இந்த வாழ்க்கை டூ வீலர்களால் ஆனது.
காலத்தின் பேலன்ஸ் இல்லாமல் அவைகள் எப்போதாவது முட்டுச் சந்துகளில் முட்டி மோதி நிற்பவை. அப்படித்தான் நான் இந்த முட்டுச்சந்தில் டூ வீலரோடு நின்று கொண்டிருக்கிறேன்.
இன்று மாலை நான், அதோ அங்கு என் கண் முன்னால் நிற்கும் அந்த பைக்கை ஆட்டையைப் போட்டுக் கொண்டு செல்லாவிட்டால் என் அலுவலகத்தில் என் சீட்டை கிழித்து விடுவார்கள். மழையில் தொப்பலாக நினைத்து சேற்றில் மாட்டிக் கொண்டு எத்தனை உதைத்தாலும் சொரணையில்லாமல் நிற்கும் நைந்து போன பைக்கின் மனநிலைதான் இப்போது எனக்கு.
எனக்கு முன்னால் நிற்கும் அந்த பைக்கிற்கு டியூ கட்டி 6 மாதங்கள் ஆகி விட்டன. வேறு வழியில்லாமல் பைக்கை தூக்கி வர சொல்லி இருக்கிறார்கள். அது தான் இந்த வேலையில் என் திறமையைச் சோதிக்கும் முறை என்றும், இது சாத்தியம் என்றால் தொடர்ந்து இந்த வேளையில் நான் இருப்பேன் என்றும் பேச்சு.
நானும் ஒரு பைக் வைத்திருக்கிறேன். இந்த மாதம் சம்பளம் தாண்டி இன்சென்டிவ் இல்லை என்றால் என் பைக்கிற்கு டியூ கட்ட முடியாது. பாவம் புண்ணியம் பார்க்கும் சூழ்நிலையில் நான் இல்லை. எனக்கு தலைக்குள் இதயம் துடித்தது. இதயத்திற்குள் மூளை கசிந்தது. இந்த உலகமே என்னை உற்று நோக்குவதாக ஒரு அவதானிப்பு என்னை அலைக்கழித்தது. என்ன விதமான வேலை இது. ஆசைக்கோ அத்தியாவசியத்துக்கோ பைக் வாங்கி விட்டு அதற்கு டியூ கட்ட முடியாமல் தவிப்பதை…… நான் கடந்த இரண்டு மாதங்கள் கட்ட முடியாமல் ஓடி ஒளிந்து திரிந்த போது உணர்ந்திருக்கிறேன். வெட்டி வீராப்பு……வீரத்தின் சாயம் பூசி……. நேர் கொண்ட பார்வையில் பைக் கடைக்காரனிடம் நடந்து கொள்ள முடியவில்லை.
உலகமயமாக்கல்,வெள்ளை பொருளாதாரம் கருப்பு பொருளாதாரம் பச்சை பொருளாதாரம் என்று எல்லா பொருளாதாரமும் என் வயிற்றில் அடித்துக் கொண்டிருப்பதை உலக பிரஜையாக நான் புலம்பத்தான் வேண்டும்.
அவன், அந்த கடன்காரன் எங்கிருந்தோ வந்த பயணியைப் போல இப்போது பைக்கில் அமர்ந்து ஹாயாக ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் எங்குச் செல்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் எங்குச் சென்றாலும் நானும் பின்னால் செல்ல வேண்டும். நான் கழுகாகி விட்டேன். அவன் பாம்பைப் போல ஊர்ந்து கொண்டிருக்கிறான். சமயம் பார்த்து படக்கென்று கொத்தித் தூக்கி விட வேண்டும்.
மருத மலை சாலையில் பயணித்தவன்… வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அங்கே இருந்த ஒரு குட்டையைச் சுற்றி சுற்றி பார்க்க ஆரம்பித்திருந்தான்.
