![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/12/PicsArt_12-09-05.22.23-780x405.jpg)
வீட்டின் நடையில் உள்ள மேற்கூரையில் சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் புலக்கத்தில் இருக்கும். தலைவாணிக் கட்டைக்கு அடியில் கூளங்களை சேகரித்துக்கட்டிய கூட்டில் ‘விரிட் விரிட்’ டென குருவிகளின் இறகோசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன.
கருங்காட்டில் சோளத் தட்டைகளை குத்திரி போட்டுக் கொண்டிருக்கும் தாத்தா பழனிமுத்துவுக்கு பழையது கொண்டு போகும் கவனத்தில் அமராவதி அவசரமாகவே இருந்தாள். வெக்கைக்கு முன்பாகவே அரைபொழுது வேலையாகக் கிடக்கும் அறுத்துப்போட்ட குத்திரியினை குத்திவிட்டால், சோளத்தின் சொனையிலிருந்து தப்பிவிடலாம் என நினைத்துக் கொண்டே, பானையில் இருங்குச்சோளத்தை அழுத்தமாய் வறுக்கத் தொடங்கினாள். சோளம் வறுபட்டு வாசம் புகைந்து வெளியேறும் பக்குவத்தில் இருந்தது. அகப்பையின்‘வருட் வருட்டென’உருட்டலில் மண்பானை உடைந்து சோளத்தோடு நெருப்பில் கொட்டியது. அடுப்பில் வைக்கப்பட்டிருந்த புளியம் மெலாருகளோடு நெருப்பு சப்புக்கொட்டித் தின்று வெடித்து சுனங்கின. சொச்சமாய் மீதமிருந்த இருங்குசோளத்தினை முறத்தில் அள்ளிப் பட்டியில் குவிக்கப்பட்டிருந்த ஈரசானத்தோடு கொட்டினாள் அமராவதி. பானையில் சோளத்தின் மணிகளைத் தன் கைகளில் தேய்த்து உதடுகளைக் குவித்து ஊதிய பின் தன் கடைவாய்ப் பற்களில் நறுக்கிப் பார்த்தாள். மொடக்மொடக்கென அவளின் காதுகள் இரண்டும் பேசிக்கொண்டன.
பதங்கண்டிருந்த இருங்குசோளத்தினை உரலில் கொட்டி உலக்கைப்பூன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றினாள். உலக்கையை மேலே தூக்கியதும் பூனில் படர்ந்திருந்த தண்ணீர் பால்சப்பும் குழந்தையின் உதடுகளாய் ஊறி மலர்ந்திருந்த சோளத்தின் மீது சொட்டியது. உரல் குந்தாணிக்கு வேலைக்கு வரும்போது பூனில் இருந்து சொட்டும் தண்ணீர்தான் இடிப்பதற்கான பதம் எனத் தன் கொத்து மூத்தக் கிழவி சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.
கூரையின் தலைவாணிக் கட்டைக்கு அருகில் முள்கூளத்தையும் சோளத்தின் சருகுகளையும் சேகரித்துக் கட்டியிருந்த தவிட்டுக்குருவியின் கூடு உரலுக்கு மேலேதான் இருந்தது. உரலிருந்த உலக்கை உயரே சென்று கூட்டினைத் தொடுவதாகச் செல்லும் உலக்கை உரல் குழிக்குள் விழும் ஓசையினை குஞ்சுகள் தங்களின் வாயைப் பிளந்து இருங்குசோளம் கலந்து பரப்பும் மணத்தை மிடறுகளாக விழுங்கின.
ஒவ்வொரு உலக்கை குத்துக்கும் அமராவதி ‘ஹ்ஹேங்’ எனத் தன் அடித் தொண்டையில் அசக்கு கொடுத்துக் கொள்வாள். உலக்கைப் பூனுக்கும், அடி உரலுக்கும் நடுவில் மசிந்து கொண்டிருந்த இருங்குசோளத்திலிருந்து எழுந்த சப்தம் அமராவதியின் அடித் தொண்டையின் அசக்கோடு எழுந்த சப்தத்தோடு ஒத்திருந்தது. உரலின் கால்மாட்டில் எழும் ஓசையும், கலவாடு எழுப்பும் ஓசையும் அமராவதியின் அசக்கோடு தெருவெங்கும் தப்படி போட்டு அதிர்ந்தது. ‘அதாங்குதான்னு’ மைந்திருந்த மாவு கலவாட்டின் மேலே மைந்து மிதந்தன. தெருவில் கூப்பாடாக சப்தம் கேட்டது.
‘இந்தாடி ஏய்!’ ‘மூஞ்சப்பார்ரா’ என சுற்றிவரும் கோணமூஞ்சிகளிடம் பங்காளிகளைப் போல் அதட்டிக் கொண்டிருந்தான் அசரை. தெருவில் இடது முழங்காலை மடித்து கோணமூஞ்சியின் காதில் வைத்து அழுத்திக் கொண்டான் பாறைவீட்டு அசரை. வலது முழங்காலை மடித்து அவற்றின் பின்னங்காலுக்கும் அடிவயிற்கும் இடையில் அழுத்திக் கொண்டதும், வாயை மூட முடியாமல் ‘வீர் ரென்றபடியே தன் நீளமான நாக்கு வழியாக கோணமூஞ்சி அடித் தொண்டையில் அலறியது.
