The Babadook (2014)
Dir: Jennifer Kent | 94 min | Australia | Amazon Prime
இருந்தவர்கள் இல்லாமல் போகையில் இருப்பவர்கள் என்னவாக ஆவார்கள்? பிரியங்கள் பொழிந்த மனிதர்களின் இல்லாமையில், அது அறியாது இன்னும் சுரந்துகொண்டே இருக்கும் பிரியத்தின் சுனை எதை நோக்கிப் பயணிக்கும்? தனியளாய் ஒரு பெண் இருப்பதொன்றும் சமகாலத்தில் பெரிதல்ல. அதற்கான மன உறுதி பலருக்கும் கைவந்துவிட்டது. ஆனால், தனியளாய் தன் குழந்தையை வளர்த்தெடுப்பது என்பது எளிதானதல்ல. அதிலும் கையாள்வதற்கு எளிதல்லாத ஒரு பாலகனை வளர்ப்பது ஆகப் பெரிய சவால் தான். ஒரு தாயின் தனித்த அகப்போராட்டத்தினை ஒரு ஹாரர் வடிவத்தில் சொல்ல நினைத்திருப்பதும், அதில் வெற்றி கண்டிருப்பதும் இயக்குநர் ஜெனிஃபர் கெண்டின் இப்படத்தை கவனப்படுத்தவேண்டிய ஒரு படைப்பு எனும் இடத்திற்கு நகர்த்துகிறது.
மிக அழுத்தமானதொரு பெண்ணிய நோக்கைக் கொண்டுள்ள இப்படைப்பின் அடிநாதமும் ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் தனித்து வாழ்கிற அமேலியா எனும் ஒரு விதவைத் தாயின் உளச்சிக்கலையே மையமிடுகிறது. பிழைப்பிற்கான பணியையும் செய்து கொண்டு, அதே வேளையில் தனது மிகைச் செயற்பாடுக் கோளாறுள்ள (hyperactive) மகனை, அவனது தொல்லைகளைச் சகித்துக் கொண்டு, வளர்த்தெடுக்கிற இரட்டைப் பொறுப்புகளை சுமக்க இயலாது சுமக்கிறாள் அமேலியா. அவளது பேறுகால வலியியின் போது பரபரப்பாக மருத்துவமனைக்குக் காரோட்டிச் செல்கிற அவளது கணவன் வழியிலேயே விபத்துக்குள்ளாகி இறந்து போகிறான். ஒரு வகையில் பிறந்த மகன் ‘சாமுவேல் வெனக்’கின் இருப்பே அவளது அன்பு கணவனை இழந்ததன் நினைவூட்டலாக இருக்கிறது. அதனையும் மீறி, சிறுவனின் மிகைச் செயற்பாடுகளால் அவள் படுகிற சிரமங்களையும் எதிர்கொள்ளும் அவமானங்களையும் மீறி ஒரு தாயாக அவன் மீது அன்பைப் பொழிகிறாள். அவளது எஞ்சிய வாழ்க்கைக்கான அர்த்தம் அவன். பின் எப்படி அவனைக் கைநெகிழ்வாள்!?
