The Unknown Saint (2019)
Dir: Alaa Eddine Aljem | Morocco (Arabic) | 100 min | Netflix
மனிதர்கள் பலருக்கும் இருப்பதிலேயே சிரமான காரியம் சுதந்திரமாக இருப்பதுதான் என்று நான் சொன்னால் கொஞ்சம் விநோதமாகத் தோன்றலாம். இருப்பினும் உண்மை அதுதான். பரிபூரண சுதந்திரம் மிக அதிகமான பொறுப்பை உடனழைத்து வருகிறது. பொறுப்பு பெரும் சுமை. பெரும்பான்மை மனிதர்களுக்கு அவர்தம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு தாங்கள் பொறுப்பாளிகள் அல்ல எனவும், அது அத்தனைக்கும் வேறு எதுவோ காரணமென்றும் நினைத்துக் கொள்வது இலகுவாக இருக்கிறது. நல்வினை அல்லது தீவினைக்கான பலன்களே நமக்கு நடக்கிற நல்லது கெட்டதுகளுக்குகான காரணங்கள் எனும் நம்பிக்கைகளில் துவங்கி, விதி எனும் கருத்தியலுக்கு நகர்ந்து, இறுதியில் எல்லாம் இறை செயல் எனும் புள்ளியை நோக்கி அவர்களை அது நகர்த்துகிறது. சுருங்கச் சொன்னால் மனிதர்கள் தங்களது நம்பிக்கைகளை ஒரு சட்டை போல கடவுள் / மதநம்பிக்கை எனும் ஆணியில் மாட்டிவிட்டு ஓய்ந்திருக்கவே விரும்புகின்றனர்.
உலகில் இதுவரை தோன்றிய எல்லா மதங்களிலும் நம்பிக்கையூட்டிட தொன்மக் கதைகள் புனையப்பட்டுள்ளன என்பதே யதார்த்தம். அவற்றைச் சுற்றியே மதம் சார்ந்த சடங்குகள், மரபுகள் என ஏனைய கூறுகள் உருவாகின்றன. சில கூறுகள் மதங்கள் தோன்றியது முதற்கொண்டே இருக்கின்றன. வேறு சில, குறிப்பாக வழிபாட்டுத்தளங்கள் உருவாதல் என்பது, இடையிடையே அரங்கேறுகிற ஆன்மீக அத்தியாயங்கள். வழிபாட்டுத் தலங்கள் உருவானதற்குப் பின்னால் இருக்கின்ற வரலாறு என்பது நிசங்களும் புனைவுகளும் கலந்த கலவையே. மதங்கள் முன்வைக்கிற சகலத்தையும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளலே கடவுள் நம்பிக்கைக்கான ஆதாரமாக கட்டமைக்கப்படுவதால், பெரும்பாலும் தல வரலாறுகள் அப்படியே உள்வாங்கப்படுகின்றன. காலஓட்டம் புனைவையும் உண்மையையும் ஒன்றென உருமாற்றிவிடுகின்றது.
மொராக்கோ தேசத்து அலா எடின் அல்ஜம் சில குறும்படங்களுக்குப் பிறகு இயக்கிய முழுநீளத் டிராமெடி (Dramedy) திரைப்படமான ‘The Unknown Saint’ மேற்சொன்ன செய்திகளையே புனைவு வெளிக்குள் பொருத்திப் பார்க்கிறது. டிராமெடி எனும் சினிமா வகைமை டிராமாவின் கூறுகளையும், நகைச்சுவையின் கூறுகளையும் கொண்ட கலவையாக இருக்கும். கதையையும், திரைக்கதையையும் நோக்குகையில் இதனை ஒரு இருண்மை நகைச்சுவை நாடகம் எனச் சொல்லலாம். அரபு மொழியில் படம் இருப்பினும், இசுலாமியப் பின்னணியில் நகர்கிற போதிலும், எல்லாரும் அடையாளங்கண்டு கொள்கிற வகையில் கதையம்சம் பொதுத்தன்மை உடையதாகவே இருக்கிறது. மிக எளிய கதையைக் கையாண்ட விதத்திலும், நேரடியாக பகுப்பாய்வு செய்கிறேன் பாரென விமர்சனப்பாணியில் எதையுமே முன்வைக்காமல், வெறும் ‘இருப்பதை’ எடுத்துக் காட்டுகிற வகையில் இருக்கும் கதையாடலே படத்தின் சிறப்பம்சமாய் இருக்கிறது.
