தொடர்கள்

சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா; 5 – காயத்ரி மஹதி

தொடர் | வாசகசாலை

சோசியல் மீடியா காதல்

காதல் அத்தனை ஜீவராசிகளையும் கொண்டாட வைக்கும்,  சந்தோசமாக வாழ வைக்கும், பல பேர் சொல்வது பெற்றோரை விட தன்னுடைய பார்ட்னர் கூட நிம்மதியாக இருக்கிறேன் என்று. அந்த அளவிற்கு காதல் எல்லாரையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்குள் வைத்து இருப்பது போல் வாழ வைக்கும். ஏன் வாழ்கிறோம் என்கிற அர்த்தத்துக்கு காதல் பல அர்த்தங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும்போதும் சரி, அதை வெளிப்படுத்துவதில் உள்ள தயக்கங்களால், செய்கின்ற முட்டாள் தனங்களும் சரி, எந்த மாதிரியான மனிதர்கள் தங்களுக்கு சரியாக வருவார்கள் என்பதை யோசிக்கும்போதும் சரி, பல வித கற்பனைகளுடன், பல வித குழப்பங்களுடன் இருப்பார்கள்.

ஏன் என்றால் நம்முடைய ரசனைக்கு ஏற்ற மாதிரி, தம்முடைய குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லும் போது தமக்கான காதலன்/காதலி அத்தனை எளிதாக கிடைப்பது இல்லை.

ஆனால் சோசியல் மீடியாவில் அப்படி இல்லை. ஆயிரக்கணக்கான மனிதர்கள் நம் பார்வையில் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.  அதனால் தங்களுக்குப் பிடித்த உடல்வாகுடன், அறிவு சார்ந்த திறனுடன், பதவி மற்றும் புகழுடன் இருக்கும் நபர்களைப் பார்க்க முடிகிறது. அதனால் ஆண்/பெண் பழக்கமும், பேச்சு வார்த்தையும் ஈர்ப்பும் குறுகிய நாட்களில், குறுகிய நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது. அதனால் மிக எளிதாக பேசவும், உரையாடவும் முடிகிறது. தங்களுக்குப் பிடித்த நபர்களுக்கு கமெண்ட் இடுவது, எமோஜி சிம்பல் கொடுப்பது, அவர்களை டேக் பண்ணுவது என மிக இயல்பாக சோசியல் மீடியாவில் நடக்கிறது.

தாங்கள் தேர்ந்தெடுத்த உறவோடு, காதலாகி செல்ஃபி எடுப்பதாக இருக்கட்டும், அவர்கள் சேர்ந்து வெளியே சென்றதை சொல்வதாக இருக்கட்டும், இருவரின் வெற்றியை, தோல்வியை, தன்னம்பிக்கையைப் பற்றி மாறி, மாறி பொது வெளியில் பேசுவதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் இருவரும் வெளிப்படையாக சொல்கிறோம் என்பதை தெரியப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில் யாரோ ஒருவர் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். மற்றவர்க்கு ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் வரும்போது, வெளியே இதை எல்லாம் சொல்லாதே என்று கூறும்போது தன்னை வெளியே அங்கீகரிக்க வேண்டும் என்பதே பல பேரின் ஆசையாக இருக்கிறது.

அந்த அங்கீகாரத்துடன் கூடிய அன்பு, பாசம் எல்லாம் தனக்கே தனக்கு சொல்லி சொந்தம் கொண்டாடவும் முடிகிறது. அப்படி சமூக வலைதளங்களில் கொண்டாடிய மனிதனை தனக்கே தனக்கான உறவு என்று வரும் போது வேறு யாரும் பாசமாகவோ, ஜாலியாகவோ அவர்களது பேஜில் பேசினாலோ ஓவர் பொசசிவ் ஆகி விடுகின்றனர். அதனால் அந்த காதலர்கள் மாறி மாறி நீ இந்த மாதிரி சமூகவலைத் தளங்களில் எழுதக் கூடாது எனவும், புகைப்படங்கள் போடக் கூடாது எனவும் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இந்த மாதிரியான டிஜிட்டல் காதலில் வயது வித்தியாசம் என்பது கிடையாது. அதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த நபர்களை கிரஸ், பெஸ்டி, லவ்வர், மனம் விட்டு பேசிக் கூடிய நபர் (சோல் மேட்) என்றும் பல பெயர்களில் அவரவர் உறவுகளை அடையாளப்படுத்தி வெளியே சொல்லி சந்தோசப்படவும் செய்கின்றனர்.

இப்படியாக இத்தனை கூட்டத்தில் இருந்து தனக்கான நபரைத் தேர்ந்தெடுத்த தகவலை கம்பீரமாக, சந்தோசமாக அத்தனை கூட்டத்தில், பொதுத் தளத்தில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் எனவும், அதை பகிரங்கமாக அறிவித்த பின், உணர்வுகளால் பிணைக்கப்பட்ட உறவு, உணர்ச்சிவயப்பட்ட உறவாக மாறி விடுகிறது.