செல்லுமிடங்களில் எல்லாம் தன்னோடு பிரச்சனைகளை தவறாமல் உடனழைத்து வருகிறான் சாம். பள்ளியில், அவனது அத்தை க்ளேரின் வீடு என எங்கு போனாலும், எதனைச் செய்தாலும் பிரச்சனைதான். போதாதற்கு மித மிஞ்சிய கற்பனை வேறு. குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே புனைந்து கொள்கிற கற்பனை உலகில் சஞ்சரிப்பது ஒன்றும் புதிதல்ல. அது பால்யத்தின் பொது இயல்பு. ஆனால், சாம் போல எல்லோரும் கற்பனைக்கும் நிஜத்திற்குமான கோட்டை முற்றாக மறந்தவர்களாய் இருப்பதில்லை. தன்னை பூதங்கள் துரத்துவதாகவும் அதிலிருந்து தன்னையும், சமயங்களில் தாயையும் கூட காக்கிற மாபெரும் பொறுப்பை அவன் புனைந்து கொள்கிற மிகைகற்பனை வரிந்து கொள்கிறது. பொதுவாகவே சிறுபிள்ளைகள் தங்களது கனவுக் கோட்டைகளின் செங்கல்கள் உடைக்கப்படுவதை விரும்புவதே இல்லை, ஒரு போதும். அவன் வருந்துவதைக் காண விரும்பாத அன்னை அமேலியா அவனது கற்பனைகளை வெளிப்படையாக ஆமோதிக்கவில்லை என்றபோதிலும் தடுத்து நிறுத்தாதவளாய் இருக்கிறாள். தன்னையும், அன்னையையும் பூதங்களிடமிருந்து காப்பாற்றிட ஆயுதங்களைச் செய்கிற அளவுக்கு அவனது கற்பனையுலகு அவனுக்கு அசலானது.
ஓர் இரவு படுக்கையில் அமர்ந்தபடி அவன் விருப்பத் தேர்வான ஒரு நூலை வாசித்துக் காட்டுவதாக அளித்திருந்த வாக்கிற்கிணங்கி அவன் தேர்கிற ‘மிஸ்டர் பாபாடூக்’ எனும் திகில் கதைப்புத்தகத்தினை வாசிக்கத் துவங்குகிறாள். சிறார் திகில் நூலான அது முப்பரிமாணத்தில் காகித பொம்மைகளால் ஆன ஒரு புத்தகம். பாபாடூக் எனும் பூதத்தின் கதையை அது சொல்கிறது. அக்கதைக்கும் தனது வாழ்க்கைக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டு நடுநடுங்கிப் போகிறாள் அமேலியா. பீதியில் வாசிப்பு பாதியிலேயே நின்றுபோகிறது. நாட்கள் செல்லச் செல்ல பாபாடூக் அசலென நம்பத்துவங்குகிறாள் அமேலியா. அவளது சிந்தனைத்திறன் அது பொய்யெனச் சொல்லுகிற போதிலும், சாம் தன் கற்பனைகளை அதிலேற்றி அவளது சிந்தனையை மழுங்கடிக்கிறான். வேறு எவரும் உள்நுழைய வாய்ப்பில்லாத அவர்களின் தனித்த வாழ்க்கை, இந்த பயத்தை வளர்த்தெடுக்கிறது.
வழமையானதொரு பேய்ப்படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அது ஏறத்தாழ அத்தனையுமே இப்படத்திலும் இருக்கிறது. திகிலூட்டும் அடர்த்தியான வெறுமையும் மௌனம் அப்பிய வீடு, சடுதியில் எழுந்து பின் இருளுக்குள் கரைந்து போகிற நிழலுரு, கட்டிலுக்குக் கீழேயும் திறந்த அலமாரிகளுக்குள்ளும் கவிந்திருக்கும் பயம் கிளர்த்தும் இருள், தோன்றல்; பின் மறைதல் என வித்தை காட்டும் உரு என பழகிய அம்சங்கள் இங்கும் இருக்கின்றன. ஆனால், வெறுமனே பயமுறுத்தலாக மட்டும் நின்றுவிடாமல், ஒரு தனிமை தளும்பும் தாயின் வாழ்வில் அவளது விரக்தியின் வாயிலாகத் திரளும் உளச்சிக்கலின் வெளிப்பாடாக, அப்பயத்தின் அம்சங்கள் உருக்கொள்கிற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதே படைப்பின் தனித்துவமாய் இருக்கிறது. பயம் நல்லதா கெட்டதா எனும் கேள்விக்கு தத்துவார்ந்த தேடலின் முடிவில் நாம் கண்டடைவது ஒன்றுதான். ஒருவர் எதன் மீதோ இருக்கிற பயத்தை தனக்குள் என்னவாக அனுமதிக்கிறாரோ அதைப் பொருத்தே அதனது நன்மையோ கேடோ விளைவிக்கும் திறன் வரையறுக்கப்படும்.