கதையில் உலவும் கதைமாந்தர்கள் பெரும்பான்மையோருக்கு தனிப்பெயர்களே இல்லை. இது கதபாத்திரங்களோடு ஒன்றவிடாது ஒருவித விலகலைத் தருகிறது போலத் தெரிந்தாலும், கதை வளரும் போக்கில் அவர்கள் அத்தனை பேருமே தனியர்கள் அல்ல என்பதையும், வெறுமனே விதவிதமான மனிதர்களின் வகைமாதிரிகளாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறோம்.
முதல் காட்சியில், ஒரு வறண்ட பாலை போன்ற வெற்றுவெளியில் ஒரு கார் நிற்க, அவசர கதியில் ஒருவன் தோள்பையுடன் இறங்குவதைக் காண்கிறோம். அவனுக்கு ஏதோ ஓர் அவசரமென்பதை அவனது நிலைகொள்ளாமையே எடுத்துக் காட்டுகிறது. அருகிலிருக்கும் ஒரு குன்றேறும் அவன், பணம் நிரம்பிய ஒரு தோள்பையை அங்கிருக்கும் ஓரிடத்தில் புதைத்து வைக்கிறான். சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக புதைவிடத்தை ஒரு அனாமதேய கல்லறையின் தோற்றத்தில் அமைக்கிறான். அடையாளத்திற்கு அடையாளமும் ஆயிற்று; சந்தேகமும் வராது எனும் நம்பிக்கையிலேயே இந்த ஏற்பாட்டைச் செய்கிறான். நிமிடங்களில் கேட்கும் காவல் வாகனத்தின் நீடித்த ஒலி இவனொரு திருடன் என்பதை அறிவிக்கிறது. கைதாகி சிறை செல்கிறான் திருடன்.
சிலகால சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான கையோடு, மறைத்து வைத்திருக்கும் பணப்பையை எடுக்க அவ்விடம் செல்லும் அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. எக்குன்றின் மேல், எவ்விடத்தில் அது புதைத்து வைக்கப்பட்டதோ அங்கு ஒரு கட்டிடம் எழுந்துள்ளது. அச்சூழலே அது ஒரு ஆன்மீகத் தலமாய் உருவாகியுள்ளதற்கு சான்று பகர்கிறது. அதனையே தங்கள் பொருளாதாரத்தின் அச்சாணியாய் கொண்டு இயங்குமளவுக்கு சுற்றி ஒரு சிறு கிராமமே உருவாகியிருக்கிறது. குன்றேறி அவன் சென்று காண்கையில் அறியப்படாத புனிதரின் கல்லறை (Mausoleum of the Unknown Saint) எனும் பெயர் பலகை அவனை வரவேற்கிறது. நொடிப்பொழுதில் தான் பணத்தை மறைத்துவைக்க உருவாக்கிய கல்லறைதான் இப்படியாக மாறிள்ளதென்பதை அவன் புரிந்து கொள்கிறான். மாதக்கணக்கில் சிறையில் அவன் வாடியது அந்த பணப்பைக்குத்தான். அதனை விட்டுக் கொடுக்க அவன் தயாரில்லை.
