The Power of the Dog (2021)
Dir: Jane Campion | 126 minutes | English | Netflix
சில இயக்குநர்களோட பேரைக் கேட்டதுமே நமக்கு ஒரு படம் மட்டும் மனசுல மின்னி மறையும். Jane Campion அப்டிங்குற பேரைக் கேட்டதுமே எனக்கு நினைவுக்கு வர்றது The Piano (1991) திரைப்படம்தான். சும்மாவா பின்னே, வரலாறு படைச்ச படமாச்சே. ரொம்ப பிரபலமான கான் (Cannes) திரைப்பட விழாவுல சிறந்த இயக்குநருக்கான Palm d’Or விருது வாங்கிய முதல் பெண் என்ற கௌரவம் இவங்களுக்கு இந்த படத்துக்காகத்தான் கிடச்சது. (கூடவே ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண் அப்டீங்ற கௌரவமும் கூட…!) ஆனா, இவங்க கிட்டத்தட்ட இயக்குநர் டெரன்ஸ் மாலிக் மாதிரி… அதாவது தோணும் போது மட்டும்தான் படம் எடுப்பாங்க. நாம இப்போ பேசப் போற இந்த படத்தைக் கூட அவங்க 12 வருச இடைவெளிக்கு அப்புறமாதான் எடுத்திருக்காங்க. இந்தப் படமும் தனிச்சிறப்பு பெற்றதுதான். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இவங்க இந்தப்படத்திற்குத்தான் வாங்கி இருக்காங்க. இன்னொரு விதத்திலும் இது சிறப்பானது அதாவது ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த வருடங்களில் சிறந்த இயக்குநருக்கான பரிசை பெண் இயக்குநர்கள் வாங்கி இருக்காங்க என்பதுதான். (போன வருஷம் Nomadland படத்திற்காக Chloé Zhao வாங்கினாங்க.)
இலக்கிய உலகத்துல பொதுவா ஒண்ணு சொல்லுவாங்க. அதாவது, இலக்கியம் முழுசையும் ஆண்களே, மற்ற எல்லா துறைகளைப் போல ஆதிக்கம் செலுத்தி வருவதால இலக்கிய மொழி எல்லாமே ஆண் மொழியாதான் இருக்கு. (இப்போதான் கொஞ்சம் பெண்கள் கணிசமா எழுத வருகிற ஆரோக்கியமான ஒரு போக்கு துவங்கி இருக்கு.) அதனால அது முன்வைக்கிற பார்வைகள் எல்லாமே ஒரு ஆணோட கண் வழியா பாக்கப்படுற பார்வையாதான் இருக்க முடியும். அதுபோலத்தானே சினிமாவோட நிலைமையும் இருக்கு. சொல்லப் போனா இலக்கியத்தை விடவும் இன்னும் மோசமான நிலையிலதான் திரைத் துறை இருக்கு. நடிகைகளைத் தவிர பிற துறைகள்ல பெண்களுக்கு சினிமாவுல வாய்ப்புக் கிடைக்கிறதே ரொம்பவும் சொற்பம் அப்டினு சொல்லுற அளவுக்குத்தான் யதார்த்த நிலை இருக்கு. ஜேன் பிரமாதமான ஒரு கிரியேட்டர். பெண் பார்வை வழியா இந்த உலகத்தைப் பாக்குறது எவ்வளவு முக்கியம் அப்டிங்கறதையும், அதனால நாம் புதுசா எவ்வளவு புரிஞ்சுக்கலாம் அப்டிங்கறதையும் அவங்க படங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம். நான் பியானோவுக்குப் பிறகு பாத்த இவங்களோட படம் The Power of the Dog – தான். எண்ணிக்கையா முக்கியம்?! பாத்த ரெண்டு படங்கள் போதும் இவங்களோட மேதமை என்னனு புரிஞ்சுக்கிறதுக்கு.
