குமாருக்குத் திடீரென விழிப்பு வந்து விட்டது. எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இது வழக்கமாக தான் படுக்கும் பெயிண்ட் கடை வாசலில்லையே எனத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தான்.
அது ஒரு நீண்ட, சிமெண்ட்டால் போடப்பட்ட, சிமெண்ட் அட்டை வேயப்பட்ட, பக்தர்கள் இளைப்பாறுவதர்கான கொட்டகை.
தனது அருகில் படுத்து இருந்தவரைப் பார்த்தான். காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்தார். பக்தர்கள் யாரோ கொடுத்த கம்பளியொன்றைப் போர்த்தியிருந்தார். அதுவும் கலைந்து கிடந்தது. அவரைப் போல இன்னும் பலர் அங்கே தூங்கிக் கொண்டிருந்ததை கவனித்தான். எங்கு பார்த்தாலும் காவி உடையணிந்த சாமியார்கள் படுத்திருந்தனர்.
அப்போதுதான் அவனுக்கு சிவப்பிரகாசம் ஞாபகம் வந்தார். எழுந்து அவரைத் தேடஆரம்பித்தான். எல்லோரும் காவி வேட்டியுடனும், தாடியுடனும், கழுத்தில் ருத்ராட்சத்துடனும் இருந்ததால், அவனால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை. தூக்கம் சரியாக இல்லாததால், அவனுக்கு தலை வேறு சரியாக வலித்தது. டீ குடித்தால் தேவலாம் எனத் தோன்றியது. மணி என்ன ஐந்து இருக்குமா என அவனையே கேட்டுக் கொண்டான். அவன் கொண்டு வந்த நோக்கியா பட்டன் போனை கைப்பையில் இருந்து எடுக்க பயம். யாராவது எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? போனை அணைத்து கைப்பையில் அடியில் ஒளித்து வைத்து இருந்தான்.
சிவப்பிரகாசம் எங்கே போயிருப்பார்? அப்போதுதான் அவனுக்குத் தான் இருப்பது திருவண்ணாமலை என ஞாபகம் வந்தது. தான் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்பதும் நினைவுக்கு வந்தது.
கன்னங்குறிச்சியில் முருகன் பெயிண்ட் கடை வாசலில்தான் படுக்கை. பகல் நேரத்தில் பக்கத்திலிருக்கும் மாரியம்மன் கோவில் வாசல் அல்லது சுடுகாடு. ஏதாவது கிடைத்தால் சாப்பாடு. இப்போதெல்லாம் மாசக்கணக்கில் சாப்பாடு இல்லாமல் உடம்பு பழகிவிட்டது குமாருக்கு.
அவன் செய்யாத வேலையில்லை. கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது, “வக்கீலு, உனக்கு காசு வேணுமா? எங்கூட வா. ஐந்நூறு ரூபாய் வாங்கித் தர்றேன்” என கட்டிட மேஸ்திரி கூப்பிடுவார். செங்கல் தூக்குவது, கலவை அள்ளித் தருவது என அவருக்கு எடுபிடி வேலை செய்தால் போதும். ஆனால், சேலம் வெய்யிலில் உடம்பு தாங்காமல், வேர்வை ஊற்றும். கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். எப்படியோ ஐந்து மணி வரை சமாளித்து விட்டால், நானூறோ, ஐந்நூறோ, மேஸ்திரி கமிஷன் போக கையில் கிடைக்கும். கையில் காசைப் பார்த்ததும் கால்கள் நேராக சாராயக் கடையை நோக்கிதான் நடக்கும். ஓல்டு மாங்க் ரம் குமாருக்கு மிகவும் பிடித்த சரக்கு. குறைந்த விலையில் நிறைய போதை. ஆனால், பல கடைகளில் போலி சரக்கு விற்கிறார்கள். போதையே ஏறுவதில்லை.
சரக்கு உள்ளே போனால், குமாரைக் கையில் பிடிக்க முடியாது. ஐந்தாறு மொழிகள் பேசுவான். கல்லூரி நண்பர்களுக்குப் போனைப் போட்டு பேசிக்கொண்டே இருப்பான். அவர்களும் இவன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்பார்கள். எல்லை மீறிச் போகும் போது, நம்பரை பிளாக் செய்து விடுவார்கள்.