மேற்சொன்னவை எல்லாம் படத்தின் மிகச் சில துவங்க நிமிடங்களில் முடிந்து விடுகிற காட்சிகள். பணப்புதையலை எடுப்பதற்கான திருடனின் பிரயத்தனங்களே முழுப் படமாக விரிகிறது. இதுதான் மையக் கதைப்பொருளாக இருக்கும் போதிலும், இதனோடு கூடவே சிற்சில கதாபாத்திரங்களும், அவர்களது வாழ்வும் எப்படி அக்கிராமத்தோடும் குறிப்பாக புனிதத் தலமாகிப் போன அக்கல்லறையோடும் பிணைக்கப்பட்டுள்ளது என்பது திரைக்கதையோடு கோர்க்கப்பட்ட விதமும், அதனுள் இழையோடுகிற மெல்லிய நகைச்சுவையுமே படத்தை சுவாரசியமாக்குகிறது.
கல்லறையை தனது பிரிய நாயுடன் காவல் காக்கும் மனிதர், கிராமத்தின் தங்கும் விடுதியின் காப்பாளர், அதே விடுதியில் தங்கியிருக்கும் ஒரு திருடனை அறிவியல் ஆய்வாளர் என்று குருட்டுத்தனமாய் நம்பும் இன்னொரு பயணி, கிராமத்தின் ஒரே வைத்தியசாலைக்கு புதிதாக வருகின்ற மருத்துவர், அவருக்கு உதவியாளராக அங்கு இருக்கும் வயோதிக ஆண் செவிலியர், பத்து வருடங்களாய் பொய்த்துப் போனாலும் இன்னும் மழை வருமென நம்பி உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு விவசாயி மற்றும்அவரது மகன் என கதைக்குள் உலவுகிற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வகையில் அக்கல்லறையோடும் அது சார்ந்த நம்பிக்கையோடும் பிணைக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர். இணைப்பு இழையின் ஒரு முனை அக்கல்லறையோடும், மறு முனை அவர்களது முழுவாழ்க்கையைச் சுற்றியும் நூற்கப்பட்டுள்ளது. அவர்களோடு தற்சமயம் விடுதியில் தங்கியிருக்கும் திருடனும் சேர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு உதவ வருகிற இன்னொரு மூளையற்ற சக சிறைப் பறவையாயிருந்த தோழன் ஒருவனும் இணைந்து கொள்கிறான்.
காவலாளிக்கு அவர் செய்யும் வேலையை முன்னிட்டு கிராமத்தில் நல்ல மரியாதை. சிறப்புச் சலுகைகள் வேறு. அவரோ தனக்குக் கிடைக்கிற அத்தனை பெருமையும், தனக்கு அயராது உதவுகிற செல்ல நாயினால் வந்ததே என நம்புகிறார். அதனால் தனக்கு இணையாக அந்த ஜீவனை நேசிக்கிறார். அந்தக் கல்லறையில் வந்து பிராத்தனை செய்து கொள்பவர்களுக்கு நல்லது நடப்பதாக நம்பப்படுவதால், தங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்களை எதிர்பார்த்து வருகின்ற பக்தர்களின் வருகை அவரைப் பொருத்தவரை நிரந்தரமான வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.
திருடனுக்கு தனது தங்கல் குறித்த பொய்க் காரணத்தை தயாரிக்க வேண்டிய சிரமத்தை அவனொரு ஆய்வாளன் எனும் சக பயணியின் தவறான ஊகம் இல்லாமலாக்குகிறது. கிடைத்த வாய்ப்பை விழுதெனப் பற்றிக் கொள்கிறான் அவன். தான் பாறைகளை ஆய்வு செய்கிற ஓர் அறிஞன் என அவன் சொல்கிற விளக்கம் முழுப்பொய் எனினும், அங்கு பெரிய மரியாதையையே அது அவனுக்குப் பெற்றுத் தருகிறது. ஊர் உறங்கி இரவு விழிக்கையில் எல்லாம் அவன் தனது நோக்கத்தைச் செயலாக்குவதற்கு முயன்றாலும், ஏதோ ஒரு தடை அவனுக்கு முட்டுக்கட்டை இட்டுகொண்டேயிருக்கிறது. அவனது தோழனோ முழு மூடன். எப்பலனும் அவனால் இல்லை. இருப்பினும் அவனை விட்டால் இவனுக்கு வேறு கதியுமில்லை.
