சமீபத்தில் வெளிவந்த “கடாரம் கொண்டான்” திரைப்படத்தில், இளையராஜா பாடிய “காதல் உன் லீலையா ” பாடல் மலேசிய வானொலியில் பாடல் ஒலிபரப்பாவது போன்ற துவக்கக் காட்சி என்னை ஆச்சர்யப் படவைத்தது. இத்தனைக்கும் “ஜப்பானில் கல்யாணராமன்” திரைப்படத்தில் படமாக்கப் படாமல் வெறும் கேசட்டில் மட்டும் வெளிவந்த இந்தப் பாடல் வந்து 34 வருடங்கள் கழித்து அதே கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த ஒரு படத்தில் குரலாக வந்தது ஓர் ஆச்சர்யம். அப்படிப் படமாகாமல் விடுபட்ட ஆனால் ரசிகர்கள் நெஞ்சிலும், வானொலியின் காற்றலைகளிலும் மட்டும் இடம் பெற்ற பாடல்களை சற்றே அசை போடலாம்.
தமிழில் முதல் பேசும் படம் வெளிவந்த காலத்திலிருந்து திரைப்படங்களோடு சேர்ந்தே பயணித்து வருகிறது திரையிசைப் பாடல்கள். பேசும் படங்கள் வந்த காலகட்டத்தில் வெறும் பாடல்களுக்காகவே, மக்களை சினிமா கொட்டகைக்கு இழுத்து வந்து , மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்த்தி வைக்க பாடல்கள் தேவைப்பட்டது. தமிழ்த்திரை புராணகாலக் கதைகளைச் சொல்லிமுடித்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தபோது, பாடல்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆனாலும், ஒரு படத்துக்கென்று மெட்டமைத்து பதிவு செய்யப்பட்டவை, அந்தப் படங்களில் நிச்சயம் இடம் பெற்றன. படத்தின் கதையமைப்பு, நடிகர்களின் நடிப்பு ஆகிய விஷயங்களே ரசிகனை கொட்டகை நோக்கி அழைத்துவர முக்கியக் காரணிகளாக அமைந்தன.
எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்த்திரை இசை வேறு வடிவம் எடுத்தது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி, அந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பையும், வெளிச்சத்தையும், விளம்பரத்தையும் கடல் கடந்து தேடித்தந்தது. அநேகமாக, எல்லாப் படத்தின் பூஜையும் ஒரு பாடல் பதிவுடன் தான் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக இளையராஜா ஆறு பாடல்களுக்கான மெட்டை அமைத்து இந்த மெட்டுகளுக்குப் பொருத்தமான ஒரு கதையை யாராவது தயார் செய்து கொண்டு வந்தால், அந்த மெட்டுக்களை பாடல்களாய் மாற்றித் தருகிறேன் என்று சொல்ல உருவானதுதான் ஆர்.சுந்தர்ராஜனின் “வைதேகி காத்திருந்தாள்” மற்றும் மணிவண்ணனின் “இளமைக்காலங்கள்”. இன்னும் சொல்லப் போனால் “அன்னக்கிளி” திரைப்படமே இளையராஜாவின் மெட்டுகளுக்காகவே கட்டமைக்கப்பட்ட கதை என்பதையும் கேள்விப்பட்டு ஆச்சரியப்படுகிறோம்.
திரைப்படங்கள் . தொண்ணூறுகளின் இறுதி வரை ஆட்சி செய்து வந்த திரைப்பாடல்கள், மெல்லத் தன் இடத்தை இழக்க ஆரம்பித்தன. அவை மொழி தாண்டி வெறும் வியாபாரப் பண்டமாக மட்டுமே நுகரப்படும் நிலைக்கு வந்து சேர்ந்து. அதுவும் தேய்ந்து போய் பாடல்களே இல்லாத படங்களும், வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே உருவாக்கப்படும் சிங்கிள் எனப்படும் தனிப்பாடலாக மாறிப்போனது காலத்தின் கட்டாயம். இப்படிச் சிதைத்து போன திரைஇசைப் பாடல் வடிவம் அதன் இன்றைய வடிவத்துக்கு குறுக்கப்பட்ட காரணங்களுக்கு நேரெதிராக சில பாடல்கள் படத்தில் இடம்பெறாமல் போய் அல்லது படமே வெளிவராமல் போனாலும் இன்னும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நெல் அரிசியாக மாறி இறுதியில் ஒருவனின் பசி போக்காமல், சோற்றுப் பருக்கையாக கீழே சிதறிவிடும் சோகமே படமாக்கப்படாத பாடலுக்கு நிகழ்கிறது.
