இணைய இதழ் 108சிறுகதைகள்

சலிப்பாறுதல் -பிறைநுதல்

சிறுகதை | வாசகசாலை

முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு இந்தப்பக்கம் நால்வரும் அந்தப்பக்கம் நால்வரும் இழுத்துப் பிடிக்க, தனியாக இருவர் மூக்கணாங்கயிற்றையம் கழுத்துக்கயிற்றையும் இழுத்துப் பிடிக்க மல்லாந்த நிலையில் ஒரு பக்கமாக தலைசாய்த்து உயிரைவிட்டது மாடு. அறுபட்ட கழுத்திலிருந்து பீய்ச்சியடித்த இரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்பட்டது. எஞ்சிய இரத்தம் சாய்ந்த கழுத்திலிருந்து வழிந்து தரையில் விரித்திருந்த உரச்சாக்கில் விரவி உறைந்தது. கோடைமழையாய் உதறிய பாகங்கள் மெல்ல அடைமழையாய் தளர்ந்து மெலிதான தூறலாய் சுருங்கி பின்பு மொத்தமாய் அடங்கியும் போயின. கண்கள் மட்டும் இன்னும் மூடாமல் வெறித்த நிலையில் அந்த இருளிலும் பளபளத்துக் கொண்டிருந்தது. சுற்றாக நின்ற பதினோரு பேரும் கலைந்து ஆங்காங்கே அமர்ந்து ஆசுவாசம் தேட, சின்னாவிற்கு என்ன செய்வது என்பது புரியாமல் தனது அண்ணனருகே நின்று கொண்டான். பச்சை இரத்த வாடையையும் மீறி அவர்கள் குடித்திருந்த மதுவின் வாசம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.

       மேல வட்டம் செல்லான் தாத்தா இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகியிருக்க, நாளை பதினாறாம் நாள் காரியம் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்திருந்தன. நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இன்றே அந்தி இழவிற்காக வந்து சேர்ந்திருந்தனர். காரிய வீட்டின் சந்தடி அடங்கியிருந்தது. அம்மாவும், அத்தைகள் சிலரும் மட்டும் தாத்தாவின் கடைசிப் புகைப்படத்தின் முன்பாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, உறவினர்கள் அனைவரும் பந்தலிலும், அருகிலுள்ள வீடுகளிலும் உறங்கிக் கொண்டிருக்க, வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போரின் அருகேதான் இந்த இளம் மாடு அறுக்கப்பட்டிருந்தது.

      சில வருடங்கள் முன்புவரை காரியம் முடிந்த அடுத்த நாள்தான் ஆடோ கோழியோ அறுத்து, சாவு வீட்டுக்காரர்களுக்கும்,அவர்களின் பங்காளிகளுக்கும் உறமுறைகள் எனப்படுகிற மாமன் மற்றும் மச்சான் மார்கள் விருந்து வைப்பார்கள். அதற்குப் பெயர் சலிப்பாற்றுவது. ஆனால், இப்பொழுது யாருக்கும் இரண்டு மூன்று நாட்கள் தங்குமளவிற்குப் பொறுமையில்லை. எனவே காரியம் முடிந்த கையோடு இந்தச் சலிப்பாற்றுதலும் முடிந்து விடுகிறது. ஆனால், செய்வது இழவு வீட்டுக்காரர்கள் என்பதுதான் ஆச்சரியம். மேலும் செல்லான் தாத்தாவின் வாரிசுகளும் அங்காளிப் பங்காளிகளும் எண்ணிக்கையில் அதிகம். ஆடு அறுத்தால் கட்டுப்படியாகாது. ஆகவே, ஆடு மாடாகிவிட்டது.

      சின்னா வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க கிழக்கே பின்னிரவு நிலா எழுந்து விட்டிருந்தது. எப்படியும் மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். இனிமேல் ஆக வேண்டிய வேலையைப் பார்க்க வேண்டியதுதான். இறந்த மாட்டிலிருந்து பச்சை இரத்த வாடை வீசிக்கொண்டிருக்க, இரத்தம் பிடித்த பாத்திரத்தை வாழையிலை இட்டு மூடினான் சின்னா. பெரிய கருப்பு மாமாதான் மாட்டை அறுத்தது. அவர்தான் தோலை உரிக்க வேண்டியது. அவருக்குத்தான் இதில் பலவருடப் பழக்கம். மற்றவர்களெல்லாம் அவருக்கு உதவுவதற்காக. காலை இழுத்துப் பிடித்துக் கொள்ள, தொடைக்கறியை தொங்க விட்டு அறுக்க, எலும்புகளை வெட்ட, வெட்டிய கறிகளை துண்டுகளாக்க, குடலறுத்து சுத்தம் செய்ய என இன்ன பிற பணிகள். சின்னாவிற்கு தான் என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆயினும் அவர்கள் என்ன சொன்னாலும் செய்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான். பெரிய கருப்பு மாமாதான் ஆரம்பித்தார்.

“ம்.ஆரம்பிக்கலாம்பா.இன்னும் கொஞ்சம் நேரமாச்சுன்னா விடிஞ்சதுக்கு அப்புறமும் வேல இழுக்கும். இப்ப ஆரம்பிச்சாத்தான் சரியாயிருக்கும் “

“ம்.ஆரம்பிக்கலாம் மாமா. ஆனா, அதுக்கும்முன்னாடி கொஞ்சம் டீ குடிச்சா நல்லாருக்கும்”என்ற அண்ணனை சின்னா ஆச்சரியமாகப் பார்த்தான். அதே நேரத்தில், தன்னை தேநீர் தயாரிக்க சொல்லிவிடுவார்களோ என்றும் பயந்தான் அவன்.

“அதுக்கென்ன?! டீ குடுத்தா குடிக்கலாந்தான்.கொண்டா. குடிச்சிட்டு ஆரம்பிப்போம்” என்றார்  மாசியண்ணன்.

அண்ணன் சின்னாவைப் பார்த்து, “சின்னவனே,போயி தண்ணித் தொட்டிக்கிட்ட ஒரு பொட்டலம் இருக்கும். அத எடுத்திட்டு வா “என்றார்.

      சின்னா அதிசயித்தான். அதெப்படி தேநீரைப் பொட்டலம் கட்டி வைக்க முடியும் என்று அதிசயித்தவாறே தனது இல்லம் சென்று தண்ணீர்த் தொட்டியினருகில் தேடினான். ஒரு மஞ்சள்பை இருந்தது. அதற்குள்ளே கருப்பு பாலிதீன் பொட்டலம் இருந்தது. ஆர்வத்தில் சின்னா அதனைத் திறந்து பார்த்தான். ஒரு ஏழெட்டு சிறிய மது பாட்டில்கள் இருந்தன. சின்னாவிற்கு ஆச்சரியமொன்றுமில்லை. ஒரு காலத்தில் கள்ளச் சாராயம் குடிப்பார்கள் சிலர். அவர்களுக்கு என்றுமே சபையில் மரியாதை இருந்ததில்லை. குடிகாரன் என்ற சொல் ஒரு ஆணின் சுயமரியாதையை இழுத்து தெருவில் விட்ட காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது அரசே மது பானம் விற்கத் தொடங்கியபின் குடிக்காதவர்களுக்கு மதிப்பில்லை என்றே ஆயிற்று. கல்யாணம் முதல் அனைத்து சுப காரியங்களுக்கும், சாவு தொடங்கி அனைத்து அசுப காரியங்களுக்கும் குடிப்பது என்றே ஆகிவிட்டது தற்காலத்தில்.

     சின்னா பொட்டலத்தைக் கொண்டுபோய் கொடுத்தான். ஆளுக்கு அரை போத்தலென கவனமாக பாகம் பிரித்து அருந்தினார்கள் . சிலருக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையிருக்கவில்லை. சிலருக்கு பீடி போதுமாயிருக்க, ஒரு சிலர் மட்டும் கையளவு காராச் சேவு எடுத்துக் கொண்டார்கள். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு வேலையை ஆரம்பித்தார்கள். சிலருக்கு தெளிவாகப் பேச்சு வரவில்லை குழறினார்கள். சின்னாவிற்குப் புரியவில்லை. ஆனால், அவர்கள் புரிந்து கொண்டார்கள். அனைத்து பேச்சுகளும் சரக்கு சார்ந்த கதைகளும், ஊரின் வெட்ட வெளிச்சமான சில முறையற்ற உறவுகளுமே. அவ்வப்பொழுது நாட்டு நடப்பும் வந்தது. இறந்து போன செல்லான் தாத்தாவும் சில நிமிடங்கள் பேச்சில் வந்து போனார்.