செல்லுமிடமெல்லாம் மகன் சாமுவேலை முன்வைத்து அவள் எதிர்கொள்ள வேண்டிவருகிற எதிர்மறையான விமர்சனங்களும், புகார்களும் அவளது உளதிடத்தை தளர்வுறச் செய்கின்றன. பள்ளியில் அவன் மீதான விமர்சனம் எழும்போது நிர்வாகத்தினர் அவனை மீண்டும் மீண்டும் ‘அந்தப் பையன்’ என்று சொல்வதை ஏற்க அத்தாயால் இயலவில்லை. தனது மகன் பிற குழந்தைகளைப் போலவே இயல்பானவன் என நம்ப விரும்புகிறவளாகவே அவள் இருக்கிறாள். எனினும் பல சமயங்களில் அவனது பிடிவாதமும், அடமும் தன்னாலேயே சகிக்கவியலாதபடி அதிகமாய் இருப்பது அவளை விரக்தியில் தள்ளுகிறது. தன் அன்புக் கணவனின் பிரிவுப்பெருந்துயரின் நடமாடுகிற நினைவுச்சின்னமாக வேறு மகன் சாம் இருப்பது அவளது ஆழ்மனதின் வடுக்களை அப்படியே வைத்திருக்கிறது.
முதலில் மெல்லிய நடுக்கமாய் தனது வாழ்க்கைக்குள் வந்து சென்ற பாபாடூக் இப்போழுது நிரந்திர அங்கமாகிவிட்டதை காண்கிற அவள் பதைபதைக்கிறாள். உறக்கம் தொலைக்கிறாள். பாபாடூக் மீதான பெரும்பீதி ஆட்கொண்டு தன்னையே விழுங்கக் காத்திருப்பதாய் அவளது சிந்தனை விரிகிறது. உறக்கமின்மையே அவளை ஒரு விதத்தில் பித்துநிலைக்குத் தள்ளுகிறது. அது இன்னும் பாபாடூக் பீதியை வலுவூட்டுகிறதே ஒழிய தணிப்பதாயில்லை. ஏற்கனவே தனிமையான வாழ்க்கை வாழுந்து வருகிற நிலையில், வெளித் தொடர்புகளை இன்னும் சுருக்கிக் கொள்கிறாள் அமேலியா. பயமெனும் பாதாளத்தில் இருந்து மீண்டெழுகிற முனைப்பில், அத்தனைக்கும் காரணமான அந்த நூலை கிழித்து எறிந்து முடிவுக்குக் கொண்டுவர முனைகிறாள். ஆனால், கிழிந்த பக்கங்கள் ஒட்டப்பட்டு தனது வாயிலின் முன்னே மீண்டும் கிடப்பதைக் கண்டதும் பயம் பன்மடங்காகிறது. அதிலிருந்து பாபாடூக் மீதான பயம் அவளை ஆளத்துவங்குகிறது. உறங்க அஞ்சுகிறாள். தொலைக்காட்சியில் நேர விரயம் செய்து அதனை இன்னொரு துணைபோல கற்பனை செய்து கொண்டு தன் சிந்தையை இயல்பில் வைத்துக் கொள்ள போராடுகிறாள்.