ஏழை விவசாயியோ வானம் பொய்த்தபோதிலும், தளரா நம்பிக்கையுடன் மழை வருமென நம்பி நிலத்தைத் தயாரிக்கிறார். ஒரே மகன் வழியின்றி அவருக்கு உதவியாக இருந்து கவனித்துக் கொள்கிறான். பிழைக்க வழி தேடி நகருக்குப் போகலாமெனும் மகனது எண்ணத்தை யோசனையாய்க் கூட அவர் செவிமடுக்கத் தயாராயில்லை. பெயரற்ற புனிதரின் கல்லறை இருக்கும் புனித பூமியை இறைவன் கைவிடமாட்டார் எனத் தீவிரமாய் நம்புகிற பக்தர் அவர்.
வைத்தியசாலைக்கு வேலைக்கு வருகின்ற புது மருத்துவருக்கும், அங்கு ஆண்டுக்கணக்கில் இருக்கிற ஒரே ஆண் செவிலியர் ஹசனுக்கும் இடையில் மலரும் நட்பும் அவர்களது கதையும் படத்தின் நகைச்சுவையான பகுதிகள். இளமைத் துடிப்போடு சேவையாற்ற அங்கு கால்பதிக்கும் மருத்துவருக்கு அங்கிருக்கும் நிகழ் யதார்த்தத்தை புரிய வைப்பதே ஹசன்தான். அற்புதங்களை மட்டுமே நம்பி எதிர்பார்க்கிற கிராம மக்கள் கல்லறையே கதியெனக் கிடக்க, அவர்களெங்கே அறிவியலை நம்பப் போகிறார்கள்! வைத்தியசாலையின் முற்றம் வெறுமனே கிராமப் பெண்கள் கூடுமிடம் மட்டுமே என வந்த முதல் நாளே விளங்கிக் கொள்கிறார் மருத்துவர். அவர்கள் சொல்லும் உப்புச்சப்பிலாத உடலுபாதைகளுக்கு சர்வரோக நிவாரணியாக ஒரே மாத்திரையைத்தான், அதுவும் ஹசனே, மருத்துவரை விநியோகிக்கச் செய்கிறார். சில நாட்களுக்குள்ளாகவே தானும், ஏன் அந்த மருத்துவசாலையுமே, ஒரு வெற்று அலங்காரம்தானென மருத்துவர் புரிந்து கொள்கிறார். ஹசனுக்கு வாழ்க்கை சுரத்தையில்லாமல் நகர்வது சலித்துப் போகிறது. அவர்களது பணிவாழ்வின் வெறுமையை அவர்களுக்கிடையே மலரும் நட்பே இட்டு நிரப்புகிறது.
அதேவேளையில் திருடன் தன் பணத்தை கல்லறையில் இருந்து எடுக்க தொடர்ச்சியாக முயல்கிறான். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல். ஒரு முறை காவலாளியும் அவனது நாயும் இணைந்து திறம்பட திருடனின் முயற்சியை முறியடித்திட, ஊருக்குள் அவனுக்கு நாயக பிம்பம் கிடைக்கிறது; கூடவே நிறையவே மரியாதையும். ஒரு கட்டத்தில் குன்றின் மீதேறி கல்லறையை நெருக்கும் சமயத்தில், மூன்றாவது நபரொருவரால் கல்லறையின் வெளிச்சுவற்றில் வைக்கப்பட்டிருந்த உலோக பெயர்ப்பலகை திருடப்படுகிறது. காவலாளியின் நாயக பிம்பம் அத்தோடு சரிகிறது. உண்மையில் அந்த மூன்றாவது நபர் ஹசன் தான் எனவும், தங்களது விரக்தியான சலிப்பூட்டும் வாழ்விற்கு முழுமுதற் காரணம் அக்கல்லறையே எனும் எண்ணத்தில் தான் அவர் அப்பெயர்ப்பலகையை கவர்ந்து வந்துள்ளார் எனவும், மருத்துவர் வழியாக நாம் அறிந்து கொள்கையில் அவர்கள் இருவரும் கூட மறைமுகமாக இக்கல்லறையோடு பிணைக்கப்பட்டுள்ளனர் எனப் புரிந்து கொள்கிறோம். இன்னும் சுவாரசியம் கூட்டிட, அதன் பிறகு அப்பலகையை வைத்துக் கொண்டு அவர்கள் செய்வது, சிந்திக்கவும் தூண்டுகிற மகா நகைச்சுவை.
