சிறுகதைகள்

ரம்ஜான் டே(ரே)ஸ் – சாது பட்டு

சிறுகதைகள் | வாசகசாலை

டிரெஸ்ஸிங் டேபிளிலிருந்த வஹீதாவின் போட்டோவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் தன்வீர். திருமணமானப் புதிதில் மூணாறுக்குச் சென்றபோது போடிமெட்டில் எடுத்த புகைப்படம் அது.

வஹீதாவிடம் அவனுக்குப் பிடித்ததே முன்நெற்றியிலிருந்து ஆரம்பிக்கின்ற அவளது முடிதான். கொண்டையை அவிழ்த்தால், இடுப்புக்கு கீழ்ப் படர்ந்திருக்கும் கூந்தல். ஒற்றைக் கையாலே அணைத்துக்கொள்கின்ற அளவுக்க்கு இலாவகமான உடல்வாகு. எந்த அழகுச் சாதனங்களுக்கும் அடிக்ட் ஆகாதவள். இதுவெல்லாம் இயற்கை அழகியாய் அவளை அவனுக்கு காட்டியது.

`நடந்ததெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா?’ என்ற கேள்வி, தொடர் அறிவிப்பாய் அவன் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

“தன்னு, இந்த சண்டே என்னை எங்க கூட்டிட்டுப் போகப்போற?”

“எனக்கு பையன்தான் வேணும். அதுவும் அவன் மூக்கு, உன்னுது மாதிரியே ஷார்ப்பா இருக்கணும்.”

“அடுத்த தடவையாவது மூணாறை முழுசா சுத்திக் காட்டுப்பா.”

கண் மூடினால், அவள் பேசியதெல்லாம் இந்த நொடிவரை அவனுக்கு கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
பால்கனி, மொட்டைமாடி, கிச்சன் என வீட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவளுடைய வாசனையும், இருவரும் அரங்கேற்றிய காதல் காட்சிகளும்தான் கண்முன்னே வந்துசெல்கிறது.

தன்வீர்தான் வீட்டுக்கு மூத்தவன். தங்கை ரேஷ்மாவை மூன்று வருடங்களுக்கு முன்பு உறவுக்காரப் பையனுக்குக் கட்டிக் கொடுத்தார்கள். கும்பகோணத்தில் இருக்கிறாள்.

அப்பா ஜலீலுடைய துணிக் கடை, லிபர்டியில் இருந்ததால் சூளைமேடுதான் இவர்களின் ஏரியாவாக இருந்தது. சிறிய கடை என்றாலும் நல்ல வியாபாரம். பிராண்ட், ஆன்லைன் பர்சேஸ், ஆங்காங்கே அடுக்குமாடி வணிக வளாகம் எனக் காலம் மாறிப்போனதில் வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தது. கடையைச் சிறிய ஹோட்டலாக மாற்றிப் பார்த்தார் ஜலீல்.

போதுமான அனுபவமில்லாததால் நடத்தமுடியாமல் போக, பகடிக்கு விட்டுவிட்டார். அதேநேரம் தன்வீரும் படித்து முடித்து ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். பகடி மூலம் வந்த பணத்தில் கோட்டூரில் லீசுக்குக் குடிபெயர்ந்தனர். மிச்ச பணத்தில் மகளின் திருமணத்தையும் நடத்திமுடித்தார்.

ஏற்கனவே டிரைவிங் தெரியும் என்பதால் அறிமுகமானவர்களுக்கு மட்டும் வெளியூர்களுக்கு ஆக்டிங் டிரைவராகச் சமயம் கிடைக்கும்போது போய்வருவதோடு சரி. மீதி நேரம் வீட்டில்தான் இருப்பார்.

“டேய் தன்னு, உன் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் ராஜேஷ் வந்துருக்காருடா. வெளில வா”

அப்பா, கதவு தட்டிக் குரல் கொடுத்த பிறகே படுக்கையைவிட்டு எழுந்தான்.

“வர்றேன்பா…”

பாத்ரூமுக்கு செல்லமுனைந்தவன், கண்ணாடியில் முகம் பார்த்தான். அழுதழுது முகம் வீங்கியிருந்து. சரியான ஆகாரமின்றி வெளிறிப்போய் பாதியாளாய் அவனைக் காட்டியது கண்ணாடி.
உள்ளே சென்றவனுக்கு அழுகையை அடக்கமுடியவில்லை.

ராஜேஷுடன் ஹெச்ஆர். க்ரிஷ் வந்திருப்பதைப் பார்த்ததும், “வாங்க சார், எப்ப வந்தீங்க ஆன் சைட்லயிருந்து?” என்று விசாரிக்கத் தொடங்கினான்.

“இப்பதான் தன்வீர். அன்னைக்கே டீம் மேட்ஸெல்லாம் சொன்னாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. அதான் வந்ததும் உன்னைப் பாத்துட்டு போலாம்னு ராஜேஷ கூட்டிட்டு வந்தேன்.”

சற்றுநேரம் மெளனமாய் பேச்சற்று இருந்தது அந்த இடம். ஆளுக்கொரு சாயா கொண்டுவந்து அந்த மெளனத்துக்கு இடைவெளி ஏற்படுத்தினாள் அம்மா ஜுபைதா.