அதன் தொடர்ச்சியாக மனிதன் என்றுமே சோசியல் மீடியாவில் பிடித்த நபரைப் பற்றி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசுவது ஆகட்டும், பொது வெளியில் திட்டுவது ஆகட்டும், பொது வெளியில் சொந்தம் கொண்டாடுவது ஆகட்டும் என அவர்களுடைய காதல் உணர்வுகள் அனைத்தையும் சந்தைப்படுத்துவது போல் மாற்றி விடுகிறார்கள். இதனால் பலரது கருத்துகளும், நண்பர்களது சொந்த எண்ணங்களும் அந்த இருவருக்குள் அதிகமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது. சிலர் யார் பேச்சையும் கேட்காமல் இருக்கும் போது, தனிநபர் குணாதிசியங்களோடு சேர்த்து பகிரங்கமாக கமெண்ட்களை பேசி, தவறாக பொது வெளியில் வைக்கவும் செய்கின்றனர். இதனால் பல பிரச்சனைக்குரிய மற்றும் கசப்பான உணர்வுகளை அவர்களுக்குத் தந்து விடுகிறது.

இப்படி வெளிப்படும் பிரச்சனைகளை ஓரளவு பேசிப் பார்ப்பார்கள். ஆனால் முடியாதபோது யாரோ ஒருவர் மிக எளிதாக பிளாக் செய்து விட்டு போய் விடுவார்கள்.

பிளாக் என்பது சோசியல் மீடியாவில் ரொம்ப எளிதான விஷயமாக இருக்கிறது. தான் நேசித்த, கொண்டாடிய நபர் தன்னை ஒதுக்குறாங்க என்பதை உணரும்போது மனதளவில் உடைந்து போய் விடுகிறார்கள். இந்த மாதிரி சோசியல் மீடியாவில் வரும் உறவுகளின் பிரிவின் போது ஏற்படும் அழுகைக்கும், புலம்பலுக்கும் வீரியம் அதிகமாகத் தான் இருக்கும்.

குடும்பத்திலோ, நண்பர்களிடத்திலோ இந்த மாதிரி ஒரு ஏமாற்றத்தை வாழ்வில் எதிர்கொண்டேன் என சொல்லும்போது எதற்காக சோசியல் மீடியா நபர்களை நம்பினாய் என்ற கேள்வி தான் முதலில் எழும். அதைத் தொடர்ந்து அனைவரும் சொல்வது, நேரில் பார்த்து பழகும் மனிதர்களே எளிதாக ஏமாற்றுகிறார்கள் என்ற பதிலும் கூடவே வரும். அதனால் அந்தப் பிரிவின் வலியை எளிதாக வெளியே சொல்லவும் முடியாது.

கூடவே தான் ஏற்படுத்திய கம்பீரமான பிம்பம், காதலை பொது வெளிப்படுத்தியதால் ஏற்படும் கேள்விகள், கிண்டல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் போது அதை எளிதாக கையாள முடியாத அளவுக்கு ஒரு சிக்கலுக்குள் இருப்பதாக முடிவு பண்ணி விடுகின்றனர்.

இது போக அந்த பிளாக் என்ற விஷயம் தான் நேசித்த மனிதரை இந்த உலகத்தை விட்டு முற்றிலுமாக தொலைத்து விட்டோம் என்ற உச்சக்கட்ட நினைப்பில் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகவும் செய்கின்றனர்.

பொதுவாக மனிதர்களுக்கு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஐம்புலனும் உணர்ந்து செயல்படும்போதுதான், அந்த செயல்களை ரொம்ப ஆழமாக, நம்பிக்கையாக உணர ஆரம்பிப்பார்கள். வெறும் டெக்ஸ்ட், எமோஜி சிம்பல் எல்லாம் காதலுக்கு எல்லாம் சுத்தமாக பத்தாது. காதலுக்கு நிறைய பேசணும், நிறைய விவாதம் செய்யணும், நிறைய கொஞ்சணும், நிறைய சண்டை போடணும், அந்தச் சண்டைக்கு அளவுக்கு அதிகமாக சமாதானம் பண்ண தெரிந்து இருக்கணும். இப்படி அனைத்தையும் வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டிய விஷயத்தை எழுத்துக்கள் மூலமாகவோ, புகைப்படங்கள் மூலமாகவோ எந்த ஒரு மனிதனையும் திருப்தி படுத்த முடியாது. அதனால் தான் எத்தனை எளிதாக ஈர்க்கப் பட்டமோ, அத்தனை எளிதாக சலிப்பும் ஏற்படுகிறது.

டிஜிட்டலில் தங்களுக்குப் பிடித்த எல்லாத் தகுதிகளுடன் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு, அதன் பின் நிஜ வாழக்கையில் அவர்களுடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் மீது மிகப்பெரிய ஒரு அதிருப்தியை அந்த இருவருக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது. Virtual ல் மிகப்பெரிய கற்பனைகளை பார்க்க தெரிந்த கண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் அவர்களுடைய கற்பனைகளுக்கு தீனி போட முடியாமல் இருக்கும் போது, உடனே அந்த விஷயங்களை கானல் நீராக அந்தக் கண்கள் மாற்றி மிகப்பெரிய ஏமாற்றங்களை அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர்.

உலகம் டிஜிட்டலுக்கு மாறுகிறது என்றால், மனித உணர்வுகளும் டிஜிட்டலுக்கு மாறாது. டிஜிட்டலில் ஏற்படும் சராசரி வாழக்கைக்கு அப்பாற்பட்டு ஏற்படும் உறவுகளுக்கும், காதலுக்கும் தங்களை முறையாக, நேர்த்தியாக பழகிக் கொள்ள வேண்டிய அவசியம் மிகவும் தேவையாக இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடமாக இருக்கிறது. அதை கையாள்வதுதான் இங்கு உள்ள அனைவருக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button