
பிரியாது விடைபெறுதல்
எதையெதையோ
பேசிக்கொண்டு வரும்
பக்கத்து இருக்கைக்காரர்கள்
சாவகாசமாய் ஒரு சிநேகிதத்தை
ஏற்படுத்திக்கொண்டு
விடைபெறுகிறார்கள்
அடுத்த மணி நேரத்தில்
எந்தப் பரிட்சயமும் இல்லாத
ஒரு நெருக்கத்தை தைத்துவிட்டு
விலகி செல்கிறது பேருந்து
அடுத்தடுத்த
நிறுத்தங்களுக்கான
அவசரத்துடன்.
*
மேக நிழல்
சாத்தியமற்ற தருணங்களை
கடக்க முடியாதவன்
கழுத்தோடு கயிற்றை இறுக்குகிறான்
நடுங்கும் கைகளால்
நாடியை நறுக்குகிறான்
யாரும் காணாத தொலைவில்
யாரும் தேடாத மறைவில்
துயர் இழுத்துத் திரிகிறான்
இவ்வுலகம் எவ்வளவு விரிந்திருந்தும்
மன இடுக்கில்தான் புரள்கிறான்
இறுகிய அவன் கன்னத்தை
யாரோ கிள்ளி முத்தமிடுகையில்
இருக்க முடியாதவனாய்
நகர்கிறான்
அவ்வப்போது வரும் நிழல்களில்
ஆறி அமர்ந்தாலும்
நாளுக்கு நாள் சுட்டெரிக்கும்
இவன் வாழ்வில்
எல்லாம் மேகங்களே.
அசைவின் பிம்பங்கள்
அதே முகங்கள்
அதே கேள்விகள்
அதே பதில்கள் என
பழக்கப்பட்டுப் போன நாட்களில்
வழக்கத்திற்கு மாறாய்
வேறு முகங்கள்
வேறு கேள்விகள்
வேறு பதில்களுடன்
வருபவர்களால்
ஆறுதல் அடைகிறார் தாத்தா
பின்னிரவின்
குறைந்த ஒளியில்
கால் நீட்டிப் படுக்கையில்
ஏறி அமரும் அவர்
நீண்ட பெருமூச்சியில்
அசைகிறது
சுவரில் தொங்கும்
மாலையின் நுனி.