“லிசன் தன்வீர், நடந்தது பெரிய விஷயம்தான். கஷ்டமாதான் இருக்கும். கடந்துபோக முடியாதுதான். ஆனா, வேற வழியில்ல. இதுக்குப் பின்னாடி ஏதாவதொரு நல்லது இருக்கும்” என்று அவர் சொல்லிமுடிப்பதற்குள்..

“இனி என்ன நல்லது நடக்கும் க்ரிஷ்”னு அழ ஆரம்பித்தவன், அழுகுரலிலேயே… “அப்படியே நல்லது நடந்தாலும் யாருக்கு என்ன பிரயோஜனம்?”

டவலில் முகம் புதைத்துகொண்டான். மூக்கு, முகமெல்லாம் சிவந்திருந்தது.

என்ன சொல்வதென்று அறியாத ஹெச்ஆர், அவனை அப்படியே அணைத்துகொண்டார்.

***
கமிஷ்னர் அலுவலகத்துக்கு வெளியே செய்தி சேனல்களின் ஒன்றிரண்டு கேரவன்கள், வரிசை கட்டி நிற்பதை பார்த்துவிட்டு, இன்றைய தலைப்புச் செய்தி என்னவாக இருக்குமென்று பாதசாரிகள் முதல் பஸ்ஸில் செல்வோர் வரை, நெற்றி சுருக்கி நோட்டமிட்டவாறு, அவரவர்கள் ஏதோ ஒன்றை கற்பனை செய்தவாறு நகர்ந்துகொண்டிருந்தனர்.

அலுவலகத்துக்கு முன்பு வாகனங்களின் சீரான ஓட்டமின்மையால், பரபரப்பு சம்பவம் நிகழ்ந்த அல்லது நிகழப்போகின்ற சூழல் உருவாகியிருந்தது.

வெளியே புறப்பட்டுவந்த, நடமாடும் நீதிமன்ற வாகனத்துக்கு வழிவிட வேண்டுமென்பதற்காக, சாலை வாகனங்களை செக்யூரிட்டி தடுத்து நிறுத்தியதால் நெரிசல் இன்னும் அதிகமானது.
முறையாக பார்க் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன நிறுத்தத்துக்கென்று தனி இடவசதி. மெயின் கேட்டிலிருந்து ஃபோர்டிகோ வரை சிமெண்ட் சாலை. இடையிடையே பல்வேறு வகையான செடி வகைகள், மரங்கள், பூங்காவைப் போல காட்சியளிக்கும் அப்பகுதியைப் பராமரிப்பதற்கென்று பிரத்யேக பணியாளர்கள் எனப் புதிய கமிஷ்னர் அலுவலகம், அடுக்கு மாடி குடியிருப்பு போல காட்சியளித்தது.

எக்ஸிட் கேட்டுக்கு உட்புறம் பத்திரிகையாளர்கள், யாரையோ ரவுண்டு கட்டியிருந்தனர். கூட்டத்தை விலக்கிய பெண் நிருபர்…

“இப்ப நம்ம கமிஷ்னர் ஆஃபிஸ்லயிருந்துதான் பேசுறோம். இங்க நடிகை மிருதுளா, தர்ணால ஈடுபட்டிருக்காங்க. தான் நடித்துவந்த `நமக்கெதுக்கு வம்பு’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம்கட்ட படவேளை நடைபெற்று வந்தநிலையில், எந்த முன்னறிவிப்புமின்றி படத்தின் இயக்குநர் தனபால், தன்னை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்ததாகவும், தனக்கு இதுவரை எந்தச் சம்பளமும் வழங்கவில்லை எனவும் கூறுகிறார். இது விஷயமாக இயக்குநரை சந்திக்க சென்றபோது, அவரது உதவியாளர்கள், தனபாலை சந்திக்கவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.”

யாரிடமோ போனில் பேசுவது போல தலையாட்டிய நிருபர், மீண்டும் பேச ஆரம்பிக்கையில்…
அலுவலக வாசலில் மாட்டப்பட்டிருந்த டிவியில் தெரிகின்ற பெண்ணும், மைதானத்தில் நின்றுகொண்டு மைக்கில் பேசிக்கொண்டிருக்கின்ற பெண்ணும் ஒரே மாதிரி இருப்பதால், அவள் பேசுவதையே உற்றுப் பார்த்துகொண்டிருந்தது ஒரு கூட்டம்.

கமிஷ்னர் என்று பொரிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற இன்னோவா, போர்டிகோவை அடைந்ததும், படிக்கட்டருகே நின்றிருந்த இரு போலீஸ்காரர்களில் ஒருவர், கதவைத் திறக்க முன்வந்தார்.
கமிஷ்னர் வேணுகோபாலின் வருகையை எதிர்பார்த்து கோப்புகளோடு தயார்நிலையில் சுதர்சன் நின்றுகொண்டிருக்க…

“எங்கயும் போயிடாத இன்னும் பத்து நிமிஷத்துல கெளம்பணும்” – டிரைவரைப் பார்த்து சொல்லிக்கொண்டே காரைவிட்டு இறங்கினார் கமிஷ்னர். பத்து நிமிஷம்னா அரை மணி நேரமாகுமென்று மனதில் கணக்கு போட்டுக்கொண்டது போல காரை ஓரங்கட்ட கியர் போட்டார் டிரைவர் மூர்த்தி.