“என்ன கருமம் இது.. அங்க என்னத்த பாக்கறான்…!” மனம் புலம்பினாலும் கண்கள் அவனைத் தூரத்திலிருந்து மரக்கிளைகள் வழியே ஓவியம் போல கண்டது. அவன் அந்த குட்டையின் கரையில் குத்தவைத்து அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தான். நான் கடைசியாக எப்போது செல்பி எடுத்தேன். நினைவில்லை. செல்பியில் என் முகத்தை, என் பாவப்பட்ட கண்களை, கன்னம் ஒடுங்கிய இந்த வாழ்வு தந்த வடுவை அத்தனை கிட்டத்தில் காணும் சகிப்புத்தன்மை எனக்கில்லை. இந்த கோவை மாநகரில் 12000 ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு நான் அம்மா அப்பா மனைவி பிள்ளைகள் இரண்டு தாத்தா பாட்டி அப்புறம் ஒரு நாய் என்று எப்படி வாழ்ந்து விட முடியும்.
கட்டம் போட்டு வாழ வேண்டிய குறுக்கு சந்து குடோன்கள் தான் நான் இருக்கும் வாடை வீ டு.
நான் அவனையே கவனித்தேன். அவன் வித விதமாக முகத்தைக் கோணிக் கொண்டு மூக்கை சுழித்துக் கொண்டு வாயை ஈ எனக் காட்டிக் கொண்டு விதவிதமாய் செல்பி எடுத்தான்.
அந்த வெயிலிலும் சூடாக ஆனாலும் தலை கலைக்கும் காற்றுக்கு அங்கே சுழல கொடுத்து வைத்திருந்தது.
அவன் எப்போது கிளம்பினான் என்று தெரியவில்லை. அனிச்சை செயலாய் நானும் கிளம்பியிருந்தேன்.
வீரகேரளம் அருகே இருக்கும் குளத்தின் கரையில் நின்றான். ஒரு கல் எடுத்தான். நீரில் மிதந்தபடியே தொட்டு செல்லும்படி காலத்தை சாய்த்து காற்றில் கச்சிதம் பற்றி, இழுத்து விட்டான். அவன் கையின் சொல்படி அந்தக் கல் சர்ரென்று நீரின் தலை தொட்டுத் தொட்டு தொட்டு தொட்டு காற்றில் கரம் பிடித்து அப்படியே சென்று காணாமல் போனது. அவன் ஒரு சிறுபிள்ளையின் முகத்தில் இருந்தான். அவன் தானாகவே சிரித்துக் கொண்டான். நான் ஒருபோதும் தானாகச் சிரித்ததே இல்லை. இந்த வழியில் எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். இதே அக்ரி பல்கலைக் கழகத்தைத் தொட்ட ரோட்டில் எத்தனையோ முறை பயணித்திருக்கிறேன். ஆனாலும், ஒரு நாள் கூட இந்தக் குளக்கரையில் நின்றதில்லை. நின்று எதையுமே கண்டதில்லை. கோவை குளங்களாலான ஊர் என்று எப்போதோ கேள்விப்பட்டதோடு சரி. ஒருநாளும்.. நான் குளங்களை இத்தனை அருகில் கண்டதில்லை. கொக்கும் குருவியும்… இத்தனை இலகுவாக நடமாடும் என்பதெல்லாம் எனக்கு டிஸ்கவரி சேனல் சமாச்சாரங்கள்.
நான் எப்போதும் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போலத்தான் பைக்கில் பயணம் செய்வேன். அவன் காற்றாடி போல பயணம் செய்கிறான். இந்த பைக்குக்கு அவன் ஓட்டும் லாவகம் தான் அழகு கூட்டுகிறது. நான் என்னையே நொந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் வெறி பிடித்த மனதோடு ஒட்டுக் கேட்கும் செவியோடு போட்டுக் கொடுக்கும் வாயோடு தான் என் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அவனைப் பாருங்கள். கடன்கார நாயாக ஆன பின்னாலும்… என்னவோ இந்த காட்டுக்கே ராஜா போன்ற ஒரு பாவனையில் நிற்கிறான். சாலையோர மரங்களில் இருக்கும் குருவிகளோடும்.. குரங்குகளோடும் ஏதோ பேசிக் கொண்டு நிற்கிறான். லூசாக இருப்பானோ என்று தோன்றியது. எந்த லூசு குரங்கோடு பேசும். எந்த கிறுக்கன் குருவியோடு பேசுவான்.