‘ஏய் குட்டியேய் சீமெண்ணய எடுத்தாடி’ என்றான். கொட்டாஞ்சி முழுக்க அடுப்பில் உலர்ந்து கிடந்த கருவேலமரத்தின் சாம்பல், பூனைக்கால்களின் மயிராய் நிரம்பிக்கிடந்தது. முழங்கையின் நீளத்திற்கு கோணியூசியில் நூல் கோர்த்து வைக்கப்பட்டிருந்தது.
கோணமூஞ்சி‘வீர் வீர்” ரென அடித்தொண்டையின் அலறியதில் தெருவெங்கும் குட்டித்தாப் பன்றிகளும், பெருஞ்சலவன்களும் கடைவாய்ப்பல்லை துருத்திக் கொண்டு ‘உர் உர்’ என அசரையின் மீது பாய ஓடி வந்தன. காலையில் காட்டுப் பக்கம் அதங்கிவிட்டு சுவற்றின் அண்டையில் சோம்பல் தீர்க்க படுத்துக் கிடந்தன சினைப் பன்றிகள். அவற்றில் சில வயிற்றை அம்மாவாசைக்கு முந்திய நாளின் தேன்கூட்டைப்போல் பிதுக்கிக்கொண்டு இடம் பெயர்ந்து ஓடின. முதுகில் வாரியாய் சிலுப்பி நின்ற பிடரிமயிருடன் சில சலவன்கள் அங்கிருந்து அகலவில்லை. முழங்காலை வைத்து அழுத்தியிருந்த அசரையையே ‘உர்உர்’ எனச் சுற்றிச்சுற்றி வந்தன.
அசரைக்கு தாய்முறை கொண்ட கிழவி கோணமூஞ்சியின் வாலை தூக்கிப் பிடித்துக் கொண்டாள். சூரிக்கத்தியின் முனையில் விதரினை அசரை கீறியதும், பலாப்பழத்தின் சுளையிலிருந்து பிதுங்கி வெளியேறும் கொட்டைகளாய் ‘பொதக்கென’ தரையில் கொட்டியது. இரத்தம் பீறிட்டு வெளியேறியது. கோணமூஞ்சியின் பிளந்தவாயில் நாக்கு மேற்பல் கீழ்ப்பல் வரிசை இரண்டிற்கும் நடுவில் நடுங்கிக் கொண்டிருந்தது. கொப்பளித்து பிளந்து வரும் இரத்த வாயினை ‘மளமள’ வென தைத்தான் பாறைவீட்டு அசரை.
பட்டியின் தொங்கலில் நானுக் கொண்டதைப்போல் தொங்கிக் கொண்டிருந்தது சீமெண்ணெய்ப் போத்தல். தையல் போடப்பட்டிருந்த தோலில் கெழவாயி ஊற்றியதும், கோணமூஞ்சியின் உடல் நடுக்கம் அசரையின் தொடையெங்கும் பரவி அதிர்ந்தது. கொட்டாஞ்சியில் இருந்த சாம்பலை அசரை தைக்கப்பட்ட காயத்தின் மீது தூவி விட்டான்.
பலாக்கொட்டைகளாய் கீழே உதிர்ந்து கிடந்த இரண்டு வெதருகளும் மோட்டுவளையில் வட்டமடித்து உயரமாகப் பறந்து அமர்ந்திருந்தருந்த காக்கைகள் பற்றிச் செல்ல குறிப்பாய் இருந்தன. பீறிட்டு அலறும் கோணமூஞ்சியின் சப்தம் கன்னிப்போயிருந்தது. வேதனையினை அதன் கண்களால் அகண்டு விரிக்கமுடியவில்லை. தன் இரு கைகளையும் கோணமூஞ்சியின் மீது அழுந்தப் பற்றி விசுக்கென விடுவித்துக் கொண்டான் அசரை.
விருட்டென எழுந்த கோணமூஞ்சி முதுகு குன்றி தனது வாலை கிளப்பியபடி இருக்கும் பின்கால்கள் இரண்டிற்கும் நடுவில் புதைத்துக் கொண்டது. ‘தப்பத்தப்படித் தப்படியாக’ ஓடிய பின் புளியமரத்தின் அருகில் இருக்கும் குட்டிச் சுவர்ப்பக்கம் ஒண்டிக் கொண்டு அசரையைப் பார்த்து ‘ங்ஙேஏ… ங்ஙேஏ….’ என்றது.
‘பின்ன மத்ததோட முச்சூடும் விழுந்துக்கிட்டே இருந்தா கோயிலுக்கு நேந்துவுட்ட குட்டி எப்புடி பெருக்குகிறதாங்’ அசரை தன் அறுப்புக்கு நியாயம் பேசிக் கொண்டான்.