இன்னொரு பக்கம் திருடனின் மூடத்தனமான தோழன், அந்த நாயுள்ளவரை தங்கள் எண்ணம் ஈடேறாது எனக் கருதி அதனை காரேற்றிக் கொல்ல முயல்கிறான். ஆனால், அதைக் கூட ஒழுங்காக செய்ய இயலாமல் இன்னொரு நகைச்சுவை அத்தியாயத்திற்கு அச்சாரமிடுகிறான். தன் உயிரினும் மேலான நாய் காலுடைந்து, பற்கள் எல்லாம் உதிர்ந்து போயிருப்பதைக் காணச் சகியாத காவலாளி, ஊரின் நாவிதனிடம் தனது நாய்க்கு செயற்கைப் பற்கள் செய்து தருமாறு வேண்டுகிறான். அவனோ தனக்கு தங்கத்தில் மட்டுமே பற்கள் செய்யத் தெரியுமென, அதற்கும் சம்மதிக்கிறான் காவலாளி. ஊரே வியக்க நாய்க்குத் தங்கப்பல் பொருத்துகிறார் மருத்துவர். அங்கு வந்ததில் இருந்து அவர் செய்த பெரிய மருத்துவ சிகிச்சையாக அதுவே இருக்கிறது. கல்லறையை மறந்து தனது தங்கப்பல் நாய்க்குக் காவலிருக்கத் துவங்குகிறான் காவலாளி. திருடனுக்கு வசதியாக கல்லறை இதனால் கேட்பாரற்று தனித்துக் கிடக்கிறது.
வானம் பொய்த்த நிலத்தின் வறள் பூமியை தன் பிராத்தனைகளின் நம்பிக்கையாலேயே நனைத்துக் கொண்டிருக்கிற விவசாயி, நாளடைவில் மனமொடிந்து போகிறார். தரிசான நம்பிக்கை அவரது உயிராசையை அசைத்துப் பார்க்கிறது. தனித்திருக்கத் துவங்கும் அவர் ஒரு கட்டத்தில் தான் நம்பிக் கிடந்த மண்ணுக்கே திரும்புகிறார். அவரது இழப்பைச் சகியாத மகனது கோபம், தனது தந்தையின் பொய்த்துப் போன ஆன்மீக நம்பிக்கையின் மீது திரும்புகிறது.
சில முயற்சிகளின் போது திருடனின் தோழனும், ஒரு முறை திருடனேயும் கூட கல்லறைக்குள் நுழைகிற முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரடியாக நம்பிக்கை இல்லை எனினும், சுற்றத்தாரின் கல்லறை மீதான பெருநம்பிக்கையின் நிழல் இவர்கள் மீது கவிந்து அதுவே ஒருவித பயத்தை தூண்டுகிறது. மதநம்பிக்கைகள் மீதான மனிதர்களின் கூட்டு உளவியல் எவ்விதம் செயலாக்கம் பெறுகிறது என்பதை மென் நகைச்சுவையோடு இப்பகுதி எடுத்துக் காட்டுகிறது. இறுதிக் காட்சியில் தன் தகப்பனின் இழப்பைத் தாளாத விவசாயியின் மகன் அக்கல்லறையை வெடிவைத்துத் தகர்க்கிறான். பிறகு என்னவானது என்பது படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்.