“சுதர்சன், இன்னைக்கு என்னய்யா பிரச்னை?” என்று கமிஷ்னர் கேட்க,

“சார், நடிகை மிருதுளா ஏதோ இயக்குநர் மேல கம்ப்ளெண்ட் குடுக்கணுமாம். காலையில எட்டு மணிக்கே வந்துட்டாங்க” என்று சுதர்சனிடமிருந்து பதில் வந்தது.

“யோவ், நான் உன்ட்ட என்ன சொன்னேன்? வருஷா வருஷம் ரம்ஜான்ல இந்த பாய் பசங்க ரேஸ் போறது ஜாஸ்தியாயிட்டேயிருக்கு. அத நானே ஃபீல் பண்றேன். பேட்ரலுக்கு முன்னாடியே சம்பவம் நடந்துருக்கு. கண்ட்ரோல் பண்ண கஷடமாயிருக்குன்னு வாலண்டியர்ஸ போட்டு பார்த்துக்கிட்டிருந்தோம்னு நம்மாளுங்க சொல்றாங்க. பர்டிகுலர் டேஸ்லதான் ரேஸ் போறானுங்க. அது எப்ப ஏன் இப்படி நடக்குது என்ன மேட்டருன்னு கண்டுபிடிய்யான்னா, நடிகை, அது இதுன்னு” – சுதர்சனை பேசவிடாமல் ஒரே மூச்சில் முடித்தார் கமிஷ்னர் வேணுகோபால்.

சுதர்சன்தான் கமிஷ்னருக்கு, பி.ஏ., ரைட், லெஃப்ட் சகலமும். கமிஷ்னரின் மூடறிந்து வேலை செய்யும் அதிகாரி. எந்தக் காரியத்தையும் கச்சிதமாக முடித்து வருபவர். சமயங்களில் சுதர்சனை நம்பியே அலுவலகத்தின் முழு கட்டுப்பாட்டையும் ஒப்படைத்துவிடுவார் கமிஷ்னர். நல்ல பாண்டிங் இருவருக்குமிடையில்.

“அதில்ல சார். காலையிலயே ஒரு லைவ் போயிடுச்சு. நீங்க அந்த நடிகையைக் கூப்பிட்டு பேசிட்டிங்கன்னா மீடியாக்காரங்க கெளம்பிடுவாங்க. நான் டீடெய்ஸ்லாம் கலெக்ட் பண்ணிட்டேன் சார்” என்றபோது, கமிஷ்னர் ஒன்றும் பேசாமல் சுதர்சனையே பார்த்துகொண்டிருந்தார்.

இப்போது கமிஷனரின் அறையில் மிருதுளா.

20 நிமிடங்களுக்கு பிறகு மிருதுளா வெளியே வந்ததும், கமிஷ்னரிடம் கையெழுத்து வாங்க ரைட்டர் மாணிக்கம் உள்ளே செல்லும்போது, உடன் சுதர்சனும் நுழைந்துகொண்டார்.
மறுபடியும் டிவியில் மிருதுளா குறித்த நேரலை, ஊமைச் செய்தியாய் ஓட ஆரம்பித்தது.

“சார், இந்த ரெண்டு மூணு வருஷ ரம்ஜான் டேஸ்லதான் பசங்க பைக்ல அதிகமா சுத்துறாங்க. எல்லாமே ஜென்ரலான ஆட்கள்தான், 2016 ல 29 வது நோன்பு நைட், விடிஞ்சா ரம்ஜான் பண்டிகை. லேட் நைட், சர்தார் பட்டேல் ரோட்ல ரேஸ் நடந்துருக்கு. அதுல ஐஐடி பிரிட்ஜுக்கு முன்னாடி ஒரு பையன் இறந்துருக்கான் சார். அடுத்தடுத்த வருஷங்கள்ல ரேஸ் நடந்துருக்கு. சுத்துறாங்க… இஞ்சூரியஸ் மட்டும்தான்.”

சுதர்சனின் பேச்சை சைகையால் நிறுத்த சொல்லிவிட்டு, இன்டர்காமில் டயல் செய்து ஒரு ப்ளாக் டீ கொண்டு வரச்சொன்னார். புதிய அலுவலகத்தில் கேண்டின் உள்ளிட்ட சகல வசதியும் இருந்தது.

“ம்ம்… யு கண்டினியு!”

“மேக்ஸிமம், ஜி.பி.ரோடு, அண்ணா சாலை டு வார்ட்ஸ் மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பீச் ரோடு இங்கதான் அதிகமா பைக்ல சுத்துறானுங்க, ரேஸும் நடக்குது” என்றதும்…

“ஈ.சி.ஆர் பக்கம்?” என்று கமிஷனர் குறுக்கிட்டார்.

“இல்ல, அங்க எதுவும் இல்ல சார். பட் சம் டைம் திரு.வி.க பாலம் டு வார்ட்ஸ் பட்டினப்பாக்கம் ரேஸ் நடத்துறானுங்க. ஆனா, நம்மாளுங்க அதை கண்ட்ரோல் பண்ணிறாங்க.”