திரைமொழின்னு அறிமுகக் கட்டுரையில ஒரு விசயம் பத்தி லேசா பேசினோம் இல்லையா! அதுவே ஒரு ‘பெண் மொழியா’ இருந்தா எவ்வளவு நுணுக்கமான விசயங்கள நம்மால உணர முடியும்னு இவங்களோட இந்த இரண்டு படங்களையும் பார்த்தால் தெரிஞ்சுக்கலாம். (இந்த நேரத்துல – மேலே சொன்ன அதே காரணத்துக்காகவே, மிகச் சமீபத்துல வெளியாகி மிகப் பரவலான கவனத்தைப் பெற்ற Portrait of a Lady on Fire (2019) என்ற பிரெஞ்சு படத்தை எடுத்த செலின் சையாமாவும் (Céline Sciamma) என் ஞாபகத்துக்கு வர்றாங்க.) இந்தப் படம் Thomas Savege என்ற எழுத்தாளர் எழுதி 1967-ஆம் ஆண்டு இதே பேருல வந்த நாவலைத் தழுவித்தான் எடுக்கப்பட்டிருக்கு. 1925 இல் அமெரிக்காவோட மோண்டேனா பகுதியில இருக்குற பர்பேங்க் சகோதரர்களோட (Phil Burbank & George Burbank) கதையாகத்தான் இது துவங்குது. இருவருமே தங்களோட குடும்பச் சொத்தா இருக்கிற பெரிய பண்ணை வீட்டை பாத்துக்கிட்டு இருக்காங்க. ஃபில் மற்றும் ஜார்ஜ் ரெண்டு பேரோட கதாபாத்திர வடிவமைப்பே சுவாரசியமானது. ஃபில் அடக்குவதுதான் ஆண்மை, அதிகாரம் செலுத்துவது தான் பெரிய விசயம் அப்படீன்னு நினைக்கிற ஆசாமி. சுருக்கமா சொன்னா பழகுறதுக்கு இனிமையானவரே இல்லை. ஆனா, அவரோட சகோதரர் ஜார்ஜ் இவருக்கு நேர் மாறானவர். ரொம்ப தன்மையான ஆளு. எல்லோரிடமும் எளிமையா பழகுற மென்மையான மனிதர். இவங்க ரெண்டு பேருமே நாம் அன்றாட வாழ்க்கையில நாம சந்திக்கிற இருவேறு துருவங்கள் போல எதிரெதிரான குணம் கொண்ட ஆண்களுக்கு உதாரணமான கதாபாத்திரமாக இருக்காங்க. மத்தவங்ககிட்ட எப்படியோ! ஃபில், ஜார்ஜ் மேல ரொம்ப பிரியமா இருக்கார். ஒரு முறை தங்களோட சகாக்களோட கால்நடைகளை மேய்க்க அழைச்சுட்டு போறப்போ, ரோஸ் அப்டிங்குற ஒரு விதவைப் பெண் நடத்துற விடுதிக்கு சாப்பிடப் போறாங்க. அவங்களுக்கு உதவியா அவங்களோட டீன் ஏஜ் பையன் பீட்டர். தன்னோட கெத்தை தன் குழுவினர் மத்தியில் காட்டிக்க, ரொம்ப மென்மையானவனா இருக்குற பீட்டரை, ஃபில் வம்பிழுக்கிறார். இதனால் பீட்டர் மனம் நொந்து ஒடுங்கிப் போறான்.
ஜார்ஜ்தான் வேறு மாதிரி ஆச்சே. இது எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையிலயே வருத்தபடுற அந்த மென்மையான மனிதர் விடுதி கட்டணம் செலுத்தப் போறப்போ, ரோஸ்கிட்ட மன்னிப்பு கேட்கிறார். அவரோட தன்மையாக நடந்துகொள்ளும் குணம் அவங்களைக் கவர்ந்துவிட, அவருக்கும் அவங்களைப் பிடித்து விட, இருவரும் திருமணம் செய்துக்குறாங்க. இது ஃபில்லுக்கு சுத்தமா பிடிக்கல. அவரைப் பொருத்தவரை இந்த மாதிரி ஏழைப் பெண்கள் ஒரு பணக்கார ஆணை அவங்களோட பணத்துக்காகத்தான் திருமணம் பண்ணிக்குவாங்க; உண்மையான அன்பினால் இல்லை அப்டின்னு தீர்க்கமா நம்புகிறார்.
