இணைய இதழ்இணைய இதழ் 51சிறார் இலக்கியம்

சயின்டிஸ்ட் ஆதவன்; 7 – சௌம்யா ரெட்

சிறார் தொடர் | வாசகசாலை

டீ கப்ல ஒரு போன்

ரு நாள் சாயங்காலம் ஆதவன் மற்றும் மருதாணியும் அவர்களது அம்மாவும், விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்தனர். அப்போது தீபக் மற்றும் பிரதாப் போன் செய்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆதவன் வெளியே வந்தவுடன் தீபக் வேகமாக ஓடி வந்தான். 

தீபக்: டேய், நாங்க ரெண்டு பேரும் போன் செஞ்சிருக்கோம்டா. எப்படி இருக்குனு பாரு. 

அதைப் பார்த்தால் இரண்டு டீ கப்புகள் மட்டும்தான் இருந்தன. நடுவில் ஒரு நூல். 

ஆதவன்: டீ கப்ல போனா?  

தீபக்: ஆமாடா! மெதுவா பேசினாலே போதும். நல்லா கேக்குது.  

ஆதவன்: அப்படியா? 

தீபக்: நம்புடா. நான் அங்க போய் நிற்கிறேன். நீ இத காதுல வச்சுக்கிட்டு தள்ளிப்போய் நில்லு.

என்று கூறியபடி ஓடினான் தீபக்.

டீ கப்பை வாயில் வைத்து ஒரு பக்கம் தீபக் பேசியது, மறுபக்கத்தில் இருந்த ஆதவனுக்குக் கேட்டது.

ஆதவன் சந்தோஷத்தில் துள்ளினான். அதற்குள் டியூஷனுக்கு நேரமாகி விட்டதென்று தீபக், பிரதாப் இருவரும் ஓடி விட்டனர். 

ஆதவன்: அம்மா, அம்மா நம்மளும் இதே மாதிரி செய்யலாமா? 

ஆதவன் அம்மா: செய்யலாமே!

அமுதா, மித்ரன் இருவரும் கொஞ்ச நேரத்தில் விளையாட வந்தனர். எல்லோரும் சேர்ந்து அந்த டீ கப் போனை செய்வதாக முடிவெடுத்தனர்.

ஆதவன் அம்மா போன் செய்யத் தேவையான பொருட்களை கொண்டு வந்தார்.

இரண்டு கப்புகளிலும் ஓட்டை போட்டான் மித்ரன். அதில் ஒரு நூலை இழுத்துக் கட்டினார்கள்.

மித்ரனும் மருதாணியும் இரு பக்கமிருந்தும் பேசிப் பார்த்தனர். சரியாகக் கேட்கவில்லை. 

ஆதவன்: டேய் அவங்க தூரமா நின்னு பேசினங்கள்ல? 

மித்ரன்: எவ்ளோ தூரம்டா?

ஆதவன் அவர்கள் நின்ற இடத்தைக் காட்டினான்.  

மித்ரன்: டேய் அவ்ளோ தூரம்லாம் நின்னா நூல் அறுந்துடும் 

ஆதவன்: முடிஞ்சளவு தள்ளி நின்னு பாக்கலாம். 

முடிந்தளவு விலகி நின்றனர் மித்ரனும் மருதாணியும். நூல் அறுந்து விடுவது போல் இருந்தது. 

மித்ரன்: போதுமாடா. 

ஆதவன்: போதும் போதும். இதுக்கு மேல போனா நூல் அவ்ளோதான். 

மித்ரன்: மருதாணி, நான் பேசுறேன். கேக்குதானு பாரு. 

மருதாணி: நான் தான் முதல்ல பேசுவேன் 

மித்ரன்: நான் பேசறேன் மருதாணி ப்ளீஸ்… ப்ளீஸ் 

மருதாணி (சிணுங்கிக் கொண்டே): ம்ம் சரி பேசு

மித்ரன் டீ கப்பை வாயருகே வைத்து மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.  

மித்ரன்: மருதாணி. மருதாணி. கேக்குதா. 

மருதாணி: ஹேய்ய்ய்ய்… சூப்பரா கேக்குதுடா.

மருதாணி குதித்தாள். அவர்களே ஒரு போன் செய்து பேசியது எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

மித்ரன், அமுதா, மருதாணி, ஆதவன் நால்வரும் மாறி மாறிப் பேசி மகிழ்ந்தார்கள்.

கொஞ்ச நேரம் விளையாடியவர்கள் தெருவில் இருந்த மற்ற சிறுவர்களுக்கும் போன் செய்வதைப் பற்றிக் கூறினார்கள். எல்லோரும் போன் விளையாட்டு விளையாடினர்.

குட்டிப் பாப்பா மருதாணிக்கு ஒரு சந்தேகம் வந்தது. 

மருதாணி: அம்மா… டீ கப்புலயே கேக்கும்னா நாம ஏன்ம்மா போன்லாம் வச்சிருக்கோம். 

அம்மா: எல்லாரும் தனித்தனியா நூல் கட்டினா, ஊர் முழுக்க நூல்தானே இருக்கும். தூரமா இருக்கிறவங்க கிட்ட பேச எவ்ளோ தூரம் நூல் தேவைப்படும். போன்ல அப்படி எதுவும் தேவையில்லை. அதனாலதான்.  

மருதாணி: ஆமால்லம்மா. அத நான் மறந்தே போய்ட்டேன்.

திரும்பவும் அவள் பேச வேண்டிய ரவுண்ட் வந்ததும் பேச ஓடிவிட்டாள்.

இப்போது ஆதவன் வந்தான். 

ஆதவன்: அம்மா, இது எப்படிம்மா வேலை செய்யுது. 

அம்மா: ஒரு கப்புக்குள்ள நீங்க பேசுறீங்கல்ல. அப்போ நம்ம குரல் அதிர்வலைகளா கடத்தப்படுது. நூல இழுத்துப் பிடிச்சிருந்தா இன்னொரு பக்கத்துக்கு போய்ச் சேரும். அந்தப் பக்கம் இருக்குற கப் ஸ்பீக்கர் மாதிரி அந்த அதிர்வுகள சத்தமா மாத்தும். 

ஆதவன்: ஆமா. முதல்ல நூல் லூசா இருந்தப்போ கேக்கல. 

அம்மா: ஆமா. நூல் லூசா இருந்தா சரியா அதிர்வாகாது. 

ஆதவன்: ம்ம்ம். இப்படியே எவ்ளோ தூரம் பேச முடியும்ம்மா. நம்ம ஊர் வரைக்கும்? 

அம்மா: ஹாஹா. தெரு முக்கு வரைக்கும் பேசலாம். 100 மீட்டர் வரைக்கும்தான் கேக்கும். 

ஆதவன்: அதுக்கு மேல அதிர்வ சரியா கடத்த முடியாதாம்மா? 

அம்மா: ம்ம். சரியா சொன்ன.

ஆதவன்: ம்ம் 

அம்மா: இதையே தண்ணிக்குள்ள பண்ணா இன்னும் நல்லா கேக்கும்.

ஆதவன்: நிஜமாவாம்மா.

அம்மா: ஆமாடா. காத்த விட தண்ணீல அடர்த்தி அதிகம். Solid medium – உம் அப்படித் தான். அடர்த்தி அதிகம். இன்னும் நல்லா கேக்கும். 

ஆதவன்: சூப்பர்ம்மா.

அடுத்து ஆதவன் ரவுண்ட் வந்தது. அவன் ஓட, அடுத்து அமுதா வந்தாள். மீண்டும் விவாதம் தொடர்ந்தது.

(தொடரும்) 

sowmyamanobala@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button