சிவப்பிரகாசம் அடிக்கடி திருவண்ணாமலை சென்று வருபவர். ஒரு முறை அம்மன் கோவில் வாசலில் அமர்ந்திருந்த, இவன் நிலைமையைப் பார்த்து விட்டு, “ஒன்னய திருவண்ணாமலையில கொண்டு போய் வுட்டர்றன். அதுக்குக்கப்புறம் ஒன்னோட பாடு” என்றவர் ஒரு நாள்,”குமாரு, நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு ரெடியா இரு. திருவண்ணாமலை போறோம்” என்றார்.
அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, ஐந்தாம் நம்பர் பிடித்து அஸ்தம்பட்டி சென்று, அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட்டிற்கு பேருந்து ஏறினார்கள். ஆறு மணியாகி விட்டது. ஒரு டீ குடித்து விட்டு, நின்றிருந்த திருவண்ணாமலை பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். நாலரை மணி நேரப் பயணத்தில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே இறங்கிக் கொண்டனர். குமார் அதுவரை திருவண்ணாமலை வந்ததில்லை. அவனது அப்பா, காஞ்சிபுரம் ஸ்டேஷனில் ஏட்டாக இருந்தபோது, இந்த வழியாக சென்றிருக்கிறான்.
மதிய வெயிலிலும் பலர் கிரிவலப் பாதையில் நடந்து கொண்டிருந்தனர். சிவப்பிரகாசம் தயவில் எப்படியோ சாப்பிட மதிய உணவும் , தங்க இடமும் கிடைத்தது. இரவு வரை என்ன செய்வது என்று தெரியவில்லை. சிவப்பிரகாசம் அவனுக்கு சில விஷயங்களைச் சொல்லித் தந்தார். “காசு வேணும்னு கூட கேக்க வேணாம். ஆளுங்களப் பார்த்து, ‘ஓம் நமச்சிவாய’ அப்டின்னு சொல்லு போதும். அவங்களே காசு தருவாங்க”.
அப்படிச் சொன்னவர்தான், காலையில் பார்த்தால் காணவில்லை. அவனுக்கு அருகில்தான் படுத்திருந்தார். அவர் சொன்னது போலவே, வருபவர்களைப் பார்த்து “ஓம் நமச்சிவாய” என்று சொன்னான். ஆனால், யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த சாமியார்களுக்கு விழும் சில்லறை, இவனுக்கு மட்டும் விழவேயில்லை.
அவனுக்கு அவன் அணிந்திருந்த உடை மேல் சந்தேகம் வந்தது. அவன் அணிந்திருந்தது ஒரு சட்டை, பேண்ட். காலில் சற்றே கிழிந்திருந்த கட் ஷு. பக்கத்தில் ஒரு ஷோல்டர் பை. அதில் அணைக்கப் பட்ட நோக்கியா பட்டன் போன். ஒரு துண்டு, ஜட்டி, பனியன். கண்களில் கண்ணாடி. இது ஒரு சாமியார் தோற்றத்தைத் தரவில்லை என்பதை ஒரு வாரம் கழித்தே தெரிந்து கொண்டான்.
கிரிவலப் பாதையில் இரவு பகல் என்றில்லாமல், எப்போதும் யாராவது நடந்து கொண்டே இருந்தார்கள். காலை வேளைகளில் மடங்களில் தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் சைக்கிளில் செல்வார்கள். புதிதாக வருபவர்கள் நடப்பார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினான். ஆனால், பைசா கிடைக்கவில்லை. நிறைய தெலுங்கு பேசுபவர்கள் கிரிவலம் சென்றார்கள். இவனைப் பார்த்த யாரும் காசு தரவில்லை. பௌர்ணமி நாட்களில் கால் வைக்க இடமில்லாமல் ஜனம் நடந்து கொண்டே இருக்கும்.
சாப்பாட்டிற்கு குறையேதுமில்லை. யாராவது ஒருவர் தந்து கொண்டே இருந்தார்கள். பல் துலக்க வேப்பம் குச்சிகளை ஒடித்து சேகரித்துக் கொண்டான். ஆங்காங்கே பாத்ரூம்கள் இருந்தாலும் விஷேச நாட்களில் மட்டுமே திறக்கப்படும். காலையில் விரைவாக எழுந்து, புதர் மறைவுக்குச் சென்று வரவேண்டும். கீழே கிடந்த ஒரு தண்ணீர் கேன் இந்த மாதிரி நேரங்களில் உபயோகப்பட்டது. தூக்கம்தான் பாடாய்ப் படுத்தியது. இரவு நேரங்களில் மிகவும் குளிராக இருந்தது. அவனிடம் இருந்த துண்டு அந்தக் குளிரிடமிருந்து காப்பதற்குப் போதவில்லை. மழை வருகையில் மேற்கூரை இருப்பதால் தப்பிக்கலாம். ஆனால், குளிர் பிய்த்து எடுத்து விடும்.