“ஓகே. யாரையாவது வச்சு சொல்லிப் பார்ப்போம். இல்லைன்னா, நம்ம ஆக்‌ஷனை எடுத்துற வேண்டியதுதான். அந்த இயக்கம் இந்த இயக்கம்னு இருக்கேயா… யாரையாவாது வரச் சொல்லு” என்று கமிஷ்னர் முடிக்கையில்…

“சார், விசாரிச்ச வகையில இயக்கத்துக்காரங்க ஆளுக்கொரு கொள்கைன்னு பிரிஞ்சதுனால, அரசியல் கட்சி மாதிரி தலைமைக்கு விசுவாசமா இருக்கறவங்கதான் இயக்கத்துல இருக்காங்க. ஆனா, பொதுஜனங்கன்னு பார்த்தா, மசூதில வேலை பார்க்குற இமாம்கள் பேச்சதான் பெருவாரியான ஜனங்க கேக்குறாங்க. இவங்கதான் ரம்ஜான் டேஸ்ல நைட் பிரேயர், ஸ்பீச்னு கண்டக்ட் பண்றாங்க. அதுக்கு வர்ற பசங்கதான் இப்படி சுத்திக்கிட்டிருக்கானுங்க. இமாம்களுக்குள்ளயும் மாவட்ட அளவுல தலைவர், செயலாளர்னு நிர்வாகம் இருக்கு. சென்னையவே ஆறு மாவட்டமா வச்சுருக்காங்க. அவங்கள கூப்ட்டு பேசுங்கன்னு இன்ஃபார்ம் பண்றாங்க சார்” – கொடுத்த வேலையைக் கச்சிதமா முடித்த தொணி சுதர்சனின் பேச்சில் தெரிந்தது.

“அது யாரு? என்ன விவரம்னு கண்டுபிடிச்சு கூடிய சீக்கிரம் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. நான் செக்ரட்ரியேட் வரைக்கும் போய்டு வரேன்.” என்றார் கமிஷ்னர்.

***
முதலிரவு அன்றுதான் முதன்முதலாக வஹிதாவை நேரடியாகப் பார்க்கிறான் தன்வீர். வெளிர் நிறம், வட்ட முகம், எவ்வித பூச்சுச் சாயங்களும் இல்லாத வசீகர முகம். கழட்டி மாட்டப்பட்ட மாலையிலிருந்து வீசும் ஜாதிமல்லி மணம், அவளுடைய மருதாணி கைகளின் மணம் இரண்டும் கலந்து அவனை கிறங்கடித்தது. போதாக்குறைக்கு வாசனைத் திரவியங்களால் ஊறவைக்கப்பட்ட ரோஜா இதழாய் இவள். என்ன அழகுடா என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

“டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துட்றேங்க” என்று கிளம்பியவள், `யாரா இவன் இப்படி குறுகுறுன்னு பாக்குறான். இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பார்த்ததே இல்லையா இவன்” என்ற மைண்ட் வாய்ஸோடு நகர்ந்துசென்றாள்.

நிச்சயத்துக்குப் பிறகிருந்த ஒன்றரை மாத இடைவெளியில் இருவருமே தொலைபேசி உரையாடலுக்குக்கூட இசையவில்லை.

`சிக்கினதும் முதலிரவு சாகசங்களில் இறங்கிவிடுவானா? அல்லது பேசி என்னை புரிந்துகொள்வானா?’ என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு, அவன் பேச ஆரம்பித்தது பெரும் நிம்மதியை தந்தது.

ஸ்கூல்,காலேஜ், அரட்டை, ஊர் சுத்துனது, பிடித்தது, பிடிக்காதது பற்றி பகிரத்தொடங்கினர்.

நீண்ட உரையாடலில் இருவருமே ஒத்த ரசனைக்காரர்கள் என்பத புரிந்துகொண்டனர்.

“வஹிதா, மணி மூணு. இதுக்கு மேல பேச என்னிடம் சக்தியில்ல தூங்கலாமா?” எனக் கேட்க வந்தபோது,
“ஏய், தன்னு, ஸேம் ஸ்வீட்! நானும் உன்னிடம் அதைத்தான் கேட்க வந்தேன்” என்றாள்.

செல்லப் பெயர் சொல்லி அழைத்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அன்று நைட்லேம்பை மட்டுமே அணைத்தான் தன்வீர்.

வஹிதாவின் வீடு சாந்தோம். ஒரே மகள். செல்லமாக வளர்த்த மகளை சிறிய குடும்பத்தில் சென்னையிலேயே கட்டிக்கொடுக்க விரும்பினர் அவளின் பெற்றோர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போல வரன் அமைந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

ஒரு வாரத்துக்குப் பிறகு மூணாறுக்குத் தேனிலவு வாய்க்கப் பெற்றது புதுமணத் தம்பதிகளுக்கு. முதலிரவின் எல்லாக் கலைகளையும் அங்கே அரங்கேற்றிக் கொண்டனர். அதன் பலனாக திருமணத்துக்குப் பிறகான முதல் ரத்தப்போக்கே அவளுக்குத் தள்ளிப்போனது. பிள்ளை பெற்ற பிறகாவது மூணாறைச் சுத்திக் காட்டுப்பா தன்னு” என்று வெட்கப்பட்டாள் வஹிதா.