நாம பொதுவா புது மனிதர்களோட அறிமுகமாகும் போது மட்டும்தான் அவங்களை மனிதர்களா பார்க்குறோம். பின்னர் அவங்க பத்தின அபிப்ராயம் நம்ம மனதுக்குள் உருவாகுது. சில சந்திப்புக்களுக்கு அப்புறம் நாம அவங்கள மனிதர்களா பாக்குறத விட்டுவிட்டு நாம உருவாக்கி வச்சிருக்கிற அபிப்ராயங்களை அவங்களுக்கு ஒரு முகமூடி போல போட்டுவிட்டுடறோம். அந்த அபிப்ராயங்களா மட்டுமே அவங்க சுருங்கிப் போயிடறாங்க. ரோஸ் பற்றிய ஃபில்லோட பார்வையும், புரிதலும் அப்படித்தான் ஆகிடுது. அவங்களை அடியோட வெறுக்கிறார் ஃபில். தன்னோட நெருக்கமா இதுவரை இருந்த தனது சகோதரனை இவங்க வந்து தூரமா விலக்கி எடுத்து கொண்டு போயிட்ட மாதிரி தவிக்கிறார்.
பீட்டர் தன்னோட மருத்துவப் படிப்பிற்காக வேற ஊருக்கு போய்விட, புது தம்பதிகளா இவங்க மட்டும் பண்ணை வீட்டுக்கு வந்துடறாங்க. தான் வெறுக்கிற ரோஸ் இப்படி தன் வீட்டிலேயே தங்குவதை ஃபில்லால சகிச்சுக்கவே முடியல. தன்னோட சகோதரனோட வீண் சண்டை போடறார். தன்னோட வெறுப்பை மறைமுகமா ரோஸ்கிட்ட காட்டத் துவங்குகிறார். ரோஸும் ஃபில் மீது அதே வெறுப்பு மனநிலையிலதான் இருக்காங்க. தன் அன்பு மகனை அவர் கேலி செய்து நோகச் செய்த போதே முளைவிட்ட வெறுப்பு அது. இங்கு வந்த பிறகு அது அதிகமாகத்தான் ஆகி இருக்கு.
ரெண்டு பிடிக்காத நபர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரே வீட்டில் தங்க நேரும் போது. சொல்ல முடியாத ஒரு அசௌகர்யம் வீட்டில் உண்டாகும் இல்லையா?! அதேதான் இங்கயும் நடக்குது. வாய்ப்புக் கிடைக்கறப்ப எல்லாம் ஃபில், ரோஸை உளவியல்ரீதியா துன்புறுத்துறார் (Psychological torture). வழக்கமா கௌபாய் உடையோட ஒரு சாகசக்காரன் போல பண்ணை வீட்டில் வளைய வருகிற ஃபில், இப்போது ரோஸ் இருப்பதையே தொந்தரவா பார்க்குறார். என்ன இருந்தாலும் அவள் தன் சகோதரனோட மனைவி. அதனால் நேரடியாக அவளை வெளியே போகச் சொல்ல முடியாது. அதனால அவளை உளவியல்ரீதியா இம்சை செய்ய ஆரம்பிக்கிறார் ஃபில். ஒரு காட்சி ரொம்ப முக்கியமானது. நுட்பமானதும் கூட.
ரோஸ் பியானோ வாசிப்பா அப்டினு முன்னாடியே தெரிஞ்ச கணவன் ஜார்ஜ் அவளுக்காக ஒரு அழகான பியானோவை வாங்கிட்டு வர்றான். அதோடு தனது திருமணத்தை முன்னிட்டு தன்னோட வயதான பெற்றோருக்கும், கவர்னருக்கும் ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடு பன்றான். அதுல மனைவியை பியானோ வாசிக்குமாறு கேட்டுக்குறான். தயங்கித் தயங்கி அவளும் அதுக்கு சம்மதிக்கிறா. நல்லபடியா வாசிக்க பயிற்சி செய்யணுமே! அதனால பயிற்சி பண்ணத் துவங்குறா.
