![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/Mysskin_screenshot-749x405.jpg)
பள்ளிக் காலங்களில், ஒரு திரைப்படத்தின் பெயர் போடுவதில் முழு கவனம் குவித்து, அதில் “சண்டைப் பயிற்சி” வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, படம் பார்ப்பது ஒரு பழக்கம். மேலும், அந்த வயதில், அப்படி “சண்டைப் பயிற்சி” கார்டு இல்லாத படத்தை, ஒரு படமாகவே, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக, படம் பார்க்காமல் வெளியேறும் கெட்டப் பழக்கமும் இருந்ததில்லை. அது தர்மமுமில்லை என்கிற கொள்கை கோட்பாடு [?!] வேறு தடுக்க, எல்லாப் படங்களையும் பார்த்தே வளர்ந்த பருவம்அது. “சண்டைப் பயிற்சி” யின் சந்தோஷத்திற்காகவே தெலுங்கு டப்பிங் படங்களையும் விட்டு வைப்பதில்லை. ஜூடோ ரத்னம், சூப்பர் சுப்பராயன், ஹயாத், ஆம்பூர் பாபு, மாடக்குளம் ரவி, பட்டுசாமி, விக்ரம் தர்மா, கனல் கண்ணன், ஹார்ஸ்பாபு, ராக்கி ராஜேஷ், ராம்போ ராஜ்குமார் என அந்த சண்டைப் பயிற்சியாளர்களின் விருப்பப் பட்டியலின் நீளம் அதிகம். இயக்குநர் விசுவே கூட நினவுபடுத்திக்கொள்ள முடியாத அவரது “நாணயம் இல்லாத நாணயம்” திரைப்படத்தில் ஜூடோ ரத்னம் நடித்த [ அடித்த ! ] சண்டைக் காட்சி, நடிகர் சரண்ராஜ் கூட மறந்து போன “கழுகு மலைக் கள்ளன்”, “தூங்காதே தம்பி தூங்காதே” பென்ச் சண்டை போன்ற பல சண்டைக் காவியங்களை ரசித்திருக்கிறோம். ‘இனிமையான பாடல்கள் மற்றும் இடி இடிக்கும் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படம்’ என்கிறபோஸ்டரைப் பார்த்தாலே நிலைகொள்ளாமல் திரையரங்கிற்கு கிளம்பிவிடுவோம் [ அப்படி இல்லையென்றாலும் திரையரங்கிற்குகிளம்பிவிடுவோம் என்பது வேறு விஷயம் ]. இப்படிப்பட்ட பின்புலத்தோடு இக்கட்டுரையில் மேலும் பயணிப்போம்.
சமீபத்த்தில் ஒரு அறிமுக இயக்குநர் இயக்கி வெளிவந்த “டியர் காம்ரேட்” தெலுங்குத் திரைப்படம், ஒரு பாத்ரூமில் நடக்கும் சண்டையை துவக்கக் காட்சியாக கொண்டிருந்தது. இதேபோல், தமிழிலும் ஒரு அறிமுக இயக்குநர் 2006 இல் தன் முதல் படத்தில் பாத்ரூம் சண்டைக் காட்சியில்தான், தன் திரைப் பயணத்தைத் துவங்கினார். தமிழ்ப் படங்களில், துவக்கத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன்அதுவும் ஒரு இயக்குநரின்
முதல் படத்தில் வருவது வெகு அரிது. “அந்த நாள்” படத்தின் நாயகன் ராஜன், “வெற்றிவிழா”வில் வெற்றி மற்றும் “காக்க காக்க”வில் அன்புச்செல்வன் முதல் காட்சியில் சுடப்பட்டு விழுவது, “தம்பி ! கேட்டை மூட்றா” என டி .எஸ்.பி ராகவன் போடும்ஆக்ரோஷமான சண்டை… இதெல்லாம்அந்தந்த இயக்குநர்களின் முதல் படமில்லை என்பதால் கணக்கில் விட்டுவிடலாம். இயக்குநர் ஷங்கரின் முதல் படமான “ஜென்டில்மேன்” படத்தில் சண்டையில்லாமல் வரும் துரத்தல் காட்சியும் ஒரு விதிவிலக்காக விட்டுவிடுவோம்…
திருவின் ஆக்ரோஷம்.
