அறிதலின் நிழல்
கலைத்துப் போட்டபடி கிடக்கும் இயலாமைக்குள்
ஒடுங்கிக் கிடக்கிற உள்ளத்துக்கு
உயரத் தேவையாயிருக்கிற ரேகைகளை
வளர்த்துக் கொண்டிருக்கிறது
நித்தியத்தின் இளவெயில்
ஜன்னல் வழி நுழையும்
வெளிச்சக் காலடி
கிளை நிழலாகி வளர்க்கும் சுவடைப் பற்றி
மேலேறுகிறேன்
மரம் கொண்ட மௌனம் உண்டு
வளர்கிறது
என் கிளைத் தனிமை.
***
சுவடறுத்தல்
கண்டுவிட்ட உள்ளத்தின் உயரத்தில் இருந்து
கீழிறங்கும் வழி செய்கிறது
கையிலிருக்கிற மௌனம்
கெட்டிப்படும் சொல் வழி
உயரும் வலி
உருவேற்றுகிறது உருவத்திற்கு உகந்ததொரு
மலையை
குடையக் குடைய அடைந்திடும்
வெளிச்சத்தில்
அசையா வெளியொன்று அணங்காடுகிறது
கழற்றிவிட்ட காலடிகளை
கால் கொலுசாக்கிய ஓசைகளோடு.
***
உயிர் மீட்டுதல்
கடந்துவிட்ட கனவைப் போல்
இதையும் மறந்து போயிருக்கலாம்
இருந்தும்
திரும்புதலில் அசைவுறுகிற மனத்தின்
ஓரத்தில் கேட்கிறது
ஒரு புல்லாங்குழல் ஓசை
மையிருட்டின் திரைச்சீலையைக் கிழித்து
யாரும் அறியாமல்
உள் நுழைகிறது கொடிய கனவென
உன்னிருப்பு
இமை தாளாது திறக்கும் சொல்லுக்குள்
உன்னை ஏற்றிவைத்த அச்சுடர்
தயங்கித் தயங்கி
எரிகிறது
பகலிரவுகளை மறைத்து
இனி தேவையென்ன
வசதிப்பட வாசிப்பதற்கு
துளை பூணும் நயம் கொள்ளும்
சின்னஞ் சிறிய காத்திருப்பு
ஆம்
சின்னஞ் சிறிய காத்திருப்பு.
*****