ஃபில்லோ பேன்ஞ்சோ வாசிக்கிறதுல கை தேர்ந்தவன் (Banjo – 18 நூற்றாண்டுல புழக்கத்துக்கு வந்த கிடார் மாதிரியான ஒரு இசைக்கருவி). கீழே ஹாலில் ரோஸ் வாசிச்சு பழகிக்கிட்டு இருக்கும்போது, அதே டியூனை மேலே இவன் பேஞ்சோவில் வாசிச்சு வெறுப்பேத்துற காட்சி ரொம்ப ரொம்ப முக்கியமானது. அந்த காட்சியிலதான் ஒரு பெண்ணுக்கு, பிடிக்காத ஒரு ஆணோட இருப்பே (presence) எவ்வளவு பெரிய தொந்தரவா, கடக்க முடியாத தடையாக இருக்க முடியும் அப்டிங்குறத நாம புரிஞ்சுக்க முடியும். ஒரு பெண்ணை தொந்தரவு செய்வதற்கு, தொட வேண்டும் என்பதோ, அவள் சங்கடப்படுவது மாதிரி வெறித்து பார்க்க வேண்டும் என்பதோ கிடையாது. வெறுமனே ‘அந்த பிடிக்காத ஆண் நம் பக்கத்துலதான் இருக்கான்’, அப்படீன்னு அவள் உணர்வது மாதிரி நடந்துக்கறதே போதும். இந்த காட்சி இதை நமக்கு காட்டாது; மாறாக உணர்த்தும். அதே போல இந்த காட்சியில பின்னணி இசைன்னு எதுவுமே இருக்காது. வெறும் அவங்க வாசிக்கிற இசைக்கருவிகளோட ஒலிகள்தான் இருக்கும். அந்த இடத்துல நிறைந்து கிடக்கிற மௌனம் நம்ம ரொம்ப தொந்தரவு செய்றதா இருக்கும். அதாவது ரோஸ் என்ன மன உளைச்சல் அடையுறாளோ அதனை அப்படியே பார்வையாளரான நமக்கும் கடத்துறது மாதிரி இருக்கும் அந்த மௌனம்.
ஃபில்லோட ஒவ்வொரு அசைவும் ரோஸுக்கும் தொந்தரவா இருக்கு. அவங்க ரொம்ப சஞ்சலப்பட்டுப் போறாங்க. அந்த துயரத்தை மறக்க ரகசியமா குடிக்க ஆரம்பிக்கிறாங்க. அவங்களோட இறந்து போன முன்னாள் கணவர் குடித்து குடித்து இறுதியில தற்கொலை செஞ்சுக்கிட்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனா இறுதியில இவங்களே குடிக்கு அடிமையாகிடறாங்க. மருத்துவ படிப்பு படிக்கிற பீட்டர் விடுமுறைக்கு தாயைப் பார்க்க பண்ணை வீட்டுக்கு வருவது, ஃபில்லை மேலும் எரிச்சலடைய வைக்குது. சும்மாவே அவனை வம்பிழுக்கும் அவரும் அவரது சகாக்களும் இப்போ வேணும்னே கேலி செய்றாங்க. அவன் நோஞ்சான் போல இருப்பதால ஏளனம் அதிகமாகவே இருக்குது. ஆனா, இது எதுவும் ரொம்ப பெரிதாக பீட்டரை பாதிக்கல. அவங்ககிட்ட இருந்து விலகி தன்னோட மருத்துவ படிப்பு சார்ந்து விலங்குகளை அறுத்து உள் உறுப்புகளை ஆய்வு பண்ணி படம் வரைஞ்சு குறிப்புகள் எழுதுறது அப்டினு நேரத்தை உருப்படியா செலவழிக்கிறான். மேலும் வந்த சில நாட்கள்லயே தனது தாய் ரகசியமாக ஒரு பெருந்துயரை அனுபவிச்சுகிட்டு இருக்குறாங்க என்பதையும் அவன் புரிஞ்சிக்குறான். அது அவனை மேலும் வருத்தமடையச் செய்யுது.