படம் மிக மெதுவாக நகர்வதாய் தோன்றக்கூடும். இருப்பினும் அதன் அணுகுமுறைதான் இப்படத்தை அறிமுகப்படுத்தி எழுதத் தூண்டுகிற அம்சமாய் இருக்கிறது. பொதுவாக நம்பிக்கைகள், கருத்துப்பள்ளிகள் என வேறுபாடுகள் நிறைந்தவைதான் மனிதர்களின் அபிப்ராயங்கள். பொதுவாக மதங்கள் சார்ந்த நம்பிக்கைகள் என வருகையில் விமர்சிக்கிற விதத்தில் ஒட்டுமொத்தமாய் மட்டம் தட்டுதலும், புறக்கணித்தல்களும் நிறையவே இருக்கும். ஆனால், படத்தின் இயக்குநர் இப்படத்தில் மிக முக்கியமான மதப்புனிதங்களை கட்டமைக்கிற தொன்ம உருவாக்கத்தினை கையிலெடுத்துக் கொண்டு, மிக யதார்த்தமாக அதனை அணுகி, எதனையும் வன்மையாக விமர்சிக்காமல், கண்டிக்காமல், உணர்வெழுச்சியைத் தூண்டாமல் இருக்கிற வண்ணம் இருக்கின்ற அணுகுமுறை ஆரோக்கியமானது. தொன்மங்களின் மீது மனித கற்பனைகள் எப்படி ஏறிக் கொள்கின்றன என்பதயும், அது நாளாவட்டத்தில் அத்தொன்மம் என்றே அனைவராலும் எப்படி ஊதிப் பெருக்கப்படுகிறது என்பதையும், இவ்விடயத்தில் பகுத்தறிவின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதையும், மென்மையான நகைச்சுவை இழையோட புண்படுத்தாமல் இந்தப்படம் எடுத்துக் காட்டுகிறது.
முன்சொன்னது போல கதாபாத்திரங்கள் எதுவுமே ஆழமாய் எழுதப்படாத போதிலும், அவர்களுக்குள் இருக்கிற உறவு நிலைகளுக்குள் எப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்த அறியப்படாத புனிதரின் கல்லறை ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதிலேயே திரைக்கதையின் கவனம் குவிகிறது. பரவலாக திரைப்பட விழாக்களில் நேர்மறை விமர்சனங்களை ஈர்த்த இப்படம் மொராக்கோ தேசத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவிற்கான 93வது ஆஸ்கர் அகாதமி விருதுகளுக்கு அனுப்பப்பட்ட படம். எனினும் இறுதிப் பட்டியலில் இதனால் இடம்பிடிக்க இயலவில்லை.
சினிமா ரசனை சார்ந்து கற்றுக் கொள்கிற நோக்கில் பார்கிற பார்வையாளர்கள் இப்படத்தின் வழியாக நகைச்சுவை படத்திற்கும் டிராமெடி படத்திற்கும் அணுகுமுறையில் இருக்கிற அடிப்படை வேறுபாடுகளை எளிதாய் இனங்கண்டு கொள்ளலாம். பொதுவாக முழுக்க நகைச்சுவைக்காக எடுக்கப்படுபவை காமெடித் திரைப்படங்கள். சிந்திக்காமல் சிரிக்க வைப்பதே அவற்றின் அடிப்படை நோக்கமாக இருக்கும். செயற்கைத்தனம் பூசிய நகைச்சுவைக் காட்சிகளே நிறைந்திருக்கும். ஆனால், டிராமெடி வகை திரைப்படங்களில், ஒரு தீவிரமான கதையை எடுத்துக் கொண்டு, அது நகர்கின்ற போக்கில் இயல்பாக வருகின்ற நகைச்சுவை மட்டுமே மிகையின்றி கையாளப்பட்டிருக்கும். சினிமா என்றல்லாமல் நமது அன்றாட வாழ்விலும் நகைச்சுவை ததும்புகிற கணங்கள் இயல்பாக வரும் தானே! அந்த இயல்பை புனைவின் வழி தொடுபவையே டிராமெடி படங்கள்.
(தொடரும்…)