யானையின் வழித்தடத்தில் ஒரு மனித யானையைப் போல கையை காற்றில் தும்பிக்கையைப் போலத் தூக்கி கத்திப் பார்த்தான். என்னையும் அறியாமல் சற்று தூரத்தில் நானும் அது போலவே கையைத் தூக்கி மியூட்டில் கத்திப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. என்ன சிறுபிள்ளைத்தனம் இது. சிறுபிள்ளைத்தனங்கள் தான் உயிர்ப்பானவை. இந்த வாழ்வு கோபங்களாலும் சாபங்களாலும் ஆக்கப்பட்டவை என்று இதுவரை இருந்த தத்துவம் சட்டென உடைபடத் தொடங்கியது. மற்றபடி வெற்றுப்பாறையின் அமைதியைக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை. பசி இருந்தவரை சுமுகமாக இருந்த சமூகம் ருசிக்கு அடிமைப்பட்ட பின்பு தான் மனிதனை மனிதனை அடித்துத் தின்ன ஆரம்பித்தது. பிலாசபியெல்லாம் வந்து தொலைகிறது.
மங்கிய கீறல் விழுந்த என அலைபேசியில் ஒரு செல்பி கூட எடுத்துக் கொண்டேன். கட்டுப்பாடற்ற காற்று நுரையீரலில் கவனம் விதைத்தது. ஆழமாய் மூச்சிழுத்து…….மூச்சு விட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது…..? ஆசை தீர சிறுநீர் கழித்து எத்தனை நாட்கள் ஆகி விட்டது…..? அவன் சிறு பிள்ளையைப் போல சிறுநீரில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். நானும் இடுப்பை ஆட்டி ஆட்டி காற்றில் கோடுகள் கிறுக்கினேன். மனதுள் இருக்கும் சிறுவன் ட்ரவுஸரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு காகத்தைப் போல கத்தினான்.
நினைவைக் கலைத்த காற்று கண்கள் காட்டிக் கொடுக்க அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் படக்கென்று குதித்து விட்டான்.
எனக்கு அப்போது தான் புரிந்தது. படுபாவி தற்கொலை செய்ய வந்திருக்கான் போல… இப்போது என்ன செய்வது.
அவன் நீரில் மூழ்கி விட்டான். கரையில் நிற்கும் அந்த கருப்பு பைக்கை……ஓடி சென்று காலால் ஹேண்டில்பார்- ஐ ஓங்கி ஒரு உதை வைத்து, வைத்திருக்கும் கள்ளச்சாவி போட்டு எடுத்துக் கொண்டு வந்து விடலாமா……? நான் சென்ற பைக்கை மரத்தின் பின்னால் சருகுகளோடு சேர்த்து மறைத்து வைத்து தயாரானேன். ஆனாலும், ” அவன் செத்திருப்பானோ…?” லோயர் மிடில் கிளாஸ் மனம் பதைபதைத்தது.
“வா………வ்” என்று கத்திக் கொண்டு நீருக்குள் இருந்து சற்று கைக்கு மீறிய மீனொன்றைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.
‘அட கிறுக்கா… மீன் பிடிக்க குதிச்சிருக்கான்…!’
“கொஞ்சம் கழண்டவன் போலத்தான் இருக்கு…!” என்று சிந்திக்கும் போதே பிடித்த மீனைத் தூக்கி மீண்டும் நீரிலேயே விட்டு விட்டு எழுந்தவன்… நேராகக் கரையோரம் கைகள் விரித்து கண்களால் விரிந்து நீண்டிருக்கும் ஆலமரத்தினடியில் கர்சீப்பை போட்டு படுத்து விட்டான்.
“இப்போது என்ன செய்வது…..?” முதல் முறையாக அந்த மதிய வெய்யிலில் அந்த ஆறு மினுமினுத்துக் ஓடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஒரு மீனின் வாழ்வுக்கு மரியாதை தந்தவனாக இருக்கிறான். வெயிலுக்கும்……அடிக்கும் ஆல மர காற்றுக்கும் ஒரு கணம் பூத்து நின்றேன். சற்று தள்ளி நானும் நீருள் இறங்கி எப்போதோ கற்ற நீச்சலை இப்போது உறுதிப் படுத்தினேன். பொசுக்கென்று பூக்கும் மனதுக்குள் ஒரு காடு வளர்ந்த நிம்மதியை உணர முடிந்தது. அவ்வப்போது நீரில் இருந்து எழுந்து அவன் தூங்குகிறானா என்று பார்த்துக் கொண்டேன். நீர் பாம்பின் யோசனை அது.
