
அண்ணனின் சட்டை
அண்ணனின் சட்டை
அத்தனை அம்சமாய்ப் பொருந்தியது
கழுத்து வரை நிறைந்தும்
இடுப்பு வரை நீண்டும்
உடலை இறுக்கிப் பிடிக்காமல்
அணிந்திட்ட பொழுதினில்
அத்தனை ஆசுவாசமாக இருந்தது
அண்ணனின் சட்டையை அணிகையில்
வாசல் பெருக்கிடும்போது
ஒரு கையால் நெஞ்சோடு சேர்த்துப் பிடிக்கவோ,
கூர்பார்வைகளின் வேகத்தை சட்டை செய்யவோ,
கூந்தலை முன்புறமிட்டு மறைக்கவோ
அவசியம் இருக்கவில்லை
‘ஏன் பெண்பிள்ளைகள் சட்டையில்
பை வைப்பதில்லை?’ என்ற எரிச்சலுக்கு
ஆறுதலாகிறது ஆண்பிள்ளை சட்டை
என்னுள் உறங்கும் சின்னப்பெண் துடுக்கை
அந்த சட்டைப்பையில்தான் ஒளித்து வைத்தேன்,
வேண்டும் பொழுதெல்லாம் எடுத்துக் கொண்டாட.
அண்ணன் தன் சட்டையைத் தேடிய பின்
அள்ளித் தெளிக்கும் வசைகளை
ஆத்திரப்படாமல் காற்றோடு கட்டியனுப்ப
அண்ணனின் சட்டை
அத்தனை அம்சமாய் பொருந்தியதே காரணம்!
****
ஒற்றை வாழ்க்கை
‘வாழ்க்கை மிக மிகக் குறுகியது,
ஒற்றைக்கு ஒரு வாழ்க்கைதான்
பின் ஏன் துயர்படனும்?’ என்ற
இன்ஸ்டா ரீல்ஸை அனுப்பி
எடுத்துச் சொல்கிறாய் எனக்கு
ஆமாம் என்றேன் உருக்கத்தோடு!
இத்தனைய சிறிய நேரத்தில்
ஏன் வழக்காடனும்,
ஏன் சண்டைபிடிக்கனும்,
ஏன் வீண் கோபங்கள்,
சமதானமாய்ப் போவோம்,
சந்தோசமாய் இருப்போம்,
ஒரு வாழ்க்கைதானே,
அதுவும் மிகச் சிறியதுதானே,
என்று வகுப்பெடுத்த நீதான்
மறுநாளினில்
வர்ணபூச்சுகளால் பளபளக்கும்
நின் நகங்கொண்ட விரல்களால்
சிரித்துக்கொண்டே
என்னை மெது மெதுவாய் நசுக்கத் தொடங்குகிறாய்
இப்பொழுது நான் அமைதியாக இருக்க வேண்டிய
கட்டாயத்தைதான் நேற்றைய பாடம் சொல்லிக் கொடுத்தது
எனப் புரிந்த பொழுதினில் கொஞ்சமாய் நகர்ந்து அமர்கிறேன்!
****
ததாஸ்து
‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற
உன் உரையாடலின் ஞாபகத்தில்
சுயபச்சாதாபம் மேலிட்ட நாளினில்
பற்றிக்கொள்ளவும், கொஞ்சம் புலம்பிக்கொள்ளவும்
உன்னையே தேடுகிறது மனது,
தவிர்க்க விரும்பா நிர்பந்தங்களின் முதல் அடியாக
ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைக்கிறேன் உனக்கு
“எழுந்துவிட்டாயா?”
“வாசித்துவிட்டாயா?” என்று
ஓராயிரம் முறை பரிசோதித்து சோர்வுரும் மனதினை,
பார்த்தாலும் பதிலிறுக்க முடியா
அவசர உலகத்தில் பயணிப்பவனை
குறை சொல்லலாகுமோ என்ற
மிகச் சிறு குளிகையால் தேற்றிக் கொள்கிறேன்
‘நான் உன் உற்ற நண்பன்
உனக்காக எப்பொழுதும் இருப்பேன்’
என்று நீ கூறியபோது
நம்மை சுற்றிப் பறந்து கொண்டிருந்த
தேவதைகளில் ஒருவராவது, ‘ததாஸ்து’ கூறியிருக்கலாம்.
இன்னொரு முறை இதையே சொல்லி நீ
உரையாடலைத் தொடங்கும் நேரம்
தேவதைகள் உறங்காத பொழுதாய் இருக்கட்டும்.
*******