ஃபில் தன்னோட ஆஸ்தான ரோல் மாடலா பிராங்கோ ஹென்றி அப்டிங்குறவரை அவர் இறந்த பிறகும் கொண்டாடி வருவதை பீட்டர் தெரிஞ்சுக்கிறான். ஒரு முறை ஃபில் மட்டும் ரகசிய இடத்தில் தனித்து இருக்கிற போது, ஒரு ஸ்கார்ஃபை வச்சுக்கிட்டு சுய இன்பம் செய்து கொண்டிருப்பதை தற்செயலாக பீட்டர் பாத்துடுறான். அவன் அறிந்துகொள்வதோடு நாமும் ஒரு முக்கிய விசயத்தை புரிஞ்சிக்குறோம் – அந்த ஸ்கார்ப் பிராங்கோ ஹென்றியோடது என்பதும், ஃபில் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதும். இது கதையில் ஒரு மிக முக்கியமான திருப்பம். இதப் பத்தி மேலும் பேசாம காட்சிகள் மாறி அடுத்த விசயங்களுக்கு மாறுவதில் தான் இயக்குனர் ஜேனோட மேதைமை இருக்கு. ஏன்னா, ஆங் லி இயக்கத்துல வெளியான The Brokeback Mountain [2005] போல கௌபாய் வாழ்க்கையில இருக்குற ஓரினக் காதலை இந்தக் கதை மையப்பொருளா எடுத்துக்கல. மாறாக ரெண்டு பேருக்கு இடையிலான மனக்கசப்பின் மூலமா ஏற்பட்ட சிக்கலை மையமா எடுத்துக்குது.
பொதுவாக பீட்டர் கேலி செய்யப்பட்ட போதிலும், இந்த முறை அதில் ஒரு பெரிய மாறுதல் இருக்கு. ஃபில்லுக்கு பிடிக்கிற மாதிரி, கொஞ்சம் கொஞ்சமாக பீட்டர் நடந்துக்க ஆரம்பிக்கிறான். அதனால கொஞ்சம் இளகுகிறான் ஃபில். நாளடைவுல இருவருக்கும் இடையில ரொம்ப நெருக்கமான நட்பு வளருது. ஒரு வகையில் இது ரொம்ப உண்மையான நட்பு இல்லையோ… ஃபில் காட்டுற நெருக்கம் கூட ஒரு வகையில் ரோஸ் மேல அவன் ஏற்கனவே நிகழ்த்திக் கொண்டிருக்கிற உளவியல் நெருக்கடிகள்ல ஒன்றோ அப்டினு நமக்கு நிச்சயம் தோணும். ஏன்னா தனக்கு பிடிக்காத ஃபில் கூட தனது அன்பு மகன் அதிக நேரம் செலவிடுவதே ரோஸை ரொம்ப படபடப்பாக்குது.
படத்துல வருகிற மிகப் பிரம்மாண்டமான நிலம் கதையோட இன்னொரு லேயரை ரொம்ப அழகா சொல்லி இருக்கு. மனிதர்களோட தனிமையையும் அவங்களோட வெறுமையையும் அந்த பெரிய நிலத்தில் அவங்க ரொம்ப சிறிதாக அங்கங்க திரிவதைப் பார்க்கும் போது எப்படியோ நம்மால உணர்வுப்பூர்வமா உள்வாங்க முடியுது. நாம வெறுப்பேத்தும் நடவடிக்கைன்னு நினைக்கிற போதும், தனக்குப் பிடித்த மாதிரி நடக்கத் துவங்குற பீட்டரை உண்மையிலேயே ஃபில் நெருக்கமாக அணுக அனுமதிக்கிறான். யாரோடையும் பகிராத தன் கடந்த கால நினைவுகளை அவனோட பகிர்வதும், வேறு எவரோடையும் இருப்பதை விடவும் அதிக நேரத்தை அவன் பீட்டரோட செலவிடுவதுமா நாட்கள் நகருது. ரோஸ் ஒரு குடி அடிமை என்பதை அவன் வேதனையோட அல்லாமல் குற்றம் சாட்டுற பாவனையில்தான் பீட்டர்ட்டயும் ஜார்ஜிட்டயும் பகிர்ந்துக்குறான். தனக்குப் பிடிக்காதவங்க செய்ற தவறுகளை இதுதான் சாக்கு அப்டினு சுட்டிக் காட்டிக்கிட்டே இருக்கிற மனிதர்களுக்கே ஆன சின்னத்தனம் இவன் மனசிலும் இல்லாமலா போகும்?! தன் மகன், ஃபில்லுடன் மிக நெருக்கமாக ஆவதை ஒரு வித தயக்கத்தோடதான் எதிர்கொள்ளுறா ரோஸ். இதுனால ஃபில் மீது அவளுக்கு இருக்குற கசப்பு அதிகமாகுது.