வெதரை தங்களின் அலகில் பற்றிச் சென்ற காக்கைகள் அருகில் வளர்ந்து நின்ற புளிய மரக்கிளையில் அமர்ந்திருந்தன. குட்டிச் சுவற்றின் ஓரமாய் முதுகு குன்றி அணத்திக் கொண்டிருக்கும் கோணமூஞ்சியின் வெதரைப் பங்கிட்டுக் கொள்வதறக்காக சப்தமிட்டுக் கொண்டிருக்கும் காக்கைகள் குனிந்து கூட பார்க்கவில்லை.
தெருவில் விதைப்புட்டிகளை எடுத்துக் கொண்டு குடித்தெருவிற்கு அறுப்புக்கூலி தானியம் வாங்கச் சென்று கொண்டிருந்தார்கள் பெண்டுகள். அவர்களின் தலையினை விதருக்காய் குவித்திருந்த காக்கைகள் தங்களின் இறக்கைகளில் விசிறியதைப் பார்த்ததும் வலியோடு குன்றியிருக்கும் சலவின் குட்டி வீச்சமாய் அலறி ஓடியது.
உரலில் குத்தித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அமராவதி. தெருவில் அதங்கிக் கொண்டிருக்கும் எந்த சப்தத்திற்கும் அமராவதி அசங்கி கொடுக்கவில்லை. அவளின் கவனமெல்லாம் உரல் குழியில் கிடக்கும் இருங்குச் சோளம் மலர்ந்து பொங்கி வரும் மாவில்தான் ‘நங் நங்’ கென உலக்கையோடு இறங்கியது.
மாராப்புச் சேலையை விலக்கி இடுப்பில் சுற்றியிருந்தாள் அமராவதி. பின் கழுத்திலும் காதின் நுணியிலும் படரும் வியர்வை அவளின் ரவிக்கைக்குள் நமத்துக் கொள்ளும். நெற்றியில் பூக்கும் வியர்வை உரல் குழியில் வாரியாக கொட்டினால் மட்டும் இடுப்பில் சுற்றப்பட்டிருந்த முந்தியினை எடுத்து முகத்தினை வழித்துக்கொள்வாள். மலர்ந்து மேலெழும் சோளமாவின் மீது காதின் நுணியிலிருந்தும், தாவாய்கட்டையிலிருந்தும் குத்துக்கு ஒன்றாய் துளிகள் விழத்தான் செய்தன.
இடித்து முடித்த இருங்குசோளத்தை பொவுனியில் வாரிக்கொண்ட அமராவதி, பூனின் உள்பக்கம் படிந்திருந்த சோளமாவை சுரண்டிவிட்டு உலக்கையை சுவற்றின் மூலையில் சாய்த்து வைத்தாள். ஓய்ந்து சாய்ந்த சுருளிமர உலக்கையின் முனையில் பூன் பெரியகிழவி போட்டுக் கொண்டிருக்கும் கால்த் தெண்டையாய்ப் பளபளவென்றிருந்தது.
வீட்டில் அடுப்பங்கரைப் பக்கமாக வடக்கும் தெற்குமாக போடப்பட்டிருந்த மரத்திண்ணைப் பாறையினைப் பார்த்தாள். சில அலுமினிய குண்டான்களை மட்டும் வைத்து அவற்றின் மீது தண்ணீர் நிரப்பி வைக்க முடியும் அளவிற்கு அதன் மேற்ப்பரப்பு அகலம் கொண்டிருந்தது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இடையிடையே சொம்பு, வட்டி, சின்னப் பொவுனி, தூக்குவாளி என வைக்கப்பட்டிருந்தது. பலகையின் நடுவில் தாங்கடை, முறம், வடித்தட்டுகள் செருகப்பட்டிருந்தன. தோல் உரிக்கப்பட்டு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பச்சை கருவக்கட்டை விறகின் நுனியில் சொரசொரவெனப் பொங்கி வெளியேறும் தண்ணீரைப் பார்த்ததும் அவளுக்கு அடிவயிறெங்கும் வெக்கையில் தகித்தது.
கொத்தில் யாரேனும் தவறிவிட்டால் கேள்வியெதுவும் கிடையாது. பிரேதத்தைச் சுற்றி சம்பிரதாய அழுகை தொடங்கிவிடும். இலவு கட்டுபவர்களைப் பார்த்து கண்களைக் கசக்கி முந்தானையின் முனையினை வாயில் வைத்துக் கொண்டு முற்றத்தின் ஓரமாகவே சில பெண்கள் நின்றுகொள்வர். தலைக்கட்டின் மூத்த கிழவனின் அதட்டலோடு, உறவுமுறையில் ஒரு நடுவயது கொண்ட சம்சாரி, “நங்கே…… எங்கடாக் காணோங்…”
எனத் தெருமுற்றத்தின் தொடக்கத்திலேயே தன் தொண்டையினைத் திறந்துக்கொண்டே அமராவதியின் வீட்டுக்கு மரத்திண்ணைப்பாறையினை எடுக்க வந்து விடுவான்.
