கவிகளின் பொருளாதாரம் அல்லது
அன்பின் விலைப்பட்டியல்
கவிகளின் பொருளாதாரம்
என்னும் தலைப்பில்
நாங்கள் பேசியதில்லை.
பைசா பைசாவாக
கணக்கெழுதி செலவழிக்கத் தெரியாத
சோம்பேறிகள்
என்று திட்டிவிடுங்கள்.
இளம் வயதில் கிறங்கடித்த
டென்னிசன் கவிதை வரி
“கடைசிச் சொட்டு வரை அருந்துவேன்”
எதையோ?
ஆனால் எனக்கு
கடைசிப் பைசா வரை என்றாகியது.
கவிதையில்
முற்றுப்புள்ளி
என்பது தேவையில்லை
வாழ்தல் என்பது
நின்று நின்று சென்றாலும்
எறும்பளவேனும் நகரும்
நான்-ஸ்டாப் பயணம்
எங்கள் தெருவில்
புதிய எல்.இ.டி. விளக்குகளால்
கூடெங்கே எனத் தெரியாமல்
தாறுமாறாக பறந்து திரிகின்றன
இரவுப் பறவைகள்
இப்படியும் திசையற்றுப் போகலாம்
அன்பைப் பிச்சை கேட்பதில் தவறில்லை.
அன்பை அள்ளி அள்ளி வழங்கும்
அவளது பெயரே அன்பரசி தான்
உங்கள் தெருவிலுள்ள அவள் வாசலில்
இட்லிப் பூச்செடிகள் பல நிறங்களில்
காவல் இருக்கின்றன.
இட்லியை ஞாபகப்படுத்தும் மலரா?
தாறுமாறான எண்ணங்கள்
வழிதவறுவதில் வியப்பில்லை
எதிர் அழகியல் வேண்டும் என்றால்
நான் முதலைகள் பார்க்கச் செல்வேன்.
பண முதலைகள் அல்ல;
மெரினாவின் அசல் முதலைகள்.
கவிகளின் பொருளாதாரம்
அன்பின் விலைப்பட்டியல்
இரண்டு கவிதையும் கலந்துவிட்டன; ஒன்றையொன்று பாதிக்கிறது
என்பதைப் பதிவு செய்ய வேண்டும் இல்லையா?
(விக்கிரமாதித்யனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துகள்)