ஒரு முறை பண்ணை வீட்டுல இருக்குற விலங்குத் தோல்களை ஒரு செவ்விந்தியர் தரமுடியுமான்னு கேட்க, அங்க இருக்குற வேலைக்கார அம்மா இது ஃபில்லுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால முடியாது அப்டினு சொல்லி அனுப்பிடறாங்க. கிளம்பிப் போன அவங்களை துரத்திப் போற ரோஸ் அவங்க விலங்குத் தோல்களை எல்லாம் எடுத்துக்கலாம்னு சொல்றாங்க. அதுவும், ஒரு கையுறையை மட்டும் அதுக்கு ஈடாக வாங்கிங்கிட்டு. திரும்பி வருகிற ஃபில் நடந்ததை கேள்விப்பட்டு ரொம்ப கோவமாகுறான். அவனது கோவத்துக்கு காரணம் அந்த தோல்கள் போயிடுச்சுங்கறது இல்லை. அது உபயோகம் இல்லாததுதான். ஆனா, அந்த பண்ணையில் தான் இதுவரையிலும் செலுத்தி வருகிற அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுது அப்டிங்குறதத்தான் அவனால தாங்கிக்க முடியல. ரோஸோட இந்த நடவடிக்கை நேரடியா அவனோட ஈகோவை சுரண்டிப் பார்க்குது.
ஏதோ இழந்துட்டதைப் போல வெறுமையா உணருகிற ஃபில்லை, தான் கொஞ்சம் தோலை முன்னாடியே எடுத்து வச்சிருப்பதா சொல்லித் தேத்துறான் பீட்டர். அது அவனுக்கு அந்த நேரத்தில் ரொம்பவே ஆறுதலா இருக்கு. முன்னமே கௌபாய்கள் பயன்படுத்துற ஒரு சுருக்குக் கயிற்றை அவனுக்கு செஞ்சு தர்றதா சொல்லி இருந்த ஃபில், இப்போ அதனை ரொம்ப சீரியசாக சொல்கிறான். இன்று இரவு முடியுறதுக்குள்ள நான் உனக்கு அந்த சுருக்கை நிச்சயமா செஞ்சு தருவேன் அப்டின்னு சொல்லுற அவன், கொடுத்த வாக்கை காப்பாத்தவும் செய்யுறான்.
மறுநாள் ரொம்ப நேரமா காலை உணவுக்கு வராத சகோதரனைத் தேடி வர்ற ஜார்ஜ் மேலே போயி பார்த்தா எப்போதும் திடமா சுத்திகிட்டு இருக்க ஃபில் வழக்கத்துக்கு மாறா சோர்வா படுத்துக்கிட்டு இருக்கான். காட்சிகளோட தொடர்பு இத்தோடு அறுந்து போகுது. சடாரென அடுத்த காட்சியில ஃபில் இறந்து போயிட்டான் அப்டிங்குற செய்தி நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருக்கும். டாக்டர் அநேகமா ஃபில் ஆந்தராக்ஸ் நோயால இறந்து போயிருக்கலாம் அப்டின்னு சொல்றாரு. விலங்குகளுக்கு வர்ற அந்த நோயப் பத்தி எப்பவுமே ரொம்ப ரொம்ப கவனமா இருக்குற ஃபில்லுக்கு எப்படி அது வந்திருக்க முடியும்னு ஜார்ஜ் ஒரு விடையில்லாத கேள்விய மனசுக்குள்ளேயே கேட்டுகிறாரு.