***
கமிஷ்னர்தான் முதலில் ஆரம்பித்தார், “இந்த அஞ்சு வருஷமாத்தான் இத நாங்க பேஸ் பண்றோம்” என்ற பீடிகையோடு ஆரம்பித்ததும், அதிகாரி என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாமல், வந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பேச்சுவார்த்தை நடத்த கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து வந்த சர்குலர்படி, `இமாம்கள் சபை’ சார்பாக, தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் என ஐந்து நபர்கள் வந்திருந்தனர்.

இதுக்கு முன்னாடி ரம்ஜான் மாசம் அப்டின்னா எங்களுக்கு இவ்வளவு டென்ஷன் இருக்காது. பட் இப்ப எங்களால நிம்மதியா இருக்க முடியல. நைட் ஃபுல்லா பசங்க ரைட் போறானுங்க, ரேஸ் விட்றானுங்க. இதுல மத்த பசங்களையும் கூட்டு சேத்துக்குறானுங்க. இஞ்சூரியஸ் கேஸ் வருஷா வருஷம் கூடிக்கிட்டே போகுது.
பொலிடிஷியன்ஸ் கவனத்துக்குப் போய் அவங்க இதை அரசியலாக்கறதுக்குள்ள எப்படியாவது குறைக்க பார்க்கணும். ஐ மீன் இல்லாம ஆக்கணும். நேத்தெல்லாம் பாத்துக்கிட்டீங்கன்னா நாங்க வாலண்டியர்ஸ் ஏற்பாடு பண்ணி, கண்ட்ரோல் பண்ணவேண்டியதா போச்சு. உங்காளுங்க நீங்க சொன்னா கேட்பாங்கன்னு சொன்னாங்க. ஸோ, அதான் உங்கள வரச் சொன்னேன். நீங்க ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லலாம்.”

இமாம்கள் சபை தலைவர், “சார், முதல்ல உங்களுக்கு நாங்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். இது விஷயமா நிதானமா யோசிச்சு, மீடியா, பிரஸ்னு கூப்பிட்டு அரசியலாக்காம இருந்ததுக்கு. உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. கண்டிப்பா சார்! நாங்க வெள்ளிகிழமை பிரேயர்லயும் அல்லது இன்று இரவுத் தொழுகைக்குப் பிறகும் இது விஷயமா மக்கள்ட எடுத்துச் சொல்றோம். இதுல பெற்றோருடைய பொறுப்பும் இருக்கு. அதையும் நாங்க சொல்றோம்” என்றார்.

“தமிழ் முஸ்லிம்கள் இருக்குற பகுதிகள்ல இந்த மாதிரி நைட் ரேஸ் ரொம்ப குறைவுன்னே சொல்லலாம். ஏன்னா, அந்த மாதிரி ஏரியால உள்ள இமாம்கள் அவங்க மசூதிகள்ல நெறய புரோகிராம் ஷெட்யூல் பண்றாங்க. பட் உருது முஸ்லிம்ஸ் இருக்குற ஏரியால அங்க உள்ள இமாம்கள், மோஸ்ட்லி வடமாநிலத்திலிருந்த வந்தவங்க அப்டிங்குறதுனால சீக்கிரமா பிரேயர முடிச்சுடறாங்க. ஸோ, விடிய விடிய மசூதிக்குள்ளயிருந்து தொழுவது, ஓதுவது இப்படின்னு இல்லாம பசங்க வெளிய சுத்த ஆரம்பிச்சுடறாங்க” என்றார் இமாம்கள் சபையின் செயலாளர்.

இடையில் குறுக்கிட்ட கமிஷனர், “பட்… பப்ளிக்கிட்ட இத நீங்க பொதுவா சொல்லுங்க. லாங்குவேஜ்ஜ மென்ஷன் பண்ண வேணாம்.”

“கண்டிப்பா சார்! அப்புறம் எனக்கு இன்னொரு டவுட்டு! சில குறிப்பிட்ட டேஸ்லதான் பசங்க இப்படி சுத்துறானுங்க. அதுமாதிரி ரம்ஜானுக்கு முன்னாடிகூட ஏதோ ஒரு நாள் இப்படி லேட் நைட் சுத்துறானுங்க. அது என்ன கணக்கு?” என்று தன் சந்தேகத்தை கேட்டார் கமிஷ்னர்.

“நோன்பு ஆரம்பிக்கறதுக்கு சரியா 15 நாட்களுக்கு முன்னாடி இறந்துபோன முன்னோர்களுக்கு மரியாதை செய்கின்ற விதத்தில் ஒரு புரோகிராம் மசூதியில கண்டக்ட் பண்ணுவோம். அப்போதும் நீங்க சொல்ற இஸ்ஷுஸ் இருக்கு. 17வது நோன்பன்னைக்கு கொஞ்சம் லேட் நைட் புரோகிராம் பண்றோம். அதுக்கு பிறகு 27 வது நோன்பு குர்ஆன் இறங்கிய தினமா கடைபிடிக்கிறோம். இந்த நாட்கள்லதான் பெரும்பாலும் பசங்க, மசூதிக்கு வர்ற சாக்குல பைக்ல சுத்துறானுங்க. சமீப காலமா, கடைசி 10 நோன்பலயும் பைக்ல சுத்துறாங்க சார்” என்று விளக்கமளித்தார் இமாம்கள் சபை தலைவர்.