தூங்காத ஒரு இரவில் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்தது.
***
குமார் எங்களுடன் என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவன். அரியானூருக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரி அது. சேலம் சித்தேஸ்வரா ஸ்டாப்பில் இருந்து பழைய பேருந்து நிலையம் வந்ததும், எல்லோரும் சேர்ந்து கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் ஒன்றாக பயணிப்போம்.
கல்லூரியில் அவன் ஒரு ஹீரோ. மிகச் சிறந்த நடனக் கலைஞன். பலூன் பேகி பேண்ட்டுடன், அவன் டிஸ்கோ ஆடினால், பெண்கள் மயங்குவர். எல்லா விழாக்களிலும் அவனது நடனம் இருக்கும். மைக்கேல் ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனமும் அருமையாக ஆடுவான். விலையுயர்ந்த ஆடைகள் அணிவான். காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ. எப்போதும் லேட்டஸ்ட் ஃபேஷன். கண்களில் பவர் கிளாஸ்.
நாங்கள் ஒரு தனி குரூப்பாகவே சுற்றுவோம். பெரும்பாலும் கல்லூரி எதிரில் இருந்த டீக்கடையில்தான் எங்கள் பொழுது கழிந்தது. கையில் காசிலிருந்தால் பில்டர். மாதக் கடைசியில் கணேஷ் பீடி. கையைச் சுடும் வரை கணேசன் எல்லோரிடமும் வரிசையாக வருவான். ஒவ்வொருவருக்கும் ஒரு இழுப்பு. அதே செல்வம் டீக்கடையிலேயே கணக்கு வைத்து, மதியம் புரோட்டா சாப்பிடுவோம். செல்வம் எப்போதும் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பான். “நேத்து நைட்டுதான், சேர்மன் பேசுனாரு. என்கிட்ட ஒரு ஐடியா கேட்டாரு” என்பான். எப்போதும் போதையில் இருப்பதால், கண்களிரண்டும் கோவைப் பழமாய் சிவந்திருக்கும். நாங்கள் எங்களுக்குள், ‘டுபாக்கூர் செல்வம்’ என்றுதான் அழைப்போம். செல்வம் தனது மனைவியைப் போதையில் அடித்து விடுவான். இப்படி அடிவாங்கியே அவளுக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டது. அதனாலேயே அந்த டீக்கடையை ‘செவுடிக்கடை’ என்றழைப்போம்.
செமஸ்டர் தேர்வு சமயங்களில், வெளியூரியிலிருந்து இந்தக் கல்லூரிக்கு வந்தவர்கள் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்று விடுவோம். தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மொத்த படிப்பும். அப்போது அவர்கள் சாப்பிடும் ஐயர் கடையில் கணக்கு வைத்து சாப்பாடு. அவரைப் போல சன்னமாக இந்த உலகில் வேறு யாராலும் தோசை வார்க்க இயலாது. பத்து தோசை சாப்பிட்டாலும் வயிறு நிரம்பாது. சில சமயங்களில், தோசை மாவு இல்லாமல் ரேஷனில் எல்லோருக்கும் இரண்டு தோசை.சில சமயங்களில் குமாரும் குரூப் ஸ்டடிக்கு வருவான்.
அவன் அப்பா கோவிந்தன் அப்போது சேலத்தில் காவல்துறை ஆய்வாளராக இருந்தார். சேலம் சித்தேஸ்வரா நிறுத்தத்தில்தான் வீடு. அழகான கண்ணன் வைத்த வீடு.
பல முறை நானும் அவனும் தேர்வுகளுக்கு ஒன்றாக அவனது வீட்டில் படித்திருக்கிறோம். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவனது அம்மா என்னை நன்றாக கவனித்துக் கொள்வார். அருமையான உணவு மற்றும் அவ்வப்போது டீ தருவார். குமாரின் அப்பாவை சில முறைகள் மட்டுமே சந்தித்திருக்கிறேன். கல்லூரியின் கடைசி ஆண்டில் நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு, காரம், காபி கொடுத்தார். அவர் இந்த பார்ட்டியை, “ஒரு SKC அரேஞ்ச் பண்ணிடலாம்” என்று சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.