அவன் வீட்டை அடையும் முன்னே வந்துவிடும், “இத்தாங் நடுக்கொத்துல….” கௌவாயிக்கு செப்பலோடவே கேருகேருன்னு வந்துக்கிட்டுருந்த சேட்டுமையும் நின்னுபூடுச்சி தண்ணீர் நிரப்பப்பட்டு மரத்திண்ணைப்பாறையில் வைக்கப்பட்டிருந்த அண்டாவையும் குண்டாவையும் கீழே இறக்கி வைத்தான் வனராஜி. கெழவாயின் பிணத்தைக் கிடத்துவதற்கு மரத்திண்ணைப்பாறையினை முற்றம் வரை கைத்தாங்கலாகக் கொண்டு வந்து, பின் ஒரே அசக்கில் தோளில் இட்டுக் கொண்டான்.
கொத்தில் யாராவது தவறிவிட்டால் இழவு வீட்டில் இருப்பவர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது அமராவதியின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மரத்திண்ணைப்பாறைதான். அமராவதி வீட்டில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவளின் ஒப்புதலுக்கெல்லாம் யாரும் காத்திருப்பதில்லை.
கள்ளிக்காட்டு வண்டிப்பாதையில் அடிக்கு ஒன்றாய் சுருண்டு கிடக்கும் விரியனைப் போல கிடக்கும் சானத்தைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வந்திருந்தாள் அமராவதி. வாசல் தெளித்தது போக மிச்சத்தை கடக்காலில் இருக்கும் தன் குப்பை மேட்டில் கொட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள். குண்டான்களும் பானைகளும் மரத்திண்ணைப்பாறையிலிருந்து இறக்கி வைக்கப்பட்டிருப்பதைப் கண்டவுடன் ‘இறங்கிய பாலும் நின்றுவிட்டதென’ விசயத்தைப் புரிந்துக்கொண்டு கொண்டு வந்த நொச்சித்தட்டை தலையில் இருந்த இறுகிய சும்மாட்டை கையில் பற்றிக்கொண்டே மேலத்தெருவுப் பக்கம் ஓடிவிடுவாள் அமராவதி.
குடியில் விழும் ஒவ்வொரு சாவிற்குப் பிறகும் சாவின் வாசம் மரத்திண்ணைப்பாறையில் உறைந்திருந்தது. உதிர்ந்த சாமந்திப் பூக்களின் இதழ்களைக் கூட அகற்றாமல் மரத்திண்ணைப்பாறையினை முற்றத்தில் இருக்கும் திண்ணையின் அண்டையாக மல்லாத்தி விடுவார்கள் சம்சாரிகள். மறுநாள் மரத்திண்ணைப்பாறையினை கைப்பிடித் தேங்காய் மட்டையால் தேய்த்துக் கழுவுவாள். தென்னம்மெளாரில் தண்ணீர் ஊற்றி விசிறியவுடன் பழுதக்கயிற்றால் திரித்த பிருமனையை வைத்து தண்ணீர் நிரப்பிய அண்டாவை அதன் மீது வைத்துவிடுவாள்.
“கொத்து குடியில் இருக்குற பொணம்பூரா இந்த மரப்பெஞ்சியில படுத்துட்டுத்தான் காடு போயி சேந்துருக்கு”.
அவை எத்தனை என்பதெல்லாம் அவளுக்குக் கணக்கில் இல்லை. ஆனாலும் உரலுக்கருகில் மரத்திண்ணைப்பாறை பெஞ்சின் மேல் சித்திரை இரண்டாவது சனிக்கிழமை அம்மாவாசையன்று சாமந்திப்பூ மாலைகளோடு கிடத்தப்பட்டிருந்த தன் தங்கவேலுவைப் பார்த்ததிலிருந்து அமராவதிக்கு சாமந்திப்பூக்களின் கவுல் வீசிக்கொண்டிருந்தது. சாவின் வாசம் அவளது மூக்கில் கமழ்ந்துகொண்டேயிருப்பதில் அவளுக்குப் பெரும் அச்சமாக இருந்தது.
ஒருநாள் செஞ்சோளமும் மறுநாள் இருங்குச்சோளமும் மாற்றாக உரலில் கொட்டி இடிப்பது தங்கவேலுவை அள்ளிக் கொடுத்த இழப்பிலிருந்து மீண்டு கொள்வதற்கு தற்காலிகமான மனமாற்றமாக இருந்தது. கூரையில் படர்ந்திந்த வெக்கை முன் திண்ணையின் தொங்கலோரமாக வழிந்து ஓடியது. மனதிற்குள் கீழக்காட்டு பருத்திப் புழுக்கள் புகுந்து கொண்டதாக மொசமொசத்தது. அதிக நேரம் இடிவாங்கும் இருங்குசோளத்தினை இடிக்க எடுத்துக்கொண்டாள். கொதித்த உலையில் கொட்டிய மாவு குமிழாய் வெடித்துப் புளுங்கியது. மண்பானையின் மூடியினைத் திறந்ததும் குபீரென சுழலும் சுடும்புகையால் அவள் அடிவயிற்றில் தங்கவேலுவின் நினைவுகள் பரவின.