எல்லாவற்றையும் குறித்துக்கொண்ட கமிஷ்னர், “நீங்க உங்க தரப்புலயிருந்து பொதுமக்களுக்கு அறிக்கை, ஸ்பீச்னு குடுங்க. நாங்களும் புரோடக்ட் பண்றோம். அதற்கு பிறகு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.”
கூட்டம் முடிந்ததும் சென்னையிலுள்ள ஐந்நூறுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் இதுபற்றிய விழிப்புணர்வு அறிக்கையை ஒட்டுவதற்கான ஆயத்த பணிகளில் இமாம்கள் சபை இறங்கியது.

***
ராஜேஷ் விஷயத்தைச் சொன்னதும், தன்வீரின் டீம் மேட்ஸுக்கு அதிர்ச்சியாகவும் நம்புவதற்குச் சிரமமாகவும் இருந்தது. கல்யாணமான புதிதிலும், சமீபத்தில் ஹாஸ்பிடலுக்கு செக்கப் போனபோதும் என இரண்டு முறை அவளை அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளான் தன்வீர். கெட் டு கெதர் என்று டீமில் உள்ள அனைவரும் அவன் வீட்டுக்கு வந்துள்ளதால் தன்னுவின் அம்மா, அப்பா தங்கை என எல்லோரையும் தெரியும்.
அன்று தன்வீரை யாரும் நெருங்கவே முடியவில்லை. அவனால் இனி எங்கும் செல்லாதபடி எல்லாத் திசைகளும் இழுத்துச் சாத்தப்பட்டதைப்போல் தனித்து விடப்பட்டவனாய் உணர்ந்தான். அவள் பேசியதையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருந்தான். யாராலும் அவனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சற்றுநேரம் அமைதியாக இருப்பதும், திடீரென பெருங்குரலெடுத்து அழுவதுமாய் இருந்தான். அவனின் ஒப்பாரி, சுற்றியிருந்தோரின் நெஞ்சங்களையும் உலுக்கியது.

வெள்ளிக்கிழமை வந்தாலே வஹிதா குஷி மூடுக்குப் போய்விடுவாள். காரணம், அடுத்த ரெண்டு நாட்களும் தன்வீர் வீட்டில்தான் நோன்பு திறப்பான். அவனுக்காகவே சில பல பதார்த்தங்களை வீட்டிலேயே செய்வாள்.
ஒன்றிரண்டு நோன்பு வைத்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. “இது ஏழாவது மாசம். நீ நல்லா ஹெல்த்தியா சாப்ட்டு குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால்தானே குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்” என்று டாக்டர் அறிவுரை சொன்னதால், நோன்பு வைப்பதை நிறுத்திவிட்டாள்.

நோன்பு கால இரவுகளில் ராயப்பேட்டை, மண்ணடி, திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு ஆகிய ஏரியாக்கள் ஜகஜோதியாய் இருக்கும் என்று தன்வீர் சொல்லியிருக்கிறான். “அதுவும் கடைசி பத்து நாட்கள் சொல்லவே தேவையில்லை. துணிக் கடை, சாப்பாட்டுக் கடை என எல்லோருக்கும் இரவு வியாபாரம்தான். ஜன நடமாட்டம் விடிய விடிய இருந்துகொண்டே இருக்கும். நல்லா சுத்துவோம்” என்று அவன் கல்யாணமான புதிதில் சொல்லும்போதே, “என்னையும் கூட்டிட்டு போ தன்னு” என்று சொல்லி வைத்திருந்தாள்.

அந்த நேரம் இப்போது கைகூடி வந்திருப்பதற்காக தன்வீரின் வருகையை எதிர்நோக்கி இருந்தாள். சுவர்கடிகாரத்தில் மணி 11.30 காட்டியது. இரவு சிறப்புத் தொழுகையை முடித்து அவன் வரும் நேரம். வந்ததும் கிளம்புவதற்கு தோதுவாய் தயாராக இருந்தாள். புர்கா மட்டும் போட்டால் கிளம்ப வேண்டியதுதான்.
வாசலில் டூவீலர் சத்தம் கேட்டதும் கூண்டைவிட்டு பறக்கும் கிளியானாள் வஹிதா.

“ஏய், இன்னும் நீ தூங்கலையா தங்கம்? என்ன இவ்வளவு ஃப்ரஷா இருக்க ஷாப்பிங்கா?” என்று கேட்டவனிடம், அவன் சொன்னவற்றை ஞாபகமூட்டினாள்.

மலர் மருத்துவமனை தாண்டியதும், “ஏன் தன்னு, நம்மள மட்டும் செக் பண்ணல?”

“நான் உன்னை வச்சுக்கிட்டு வீலிங்கா பண்ணப்போறேன். ஃபேமிலின்னு போலீஸ் விட்டுட்டாங்க” என்று அவன் பதில் சொல்லும்போதே, செல்பேசியின் சப்தம் கேட்டு வண்டியை ஓரங்கட்டினான்.

“தம்பி, சஹருக்கு வீட்டுக்கே வந்துடுங்க. ஹோட்டல்ல கண்டதையும் சாப்பிட வேணாம். நீங்க வர்ற வரைக்கும் அம்மா முழிச்சுட்டுதான் இருப்பேன். புள்ள பத்ரம் ராஜா.”