உள்ளூரில் சித்தேஸ்வராவில், தவறான காரணங்களுக்காக, சேகர் சார் மிகவும் பிரபலம். அடிக்கடி அவரிடம் உள்ளூர் பிரச்சினைகளுக்காகப் பஞ்சாயத்து செல்லும். அவரும் காவல்துறைக்குச் செல்லாமல் பிரச்சினையை முடித்துத் தருவார். ஒரு குறிப்பிட்ட தொகை கைமாறும்.
அப்போது குமா ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால், அவள் இவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. குமாரைப் போலவே வேறு ஒரு கல்லூரி மாணவனும் அப்பெண்ணைக் காதலிக்க, பிரச்சினை அடிதடியில் முடிந்தது. இரு தரப்பும் சேகர் சாரிடம் செல்வது என தீர்மானித்து அவரிடம் பஞ்சாயத்து சென்றது. “ஒங்க ரெண்டு பேர்ல யாரு மேல் அந்தப் பொண்ணுக்கு லவ்வு” எனக் கேட்க, இருவருமே ஆஃப் ஆனார்கள். “ஏண்டா, ஒன் சைடு லவ்வா? இதுக்குப் போயா ஒங்களுக்குள்ள அடிச்சிக்கிறீங்க. போயி ஒழுங்கா படிக்கிறதப் பாருங்க” என்றார். குமாரின் குடும்பம் பற்றி விசாரிக்க, அவனது அப்பா காவல் துறை ஆய்வாளர் என்றதும், சேகர் சாருக்கு, இவனை விடக் கூடாது என்று தோன்றியது.
அப்போது சந்தனக் கட்டை கடத்தல் மிக லாபகரமான தொழிலாக இருந்தது. சேகர் சாரின் கையும் அதிலிருந்தது.குமாரும் இது ஒரு பெரிய ஹீரோயிஸம் என எடுத்துக் கொண்டான். பல நாட்கள் கல்லூரிக்கு வந்தபின் காணாமல் போய் விடுவான். சில சமயங்களில் தொடர்ந்து பல நாட்கள் கல்லூரிக்கு வராமலேயே இருந்தான். திடீரென ஒரு நாள் கல்லூரிக்கு வந்து, தனது சாகசங்களைச் சொல்வான். தான் ஒரு மிகப் பெரிய தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டிருந்தான். கையில் காசு தாராளமாகப் புழங்க ஆரம்பித்ததும், குடிக்க ஆரம்பித்தான்.
கல்லூரி முடிந்தபின் அவனைப் பற்றி செய்தி எதுவும் தெரியவில்லை. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, எனது வக்கீல் நண்பன் வழியாக, அவன் பிஎல் படிப்பது தெரிய வந்தது. இடையில் அவன் காதலித்த பெண் மஞ்சுளாவிற்குத் திருமணம் ஆகி, சிறிது காலத்தில் அவளது கணவன் ஒரு விபத்தில் இறந்து விட்டான். மஞ்சுளா விதவையானது குமாரால் தாங்க முடியாமல், அவளிடமே சென்று தைரியமாக அவளைத் தான் இன்றும் காதலிப்பதாகவும், விருப்பமிருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்ல, அவளும் சம்மதம் தெரிவித்து விட்டாள். ஒரு கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. குமாரின் பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று விட்டார் அவனின் அப்பா.
குமாருக்கு நிரந்தர வருமானம் ஏதுமில்லை. வக்கீல் என்னும் பெயரில் சில கட்டப் பஞ்சாயத்துகள் செய்து சில்லறை பார்த்தான். ஆனால், அது குடிப்பதற்கே போதவில்லை. அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், அந்தப் பெண், “என்னால் உன்னுடன் வாழ முடியாது. நாம் பிரிந்து விடலாம்” எனக் கூறி, திருமணத்தை முறித்துக் கொண்டது.
குமாரின் குடி அதிகமானது. இப்போது அவனுக்கு தங்குமிடமும் ஒரு பெரிய பிரச்சினை ஆனது. கல்லூரி ஹாஸ்டல், நண்பர்களின் அறை எனத் தங்க ஆரம்பித்தான்.
குமார் ஒரு கேஸ் விஷயமாக அடிக்கடி கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்குச் சென்று வர வேண்டியிருந்தது. அப்போதுதான், அங்கு வேலை செய்த பெண் கான்ஸ்டபிள் காஞ்சனா பழக்கமானது.
