சிங்கப்பூர் கவிதைத் திருவிழா (2020) கவிதைகள் – மோகனப்பிரியா, ஹேமா மற்றும் ப்ரியா கணேசன்
கவிதைகள் | சிறப்புப் பகுதி | வாசகசாலை
கடலுக்குள் புரளும் கால நிலம் – மோகனப்பிரியா
நுண்ணிய “டாய் சீ” நடன அசைவுகளின் பேராற்றலில்
நிகழ்காலத்தை முதுகிலேற்றிக் கடந்த காலத்திற்குள் நுழைகிறது
ஒரு பறவை.
கூர்மத் தீவின் கடலாடிய கணங்கள்
காலக்கண்கள் ஏகும் கூரைகளினுள் கொதிக்கும் சம்பலில்
நிதம் மிழற்றப்படுகின்றன குமிழிகளாய் பல
மாய வரலாறுகள்.
சாளரத்தில் அமரும் பறவை நோக்கும்
மணல்வெளியின் வெம்மையில்
தூரத்தில் புலப்படுகிறாள் தன் தாத்தாவிடம்
தூண்டிலிடக் கற்கும் ஒரு சிறுமி.
அருகமர்ந்த பறவை
அவள் வைத்திருக்கும் புழுக்களின் குடுவையில்
ஒவ்வொன்றாகக் கொத்திக் காலத்தின் வாய் நிரப்ப
உருண்டு பெருத்த காலம்
மஞ்சள் பறவையை ராசாளியாக்கி சிறுமியைக் கொத்தி
சிங்கப்பூர் மையம் சேர்க்கிறது.
விட்டு வந்த ஆமைத்தீவின் சுவடுகள்
மீட்பாரற்று ஆழிக்கரங்களில்
தாத்தாவின் நினைவுடன் அமிழ்ந்து கொண்டன.
சிறுமி இப்பொழுது
அலைமகளென வளர்ந்திருந்தாள்.
துண்டித்துக் கிடந்த இரு தீவுகளுக்குமான
அரூப இணைப்பென நீள் கடல் கயிற்றை
தன் பலங்கொண்ட மட்டும் இறுக்கிக் காக்க
குருதியோட்டமாய்ப் பாய்கின்றன விசைப்படகுகள்.
ஒவ்வொரு சீனப்புத்தாண்டிற்கும் காத்திருக்கும்
கோயிலின் ஊதுபத்திப்புகை
எஞ்சிய தொன்மையின் வாசத்தை
திசையெங்கும் மலர்த்துகிறது.
உறைந்த மௌனக்குன்றின் உச்சியில்
“மலாய் கிராமட்”-களின் கருணை பெறத்
தொழுகையோடு தன் விழுதுகளை விதைத்துத்
திரும்புகின்றனர் மரபு மறவா மக்கள்.
தனிமை இரவுகளில் கூர்மநில விழிகள் உகுக்கும் உறைபனிப் பாடலொன்றை
ஒவ்வொரு அலையும் அலைமகள் வசமாக்கிட அதைப்
பல குட்டி பனி ஆமைக் கதைகளென மாற்றி மழலைகளிடம் பரிசளிக்க அவள் எத்தனித்த பொழுதில் தான்
தூரத்திலிருந்து மெரிலயனிடம் கைகுலுக்கிக்கொண்டது ஆமைத்தீவு.
( சிங்கப்பூர் கவிதைத் திருவிழா 2020 – இல் முதல் நிலையில் வந்த கவிதை.)