“சரிம்மா, நீங்க தூக்குங்க. என்கிட்ட இருக்கிற சாவிய வச்சு தொறந்துக்குறேன்” என்றான்.

போலீஸிடம் சிக்காமல் இருக்க, எதிர்திசையிலேயே பைக்கில் உறுமியபடி திரு.வி.க. பாலத்தை கடந்துகொண்டிருந்தது இளைஞர்கள் பட்டாளம் ஒன்று.

லைட் ஹவுஸிலிருந்து மெட்ராஸ் யுனிவர்சிட்டி சிக்னல் வரைக்குமுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தடுப்பு போட்டு வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தது காவல்துறை.

ஆங்காங்கே உட்புற சாலையில் பைக்குகளோடு கும்பல் கும்பலாக இளைஞர்கள் கூட்டம் நின்றிருந்தது.

“தன்னு, இவனுக எல்லாம் தூங்க மாட்டானுங்களா? எதுக்கு இப்படி பண்றானுங்க. ரேஸ் போயி கை, கால் ஒடஞ்சுச்சுன்னா யாரு பதில் சொல்வாங்க இவங்க வீட்டுக்கு?”

“சைத்தானுங்க, அவனுங்களா திருந்தணும். பெத்தவங்க பேச்ச கேட்டாதான?” என்று அவளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே, மெட்ராஸ் யுனிவர்சிட்டி சிக்னல் இடதுபுறம் எடுத்து மவுண்ட் ரோட்டை பிடித்தான்.

போலீஸ் பேட்ரல் நிற்பதைப் பார்த்துவிட்ட இருசக்கரம் வாகனம் ஒன்று சட்டென்று திரும்பி, இவன் வந்த திசையிலேயே வேகமாக முறுக்கிக்கொண்டு போனது.

“பரதேசி எப்படிப் போறான் பாரு” என்று திட்டினாள் வஹிதா.

உள்ளுக்குள் பயமிருந்தாலும், வீட்டிலேயே இருந்தவளுக்கு இந்தப் பின்னிரவு ஊர்சுற்றல் சற்று இளைப்பாறுதலாய் இருந்தது. தன்வீரும் அதனாலேயே இந்த இரவிலும் அவளை அழைத்துப்போக ஒத்துக்கொண்டான்.

செல்போன் சப்தம் கேட்டு மீண்டும் வண்டியை ஓரங்கட்டினான்.

“இதோ இப்பதான் ஹோட்டல் பக்கத்துல வந்திருக்கோம். இறங்கிட்டு நானே உன்ன கூப்ட்டு சொல்லலாம்னுதாம்மா இருந்தேன். இல்லம்மா, எதுவும் சாப்பிட மாட்டோம். டீ மட்டும்தான். ஆமா, ஆமா. ஓகே வச்சிடறேன்.”

அடுத்த சில நிமிடங்களிலேயே ஹோட்டலுக்கு எதிர்சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினர். ஹோட்டலிலும் ஹோட்டலைச் சுற்றியும் இருந்த ஜனத்திரள், நண்பகலை ஞாபகப்படுத்தியது.

உணவு பொட்டலத்தை ஒரு கையிலும், டீயை ஒரு கையிலும் பிடித்தவாறு தன்வீரின் பைக்குக்கு அருகிலிருந்த பேட்ரலை நோக்கி, கான்ஸ்டபிள் ரோட்டை கடந்து சென்றுகொண்டிருந்தார்.

ஹோட்டல் வாசலை அடைந்ததும், சஃபாரி உடுத்திய ஒருவர், “பீடா வேணுமா சார்” என்று கேட்க,

“இல்லண்ணா இப்பதான் உள்ளயே போகப்போறோம்” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தன்வீர்.

“வஹிதா, என்ன சாப்பிட்ற?”

“ஏங்க, இந்த கூட்டத்துல மொதல்ல எப்ப இடம் கிடைக்கும்னு பாருங்க. அப்புறம் சாப்பிட்றத பத்தி யோசிக்கலாம்.”

“ஏய், அப்படித்தாண்டி இருக்கும். உள்ள போய் வெயிட்டர்ட்ட சொன்னா அவரு அரேஞ்ச் பண்ணுவாரு.”

எல்லா டேபிள்களிலும் இருக்கை காலியின்றி ஆட்கள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்து ஆச்சர்யபட்டப்படியே தன்வீரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள் வஹிதா.

“ஏங்க?”

“இப்ப என்ன சந்தேகம் உனக்கு?”

“இவனுங்க இப்டி சாப்பிட்டா, ஸஹருக்கு எப்டிங்க சாப்பிடுவானுங்க?”

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்… நீயே போயி எவன்ட்டயாவது கேளு?”

“அய்ய… நான் ஏன் கேட்குறேன்? சரி சும்மா பேசிக்கிட்டிருக்காம உட்கார ஒரு இடம் பிடிங்க. எனக்கு எதுவும் வேணாம். டீ மட்டும் குடிக்கலாம்” என்றவளை, டீ குடிப்பவர்களுக்கென்றே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்த்தினான்.

அங்கிருந்த கூட்டம், அவளை ஆச்சர்யப்படுத்தியது. மீண்டும் மீண்டும் அதுபற்றியே தன்வீரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“டார்லிங்… எப்டி இருந்தது டீ?”