2014 வெளிவந்த மேகா படத்தில் அனிதா கார்த்திகேயனின் மயக்கும் குரலில் இடம்பெற்ற “புத்தம் புது காலை, பொன்னிற வேளை” ஒரு ஆகச் சிறந்த உதாரணம். ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்கு முன்னாள் இயக்குனர் மகேந்திரனும், இளையராஜாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்து உருவாக்கவிருந்த “மருதாணி” என்ற படத்துக்கு இந்த பாடலின் மெட்டை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஏதோ காரணங்களால், அந்த படம் வெறும் பூஜை மட்டும் நடந்து , அந்த அளவிலேயே நின்று போனது. பின்னர் 1982 இல் “அலைகள் ஓய்வதில்லை” படத்துக்கு மெட்டமைக்கும் போது மருதாணி படத்தின் மெட்டை தன் படத்துக்கு கொடுக்குமாறு பாரதிராஜா கேட்டுக்கொள்ள “புத்தம் புது காலை” ஜானகியின் தேன்குரலில் இசை ரசிகர்களின் செவிகளுக்கு வந்து சேர்ந்து, மிகப் பெரிய வெற்றிப் பாடலாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் இந்தப் பாடலும் படத்தில் இடம்பெறவில்லை.
இதே வரிசையில், இன்னொரு பாடல் “உன்னால் முடியும் தம்பி” படத்தில் இடம் பெற்ற “என்ன சமையலோ”. இந்தப் பாடல் 1979 வருடம் மணிப்பூர் மாமியார் படத்துக்காக மெட்டமைக்கப்பட்டு ரிகார்ட் செய்யப்பட்டது. இந்தப் படம் வெளிவரவில்லை என்றாலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடலான மலேசியா வாசுதேவன் சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடிய “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” வெகு பிரபலம்.
அதே போல் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தின் இசைத் தொகுப்பில் இடம் பெற்ற “ஆடிப் பட்டம் தேடி செந்நெல் விதை போட்டு” என்கிற பாடல், முதலில் வேறு கதை, வேறு சூழல் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட பின்னால் விட்டுவிட்டுப் போனது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற “அண்ணாத்தே ஆடுறார்” பாடல் இரண்டாவது அவதாரம். முதல் அவதாரம் எடுத்த பாடல் “அம்மாவ நான் கால தொட்டு கும்பிடனும்”. இந்தப் பாடல் யூடியூபில் காணொளியாக காணக் கிடைக்கிறது. அதே செட், அதே ஆடைகள், நடன அசைவுகள் என்று எல்லாம் இரண்டு பாடல்களுக்கும் அப்படியே பொருந்திப் போகும். இளையராஜா மற்றும் சில இசையமைப்பாளர்கள் இசையில் உருவாகி படத்தில் இடம் பெறாமல் அல்லது படம் வெளிவராமல் வெகுஜன இசை ரசிகனை சென்றடையாமல் போன பாடல்களின் பட்டியல் இதோ (இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல)
இதய மழையில் நனையும் கிளிகள் , மஞ்சள் அரைக்கும் போது [ ஆளுக்கொரு ஆசை ], உதய காலமே, பணிக்கு காற்றின் குளுமை [ பாலுமகேந்திரா இயக்கி வெளிவராத “பஞ்சமி” ] கீதா சங்கீதா, பெத்தாலும் பெத்தேனடா [ அன்பே சங்கீதா ], தூரத்தில் நான் கண்ட [ நிழல்கள் ], விழியோரத்து கனவும் [ ராஜபார்வை ], மௌனமே பார்வையையால் [ அன்பே சிவம் ], புத்தம் புது பூ பூத்ததோ [ தளபதி ], சொல்லாத ராகம் [ மகாநதி ], சென்யோரே [ கன்னத்தில் முத்தமிட்டால் ], ஒரு நாளில் வாழ்க்கை [ புதுப்பேட்டை ], அஞ்சனம் வச்ச கண்ணல்லோ [ உதயா ], மாலை நேரம் [ ஆயிரத்தில் ஒருவன் ], கிரேஸி பெண்ணே [ நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ].
இப்படியே நிறைய பாடல்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம். பாடல்கள் வெளியே வராமல் ஸ்டுடியோக்களில் மேக்னட்டிக் டேப்புகளில் இன்னும் மெளனமாக இசைத்துக்கொண்டிருக்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். என்ன தான், துரித வாழ்வியலைக் காரணம் காட்டி திரைப் படத்திலிருந்து பாடல்களைப் பிரித்து எடுத்துவிட்டாலும் நமக்கான உணர்வுகளுக்கு வடிகாலாய், நம் குரலாய் திரைப்பாடல்கள், நமக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. உயிர் பெறாமால் போன ஓவியங்களாக அத்தகைய பாடல்களில் மேலே சொன்ன சில மெட்டுக்களும் மெளனமாக இசைத்துக் கொண்டு தான் இருக்கும்.