        மாட்டின் கால்களைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, நான்கு பேர் நான்கு புறமாக கால்களை இழுத்துப் பிடித்துக்கொள்ள கழுத்துக்கருகே ஆரம்பித்து, நெஞ்சு வயிறு அடிவயிறு என கனகச்சிதமாக இரு புறமும் சரியான அளவில் வரும்படி கத்தியால் கோடு போட்டுத் தோலை உரிக்க ஆரம்பித்தார் பெரிய கருப்பு மாமா. பிறகு நான்கு கால்களையும் அதேபோல கணுக்காலிலிருந்து நெஞ்சுவரை கோடு போட்டுத் தோலை உரித்தவுடன், கால்களைத் தனியாக வெட்டிக் கொடுக்க, நால்வர் நுனா மரத்தில் கயிறுக்கட்டி, கயிற்றில் தொடையைத் தொங்கப்போட்டு இறைச்சியை அறுக்க ஆரம்பித்தனர். அடுத்ததாக வயிற்றைக் கீறி குடலை வெளியே எடுத்து தனியே வைத்துவிட்டு மீதமுள்ள தோலை உரித்து விட்டு, கழனித் தொட்டியின் விளிம்பில் அமர்ந்து ஆசுவாசம் கொள்ளலானார் பெரிய கருப்பு மாமா. தனியாக எடுத்துவைத்த குடல் பகுதியானது பட்டுத் துணியால் மூடிவைத்த துணிமூட்டைபோல் அந்த இருளிலும் பளபளத்தது.

அந்த மிதமான குளிரிலும் பெரிய கருப்பு மாமாவின் உடலெங்கும் வியர்வையின் ஊற்று பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தே தெரியும் கர்ப்பக்கிரக கற்சிலையென அவரின் மேனி அந்த இரவிலும் பளபளத்துக் கொண்டிருந்தது. பாதி அணைத்து வைக்கப்பட்டிருந்த பீடித்துண்டுகளில் வரிசையாக நான்கைந்தை ஆனந்தமாகப் புகைத்தவர் அண்ணனைப் பார்த்து கண் சிமிட்டியபடி ஆரம்பித்தார்..

“என்னய்யா மாப்ள?! திரும்பவும் டீ சாப்புடுவோமா??”

மாசியண்ணன் அதை வழிமொழிந்தார்

“ஆமப்பா. அடிச்சதெல்லாம் இறங்கி போயிடுச்சி. இருந்தாக் கொடுப்பா. ஆளுக்கொரு கட்டிங் போடலாம்”என்றார்.

அண்ணன் கொஞ்சமாய் பிகு பண்ணினார்.

“இருக்கிறதையெல்லாம் ஒங்களுக்குக் கொடுத்திட்டு நாளக்கிக் காலையில நான் எதைக் குடிக்கிறதாம்?”

சின்னா அதிர்ந்தான் “காலையிலேவா?!”

     ஒருவழியாக அனைவரிடமும் பேசியபின் மாசியண்ணன் அந்த முடிவை அறிவித்தார்.

“சரிப்பா. இப்ப இருக்கறத கொடு. விடிகாலையில நான் போய் சரக்கு வாங்கிட்டு வந்து தாரேன். காலையில விடியறதுக்குள்ள ஒங்கையில சரக்கு இருக்கும்” என்ற உறுதிமொழியைக் கேட்டவுடன் அண்ணன் சின்னாவைப் பார்த்தார்.

“சின்னா. ஓடு. ஓடிப்போய் மீட்டர் பெட்டிக்குள்ள ஒரு பொட்டலம் இருக்கும். அத எடுத்திட்டு வா.”என்றார்.

‘இன்னும் எங்கெல்லாம் பதுக்கி வச்சிருக்காரோ?’ என்ற முணுமுணுப்போடு சென்று சரக்கை எடுத்து வந்தான் சின்னா. அண்ணி இதை எப்படி அனுமதிக்கிறார் என்பது சின்னாவிற்கு இன்னமும் புரியாத புதிர். மீண்டும் குடித்தார்கள். மீண்டும் குழறினார்கள். இருவர் மாட்டின் நெஞ்செலும்பையும் முதுகுத் தண்டுவடத்தையும் ஒவ்வொரு கணுக்களாக வெட்டிக்கொடுக்க, மற்ற இருவர் அதனைத் துண்டுபோடத் துவங்கினர். மற்றொருவர் மரக்கட்டையில் பெரிய இறைச்சித் துண்டுகளை கொத்திக் கொடுக்க மற்றவர்கள் அதனை துண்டுத் துண்டாக நறுக்கிக் கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து, குடலை அலச இருவர் எழுந்த பொழுது கிழக்கே வெளுக்க ஆரம்பித்திருந்தது. சின்னாவின் அண்ணன் ஞாபகமூட்டினார்.

