அப்பாவின் முத்தங்கள்
அப்பா தராத முத்தங்கள் என்னிடம்
நிறையவிருந்தன
சிக்கலான தருணங்களில் அவர்
எனக்கு அதை கொடுக்க நினைத்திருந்தார்
அந்த தருணமும் வந்தது
அப்பொழுது
என்னிடம் மாற்றுவழியை பிரயோகித்தார்
இப்படித்தான் என்னிடம்
அப்பாவின் முத்தங்கள் வந்தன
அவர் தராத முத்தங்கள் என்பதால்
எந்த ஒன்றிற்கும் கால்கள் கிடையாது.
•
ஞானி நிலை
எனது காயங்களைத் திரும்பவும் திரும்பவும்
பார்க்க நான் ஆசைகொள்ளுகையில் தான்
காயம் பெரிதானது
காயங்களைக் கடந்து செல்லும் பொழுது தான்
ஒருவன் ஞானியாகின்றான்
ஞானி நிலை என்னைக் கடந்து சென்றது
சிறிய ஞானி நிலையிலிருந்து
பெரிய ஞானி நிலையை
அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றேன்
பின்பு அமைதியின் காதுள் ஓடியது ஒரு பூச்சி
•
சைக்கிள் அக்கா
செடியில் வாழ்கின்ற பூ
எல்லாவற்றையும் பார்க்கிறது அல்லது
பார்க்காமல் விடுகிறது
புதன் தவறாமல் சைக்கிளில் மீன் விற்கின்ற அக்கா
அந்தப் பூவைக் கடக்கிறார்
எல்லாவற்றோடும் ஒன்றாக ஆகிறார்
அல்லது இல்லாமல் போகிறார்
இல்லாமல் போகையில் இல்லாமல் போகின்றவைகளிடம்
மிச்ச மீனை சைக்கிளில் கூவிச் செல்கிறார்.