கிழித்தெறிந்தும் சாபமென மீண்டும் வந்து சேர்ந்திருக்கிற ‘மிஸ்டர் பாபாடூக்’ கதையில் வருகிற தாய் அப்பூதத்தால் ஆட்கொள்ளப்பட்டு தனது மகனையே குத்திக் கொல்வதைப் போல தனது வாழ்க்கையிலும் நடந்து விடுமோவெனும் கற்பனை அவளை பேரச்சத்திற்குள் அமிழ்த்துகிறது. பிறழ்ந்த மனநிலையில் எண்ணங்கள் உருவாக்கிய வதைமுகாமின் ஒற்றை கைதியாக தன்னையே தான் துன்புறுத்திக் கொள்கிற அவல நிலைக்கு ஆளாகிறாள். எது நடந்தாலும், எப்போதும் தன் மகன் மீதான பிரியம் குறையாத அவள், இப்போது அவன் பசிப்பதாய் சொல்வதைக் கூட தொந்தரவாகக் கருதக் கூடிய எல்லைக்கு சென்று விட்டதை கண்டுகொண்டு துணுக்குறுகிறாள். சிறுவன் சாமோ தன் கற்பனைப் பிரபஞ்சத்தின் சக மனுஷியாகவே பேதலித்துப் போயிருக்கும் தன் தாயை பாவிக்கிறான். உண்மை, மாயத்திற்கு இடையேயான வேறுபாட்டை பிரித்துணரும் ஆர்வம் அவனுக்கு இல்லை என்பது அமேலியாவின் பயங்களை இன்னும் வளர்த்தெடுக்கவே செய்கிறது. தாயும் மகனும் இணைந்து மீள வழியில்லாத பயமெனும் பெரும் புதைகுழிக்குள் மெல்ல அமிழத் துவங்குகிறார்கள்.
தன்னை பாபாடூக் ஆட்கொள்வதாகவும், அவன் நினைத்திருக்கும் நாசத்தை தன்னை ஒரு கருவியாக்கி விளைவிக்க முனைவதாகவும் தீர்க்கமாக நம்புகிறாள். அடுத்தடுத்து தனக்குள் நிகழும் மாற்றங்களாய் அவள் உணர்பவை அதனை உறுதி செய்கிறதாகவே இருக்கிறது. அவளது பகுத்தறிவு இது எல்லாம் தனது மிகுகற்பனை உருவாக்கிய மாயத்தோற்றங்களென உணரச் சொல்கிற அதே வேளையில் சாமின் அதிகற்பனை அவளை அச்சுழலுக்குள் இன்னும் ஆழத்திற்கு இழுக்கிறது. கோபாவேசத்தில் தனது நனவிலியில் ஆழப்படிந்திருந்த தனது மகன் மீதான தீராவெறுப்புணர்வு மேலெழுந்து பீறிட்டு வெளிப்படுவதைக் கண்டு அவளே அயர்ந்து போகிறாள்.
அவ்வீட்டின் நிலவறை ஒரு வகையில் நேரடியாக அமேலியாவின் நனவிலியின் குறியீடாகிறது. தானே எதிர்கொள்ள அஞ்சுகிற காழ்ப்புகளை அங்கு ஒளித்து வைத்திருக்கிறாள். அவள் கண்முன்னே அது பிரம்மாண்ட உருவெடுத்து வியாபிக்கையில் அதன் ஆகிருதி அவளை ஒடுக்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. படத்தின் இறுதிக் காட்சிகள் மிக முக்கியமான உளவியல் விசாரணையாகவே விரிகிறது. பூதங்கள் என்பதும் பேய் என்பதும் மனிதர்களின் மனங்களுக்குள் மண்டிக் கிடக்கிற பயங்களின் பிரிதொடு குணரூபங்கள் தான் என்பதும், அதனை வெல்ல ஒருவர் தன் பயங்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதைத் தவிர வேறு கதியில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறது. மன இயங்கங்கள் சிருஷ்டிக்கும் மாயவோட்டங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆராய்வதற்குப் பதிலாக, அதன் தோற்றுவாயைத் தேடிச் செல்வதே அது உருவாக்கும் சிறையிலிருந்து மீள ஒரே மார்க்கம். நம் வாழ்வின் மேன்மைக்காக நம் பயங்களை நம் ஆளுகைக்குள் வைத்திருப்பது மிக நேர்மறையானது. அதுவே பயங்களை நம்மை ஆள அனுமதித்தால் அவை நம்மை விழுங்கிச் செறித்துவிடும்.