பகடையாட்டம் – ஹேமலதா (ஹேமா)
சன்னல் கவசம் தாண்டித் தரைவிழும் சதுரவெயிலைக்
கருங்குருவி தன் கூர்அலகால்
துண்டுகளாய் வெட்டிச் சாய்க்கும் மதியமொன்றில்
சிறு வெண்கொண்டை உயர்ந்தமிழ
தன் திறன்பேசியில் அவளாடும் இந்த ஆட்டத்தை
அதியன் தான் சொல்லிக் கொடுத்தான்
கொரோனாகால வெப்பத்தால் இறுகித் திணறும்
இத்தனிமைப் பொழுதில் தன்
ஒற்றைவிரலை அவள் தேய்த்திழுக்க
வண்ணச் சிதறலுடன் உதிர்கிறது மெய்நிகர்த் தாயம்
அக்கணம் அவளைச் சட்டெனக் கவ்வும்
அடுத்த கட்ட அரவு அவளுடலை விழுங்கிக் கீழ்தள்ளுகிறது
காலச் சதுரத்தின் பிடிக்கென இருகை துழாவ
அதன் கொழுத்த வயிற்றுள் பாவென வழுக்கிச் செல்கிறாள்
பாம்பின் வால்நுனி படர்ந்து சுருண்ட
இரண்டாம் கட்ட வைகுண்ட ஏகாதசிக்குள்
நீலப்பாவாடையின் செம்பூக்கள் சிதற
குப்புறும் அவள்நிலை பார்த்துத் தன்இளம்
விரல்களைத் தட்டிச் சிரிக்கிறாள் தமக்கை
ராப்பூச்சி கரைச்சலும் தேத்தண்ணீர் வாசமும்
நிறைத்த வீட்டின் வாயிலில் குழிந்தோடும் மழைநீர்
நனைத்த கட்டைச் சுவரில் மிதிவண்டியைச்
சாய்த்துவிட்டு வருகிறார் அப்பா
அவர் தலை துடைக்க துண்டை நீட்டுமுன்
அம்மா தூண்டிச் சென்ற விளக்கொளியில்
இவளின் மரச்ச்சுவர் நிழல் பெரிதாகிறது
பரமபதத்தாளில் சயனம் கொண்டுள்ள அரவின் தலைதப்ப
உள்ளங்கைக்கிடையே கட்டைகளை நன்கு உருட்டி
ஒரு மூன்றல்லது ஐந்தென்கிறாள்
அச்சொல்வணங்கி விழும் எண்ணில்
விறுவிறுவென ஏணிப்படியேறிஅதன் மேல்நுனியில்
காதடைத்த அமைதியில் முறுகிக் கிடக்கும் தன்
எட்டாம் மாடி கூட்டை அடையும் அவளைப் பார்த்து
ட்விருட் ட்விருட்டென்கிறது கருங்குருவி
மீண்டும் அவள் விரல் தேய்க்க உருள்கிறது பகடை
காலத்துண்டுகளைத் தன் அலகால் சன்னல் கம்பிகளுக்கு
உள்ளும் புறமுமாய் உருட்டியாடும் தன் ஆட்டத்தை
மீண்டும் துவக்குகிறது கருங்குருவி
(சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி 2020 இல் இரண்டாம் நிலையில் வந்த கவிதை)
Theme for competition- மரபும் புத்தாக்கமும்
வரலாற்றில் நடந்த கால்கள் – ப்ரியா கணேசன்
முறுக்கு மீசைக்காரனின்
எஞ்சிய காலில்
வடுவேறிக் கிடக்கிறது
கருஞ்சாம்பல் நிறத்தில்
ஒரு வரலாற்றுத் துயர்
பதுங்கிட குழிக்கு ஓடிய
கையறு நாளொன்றில்
தன் காலுடைத்து
வான் நோக்கி எறிந்து
எறிகுண்டுகளைத் தகர்த்ததாய்
சொல்லிச் சிரிப்பான்
பிறகொரு நாளில்
தனித்து விடப்பட்ட
மழலை தேசத்தை
ஆதித் தளிர் நடை முதலே
அழகு பார்த்த பெருமிதத்தை
அனைத்து பருவங்களிலும்
நிறைத்து வைத்தான்
அடர்ந்து வளர்ந்த
நரைத்த கம்பீரத்தை
முறுக்கிச் செருமியபடி
வெளியெங்கும் தனதென
வளைய வருபவன்
தளராத துள்ளலுடன்
எப்பொழுதும் முணுமுணுப்பது
”மேல்நோக்கு வாலிபா..
என்றும் முன்னேறுவாய்
தொடுவான் நோக்குவாய்”
- {மீசைக்காரன் முணுமுணுப்பது சிங்கப்பூர் தமிழ்த் தேசியப் பாடலான “முன்னேறு வாலிபா” வின் வரிகள்.}
(சிங்கப்பூர் கவிதைத் திருவிழா 2020 இல் மூன்றாம் நிலையில் வந்த கவிதை)
மேற்கண்ட மூன்று கவிதைகளும் ஆசிரியர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளன.