அகோரத்தின் பசி
உங்கள் தனிமையை
எங்கே தொலைப்பதென
அறியாமல்
அங்கே தொலைத்திட வந்தீர்கள்
பலநாட்களாக
வெறுமையோடு
கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன்
நீங்கள் அடித்து
விளையாடும்
அழைப்பு மணி
உடலெங்கும் ஊறும்
புழுவின் நமைச்சல்
வெறுமையும்
தனிமையும்
அகோர உருவமெடுக்கும்
புயல் என்பதை
அப்போது வரை
நீங்களும்
நானும் அறியவில்லை.
***
மெய் ரகசியங்கள்
எங்கோ இசைக்கும்
பக் பக் ஒலியை
காற்றின் விரல்கள்
அழைத்து வந்திருந்தன
எனக்குள்ளிருக்கும்
தூரிகைக்காரன்
உருவத்தை வரைந்து
பரிசளித்துச் செல்கிறான்
இப்போது என் முற்றத்தில்
புறா
பறந்துகொண்டிருக்கிறது
அவ்வவ்போது
பெயர் தெரியாத
ஒலியை
வரைய முடியாத
தூரிகைக்காரனை
முறைத்தபடி
சில பறவைகள்
கடந்து செல்கின்றன
பறவைகளோடு
வாழ வரமளித்துள்ளது
இந்த அதிகாலை.
***
துயரத்தின் வடிவம்
அவள் பேசப் பேச
கசிகிறது
சாரங்கி
அந்த இசை
துயரத்தின்
ஆழ்கடலுக்குள்
அழைத்துச் செல்கிறது
அந்த
இசையை
எப்படி
கலைப்பதென நானும்
எப்படி நிறுத்துவதென அவளும்
அறியாப் பொழுதில்
யாரேனும்
அடிக்கும்
காலிங்பெல்லில்
தொலைபேசியின்
ஒலியில்
மற்றொரு இசை
பிறக்கக் கூடும்
ஆனாலும்
அவளது சாரங்கியின்
நிழல்
பறவையைப் போல்
அசைந்து கொண்டிருக்கிறது.
***
காலத்தின் பயணச்சீட்டு
வானக்கடலுக்குள்
நினைவுக் கம்பளம்
தேவதையாய்
எனைத்
தூக்கிச் செல்லும்
துரத்தி வரும்
நிலவு
அன்றைய நாளில்
விட்டு வந்த
விளையாட்டுக் குறிப்பை
தந்துவிட்டுப் போகும்
மிளிரும்
நட்சத்திரங்கள்
வசந்தகாலக் கதைகள்
சொன்ன
பாட்டியையும் அம்மாவையும்
அழைத்து வரும்
இளமைக் காலத்தில்
பேயென
பயமுறுத்திய
பேரிருள் வானம்
மெதுவாய்க்
கரைந்து
விடியலைக் காட்டும்
மனதில் அவிழும்
நினைவு மொட்டுகள்
*******