக் காற்றை
இந்த அறைமுழுக்க நிரப்பி
அறையையே ஒரு
கனச்சதுர காகமாக்கியிருக்கிறது
அதன் அடிவயிற்றுச் சூட்டின்
கணப்புக்குள் நானும்
நீ சொன்ன அந்த சொல்லும்
கதகதத்தபடி இருக்கிறோம்
தன்னைத்தான் கொல்ல
முன்பு எறியப்பட்டதென அறியாமல்
இந்த இரவு
தன் முட்டையென நினைத்து
அடைகாக்கிற
உண்டிவில் கல்
உன் சொல்
*******