இறுதிக் காட்சியில் தன்னை பாபாடூக் கருவியாக்கிக் கொள்ளாமல் காத்துக் கொள்கிற, நேரடியாக அவனை எதிர்கொண்டு அமேலியா புரிகிற சமர் என்பது தனக்குள் தான் அதுகாறும் தவிர்த்த வந்த ஆழ்மன விகாரங்களுடனானது தான். இப்படத்தை மொத்தமாக வழமையான இன்னுமொரு திகில் திரைப்படம் என்கிற பார்வையிலேயே அணுகுபவர்களுக்கு நிறைவான படமாகவும், அதே வேளையில் இது முன்வைக்கிற உளவியல் கோணம் எனும் அடுக்கிலிருந்து அணுகுகிற பார்வையாளருக்கு இன்னும் மேம்பட்டதொரு பார்வையனுபவத்தை கொடுப்பதாகவும் இருப்பதே இதன் சிறப்பு.
இயக்குநர் ஜெனிஃபர் தனது தோழியொருவரது மகன் பூதங்கள் குறித்த மிகு கற்பனையில் துன்பப்பட்டதையும் அதன் விளைவாக வீடு முழுவதும் அந்த இல்லாத பூதத்தின் இருப்பினை கற்பனை செய்து அத்துன்பத்தை இன்னும் அதிகரித்துக் கொண்ட நிகழ்வே இப்படத்தின் ஆதாரமாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அதனை அடிப்படியாகக் கொண்டு அவர் 2005 இல் Monster எனும் குறும்படத்தை எடுத்தார் (தற்போது அப்படைப்பை ஜெனி செல்லமாக பேபி பாபாடூக் என்று அழைக்கிறார்). இருப்பினும் அதன் தாக்கம் தனக்குள் வடியாததை உணர்ந்த அவரது படைப்பூக்கம் இந்த முழுநீளத் திரைப்படத்தை எடுப்பதற்கான உந்துதலைத் தந்துள்ளது. மிகக் குறைவான பொருட்செலவில், கதைக்குத் தேவையானவைகளை மட்டும் நிர்மாணிக்க முடிந்த சிக்கனம், அதற்கான புரிதல் தனக்கு கைவந்தது இயக்குநர் லார்ஸ் வான் ட்ரியரின் Dogville திரைப்பட தயாரிப்பு உதவியாளராக கிடைத்த பணியனுபவம் மூலமாகவே என்கிறார்.
பெண்ணியத்திரைப்படம் என்பது வெறுமனே பெண்களுக்கான சம உரிமை மீட்பையும், அவர்கள் எதிர்கொள்கிற சமூகச் சிக்கல்களையும் மாத்திரம் பேசுகிற படங்கள் மட்டுமல்ல. ஒரு பெண் எதிர்கொள்கிற அகச்சிக்கல்களையும், உளப்போராட்டங்களையும், ‘ஒரு பெண்ணாக மட்டுமே’ உள்வாங்கிட இயலுமென்கிற பல வாழ்வியல் நுட்பங்களை இப்படம் வழங்குகிறது. அதேசமயத்தில் ஒரு புனைவின் துணைகொண்டு பார்வையாளர்களாகிய நம் அனைவருக்குமே கடத்திடவல்ல படைப்புகளும் இத்தகைய வகைமைக்குள் வருமென்கிற திரை ரசனை சார்ந்த ஒரு புரிதலையும் இப்படம் வழங்குகிறது.
“The Scariest monsters are the ones that lurk within our souls” எனும் எட்கர் ஆலன் போவின் மேற்கோள்தான் எத்தனை உண்மையானது!
(தொடரும்…)