ஃபில்லோட இறுதிச் சடங்கோட படம் நிறைவடையுது. இதுவரை வாசிச்ச உங்களுக்கு உண்மையைச் சொன்னா கொஞ்சம் ‘சப்’ன்னு இருந்திருக்கும். ஏன்னா, நான் கதையை முழுமையா சொல்லல அல்லது கதையோட முடிவத் தெளிவா விளக்கல. நான் அறிமுக கட்டுரையிலயே சொன்ன மாதிரி எல்லாத்தையும் இங்கயே எழுதிட்டா ஒரு வேளை படம் பாக்காதவங்களுக்கு பார்க்கும் போது எந்த ஈர்ப்புமே இருக்காது. எப்படியும், படத்தை இந்த கட்டுரையை வாசிக்கிறதுக்கு முன்னாடியே பாத்தவங்க, கடைசியில ஒண்ணும் புரியாம, என்னடா இப்படி முடிச்சுட்டாங்கன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு யூட்யூப்ல ஏதாவது ‘Ending Explained’ வீடியோவைப் நிச்சயம் பாத்துருப்பீங்கன்னு நம்புறேன்.
இந்த இடத்துல ஒண்ணு அவசியம் சொல்லணும்… படத்தைப் பார்க்காதவங்க தயவு செய்து முதல்ல படத்தை பார்த்துடுங்க. நான் இந்த கட்டுரையில சொல்லி இருக்குறது கதையோட முக்கியமான தருணங்களை (moments) மட்டும் தான். அதனால உங்களுக்கு கதை கோர்வையா நல்லா புரியும். மேலே சொன்ன மாதிரி படம் பார்ப்பதற்கு முன்னாடியே தயவு செஞ்சு படம் சார்ந்த எந்த வீடியோக்களையும் பாக்காதீங்க. ஒரு படத்தப் பத்தி மத்தவங்க என்ன சொன்னாலும், நம்மோட சொந்த பார்வையை மட்டும் முன் வச்சு அந்த படத்தைப் பாக்குறது அப்டிங்குறது ரொம்ப ரொம்ப அவசியம். திரைப்பட ரசனையை வளத்துக்குற ஆசை உங்களுக்கு இருந்துச்சுன்னா இதுதான் உங்களுக்கு முதல் பாடம். படங்கள் பத்தின அறிமுகங்கள தாராளமா தெரிஞ்சுக்குகங்க. தப்பே இல்ல. ஆனா, உங்க புரிதலோட மட்டும் முதல் தடவை படத்தைப் பாருங்க. நாளாக நாளாக நிறைய நல்ல படங்களை பாத்துப் பாத்து பழக்கமாகிடுச்சுன்னா உங்க மனசு முதல் தடவை பார்க்கும் போதே பல விசயங்களை பார்க்குறதுக்கு டியூன் ஆகிடும். உங்களோட திரைப்பட ரசனை எந்த அளவுக்கு வளர்ந்துகிட்டு வருது அப்டிங்குறதையும் நீங்களே புரிஞ்சுக்கலாம்.
உங்க மைண்ட் வாய்ஸ் இப்போ ‘சரி அதெல்லாம் கிடக்கட்டும்! ஏதோ ஜேன் ரொம்ப மேதை அப்படீன்னு என்னவெல்லாமோ சொன்னியே..படத்தோட கதை சாதாரண டிராமாவாதானே இருக்கு’ அப்டினு கூட இருக்கலாம். உண்மையிலயே சொல்லணும்னா கதை சாதாரணமானதுதான். ஆனா,அதைக் கையாண்டிருக்க விதத்துலதான் ஜேனோட மேதைமை இருக்கு. சினிமா ஒரு அற்புதமான கதை சொல்லும் மீடியம் என்பதுல மாற்றுக் கருத்து இல்ல. (தசவதாரம் கமல் பாஷையில சொல்வதாயிருந்தா கதைன்னு ஒண்ணு சினிமாவுக்கு அவசியமில்லதான். ஆனா, இருந்தா நல்லா இருக்கும்.) ஆனா, அதை விடவும் முக்கியமானது ஒரு சினிமாவை பார்த்து முடிச்சதும் அது கதையாக மட்டும் இல்லாம ஒரு அனுபவமாவும் நமக்குள்ள மிஞ்சுறதுதான். நல்ல இலக்கியமும் சரி, நல்ல சினிமாவும் சரி வாசகர்/பார்வையாளருக்கு ஒரு நல்ல இரண்டாம் நிலை அனுபவத்தை (Second hand experience) கொடுக்கும். அது நாம வாழாத வாழ்க்கையை வாழுறதுக்கு ஒரு வாய்ப்பைத் தருது. அதன் மூலமா நாம் அந்த படைப்புல வர்ற கதாபாத்திரங்களோட மனசுகுள்ள புகுந்து பார்க்க முடியுது. இது நிஜ வாழ்க்கையில நேரடி அனுபவத்துல சாத்தியமே இல்லாத ஒரு விசயம்தானே! ஆனா, படைப்புகள் வழியா கிடைக்கிற இந்த இரண்டாம் நிலை அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில ரொம்பவே உதவும் இல்லையா?!