கையில் கிடைத்த கல்லை எடுத்து நீரில் மேலாப்பில் அவன் விட்டெறிந்தது போலவே நானும் விட்டெறிந்தேன். தவளை மனம் வாய்த்த தருணம் அது.
எனக்கு எதிலிருந்தோ விடுதலை கிடைத்தது போல இருந்தது. என் இறுக்கம் தளர்ந்து என்னால் இந்தக் காட்டில் சற்று நேரம் தனித்திருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. நான் என்னவோ போல ஆகி விட்டேன் என்று நம்பத் தொடங்கினேன். அவன் தூங்கி எழுந்து வண்டியைக் கிளப்பிக் கொண்டு இறக்கையில் மலர்க்கொத்து பூத்தது போல வளைந்து வளைந்து பாட்டுப் பாடிக் கொண்டே செல்கிறான். நானும் பின்னால் பாட்டுப் பாடும் வாயசையில் அவனைப் போல வளைந்து நெளிந்து காற்றில் ஆகாவென சென்று கொண்டிருந்தேன். பெரும் மந்திரவாதி போலவே தெரிந்தான். ஆனாலும், அவனுக்குக் கட்டுப்படலாம் போலவே விரைந்தேன்.
ஏதோ போன் வர, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, சிரித்துச் சிரித்து பேசினான். எப்படி இப்படி சிரிப்பு வருகிறது. சிரித்து சிரித்து பேசுகிறான். பைக் டியூ கட்டமுடியாதவனால் எப்படி சிரிக்க முடியும். அப்படி என்றால் கட்ட முடியும் என்னால் ஏன் சிரிக்க முடியாது. நான் சிரித்தேன். மனதுக்குள் பளீர் புன்னகை என்னை வெட்டியது. மனைவிக்கு போன் செய்தேன். எனக்கு தெரிந்து ரொம்ப வருடங்களுக்குப் பிறகு மனைவிக்கு பகலில் போன் செய்து பேசுகிறேன்.
அவள் பதறியபடியே, ” என்னாச்சு….எங்ருக்கீங்க….எதும் பிரச்சினையா……..!?” என்றாள்.
“இல்லல்ல…..இல்லை. சும்மா கூப்ட்டேன்….” என்று புன்னகைத்தேன்.
“அயோ என்னாச்சுக்குங்க… ஏதும் பிரச்சனையா…….. நீங்க இப்பிடியெல்லாம் பேசுற ஆளே இல்லையே.. அதும் பகல்ல போன் பண்ணிருக்கீங்க… பயமா இருக்கு…..!” அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.
நான் மெல்ல, “நியந்தா…..நாம எப்படியும் வாழ்ந்துடுவோம்….. பயப்படாத… வாழ்க்கை அப்படி இப்படிதான் இருக்கும்… எல்லாத்துக்கும் அடிப்படை சந்தோசமா இருக்கறதுதான்…. அதுதான் நம்பிக்கையை குடுக்கும். அழுது புலம்பி சோகமா இருக்கறதுனால எதுவும் மாறிடாது. சாயந்தரம் வந்து எல்லாத்தையும் சொல்றேன்… சரியா…”
எதற்கும் பதில் இல்லை. ஆள் திக்குமுக்காடி நிற்பாள். நான் அலைபேசியை அணைத்து விட்டு முதன் முதல் காதலில் எழுந்தவன் போல அந்த டியூ கட்ட முடியாதவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்.
டியூ கட்ட முடியவில்லை. அத்தனை போன் கால்ஸ். அத்தனை மிரட்டல். அத்தனை குடைச்சல். எல்லாம் இருந்தும் அவனால் எப்படி இப்படி இலேசாக இருக்க முடிகிறது. அவனாலேயே இந்த வாழ்க்கையை இத்தனை அழகாய் கையாள முடியும் போது…..ஏன் என்னால் முடியாது. ஏன் நான் முகத்தை மூடி வைத்துக் கொண்டே அலையே வேண்டும். ஏன் மனச்சிக்கலோடு ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டும்…? இந்த வாழ்வு திட்டமிட்ட ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இது வெடித்து விழுந்த துண்டு வெளிச்சம். அதை ஊதி ஊதி அணையாமல் பார்த்துக் கொள்ளக் கொஞ்சம் மனசு வேண்டும். அவ்வளவே. புத்தன்களுக்குத்தான் போதி மரம் புத்தி தரும். என்னைப் போல யுத்திகளுக்குச் சாலை மரங்களே புத்தி தரும்.