“கையித்தினி பொழுதுயிருந்தா கன்னுக்குட்டிக்கு புல்லு புடிங்கிப்புடுலாம். வந்ததும் வராததுக்குள்ள வாங்கிகிட்டத எவுத்துல போயி எறக்கி வைக்கிறது…?” ன்னு அவளுக்கு ரனங்கட்டும் மனத்தாங்கல்தான். இரண்டு இருங்குசோள உருண்டைகளை தூக்குப்பொவுனியில் பாதி நிரப்பப்பட்ட தண்ணீரில் போட்டுக் கொண்டாள். இரண்டு உருண்டைகளையும் மூச்சு முட்ட அமிழ்த்திய பின் அதற்கு மேல் மூன்று விரகடை தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.
தாத்தா பழனிமுத்து கொத்தமல்லி கருங்காட்டில் கூறுக்குச்சியால் குத்தி பிடுங்கப்பட்டு பொலியின் முட்டில் செத்தக்கோம்புகளுடன் குவிக்கப்பட்டிருந்த வண்ணக்கீரைகளை பொறுக்கிக் கொண்டு வந்திருந்தார். அதன் வேர்களைக் கிள்ளி கடைந்த கீரையை கழுத்து குவிந்த கிண்ணத்தில் நிரம்பினாள். உருண்டைகளுக்கு மேல் நிரம்பியிருக்கும் தண்ணீரின் மீது கிண்ணத்தை வைத்து தூக்குப்பொவுணியின் மூடியை அடைத்து விட்டாள். தூக்குப்பொவுனியின் கைப்பிடியில் ஒரு பக்கம் சிவப்புக்கரை கொண்ட வேட்டித் துணியில் கல் உப்பையும், மற்றொரு பக்கத்தில் ஐந்தாரு சின்ன வெங்காயத்தையும் முடி போட்டுக் கட்டிவிட்டாள்.
நாடாவில் மடித்து இரட்டைச்சடை குஞ்சம் போட்டுக் கொண்டு கைவிரல் பற்றி நடக்கும் பச்சிளங் குழந்தையைப் போல் தூக்குப் பொவுனியின் காதை அமராவதி பிடித்துக் கொண்டாள். கருங்காட்டில் அலைங்ஞாக்குன்றின் வாரியில் நிற்கும் தென்னைமரக் கீற்றில் தொங்கலாடும் தூக்கணாங் குருவிகளின் கூடுகளைப் போல் அவளின் விரல்களில் தூக்குப்பொவுனியில் கிடந்த உருண்டைகள் அசங்கி கொண்டன. உள்ளிருக்கும் உருண்டைகள் கனத்தினால் அசங்கி தூக்குப்பொவுனியின் காது எழுப்பும் ஓசை, கூட்டில் இருக்கும் குஞ்சுகள் இறையினை உண்ணும் இடைவெளியில் தங்களின் அலகினைத் திறந்து எழுப்பும் ஓசையினை ஒத்ததாகவே இருந்தது.
அமராவதி தன் அடிவயிற்றைத் தடவிக் கொண்டாள். கருங்காட்டின் வாசம் அவளின் உடலெங்கும் பரவியதும் தங்கவேலுவின் நினைவு அவளை கனமாய் அழுத்தியது.
கள்ளிக்காட்டுப் பாதையில் காயும் வெய்யிலில் அவளின் உடல் பொதபொதவென வேர்க்கத் தொடங்கியது. அவள் கொங்கைகளின் நடுக்குழியிலிருந்து வழிந்த வேர்வை முன் கொசவத்தை ஈரங் கட்டியது. பொடணியின் வியர்வை பின் இரவிக்கையில் வாரியாய் சலசலத்து பின் இடுப்புக்கட்டை நனைத்ததில், ஏறிவரும் வெக்கையில் கூட அவளுக்கு குளிர்க் கட்டுவதாக இருந்தது.
அலைங்ஞாகுன்றின் அல்லையில் கூமாச்சி சோளக்குத்திரியாய் குறுகிக் கிடந்தது அவளின் கருங்காடு. பட்டத்திற்கு ஒரு வெள்ளாமையாய் விதைக்க, இந்தப் பட்டத்திற்கு சோளத்தை விதைத்ததில், “கலமும் குதிருங் காணாட்டியுங்கூட கையக்கடிக்கல” என்று அவளின் கணவன் தங்கவேலு சொன்னது அலைங்ஞாக்குன்றின் உச்சிப்பாறையாய் அவள் மனதில் உருண்டு விழுந்தது. நாட்கள் தள்ளிப்போன அவளின் வயிறு எள்ளுக்கட்டைப் பாய்ந்த கால்விரல்க் கனுவில் நெறிஞ்சிக் கொத்து அப்பிக் கொண்டதாக கன்னியது.
வண்டிப் பாதையின் இருபக்கமும் கள்ளிச்செடிகளை வேலியாக வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளைக் கடந்தவுடன் அலைங்ஞாக்குன்றின் பக்கவாட்டில் படுத்துக் கிடக்கும் அவளின் கருங்காடு வந்துவிடும். கிழக்கிலிருந்து நெற்றியில் அப்பும் வெக்கையை வழித்து நடக்கும் பாதையில் விசிறினாள். கருங்காடு அவளின் கண்களில் விழுந்தது. அலைங்ஞாகுன்றின் அடிவாரத்தில் சோளக்குத்திரிகள் தங்களின் விரல்களைக் குவித்தபடி இறைந்து கிடக்கும் சிறு குன்றுகளாய் காடெங்கும் நின்று கொண்டிருந்தன. மஞ்சள் நிறத் தட்டைகள் குத்திரிகளாய் நின்ற கருங்காடு அருகில் நின்ற அலைங்ஞாகுன்றிற்கும் அவளுக்கும் ஆபரணங்களாய் இருந்தன.