“எண்ணே,மாசியண்ணே.எங்கண்ணே சரக்கு?”

மாசியண்ணன், “இந்தா இரு தம்பி நான் போய் வாங்கிட்டு வாரேன்” என்றவாறே தள்ளாடியபடி எழுந்து நின்றார். சின்னா அவரிடம் கேட்டான்

“எண்ணே, இந்த நேரத்துல டாஸ்மாக் தொறந்துருக்குமா?”

அவர் சிரித்தார்

“மூடுனாதானே தம்பி தொறக்குறதுக்கு. முன்னாடி வெறும் ஷட்டர மட்டும் மூடியிருப்பானுங்க. பின்னாடி ஜன்னல் வழியாத் தருவானுங்க. என்ன, ஆஃப்க்கே அம்பது ரூவா அதிகமாத் தரணும். நாம கேக்குறது கெடைக்காது. அவன் குடுக்குறத வாங்கிக்கணும்” என்றவாறே காரிய வீட்டுக்காரரிடம் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் டாஸ்மாக் -கிற்கு கிளம்பினார்.. “இந்தா தம்பி வந்திட்டேன் அரைமணி நேரத்தில்”என்றவாறே.

     அவர் திரும்பி வருவதற்குள் பெருங்குடல் கிழித்து கழிவுகளை அகற்றி அலசி முடித்திருந்தனர். இப்பொழுது சிறுகுடலை கிழிக்காமல் நீர் நிரப்பி அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நீர் நிரப்பிய குடல் உயிருள்ள பாம்பைப்போல நடனமிடுவதாகத் தோன்றியது அவனுக்கு. சின்னாவிற்கு மிகவும் வேடிக்கையாக இருந்ததால் அருகிலிருந்து ஆர்வமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். மதுப் போத்தல்கள் வந்து மூன்றாவது முறையும் அவர்கள் அனைவரும் குடித்து முடித்தபொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. காரிய வீட்டில் யாரோ பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தனர்.

        ஒன்பது மணிக்கு பிச்சாண்டி மாமா சமையல் வேலையை ஆரம்பித்தார். எலும்பு தனியாக, கறிக்குழம்பு தனியாக, தலைக்கறி தனியாக, குடல் தனியாக, இரத்தம் தனியாக என்று மாடு பல கலன்களில் வேக ஆரம்பித்திருந்தது. அங்கே காரிய வீட்டில் வள்ளுவன் வந்து அனைத்து  காரியங்களையும் நிறைவேற்றிக்கொண்டிருக்க, தனியாகப் படையலுக்கு என்று தனியாக சாம்பசிவ சித்தப்பா சைவ சமையல் செய்து கொண்டிருந்தார். காரணம் மேலவட்டம் செல்லான் தாத்தா தனது இறுதி காலங்களில் சைவமாகியிருந்தார்.

    காரிய வீட்டுக்காரர்கள் மட்டுமே அனைத்து காரியங்களையும் கவனமாகப் பார்த்து செய்துகொண்டிருக்க மற்ற அனைவரும் ஏதோ சுப காரியத்திற்கு வந்ததைப்போல் தத்தம் அருமை பெருமைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். அடிக்கடி சமையல் நடக்கும் இடத்திலும் ஒரு கண்ணை வைத்திருந்தனர். வள்ளுவனின் அழைப்பின் பேரில் ஒவ்வொரு நெருங்கிய சொந்தங்களும் வந்து எள்ளும் ஓமமும் கொஞ்சம்போல் எடுத்து யாகம் வளர்த்த தீயில் இட்டு, காணிக்கையும் வைத்துவிட்டு வந்து அமர்ந்தனர்.

      செல்லான் தாத்தாவின் மகள்களில் இருவர் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருக்க அவர்களின் கணவர்கள், “இனிமேதான் ஒங்கொப்பன் திரும்பி வரப்போறானாடி. அழுவறத நிறுத்திட்டு ஆக வேண்டியதைப் பாருடி.” என்று போதையில் அடிக்கப் பாய்ந்தார்கள். ஒரு சிலரால் இந்த சண்டை பெரிய அளவில் வளராமல் தடுக்கப்பட்டு அமர்த்தப்பட்டது.