இருவருக்கும் பழக்கமாகி ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே சென்றிருக்கிறது. மனைவியின் காசில் தினமும் குடிக்க ஆரம்பித்தான். அவ்வப்போது சின்னச் சின்ன பஞ்சாயத்துகள் செய்ய ஆரம்பித்தான். அவளுக்கு இது சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. சண்டை பெரிதாகி, காஞ்சனாவும் கைவிட்டாள். அப்போதிலிருந்து கன்னங்குறிச்சி சுடுகாடு, அம்மன் கோவில், பெயிண்ட் கடை வாசலில் உறக்கம், கிடைத்த வேலையைச் செய்வது, மூக்கு முட்டக் குடிப்பது, கிடைக்கும் போது சாப்பிடுவது என குமாரின் வாழ்க்கை சின்னாபின்னமானது. சில சமயங்களில், சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலையையும் செய்திருக்கிறான். எண்பத்து மூன்று பிணங்கள் எனக் கணக்கும் வைத்திருக்கிறான்.
*****
காலை ஐந்து மணிக்கு மேல்தான் குமாருக்குத் தூக்கம் வந்தது. ஒன்பது மணி வரை நன்றாகத் தூங்கியவன், சூரிய ஒளி சுள்ளென்று கண்களில் பட, திடுக்கிட்டு எழுந்தான்.
இன்றுடன் திருவண்ணாமலைக்கு வந்து ஏழு நாட்கள் ஓடி விட்டது. இதுவரை சாப்பாட்டிற்கு குறையேதுமில்லை. ஆனால், இவனுக்கு ஒரு முறை கூட காசு யாரும் தரவில்லை. அவனுக்கு பயம் வர ஆரம்பித்தது. இதற்கு மேல் இங்கு இருக்க வேண்டாமென முடிவெடுத்து, பஸ்சிற்கு காசின்றி, பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
வழியில் வேனில் சென்ற பக்தர்கள் எல்லோருக்கும் கம்பளி கொடுத்தார்கள். தனக்கு கொடுப்பார்களா என அவனுக்கு சந்தேகம் வந்தது. “எனக்குத் தருவீங்களா சாமி?” என்றான். கம்பளி கொடுத்துக்கொண்டு இருந்தவர், ”வாங்கிக்கிங்க சாமி” என ஒரு கம்பளியை எடுத்துக் கொடுத்தார். குமாரும் வாங்கி பையில் வைத்துக் கொண்டான். அவனுக்கு மிகவும் பசியாக இருந்தது. அப்போது ஒருவர் தள்ளு வண்டியில், மோரிஸ் பழங்கள் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். “சாமி, ரொம்ப பசிக்குது. ஒரு பழம் கெடைக்குமா?. ஆனா, கையில் காசில்லை” என்றான். “அதலானென்ன சாமி, இந்தாங்க சாப்பிடுங்க” என்று இரண்டு பழங்களைக் கொடுத்தார். நடந்து கொண்டே ஒரு பழத்தைச் சாப்பிட்டு முடித்து மற்றொன்றை பையில் வைத்துக் கொண்டான்.
அரைமணி நேரம் கழித்து, பேருந்து நிலையம் வந்ததும், அருகிலிருந்த அரசு சாராயக் கடையை நோட்டமிட்டான். இந்த பத்து நாட்களில் அவனுக்கு அருகில் அமர்ந்து இருந்த, காவியுடை அணிந்திருந்த சாமிகள் ஐந்து பேரும் சாதா உடையில், குடித்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரம் அப்படியே நின்றான். ஒருவனிடம் காசு இல்லை என்றதும், மற்றவர்கள் அவனுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து விட்டு, “காசு வசூலானதும் குடுத்துடு” என்றார்கள். அவர்களிடம் காசு கேட்கக் கூச்சப்பட்டு, அவனிடமிருந்த நோக்கியா போனை விற்கத் தீர்மானித்து, அருகிலிருந்த ஒரு செல்போன் கடையில் ஏறி, “நான் சேலம் போகனும். கையில காசு இல்லை. இந்த போன வச்சிட்டு ஏதாவது காசு குடுங்க சார்” என்றான். கடைப் பையன் இவனை ஏற இறங்க பார்த்து விட்டு, ”அந்த மூலையிலிருக்கிற கடையில கேளுங்க” என்று அனுப்பி வைத்தான். அந்தக் கடையிலும் அதே வசனம். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால், பல கடைகளுக்கு விடுமுறை. இவனை ரொம்ப நேரமாகப் பார்த்த ஒருவன், “ரயில்ல ஏறிப் போயிடுங்க. இங்கிருந்து அரை மணி நேரம் நடக்கணும்” என்றான். அவனிடம் வழி கேட்டு விட்டு, நடக்க ஆரம்பித்தான்.
