
விடைபெற்ற பின்
வாழ்வின்
மொத்தங்களும்
இச்சிறு திரியில்
வழியும் ஒளிக்கெனவே
ஒற்றை மலரின்
ஈரத்துக்கெனவே
இன்னும்
பொருந்திய உதட்டில்
ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு
நெடுநேரம் வெளியில்
நிறுத்திய பின்
உள் அழைத்துக்கொண்ட
கனிவுக்கு
தெறித்த கடைசி பட்டனுக்கு
விம்மும் இதயத்தின்
ஆற்றாமைக்கு
நீண்ட விரல்களுக்கு
திண்தோளுக்கு
பற்றியே கிடந்த கரங்களுக்கு
கடைவாயில் வழிந்த ஈரத்துக்கு
ஏறிக் கிடந்த உன்மத்தத்துக்கு
கொல்ல நினைத்த மூர்க்கத்துக்கு
பாவனைகளற்ற தலைதடவுதலுக்கு
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
சேர்த்தணைத்த ஆதுரத்துக்கு
அன்பின் நெகிழ்தலுக்கு
அமர்த்தி வைத்துக்கொண்ட மடிக்கு
கடந்த தொலைவிற்கு முகர்ந்த வாசத்துக்கு
சுட்டெரித்த மூச்சுக்கு
கொதிப்பணைத்த மேனிக்கு
முல்லைச் சரத்திற்கு
பாதி அருந்திய காபி கோப்பைக்கு
எதிர்பாராத ஒரு வாய் உணவு கவளத்திற்கு
நடுநிசிப் புரளலில் தேடும் தவிப்புக்கு
மண்டிக் கிடக்கும் மயிர்களடர்ந்த மார்புக்கு
சூட்டுக் கதகதப்புக்கு
இதற்கு பிறகும் நீள்கிறதா ஒரு வாழ்வு?
****
பிழைத்திருத்தல்
ஒரு விதி மீறலென
அறிந்தது முதல்
மரணத்தின்
தகர விளிம்பை
அழுத்தி நக்குவதில்
கிழித்து உவகையடையும் செந்நா.
எட்டி நின்ற எச்சரிக்கைக்கு
கெக்கலி காட்டுவதின்
மீதான விருப்பம்
கூடிக்கொண்டே செல்லும்
முடிவிலி.
வளைவுகளில்
இணையும் பின்
பிரியும் சந்திப்பில்
சரியாய் தைத்துவிட்ட
ஊசியின் முனையில்
இருப்பது
‘சரியாப் போயிரும்’
என சிக்கல் மிகுந்த
நூற்கண்டு.
அதை வெட்டி வெட்டி
சிறுதுண்டுகளாக்கியபடி
மறுபடியோர்
மீறலுக்கு
வழிபார்த்திருப்பதே
இவ்வாழ்வு.
****
கிடைக்கும்போதல்ல
இழக்கும்போதே
ஒளிர்கிறது
எது?
எதுவாயினும்.
*******