அவர்களிடம் கேட்டதற்கு “ஊருல எல்லாம் போட்டது போட்டபடி இருக்க இவளுங்க அப்பன் போய்ட்டானு ரெண்டுவாரமா ஊருக்கே வரல. பொழப்பு எப்படிய்யா நடக்கிறது?” என்று எதிர்  கேள்வி கேட்டார்கள்.

அதற்கு, “அதுவும் சரிதான். இருந்தாலும் ஒத்த அப்பன் செத்து கெடைக்கயில பொம்பளைங்க மனசு கேக்காதுல்ல. இனிமே அவளுங்க இங்க எங்க வரப்போறாளுங்க? அதான் எல்லாம் முடிஞ்சு போயிருச்சே. இந்தா, சலுப்பாத்திட்டு பொண்டாட்டிங்கள கூட்டிட்டு போங்க” என்று சுற்றம் சமாதானப்படுத்தியது. இருப்பினும் அவர்கள் சமாதானமடையாமல் கத்தியதால் பெரிய கருப்பு மாமா அவர்களை வைக்கோல் படப்புப்பக்கம் இழுத்துக் கொண்டுபோய் ஆளுக்கு அரை போத்தல்  மதுவை ஊற்றிக் கொடுத்தார். அவ்வளவுதான். அடங்கிவிட்டார்கள். அதன் பிறகு எந்த சத்தமும் இல்லாமல் காரியங்கள் சடுதியில் நடந்தேறின.

     கொள்ளியிட்டவர் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு முளைப்பாரி கூடையை (இறந்த தினத்தில் ஒரு சிறிய கூடையில் மாட்டுச் சாணியில் பொதிந்து வைத்து அதற்கு தினமும் நீர் வார்ப்பார்கள். பயிர்கள் முளைவிட்டு அதிக நீளம் வளர்ந்தால் அந்த குடும்பம் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்கக் கூடாது என்பதற்காகத்தான் மாட்டுச் சாணத்திலிலேயே பயிர்களை பொதிகிறார்களோ என்னவோ? முளைப்பாரி கூடையில் தானியங்கள் ஓரடிக்கு அடர்ந்து வளர்ந்திருந்தன) எடுத்துக்கொண்டு போய் ஊரணியில் விட்டுவிட்டு தலைமுழுகிவந்தார். உடனடியாக செல்லான் தாத்தாவிற்குப் படையல் போடப்பட்டது. அனைவரும் ஒன்றுகூடி செல்லன் தாத்தாவை மனதில் நினைத்து கும்பிட பெண்களின் கூட்டத்திலிருந்து அழுகை மீண்டும் வெடித்துக் கிளம்பி அடங்கியது. காக்காய்க்கு கொஞ்சம் போல் சோறு வைத்து காரியம் முடித்து வைக்கப்பட்டது.

     அவ்வளவுதான். என்பது வயதுக்கு மேல் வாழ்ந்து, மாடாக உழைத்து ஓடாக தேய்ந்து, பலபிள்ளைகளைப் பெற்று,  வளர்த்து, ஆளாக்கி பேரன் பெயர்த்திகளையும் பார்த்து, மண்ணிலும், நாட்டிலும், வீட்டிலும், மக்களின் மனங்களிலும் மாற்றங்களை பல பதின்மங்களாக பார்த்து அதில் நல்லவற்றையும் தீயவற்றையும் அலசி, அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்தி செல்லும் முன்னத்தி ஏருக்கு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. ஒருவயதிற்குப்பிறகு வாழ்வதென்பது வாழ்பவருக்கும் மற்றவர்களுக்கும் சலித்துப்போய் விடுமோ?.அதற்காக உண்டானதுதான் இந்த சலிப்பாற்றும் படலமோ?

    அடுத்த சில கணங்களில் ஆண்வர்க்கம் அனைத்தும் வைக்கோல் படப்பின் பின்னால் ஒதுங்கியது. பெரிய அட்டைப் பெட்டி திறந்திருக்க, அதிலிருந்து அவரவர்களுக்கு வேண்டுமென்கிற மதுவை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள். செல்லான் தாத்தாவின் இரு மருமகன்களும், இரவில் மாடு அறுத்த பதினோரு பேரில் ஐவரும் சாப்பிடாமலேயே மட்டையாகியிருந்தார்கள். வயிற்றுக்குள் மாடு மதுவோடு சேர்ந்து ஜீரணமாகிக் கொண்டிருக்க, மேல வட்டம் செல்லான் தாத்தாவின் நினைவும் அவைகளோடு சேர்ந்து கொண்டது.

-chanbu_sp@yahoo.co.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button