உயர எழும்பும் காலை வெய்யிலுக்கு பழனிமுத்து சோளக்குத்திரி ஒன்றை கூமாச்சி குடிசையாக்கி, மருமகள் அமராவதி கொண்டு வரும் சோள உருண்டைகளுக்காகக் காத்திருந்தார். குனிந்து குத்திரிக்குள் நுழையும்போது பழுத்த மொச்சைக் காய்களைப் போல அவர் காதைக் கவ்விக் கொண்டிருக்கும் கடுக்கன் ஊஞ்சலாடியது.
கூட்டிலிருந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்து, அருகில் எவருமில்லை என்பதைத் தெரிந்துக்கொண்ட காடைகள், அருகில் இருக்கும் அலைங்ஞாக்குன்று மரங்களின் கூடுகளிலிருந்து எட்டிப் பார்ப்பதும, பின் தலையை உள் இழுத்துக் கொள்வதுமாக இருந்தன.
‘பட்டம் தவறி விதை விழுந்ததுட்டதுல ஒடச்ச சோளக் கருதெல்லாம் சாவட்டையா பூட்டுது. மழையும் மாரியும் இல்லாம காஞ்ச கருங்காடு வாயை பொளந்துட்டுது. வர்ற பட்டத்துல கடனையெல்லாம் அடைச்சுட்ரஞ்சாமி’ன்னு முதுகை குறுக்கி கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்த தன் மகன் தங்கவேலுவின் கழுத்தில் கிடந்த துண்டை பேங்க்கில் இருந்து வந்திருந்தவர்கள் முறுக்கி இழுத்ததை நினைத்துக் கொண்டார். ‘பீமன் சாமான்னு’ இருந்தாலும் கடன் பட்டதுல கூனிக் குறுகி செப்பலோடவே வாசலில் மீசை முழுக்க சானம் இலுப்பி விழுந்ததெல்லாம் பழனிமுத்து தாத்தாவை துவட்டியபடிதான் இருந்தது.
தெருவில் குடிகள் பார்க்க ‘அப்புடி இப்புடின்னு’ ஆகிவிட்டதிலிருந்து யார் முகத்திலேயும் விழிக்க முடியாமல் பழனிமுத்து, ‘விடிஞ்சா காடு, இருட்டுனா வீடு’ன்னு நகர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
“நின்ன நெலையில பனமரமா நின்னாலும் அஞ்சால சாக்கிறவந்தான் தங்கவேலு. வெள்ளாமை நம்பல கைவுட்ராதுன்னு நெனச்சுட்டான். பேங்குலருந்து ஆளு மேல ஆளு வுட்டு கடுதாசி நடவடிக்கன்னு அலஞ்சதுல்லையே புள்ளக்கி தெகிரியமுல்லாம் பூடுச்சி. தங்கவேலு கல்யாணத்துக்கு வாங்குன கடன் கொஞ்சங், வெள்ளாமக்கடன்னு வாங்கி கட்ட முடியாமப் போனதுல பேங்குகாரந் தொல்லைன்னு வெசனங் கொஞ்சன்னு புடிச்சி இருக்குற புள்ளக்கிட்ட, முடியாட்டி எழுதிக் குடுத்துட்டு போடான்னு விடிஞ்சதும் விடியறத்துக்குள்ள மானங்கானியமா தெருவுலியே நின்னுக்கிட்டு பேங்குலருந்து கொலாச்சட்ட போட்டுக்கிட்டு வந்தாளுவ பேசுனதுல்லயே புள்ளக்கி பாதி உசுரு பூட்டுது. மேலூருப் பக்கமுல்லாம் கடன் வாங்குனவுனுங்களுக்கு பேங்லே கடன் தள்ளுபடி ஆயிடுச்சின்னு நிமித்திக்கிட்டுப் போறானுவ. அவனுவ போவாத ஊரு என்னா? சேதி என்னா? நான் என்னாத்த வாங்கிப்புட்டேன். எதோ காடு வெள்ளாம மாடுகன்னுன்னு கொஞ்சம் கவுருதியா இருந்துச்சி’ வேற என்னா இதுலருந்து வெட்டி சாச்சிடப்போறேன்….” தங்கவேலுவை நினைத்தவுடன் பழனிமுத்து தாத்தாவுக்கு உடம்பெல்லாம் நடுக்குற்றது.
கொஞ்சம் மனப்பெராக்காய் தன் பார்வையினை காட்டுப்பக்கம் வீசினார். சோளத் தட்டையின் கெங்குகள் அனைத்திலும் அயர்ந்த இலைகள் அதன் கைகளாய் வானம் பார்த்து சாறும் காற்றில் உதரிக் கொண்டிருந்தன. கதிர் அறுக்கப்பட்ட சோளத்தட்டைகள் தலைகளற்ற முண்டங்களாய் காற்றில் அசங்கிக் கொண்டிருந்தன.