ஒரு கையில் ஐஸ் வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொண்டான். எதிரே மேயும் மயிலைப் பார்த்தபடி ஒரு குரங்கைப் போல அமர்ந்து கொண்டு இரண்டையும் மாறி மாறி தின்கிறான்.
கணுவாய் சாலை எது பற்றியும் கவலையில்லாமல் அதே சலசலப்போடு இயங்கிக் கொண்டிருந்தது.
“நாங்களும் செய்வோம்டா… நீ மட்டும் தான் இந்த வாழ்க்கையை ரசிப்பியா… நாங்கெல்லாம் என்னை சாகவா பொறந்திருக்கோம்….? நாங்களும் ரசிக்கத்தான் என் ஜிஞ்சர்ரு….” வடிவேலு மாதிரி மூஞ்சியை வைத்துப் பார்த்தேன்.
பைக் கண்ணாடியில் இரண்டு முறை சிரித்தது காலம். நானும் பஞ்சு மிட்டாய்க்காரனோடு பேசி சிரித்தேன். ஐஸ்காரனோடு நலம் விசாரித்தேன். மிக எளிமையான வாழ்வின் தெரியா பக்கங்கள் ரோஸ் நிற சுவைகளால் எழுதப்படுகின்றன.
அவன் மிக மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். நான் அவனை விடவும் மிக மெதுவாக ஓட்டினேன்.
இப்போது என்ன செய்வது. மணி மாலை 6 ஐ தாண்டி விட்டது.
தானாக அவன் அவமானப்பட்டிருக்கலாம். நானாக எப்படி அவனை அவமானப்படுத்துவது. இத்தனை ரசனைவாதியாக இருப்பவனிடம் எப்படி பைக்கை பிடுங்கி செல்வது. அவனிடம் என்னவென்று பேசுவது. குளத்தோடும் மரத்தோடும் குரங்கோடும் குருவியோடும் பேசும் மனிதனிடம் டியூ கட்டுவதைப் பற்றி எப்படி பேசுவது…..?
ஆழ்ந்த யோசனையோடு நான் பின்னால் சென்று கொண்டிருந்தேன். அவன் பட்டென்று ஆர் எஸ் புர சாலையின் முகப்பில் வெளிச்ச முகத்தோடு வளைந்து நெளிந்து மலர்ந்து பறந்து சென்றான்.
“எங்க போறான்….?” என்று யோசிக்கும் போதே அவன் வண்டியை நிறுத்தி விட்டு ஹெல்மெட்டையும் வண்டி சாவியையும் வண்டியோடே விட்டு விட்டு அவன்பாட்டுக்கு நடக்க ஆரம்பித்து விட்டான். நான் வேகமாய் அவன் வண்டியின் அருகே சென்று என் வண்டியையும் நிறுத்திக் கொண்டே அவன் போவதையே பார்த்தேன்.
“என்னாச்சு…..? எங்க போறான்…!” என்று செய்வதறியாமல் மனதுள் எதுவோ தடுமாற, அவன் போவதைப் பார்த்து கொண்டேயிருக்க…..போய்க்கொண்டிருந்தவன் திரும்பி நின்று, ஒரு கணம் என்னைப் பார்த்தேன். முகம் மலர சிரித்தான். குரல் எட்டும் தூரம் தான். அவன் நின்ற தூரம். ஆனாலும் அவன் எதுவும் பேசவில்லை. என்னைப்பார்த்து தீர்க்கமாய் சிரித்து விட்டு மீண்டும் கூட்டத்தில் கலந்து காணாமல் போனான்.
உள்ளே ஏதேதோ உணர, மனம் படபடவென அடித்துக் கொள்ள……அப்போது தான் உணர்ந்தேன்.
பைக்கோடு நான் நின்று கொண்டிருந்தது எங்கள் அலுவலக வாசலில்…!