“என்ன பெரிய டீ? நான் போடற மாதிரிதான் இருக்கு?”

“நீ போடற மாதிரியா? ஏண்டி பொய் சொல்ற.”

“ஏய் போடா!”

“என்னடி போடாங்குற?”

“அப்டித்தாண்டா கூப்பிடுவேன். வாடா தன்வீர்… போடா தன்வீர்.”

“ஏய்… ரோடுன்னு பாக்குறேன். இல்லன்னா…”

“இல்லன்னா என்னடா பண்ணுவ?”

“கட்டிப்பிடிச்சு கிஸ் அடிப்பேன்.”

“தன்னு, விளையாடாம ஒழுங்கா கிராஸ் பண்ணு.”

இதுதான் வஹிதாவிடமிருந்து அவன் கேட்ட கடைசி வார்த்தை.

பேட்ரல் நகர எத்தனித்து கொண்டிருந்தது. வஹிதாவுக்கு ஒரு சில அடிகள் முன்னால் தன்வீர் போய்க்கொண்டிருந்தான்.

“நீ அங்க நில்லு, நான் வண்டிய எடுத்துட்டு வர்றேன்” – அவன் சொல்லி முடிக்கும்போது டமாரென்று சப்தம் கேட்டு திரும்பி பார்க்கையில், அவன் நின்ற இடத்திலிருந்து ஐம்பது அடி தூரத்தில் மூன்று இளைஞர்களும் பைக்கோடு சரிந்து விழுந்தனர்.

“ஏய் அவனுங்கள புடிங்கடா” – குரல் கொடுத்துகொண்டே பேட்ரலிலிருந்து இறங்கினார் காவல் அதிகாரி.
வஹிதான்னு முணுமுணுத்துக்கொண்டே திரும்பிய தன்வீருக்கு அடிவயிறு பிரட்ட ஆரம்பித்துவிட்டது. `ஓ’ வென்று வீரிட்டு அழத் தொடங்கினான். ஒட்டுமொத்த ஜனத்திரளும் ஒன்றுகூடிவிட்டது.

“வஹிதா… வஹிதா… வஹிதா…” -தொண்டை கிழியும்படி கத்தினான்.

மடியில் வஹிதாவை கிடத்தி, “வஹி.. உனக்கு ஒண்ணும் ஆகாதுடி தங்கமே! என்னடி ஆச்சு?” என்றவனுக்கு நாக்கு பிரள ஆரம்பித்தது.

முதலிரவு தொடங்கி இன்றைய பொழுது வரையான சம்பவங்கள், கண்முன்னே படம் போல ஓடியது.

“ஒண்ணும் ஆகாது தம்பி! நீங்க ரிலாக்ஸா இருங்க. ஆம்புலன்ஸுக்கு சொல்லிருக்கு.”

“………… பசங்க, சொன்னா கேட்குறானுங்களா? ரேஸ்… ரேஸ்னு சாவறானுங்க.”

“எல்லாம் அப்பனையும் ஆத்தாளையும் சொல்லணும். பெத்துப் போட்டுட்டு ஊர் மேய வுட்ருதுங்க.”

“போலீஸ் நினைச்சா இதை கண்ட்ரோல் பண்ணலாம்பா. அவங்க காச வாங்கிட்டு வுட்றாங்க.”

“போலீஸ் என்னய்யா பண்ணும். நோன்பு நேரத்துல பொத்திக்கிட்டு இருக்கணும். இல்லைன்னா வந்தமா சத்தமில்லாம போனோமான்னு இருக்கணும்.”

கூட்டத்திலிருந்து வந்த குரல்கள் அனைத்தும் ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துக்க்கு அடங்கியது.
உதவிக்கு வந்த இரண்டு நபர்களுமே தன்வீரை தேற்றுவதில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தனர். அவனின் அழுகுரல் ஆஸ்பத்திரி வளாகத்துக்கே எதிரொலித்திருக்கும்.

“அதிகாலை சுமார் 2 மணியளவில் பைக் ரேசில் ஈடுபட்ட 3 மாணவர்கள், போலீஸ் கண்களிலிருந்து தப்பிக்க வேகமாக சென்றபோது, நிறைமாத கர்ப்பிணி மேல் மோதியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். உடற்கூறு ஆய்வறிக்கைப்படி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிரும் பிரிந்துள்ளது. இச்சம்பவம், அப்பகுதி முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது”.

தன்வீரின் மனைவி வஹிதா குறித்து தினசரி நாளிதழில் வெளிவந்த செய்தியினை ஹெச்ஆர். க்ரிஷ் உட்பட டீம்மேட்ஸ் அனைவருக்கும் வாட்ஸப் செய்தான் ராஜேஷ்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நேர்த்தியான கதை…இஸ்லாமியர்களின் வாழ்வியல்களைப் பற்றி கதைகள் வருவது மிக மிக அபூர்வம்….இந்த கதை அவர்களது வாழ்வியலை ஒட்டி வருவதனால் படிக்கும் போதே ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. மாநகரத்தில் வாகன ஓட்டிகளினால் ஏற்படும் குறிப்பாக சில இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் விளைவுகளை நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டுகிறது… அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button