சோளக்குத்திரியின் வாசலிலிருந்து கிழக்குப் பக்கமிருக்கும் தொங்களில் பெராச்சி மேட்டுக்கருகில் உள்ள ஆலமரத்தில் அவரின் பார்வை நிலைகுத்தி நின்றது. கண்களில் கண்ணீர் முட்டி முட்டி கருங்காட்டின் குத்திரிக் காட்டின் குடிசை வெடிப்பில் விழுந்ததும், ‘ஓ..’வென்று அழுது விட்டார் தாத்தா பழனிமுத்து. ‘எலே இந்தக் கெழவன உட்றா. ஒன்ன நம்பி வந்தவள உட்டுட்டு போவுனுமுன்னு எப்புட்றா மனசு வந்துச்சி….’
நாக்கை நீட்டி அடித்தொண்டையில் எச்சிலை கூட்டிக்கொண்டு விழுங்கினார். இந்த பச்சப்புள்ளய என்னோட வுட்டுட்டுப் போயிட்டியேடா தம்பி. இந்தக் கொறக்காலத்தையும் என்னமாடா நாந் தள்ளப்போறேன். எலே தம்பி தங்கவேலு…. எங்கடாசாமி இருக்கே? தாத்தாவின் குரல் கருங்காடெங்கும் அதிர்ந்தது. கிழக்குப்பக்கத் தொங்களில் இருந்த ஆலமரத்தில் அமர்ந்திருந்த சில பறவைகள் சடசடவென தங்களின் இறக்கைகளை உதறிப் பறந்தன. அவற்றின் விசையில் உச்சிக் கிளைகளில் இருந்த சில இலைகள் உதிர்ந்து மண்ணில் விழுந்தன.
அலைங்ஞாக்குன்றின் குத்துப்பாறையில் அமர்ந்து பூச்சிமருந்தைக் குடித்துவிட்டிருந்தான் தங்கவேலு. கருங்காட்டை தலை கிறுகிறுப்பு வரும் வரை மூன்று பொலிகளிலும் சுற்றிவிட்டு, அடிவயிறு முட்டிச் சுருங்க, கூலப்பூக்களின் மீது அவன் எடுத்திருந்த வாந்தியின் வீச்சம் இன்னும் தாத்தா பழனிமுத்துவினை குமட்டிக்கொண்டிருந்தது. “இதையெல்லாம் பாக்கக் கூடாதுன்னுட்டுதான் பாலவத்துலயே நவுந்துகிட்டுருந்த ஒன்ன என்கிட்ட உட்டுட்டுப் போனாளா அந்த மவராசி?” மனைவி செல்லமாளை நினைத்துக் கேவினார் தாத்தா பழனிமுத்து.
கருங்காட்டின் பொலிகளைச் சுழன்று வந்த சூறைக்காற்று சோளக்குத்திரியினை மையமாய் சுழற்றி மேலே எம்பியது. அவை சுழலின் மையத்தில் குருதித்திட்டுகளை இலுப்பிக்கொண்டிருந்தன. உச்சிப்பொழுதில் காய்ந்த சோளத் தோவைகள், இறக்கைகளைப் பரப்பி அலகைத் திறந்து மண்ணைக் கொத்துவது, அடித் தொண்டையில் கரையும் காக்கைகளைப் போலிருந்தன. கால்களை மடித்து சோளக் குத்திரியில் அமர்ந்திருந்த தாத்தா பழனிமுத்துவின் தோய்ந்த விரைப்பைகள் தேனழிக்கப்பட்ட கூடுகளைப்போல சூறைக்காற்றில் குலுங்கி நடுங்கின.
ஆள் அரவம் இல்லாத பொழுதில் கருங்காட்டின் தனிமையோடு மூச்சூடும் கேவும் தாத்தா பழனிமுத்துவுக்கு, இன்று தன் கேவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழும்போது தன்னைக் கட்டி அனைத்து அழுவதாகவும், அழுது முடித்தவுடன் இனி அழவேண்டாம் என ஆதூரமாக கருங்காடு சமயத்தில் அவரைப் பார்ப்பதுவுமாகவும் இருக்கும்.
பொழுது தகிக்கத் தொடங்கியது. கொடியக்காமூலையின் ஒந்தியில் முனகல் சத்தம் கேட்பதாக தாத்தா பழனிமுத்துவுக்கு துனுக்குற்றது. கருவமரங்களும், தொடைமட்டமுமாக நுனாக்குச்சிகளும் வளர்ந்து நின்ற பொலி. அதன் கால்மாட்டில் கரையான் புத்துகளைக் கிளறிக்கொண்டு சோளத்தின் மூக்குகளாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கரையான்களை கொத்திக் கிளரும் கவுதாரிகளும் கரும் இரட்டைவால் குருவிகளும் உரக்க கெச்சட்டம் போட்டுக்கொண்டிருந்தன.
