படைத்தல்
வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள்
தங்களில் எவர் உயர்ந்தவரென
காத்திருந்தவரை கேட்டன
எல்லாமே புலிகள்தான் என்று கடவுள்
எவ்வளவோ சொல்லியும்
நம்பியதாக தெரியவில்லை
அதற்குள் வெவ்வேறு
வண்ணக்கலவைகளோடும்
வேட்டைக் கண்களுடனும்
இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து
மூன்று உட்பிரிவுகளாக மாறின
மெதுவாய் நகர்ந்த கடவுளை
துரத்திக் கொன்ற கூட்டமே
கடைசியில் தலைவரென
அறிவிக்கப்பட்டது.
அவர்கள் படைத்த
தலையாட்ட மட்டுமே
தெரிந்த கடவுள் இப்போது
புன்னகையுடன் நின்றிருந்தார்.
****
மாற்றம்
அறியாமையின் குறியீடென இடைவெளிகளற்று
அடர்த்தியாய் நிறைந்திருந்தது கருமை
பூசிய இருட்டு
நட்சத்திரங்களையும் நிலவையும்
தொலைத்து அநாதையாய்
மீனவன் வலையும்
மரவெட்டியின் கோடரியும்
காய்கறி விற்பவன் கண்ணீரும்
தேநீர் கடையில் சிறுவன் கழுவுகிற
உருள் குவளையின் சத்தமும்
பெருந்தொற்றில் வேலை
தொலைந்த சாமானியனின்
பெரு மூச்சும் கலந்த கும்மிருட்டு
கண்ணைத் திறக்கலாம்
குரல் கேட்டவுடன் மெதுவாய்
கண்திறந்தேன்
என் கையில் பேனா
கொடுக்கப்பட்டிருந்தது
சுற்றிலும் கண்கூசுகிற
வெளிச்சம்.
****
பந்து
விடாமல் உதைபட்டுக்கொண்டேதான் இருந்தது
ஒவ்வொரு முறையும் சுற்றியிருக்கிற
ரசிகர்களின் கைதட்டலில்
அதிர்ந்தது அரங்கம்
போட்டி முடிந்தவுடன்
இரு அணிகளுக்கும் பரிசுகள்
உதைபட்ட கால்பந்து கவனிப்பாரற்று
மூலையில் அநாதையாய்…
எனக்கு கட்டை விரலில் மை தீட்டிய
சாமானியன் நினைவிற்கு
வந்து தொலைத்தான்.
********