ஒரு படத்துல வருகின்ற இன்னோரு மிக முக்கியமான அம்சம் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதை இயக்குனர் கையாண்டு இருக்குற விதம். இதுவரையிலும் நீங்க வாசிச்ச விசயங்களை வச்சு ஃபில் தானே வில்லன் அப்டினு நினைப்பீங்க? அவர் வில்லத்தனமா நடந்துக்குறாரே தவிர அவரு வில்லன் இல்லை. அப்படீன்னா வில்லன் யாரு? அதுதான் உச்சகட்ட திருப்பம். நான் சும்மா ஒரு அடையாளப்படுத்துற நோக்கத்துலதான் வில்லன்ங்கற வார்த்தைய உபயோகப்படுத்துறேனே ஒழிய, உண்மையில ‘அவரும்’ (அதுக்கு படத்தை நீங்க பார்க்கணும். தேவைப்பட்டால் படம் சார்ந்த வீடியோக்களையும்…) வில்லன் கிடையாது.
மனிதர்கள் தங்களோட சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏத்த மாதிரி சில சமயங்கள்ல ரியாக்ட் செய்றதே அவங்களை வில்லனாகவோ அல்லது கதாநாயகனாகவோ மாத்திடுது. அதைத்தான் இந்த கதாபாத்திரங்கள் மூலமா ரொம்ப ஆர்ப்பட்டமில்லாத அழகோட ஜேன் சொல்லி இருக்காங்க. முழுக்க டிராமாவாகவே நகர்கிற இந்த படத்துக்குள்ளேயும் ஒரு திரில்லர் தன்மை ஒளிஞ்சுகிட்டு இருக்கிறத நீங்க நிச்சயம் உணரலாம். டிராமா அப்டினாலே போரடிடுக்குமே பா! அதை பாக்குற அளவுக்கு எல்லாம் நமக்கு பொறுமை இல்ல அப்டினு உங்களுக்கு நீங்களே முடிவு செஞ்சுக்காதீங்க. கதைன்னு சொல்றத விட கதையோட போக்கை, கதாபாத்திரங்களை கவனிக்கத் துவங்குங்க. அதுக்குள்ள மூழ்கிப் போறது உங்களுக்கு பழகிப் போயிட்டா அப்புறம் என்ன இது டக்குன்னு ரெண்டு மணி நேரம் போயிடுச்சுன்னு நீங்களே ஆச்சரியப்படுற நாளும் வரும்.
குறிப்பு :
என்னடா இது கட்டுரைக்கு தலைப்பே இல்லாம வெறுமனே படத்தோட தலைப்பே வைச்சிருக்கு அப்படீன்னு தோணதா? எளிமையான வடிவம்தான் இந்தத் தொடரோட முதன்மையான நோக்கம் என்றான பிறகு தலைப்பை மட்டும் கவித்துவமா ஏதாவது வச்சு உங்களை அலைக்கழிக்க நான் விரும்பல. இந்த தொடர்ல வரப் போற எந்தக் கட்டுரைக்கும் அது பேசுற படத்தோட தலைப்பு தான் அதனோட தலைப்பும்.
*****
Super sir!…..
You explained the movie in an enjoyable way. Nice selection sir……if I have time, i will see this movie. Keep doing sir. This review taught me the importance of understanding other’s feeling.
Thankyou ?