அலைங்ஞாகுன்றின் மறுபக்கத்தில் கவலயேத்தத்தில் நிற்கும் தொலைக்கால்கள் பறி நிறைய தண்ணீரைச் சுமந்து திணறி முனகுவதைப் போல அவருக்கு பொடணியைத் தட்டியது. குத்திரியிலிருந்து பதுங்கி வெளியேறி கையிலிருந்த துண்டை உதிறித் தலையில் இரண்டு சுற்றில் தலைப்பாகை சுட்டிக் கொண்டு பொலிப்பக்கம் ஓடினார். சோள உருண்டைகள் உடைந்து பொருக்குகளாய் சிதைந்து கிடக்க அமராவதி மல்லாந்தபடி கிடந்தாள்.
‘எம்மா புள்ளேயேய்’ என்னாடியம்மாயாச்சி! கருங்காட்டின் வெடிப்புகள் அவளின் பெருகியோடும் உதிரப் பெருக்கினை வாய்பிளந்து குடித்துக் கொண்டிருந்தன. நாட்கள் தள்ளிப்போய் முழுகாமல் இருந்த அமராவதியின் ரெட்டை மொச்சைக் காய்களாய் இருந்த கண்களின் மீது வெய்யில் விழுந்து கிடந்தது.
கருங்காட்டைக்கடந்து சீட்டைக் கதிரொடிக்கச்செல்லும் சில பெண்டுகளை உதவிக்காக அழைக்க பெருங்குரலெடுத்து அலறினார் தாத்தா பழனிமுத்து. அவரின் குரல்கள் அனைத்தும் மலையின் சாரத்தின் பாதைகளில் கிடக்கும் இண்டில் சிக்கிக் கரைந்து போயின.
தெம்பைக் கூட்டி அவளை இரண்டு கைகளாலும் வாரினார். அவளின் கையில் மூடி திறந்தபடி மாட்டியிருந்த தூக்குப் பொவுனியின் காது விடுபட்டு தரையில் உருண்டது. சோளக்கட்டைகள் கிழிந்த வாய்களோடு வானத்தைப் பார்த்து நின்று கொண்டிருந்தன. சோளக்கட்டைகளை தடுக்கியபடி கருங்காட்டின் தப்பிக் கொண்டு ஓடிடும் தாத்தாவின் உள்ளங்கைகள் ஈரங்கண்டது. பொலியெங்கும் நிறைந்தது போக, அவள் யோனியில் இருந்து வழியும் உதிரம் உதிர்ந்து கொண்டிருக்க, கருங்காட்டின் எல்லையில் இருக்கும் ஆலமர நிழலிற்கு வாரிக் கொண்டு போனார். ஆலமரத்தின் விழுதுக்கருகில் அவளை மல்லாக்கக் கிடத்தியதும் குழந்தையின் பால் விரல்களாக தொங்கிக் கொண்டிருக்கும் ஆலம் விழுதுகளின் முனைகளைப் பிய்த்து தன் வாயில் மென்று குதக்கி அதன் ஈரப்பசையினை அவளின் நாக்கில் தடவினார்.
உச்சிக்கிளையின் இலைகளில் வானம் பார்த்து மல்லாந்து படுத்திருந்த வெய்யில், காற்றின் அசைவில் தடுமாறி தரையில் விழும் நேரம் மட்டும் கடந்து விட்டிருக்கும். அவளின் மூடியிருக்கும் இமைகளுக்குள் கண்கள் உருளும் அசைவினைப் பார்த்தார். வெக்கையில் கருங்காட்டின் நிலம் புரண்டு அழுதது. பறந்து விரிந்திருந்த ஆலமரத்தில் அமர்ந்திருந்த அத்தனைப் பறவைகளும் ஒன்றாய் விருட்டென எம்பிப் பறந்தன. இலைகளின் காம்புகளிலிருந்து வெளியேறும் ஆலம்பால் அவளின் யோனியின் மீது சொட்டத் தொடங்கியது. கள்ளிக்காடுகளில் விதரெடுக்கப்பட்ட கோணமூஞ்சிகள் சாமந்திப்பூக்களை வேரோடு அதங்கிக்கொண்டிருந்தன.
*** ***
கிராமிய மணம் கிரங்கச் செய்கிறது, குருவிகள் எழுப்பும் ஒலி, உரல் குத்தும் அமராவதியின் முச்சுக் காற்று எழுப்பும் சப்தம், அசரையின் மௌன மொழி தாத்தா பழனிமுத்துவின் செயல்கள், எமக்கு எழுத்தாளர் கிரா அவர்களை நினைவூட்டுகிறது. கருத்துக்களை ஆழப் புதைக்காமல் அன்றாட நிகழ்வாய் பதிந்திருக்கிறீர்கள்.
குறிப்பாக அமாவாசைக்கு முதல்நாளே தேனீக்கள் புலம் பெயரும் உவமையும் மிக அருமை. எழுத்துப் பயணத்தில் விழும் அருவியில் துள்ளியெழும் பெருந்துளிகள் முகத்தில் அடித்தாற் போன்றதொரு உணர்வு.
தங்களது படைப்பிற்கு வாழ்த்துகள்,