முக்கால் மணி நேரம், வெய்யிலில் பசியோடு நடந்து, புகைவண்டி நிலையத்தை அடைந்த பிறகுதான் தெரிந்தது, சேலத்திற்கு அன்று நேரடி ரயில் இல்லையென்பது. பிளாட்பாரத்தில் ஒருவரிடம் கேட்டபோது, “விழுப்புரம் போயி, அங்கிருந்து வேற வண்டி மாத்திக்குங்க” என்றார்.
விசாரித்துக் கொண்டு சென்று, முன்பதிவு இல்லாத பெட்டியில், கழிவறைக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.
விழுப்புரத்தில் இறங்கி, சேலம் வண்டியில் ஏறினால், முன்பதிவு இல்லாத பெட்டியிலும் கால் வைக்க முடியாத அளவுக்கு கும்பல். கழிவறைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அருகில் இருவர் அமர்ந்திருந்தனர். பேச்சு வாக்கில், அவர்கள் வேலூர் பக்கம் என்று தெரிந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவர்கள் திருவண்ணாமலை சென்று வருவார்கள்களாம். “என்ன சார், ஒரு காவி வேட்டி, காவித்துண்டு இல்லையா? ஒங்கள பேண்ட் சர்ட் கண்ணாடியோட பார்த்தா, எவன் சார் காசு போடுவான்?” என்றார் ஒருவர். இதையே தொழிலாகச் செய்கிறார்களாம். கையில் நல்ல காசாம். வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொண்டனர். வண்டி சேலம் சந்திப்பிற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது. டிக்கெட் இல்லாமல் வந்ததால், முன் வாசல் வழியாகச் செல்லாமல், வந்த வழியாகச் சென்று, தண்டவாளங்களைக் கடந்து, ஸ்டேஷன் தாண்டி கொஞ்ச தூரத்தில் மெயின் ரோட்டிற்கு வந்தான். அவனுக்கு எங்கு செல்வது என்று குழப்பமாக இருந்தது. கன்னங்குறிச்சிக்கே மீண்டும் செல்வது என முடிவெடுத்து, அங்கிருந்த ஷட்டர் சாத்தப்பட்ட ஒரு கடையின் முன்பு துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு, கொண்டு வந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டான். ஐந்து மணிக்கு எழுந்த போது, அஸ்தம்பட்டி செல்லும் முதல் பேருந்து தயாராக இருந்தது. ஏறிக்கொண்டு நடத்துநரிடம், “இப்பதான் திருவண்ணாமலையில் இருந்து வர்றன். கையில காசு இல்ல. அஸ்தம்பட்டியில எறக்கி உட்டுரு” என்றான். அதற்கு அவன், “ஏன் குமாரு இப்படிப் பண்ற? சரி, அஸ்தம்பட்டியில இறங்கிக்கோ” என்றான்.
அஸ்தம்பட்டியில் இறங்கியதும், ஐந்தாம் நம்பர் பேருந்து வந்தது. ஏறிக்கொண்டான். நடத்துநர் தெரிந்த பையன். அழுக்கான அவன் உடையைப் பார்த்து விட்டு, “என்ன குமாரு, நைட்டு செம சரக்கா? போதையில எங்கனா உழுந்துட்டியா, சட்டையெல்லாம் ஒரே அழுக்கா இருக்குது?” என்றான். ‘சாப்பிட்டே ரொம்ப நேரம் ஆச்சுடா’ என நினைத்தபடியே, ”அட நீ வேற. இப்பதான் திருவண்ணாமலையில் இருந்து வர்றன். கையில காசு இல்ல. என்னய கன்னங்குறிச்சியில எறக்கி உட்டுரு” என்றான். அவன், “சரி குமாரு” என்றான்.
கன்னங்குறிச்சி வந்ததும் இறங்கிக் கொண்டான். மீண்டும் அவனுக்கு எங்கு செல்வது எனத் தெரியவில்லை. பெயிண்ட் கடைக்கு வேணாம், மாரியம்மன் கோவில் வாசலுக்குப் போவோம் எனத் தீர்மானித்து, கொஞ்ச தூரம் நடந்து கோவில் வாசலை அடைந்து, உள்ளே சென்று ஒரு மூலையில் கீழே அமர்ந்தான்.
அவனையும் அறியாமல், கண்ணாடியை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி, வாய் விட்டு அழ ஆரம்பித்தான்.