“ஆண்டவா ! எல்லாரையும் நல்லபடியா வைப்பா” என்கிற வசனத்திலோ , கோவில் மணியோசையிலோ, ” நான் தொட்டதெல்லாம் வெற்றிதான்’ என்பது போன்ற நாடக பாணியில், நல்லசகுனமாக[?! ] கருதப்படத் துவக்க காட்சிகள் வைக்கப்பட்ட காலத்தில் ஓர் அறிமுக இயக்குநராக தனது முதல் படத்தில் சண்டைக் காட்சியில் கதை சொல்லஆரம்பிக்கிறார் மிஷ்கின். முதல் ஷாட்டில், வசந்தன் ஒரு பாலத்தில் ஓடி வர , சாருமதி போன் பேசிக்கொண்டே போய் இடிக்க, ஒருபொதுக் கழிப்பறையில் முழங்கை வரை மடித்த சட்டை மட்டும் தெரிய, செக்யூரிட்டி வேலைக்கு கொடுக்க காசில்லாத “திரு” என்னும் இளைஞன் நிற்க, அசந்தர்ப்பமாக தன்மேல் விழும் ஒரு விபரீத கெட்டவார்த்தையால், முதல் ஆளின் மூக்கின் மேல் குத்துகிறான். அடுத்த ஆளை அங்கிருக்கும்கண்ணாடியில் மோதுகிறான். ஓட்டை தெரியும் தன் நீல நிற செருப்பை சரிசெய்துவிட்டு கத்தியுடன் பாயும் மூன்றாமானவனை வாஷ்பேசின் மேலெறிந்து உடைக்கிறான். கொலை முயற்சியில் தப்பிய வசந்தன் அதிர்ச்சியில் உறைந்து பார்த்திருக்க ” திரு” தலைகுனிந்தபடியே வெளியேறுகிறான். ஒரு நிமிடம் மட்டும் நடக்கும் இந்த சண்டைக் காட்சியில் திருவின் வறுமையும்,கோபமும், சண்டையும் என புதிய வகை பின்னணியிசையும் தேர்ந்த படத்தொகுப்பும்சேர முதல் படத்திலேயே தன்னை நிறுவிச் சொன்னவர் இயக்குநர் மிஷ்கின்.
சத்யாவின் சாகசம்
“பார்த்திபா .. உன்ன போட வந்துட்டாங்கடா ” என்னும் கூக்குரலின் பின்னணியில், எதார்த்தமாக, வெறும் ஒரு சாதாரண உரம் போடும் பையை முகமூடியாகக் கொண்டு “டயலாக்லாம் பேச டைம் இல்ல” என ஐந்து பேர் கொண்ட கூலிப்படையின் எச்சரிக்கையுடன் இன்ஸ்பெக்டர் சத்யா மோதுவதில் துவங்குகிறது, அரசு மருத்துவமனையில் ஒரு சண்டை. துப்பாக்கி உபயோப்படுத்த வேண்டாம் என்பதை ஒரு சில வினாடிகளில் உணர்த்திவிட்டு, இந்த சண்டையும் முதலில் வந்தவன் மூக்கில் குத்துப்பாட்டு பின்வாங்குவதில் ஆரம்பிக்கிறது. எப்போதும் போல, ஒவ்வொருவராக வந்து அடி வாங்கும்போது, அபிராமி திரையரங்கில் கேட்ட கைத்தட்டல் இன்றும் நினைவிருக்கிறது. இங்கேயும் மிரட்டலான பின்னணியிசை, பார்வையாளன் யோசிக்கவென சில நொடிகள் எல்லாம் கொடுத்து நடத்தப்படும் இந்த மாயப் போரினூடே கதையும் கூடவே கதாநாயகன் வளர்வதும் நடக்கிறது. இரு கத்தியுடன் இறுதியாக வந்தவன் என்ன ஆனான் என்பதை ஒரு கீழ் கோணத்தில் ஒரு எதிர்ப்பார்ப்புடன் கொண்டு சென்று, முதுகிலும் விலாவிலும் இரு கத்திகள் சொருகி அந்த கூலிப்படை வெளியேறும் சண்டை மற்றுமொரு கச்சித உதாரணம்.
மீன் சந்தையில் முகமூடி வீரன் – லீ
தன் மாஸ்டரின் தற்காப்பு கலைப்பயிற்சிப் பள்ளிக்கு யாரும் சேரவருவதில்லை என்கிற வருத்தத்தை மீன்விற்கும் தன் நண்பனிடம் சொல்லும்போது, பேச்சுவாக்கில் மீன் விற்பனை செய்பவர்களோடு ஒரு சவால் தொடுக்கும் நிலை வர, ஒரு முடிவு செய்துகொண்ட லீ , சந்தையின் பாதையில் இறங்கி, வலது கையை மடித்து வைத்துக்கொண்டு இடதுகையை வெட்டச் சொல்லி சவால் விடுகிறான். இந்த சண்டை அச்சு அசலான மீன் விற்கும் சண்டை தெரியாத முரட்டு வியாபாரிகளுக்கும் சண்டை தெரிந்த லீக்கும் இடையில் நடக்கிறது. மொத்தம் 4 நிமிடங்கள். அதில் சண்டைக்கான முன்தயாரிப்பு 2 நிமிடங்களும், சண்டை 2 நிமிடங்களும் நடக்கின்றன. இதிலும் அதேநேர்த்தி, துல்லியம், கதை நகர்த்தல் [ கதாநாயகி போலீசுக்கு தகவல்சொல்கிறாள் ], பின்னணியிசை, படத்தொகுப்பு என அழகாக ஆக்ஷன் காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்மிஷ்கின்.
சண்டையிடுகிறார் ஜேகே
இந்த சண்டைகளில் உச்சமாக, “யுத்தம் செய்” திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியைக் குறிப்பிடலாம். இந்த சண்டையும் கதையை நகர்த்துவதற்கே பயன்படுகிறது. நம் வழக்கமான சினிமாக்களில் காட்டப்படுவது போல், எல்லா போலீஸ் அதிகாரிகளுக்கும் சகட்டுமேனிக்கு துப்பாக்கியும் குண்டுகளும் வழங்கப்படுவதில்லை. சிபி சிஐடி அதிகாரியான ஜேகே விடம் எந்த ஆயுதமும் இல்லை என்னும் சூழலில் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. பின்னர் இந்தக் காரணத்திற்காகத்தான் மேலதிகாரியிடம் ஆயுதம் வைத்துக்கொள்ளசிறப்பு அனுமதியும், துப்பாக்கியும் தோட்டாக்களும் கையெழுத்திட்டு வாங்குகிறார் [ இதே அடிப்படையில், அப்படி வாங்கிய 8 தோட்டாக்கள் என்ன ஆனது என்பதுதான் “8 தோட்டாக்கள்” படத்தின் மையம் ]. ஜேகேயின் உயிருக்கு ஆபத்து என்னும் பகுதியை நிறுவுவதற்கு ஒரு 7 நிமிடம் வரை போகும் சண்டையை கட்டமைக்கிறார்.
முதலில் வாசலில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்கும் ஜேகே , ஒருயோசனையுடன் உள்ளே சென்று மேஜையை இழுத்து எதையோ எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். இந்த இடத்தில் “காதலிக்க நேரமில்லை” ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா சொல்லும் “அந்த உருவம் எதையோ எடுக்குது.. அது என்னங்கிறத அடுத்த சீன்லதான் சொல்றோம்…” என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். வெளியே வந்து, நடக்கும் அவர் மிஷ்கினின் கதாபாத்திரங்கள் போல, காலால் ஒரு சிலநொடிகள் யோசித்து சாலையில் போகாமல் நடைமேடையில் ஏறுகிறார். ஒரு தனி ஆள் எட்டு பேரோடு மோத ஒரு பாலத்தைத் தேர்வுசெய்வது தமிழ் சினிமாவிற்கு புதிது. அப்படிஆரம்பிக்கும் அந்த சண்டையில் ஒரு கட்டத்தில் ஜேகே வின் கையில் இருப்பது வெறும் ஒரு நகவெட்டிதான் என்பதும், மிகத்துல்லியமாக ஒவ்வொருவரையும் தாக்கி ரத்தம் வழியும் நகவெட்டியுடன் காமெரா 360 டிகிரி சுற்றி வந்ததும், மேலும் இதைசெய்தது ஜேகே வாகிய நம்ம சேரன்என்பதும் பன்மடங்கு ஆச்சர்யங்கள் நமக்கு. போகிற போக்கில், சின்ன கத்தியால் குத்தும் அந்தக் காட்சிகள், இன்றும் பல படங்களில் என்.ஜி.கே யில் மார்க்கெட் சண்டை வரைகையாளப் படுகிறது என்பதுசுவாரசியம்.
விசேஷ இணைப்பாக, “பிசாசு” படத்தில் சண்டையே போட்டறியாத ஒரு வயலினிசைக் கலைஞன் சித்தார்த் சுரங்கப்பாதையில் இயல்பாகப் போடும் சண்டைக்காட்சியும் , துப்பறிவாளனில் வரும் சீன உணவகத்தில் ஒரு தேர்ந்த நடனம் போல் [ இதற்காகவே கணியனுக்கு மைக்கேல் ஜாக்சனின் உடையமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ] நடக்கும் சண்டைக்காட்சியையும் குறிப்பிடலாம். இவை எல்லாவற்றிலும் பின்னணியிசை, படத்தொகுப்பு, ஒளியமைப்பு மற்றும் சண்டைக்காட்சியும் முழுக்க முழுக்க இயக்குநர் மிஷ்கினே உருவாக்குகிறார். அவரின் எண்ணத்தை சேதமில்லாமல் அல்லது குறைந்த சேதத்துடன்செய்வதே சண்டைப் பயிற்சியாளரின் பங்காக இருந்திருக்கிறது.
ஒரு பாடலில் கதை சொல்வது அல்லது நகர்த்துவது போல ஒரு சண்டைக் காட்சியிலும் கதை நகர்த்தல், கதாபாத்திரங்களின் தன்மை சொல்லல், சாதாரண சூழல், அங்கு கிடைக்கும் ஆயுதங்கள், இதன் தொடர்ச்சியாக வேறு சம்பவங்கள் நிகழ்தல் என சண்டைக் காட்சிகளை ஒரு நேரக் கடத்தியாக உபயோகிக்காமல் அதிலும் தன் முத்திரையைப் பதிப்பது, சண்டைப் பயிற்சி தெரிந்த இயக்குநர் மிஷ்கினின் தனித்த திறமையாகப் பாராட்ட வேண்டியது ஒவ்வொரு “சண்டைப் பயிற்சி” டைட்டில் கார்டு ரசிகனின் கடமை.